தாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா?

.

புதிய ஏழு அதிசயங்களுக்கான போட்டியில் 100 மில்லியன் வாக்குகள் பெற்றது தாஜ்மஹால். தாஜ் மஹால் என்றால் பெர்சிய மொழியில் மாளிகைகளின் மகுடம் என்று பொருள். வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அந்த பிரம்மாண்டம் 1632 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1643 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த அரங்கத்தையும் கட்டி முடிக்க 1963 ஆம் ஆண்டு வரையிலும் ஆனது.
ஷாஜகான் தனது மனைவிகளில் ஒருவரான மும்தாஜுக்காக கட்டிய கல்லறை என்பதை விடவும் தாஜ்மஹால் பற்றி சொல்ல ஏராளம் தகவல்கள் நிறைந்துள்ள – மனித அறிவும், கலை நயமும், உழைப்பும் குவிந்த பொக்கிசமே தாஜ்மஹால் ஆகும்.
20 ஆயிரம் கலைஞர்கள்:
உஸ்தாத் அஹமத் லஹரி, மிர் அப்துல் கரிம் என்ற வடிவமைப்பாளர்களின் தலைமையில் 20 ஆயிரம் கலைஞர்கள் இணைந்து இந்தக் கட்டுமானத்தை உருவாக்கியுள்ளனர். ஷாஜகான் இப்படியான கட்டுமானங்களை அமைப்பதில் தனியான விருப்பத்தோடு இருந்ததாக சொல்கின்றனர்.யமுனை நதிக் கரையில் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன தாஜ்மஹாலும் அதன் இரண்டு பக்கங்களில் சிவப்பு கற்கள் கொண்ட வளாகமும் அமைந்துள்ளன. இதற்கான கட்டுமானப் பொருட்கள் இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரம் யானைகளையாவது பயன்படுத்தித்தான் கொண்டுவந்திருக்க முடியும் என்கின்றனர். வெள்ளை பளிங்கு ராஜஸ்தானின் மக்ரானாவில் இருந்தும், சீனத்திலிருந்து சில வகைக் கற்களும், திபெத், ஆப்கானிஸ்தான், ஶ்ரீலங்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் விலை மதிப்பற்ற கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.  15 கி.மீ தொலைவிற்கு சரிவுப் பாதை அமைக்கப்பட்டதாக ஷாஜகான் எழுதிய குறிப்புகளில் தெரிய வருகிறது.
கலைநயம்:

மராமத்து பணிகள்

ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த வளாகத்தில் நுழையும் எவருக்கும், ஒரே முறையில் பிரமிப்பை முடித்துக்கொள்ள முடியாது. பருகப் பருக தெவிட்டாத கலை நயம் மிளிர்கிறது.
தற்போது மராமத்துப் பணிகள் நடந்துவரும் புகைப்படத்தை  பகிர்ந்திருக்கிறேன். அதனை சற்று பெரிதாக்கிப் பாருங்கள் – மனிதர்களின் அளவை வைத்து – தாஜ்மஹாலின் உயரத்தை புரிந்துகொள்ளலாம். தாஜ்மஹாலின் உச்சி 55 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

சரியாக வெட்டி இணைக்கப்பட்ட பளிங்குக் கல் வேலைப்பாடு

இதில் அமைந்துள்ள வேலைப்பாடுகள் இருவேறு பளிங்கு கற்களை மிகச் சரியான அளவில் செதுக்கி இணைத்து உருவாக்கப்பட்டவை. இவ்வாறு தாஜ்மஹாலை கட்டமைத்த கலைஞர்களின் வம்சாவளியினர் இன்றும் அங்கே வசித்து, கலைப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர்.

சில வதந்திகள்:
தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன… முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.
அப்படி நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், இது அங்கு வரும் பல சுற்றுலா பயணிகளிடமும் உலவுகிறது. (தமிழகத்தில் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் சமாதியில் – அவரின் கைக்கடிகார மணியோசையை பலரும் காதுவைத்துக் கேட்பது போல.)
பொதுவாக இப்படியான கதைகள் பல காரணங்களுக்காக உலவுகின்றன. ரோமிலும் கூட மிகப் பெரிய கட்டுமானங்கள் பற்றி இப்படியான கதைகள் நிலவுகின்றன. தாஜ்மஹாலை பொருத்தமட்டில் – மார்பிள் வேலைகள் மீது விருப்பம் அதிகரித்ததை கட்டுக்குள் கொண்டுவரவும், “தஸ்ட்-டாடன்’ (கை கொடு) என்ற பெர்சிய வார்த்தைக்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டதில் இருந்தும், முகலாய ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகள் என்று பரப்படுவதற்காக இந்த வதந்தி பரவியிருக்கலாம் என்கின்றனர்.
இரண்டாவது பிரபலமான வதந்தி கருப்பு தாஜ்மஹால் பற்றியதாகும்.
ஷாஜகான் தன் மரணத்திற்கு, யமுனை நதியின் மற்றொரு கரையில் கருப்பாக ஒரு தாஜ்மஹால் கட்டச் சொன்னதாக பலரும் சொல்கின்றனர். ஷாஜகானின் மகன் அவுரங்கசிப் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகச் சொல்கின்றனர்.  1665 ஆம் ஆண்டு ஆக்ராவிற்கு அந்த ஒரு பயணி ஜீன்-பப்டிஸ்டெ தவெர்னியர் என்ற அந்தப் பயணியில் கற்பனையில்தான் முதலில் இது தொடங்கியுள்ளது. அவர் எழுதியதொரு வர்ணனையில் இப்படி குறிப்பிடுகிறார்.  இதுவும் உண்மையில்லை.
தாஜ் மஹாலுக்கு ஆபத்து:
தாஜ் மஹால் என்ற அரிய வேலைப்பாடு மிக்க கட்டடத்திற்கு ஆபத்து ஒரு முக்கியமான வழியில் அதிகரித்துவருகிறது. அது அப்பகுதியில் அதிகரித்துவருகின்ற காற்று மாசுபடுதல் காரணமாக எழுகிறது. காற்று மாசு அளவைக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை எப்போதும் இயங்கிவருகிறது.
சுற்றுலா:
வரலாறு எப்படி இருப்பினும், சுற்றுலா வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதில் இந்தியாவிற்கு தாஜ்மஹால் அளித்துவரும் பங்களிப்பே மிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது. தாஜ்மஹாலில் உலவும் வழிகாட்டிகள் பல மொழிகளைப் பேசுகின்றனர். அவர்களில் பலரும் பள்ளிப்படிப்போடு இந்தத் தொழிலுக்கு வந்தவர்கள்தான்.
நெட்டிஜன்களுக்காக:
பொதுவாக அதிகாலை நேரமும், நள்ளிரவு முழு நிலவொளியும் தாஜ்மஹால் சுற்றிப் பார்க்க சரியான தருணமாகும். முன்கூட்டியே பதிவு செய்துகொண்டு பயணத்தைத் திட்டமிடலாம். தாஜ்மஹாலுக்கான முன் பதிவு லின்க். தேதிகள் பற்றி அறிய http://www.tajmahal.gov.in/faq_taj.html . தனக்கென தனியான டுவிட்டர் பக்கம் கொண்டுள்ள முக்கிய இடம் என்பதால், டுவிட்டரில் தினமும் விதவிதமான பதிவுகளும் கிடைக்கின்றன.