கலகத்தின் கலைமுகம் கே.ஏ.குணசேகரன் - வீ. அரசு

.
நாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்.

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமான செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 1955-ல் சிவகங்கை அருகே மாறந்தை கிராமத்தில் பிறந்தவர் அவர். 1970-களின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார். 1978-ல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்தின் பயிற்சியில் நாடகப் பயிற்சி பெற்றார்.
1980-களில் தமிழில் நவீன நாடக எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் வெகுஜனத் தளத்தில் நாடகங்களையும் அரசியல் கருத்து பரப்புரைப் பாடல்களையும் நிகழ்த்தத் தொடங்கினர். இந்தக் காலத்தில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் பல முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து மேடைகளில் நாட்டார் இசை மரபு சார்ந்த அரசியல் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அன்றைக்கு, பிரபலமாக அறியப்பட்ட நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயியைத் தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.


எழுச்சி மிக்க குரல்
கே.ஏ.குணசேகரன் பாடிய ‘வாகான ஆலமரம்’, ‘முக்கா முழம் நெல்லுப் பயிரு’, ‘ஒத்த மாடு செத்துப்போச்சு’, ‘ஆக்காட்டி… ஆக்காட்டி’, ‘பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே’ ஆகிய பிற பாடல்கள் கேட்போரை எழுச்சிகொள்ளச் செய்தவை. தலித் சிறுவன் ஒருவன், நிலப் பண்ணையார் கிணறு ஒன்றில் குளித்ததற்காக மின்சாரம் பாய்ச்சிக் கொலைசெய்யப்பட்டான். அந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு ‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’ என்ற பாடலை எழுதினார் கவிஞர் இன்குலாப். தனது எழுச்சிமிக்க குரலில் குணசேகரன் இந்தப் பாடலை மேடைகளில் பாடியபோது, தமிழகத்தில் தலித் இயக்க எழுச்சிக்கான பாடலாக அது மாறிப்போனது.
நாடகத் துறை அனுபவம், நாட்டார் இசை குறித்த முனைவர் பட்ட ஆய்வு, நாட்டார் பாடல்களை மேடைகளில் பாடுவது எனப் பல்பரிமாணங்களைக் கொண்ட பேராசிரியர் குணசேகரன், தமிழக நாட்டார் மரபு சார்ந்த கலை வடிவங்களுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் என்று சொல்ல முடியும். பல்வேறு இயக்கங்களுக்காக இவர் நடத்திய நாட்டார் இசைப் பயிற்சி முகாம்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.
பிற்காலங்களில் ‘தன்னானே’ என்ற இசைக் குழுவை அவர் உருவாக்கினார். இக்குழுவில், நாட்டுப்புற இசைக் கருவிகள் குறிப்பாக தவில், பறை, ரெட்டை மேளம் போன்றவற்றைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் பிறந்து வளர்ந்த ஊரான சிவகங்கைப் பகுதியைச் சார்ந்த கோட்டைச்சாமி, அழகிரிசாமி வாத்தியார் ஆகிய நாட்டுப்புறக் கலைஞர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டார். கோட்டைச்சாமியின் குரல் மிக வளமானது. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தியாவின் பெருநகரங்களிலும் இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய இடங்களிலும் தனது குழுவோடு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
பறை இசைக் கருவியை அடிப்படையாகக்கொண்ட தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரெங்கராஜன் பறை இசைக் குழுவும் இவரது குழுவோடு சேர்ந்து பல நேரங்களில் செயல்பட்டது. அந்தப் பின்புலத்தில்தான் சின்னப்பொண்ணு எனும் தமிழகம் அறிந்த நாட்டுப்புறப் பாடகரும் உருவானார். தமிழக நாட்டார் இசை வரலாற்று மரபு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் நிகழ்த்துதல் ஆகியவற்றில் குணசேகரன் அரிய சாதனைகளை நிகழ்த்தியவர்.
தலித் எழுச்சியில் பங்கு
1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டில் உருவான தலித் இயக்கப் பேரலையில் குணசேகரனுக்குத் தனியிடம் உண்டு. தலித் எனும் ‘தன்னிலை’சார்ந்து பல்வேறு நாடகப் பிரதிகளை இவர் எழுதினார். ‘பலியாடுகள்’, ‘மாற்றம்’, ‘மழி’, ‘தொடு’, ‘கந்தன் வள்ளி’ ஆகிய பல நாடகங்கள் இவ்வகையில் அமைந்தவை. முக்கியமான தலித் தன்வரலாற்று நூல் என்று கருதப்படும் ‘வடு’ இவரது மிக முக்கியமான பதிவு. தலித் அரங்கியல் குறித்து இவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழகப் பழங்குடி மக்கள் மையம் என்ற துறை நீலகிரியில் செயல்பட்டது. அத்துறையில் பணியாற்றினார். அந்த அடிப்படையில் ‘தமிழகப் பழங்குடி மக்கள்’ என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். பின்னர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் வேறு மாநிலங்களில் இருந்தும் பல மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்றனர். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட அத்துறை, பின்னர் குணசேகரன் தலைமையில் செயல்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி என்று அழைக்கப்படும் அந்தத் துறைக்குத் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி புதுச்சேரி பல்கலைக்கழகக் கலைப்புலத் தலைவராகவும் இருந்தார்.
இடைப்பட்ட காலத்தில் மூன்று ஆண்டுகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் செயல்பட்டார் குணசேகரன். அப்போது பல துறைகளைச் சார்ந்தவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். குணசேகரனின் நூல்களில் முக்கியமானவை ‘இசை நாடக மரபு’, ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்’, ‘நாட்டுப்புற இசைக் கலை’, ‘பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்’, ‘தலித் அரங்கியல்’ ஆகியவை. இவரது ‘பலியாடுகள்’ நாடகம் தமிழக தலித் வரலாற்றில் தனியிடத்துக்கு உரியது.
உலகத் தமிழாராய்ச்சி இயக்குநராக இருந்தபோது, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திரைப்படக் கலைஞர் தங்கர்பச்சானோடு இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நாசர் இயக்கிய ‘தேவதை’ படத்திலும் ஞானராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ திரைப்படத்திலும் இவருடைய பங்கு குறிப்பிடத் தக்கது.
1975-2015 காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் இயங்கிய பல்வேறு போக்குகளில் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டவராக வாழ்ந்தவர் குணசேகரன். தான் ஆய்வுசெய்த துறையை வெகுசனப் பரப்பில் கொண்டுசென்ற பெருமையும் இவருக்கு உண்டு. நாட்டார் இசை மரபு சார்ந்த மேடைப் பாடல் நிகழ்வுகளும் ஒலிப்பேழை உருவாக்கமும் இவரின் தனித்த ஆளுமைகள் என்று சொல்ல முடியும்.
மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஆளுமை, தன் சமூகம் சார்ந்த பண்பாட்டுப் பரிமாணங்களைப் பொதுவெளி, ஆய்வுவெளி, தனது சொந்த ஆளுமை எனப் பல நிலைகளில் வெளிப்படுத்தி வாழ்ந்த வரலாறே குணசேகரனுடையது. தமிழ்ச் சமூகம் எப்போதும் அவரைக் கொண்டாடும்!
- வீ. அரசு, தமிழ்ப் பேராசிரியர் மற்றும் தமிழ் அச்சுப் பண்பாட்டு ஆய்வாளர்.