.
ஏழைக் கிராமம் அது.
ஏழைக் கிராமம் அது.
உலகப் பெரிய மனிதர்கள் மறந்து விட்ட ஒரு சிறிய நாட்டில், நாட்டுத் தலைவர்கள் அடிக்கடி எண்ணாத ஒரு பின்தங்கிய பிரதேசத்தில், பிரதேச நகரத்தார் அடிக்கடி செல்லாத ஒரு பிற்பட்ட கிராமம்.
பக்கத்தே காடு. காட்டையொட்டிச் சில வயல்கள். மாரியில் நீரும் கோடையில் சேறும் இருக்கிற ஒரு தாமரைக் குளம். காட்டுப் புல்வெளிகளில் மேய்ந்து விட்டுப் பின்னேர வாக்கில் குளத்தில் உருண்டு புரண்டு செல்கிற சில எருமைகள். அவற்றைப்பார்த்துக் கீச்சிட்டு ஏளனம் செய்து விட்டு நிற்காமல் பறந்து விடுகிற பச்சைக் கிளிகள்.
கிராமத்தின் மத்தியில் ஒரு பாடசாலை. அதன் பெயரை 'விளாங்குளம் வித்தியாலயம்' என்று வைத்ததற்குப் பதிலாக 'விளாங்குளம் மின்தூக்கி ' என்றோ அல்லது 'விளாங்குளம் விமான நிலையம்' என்றோ வைத்திருக்கலாம். ஏனென்றால், அந்த ஊரிலிருந்து யாரும் வாழ்வில் 'மேலே' வருவதற்கு, அதாவது 'உயரப் பறந்து' ஊரையும் உலகையும் தரிசிப்பதற்கு, இருந்த ஒரே ஒரு மார்க்கம் அது.
இப்படி 'மேலே' வந்தவர்கள் அவ்வூரில் வெகு சிலர் தான். பொதுவாக, 'மேலே போனவர்கள்' யாரும் கீழே திரும்பி வரவில்லை. உயரப் பறந்தவர்கள் கீழே இறங்கி அந்த மண்ணோடு சங்கமிக்க ஆசைப் படவில்லை. ஆனால், 'அன்னவர் அங்கே அப்படி இருக்கிறாராம், இன்னவர் இங்கே இன்ன செய்கிறாராம்' என்று அந்தக் கிராம வாசிகள் சங்கக் கடையடியிலும் சவுக்கந் தோப்பிலும் பேசுவதுண்டு. ஒரு பேராசிரியர் (வெளிநாட்டிலை போய்ப் படிச்ச இடத்திலை வெள்ளைக் காரனே அவர் திறமையைக் கண்டு வியந்தவனாம்!). ஒரு வங்கியின் பிராந்திய முகாமையாளர் (அவருக்குக் கீழை ஆயிரம் பேர் வேலை செய்யினமாம்!) ஒரு நீதிபதி (அவரின் பெயர் கேட்டால் கள்ளங்கள் செய்து பிடிபட்டவர்க்குக் கிடு நடுக்கம்!) தலை நகரில் ஒரு பிரபல வர்த்தகர் (அந்தாள் பெரிய முதலை எல்லோ! வீட்டில் வளர்க்கின்ற நாய்க்கும் தனிக் காராம், விடு கதையை!). அந்தச் சின்னப் பாடசாலைச் சிறுவரை ஊக்கப் படுத்தவும் ஆசிரியர்கள் இப்படியானவர்களின் 'கதைகளை' உதாரணம் காட்டுவது வழக்கம்.
இந்த உதாரணங்களைக் கேட்ட சிறுவர் மனத்தில், 'அன்னவர் போல் நாமும் ஆளாகி, இந்தக் குட்டி இடம் விடுத்துக் குவலயம் எல்லாம் சென்று பார்த்திடவும், மிக்க புகழ் பரப்பிடவும் வேண்டும்' என விருப்பங்கள் சில விதையாய் விழுவதுண்டு.
'டாக்டர் ஆவேன்' என்பான் ஒருவன்.
'எஞ்சினியர் நான்' என்பான் இன்னொருவன்.
'கம்பனி டிரக்டர் நான்' என்று வேரொருவன் சொல்வான்.
'பேராசிரியர் ஆவேன்' என ஒருவன் சொல்லி வைத்திருந்தான்.
அந்த வருடம், வருடாந்த மாணவர் ஒன்று கூடல் வந்தது.
அந்தக் குட்டிப் பாடசாலையில் படித்துப் பேராசிரியராக வந்தவரை, அந்த விழாவுக்குப் பிரதம விருந்தினராக அழைப்பது என்று முடிவு செய்ய பட்டது.
பேராசிரியராக வர விரும்பிய பெடியனும் (மாணவர் மன்றத் தலைவன் அவன்!) இன்னும் சில பெடியங்களும், ஆசிரியர்களுமாக, பெரு நகரம் சென்று, காவலாளியிடம் கத்தி அழாக் குறையாய்க் 'கத்தாக் கரணம்' செய்து கழகம் புகுந்து, அன்னவரின் கந்தோரின் வாசலிலே காவல் கிடந்து, அவரைக் கண்டு, ' ஐயன்மீர் வாருங்கள்' என்று வருந்தி அழைத்து விட்டு வந்தார்கள்.
அவரும் வந்தார்.
வந்த மனுஷர், தன் வாழ்வைப் பற்றியும், பல்கலைக் கழகப் பராக்கிரமங்கள் பற்றியும், வெள்ளைக் காரன் வியக்கும் வகையில் மேல் நாட்டில் தான் செய்த வித்துவங்கள் பற்றியும், தான் படித்துக் கிழித்ததால் பெற்ற பட்டங்கள், எழுதிய நூல்கள், ஆராய்ச்சி ஏடுகளில் வெளிவந்த கட்டுரைகள், பெற்ற விருதுகள், பேசிய மாநாடுகள், அரசாங்கத்தார் தந்த ஆதரவு, உலக ஆய்வு நிறுவனங்கள் தன்னைப் பூமாலை போட்டுப் புகழ்ந்து 'ஏத்தல்', பற்றியெல்லாம்.....
பேசுவார் என்று எதிர்பார்த்தனர் மாணவர்கள்.
அவரோ, தன் சின்னக் கிராமத்துச் சிறு பாடசாலையிலே கல்வியினைத் தான் கற்ற காலங்கள் பற்றியும், அறிவுக்கண்ணைத் திறந்த ஆசான்கள் பற்றியும், கூடப் படித்தவர்கள், குழப்படிகள் செய்தவர்கள், ஆடித் திரிந்த 'கிரவுண்ட்', அடித்த கிளித் தட்டு, பாடற்பயிற்சி, இவை பற்றியெலாம் பேசிவிட்டு, பொட்டர் வளவிற் புளி மாங்காய் ஆய்ந்ததையும், வெட்டங்குளத்தில் விரால்மீன் பிடித்ததையும், சட்டம்பியார் அங்கே 'சடார்' என்று வந்து விட, விட்டால் காணும் என்று விழுந்தடித்து ஓடுகையில் கந்தப்பர் வீட்டுக் கடுவன் நாய் கண்டு விட்டுச் சந்தி வரையும் கலைத்துக் காலில் கடிக்கப், பின் அப்புவிடமும் அடி வாங்கி அல்லலுற்றுக் கொப்பி திறந்து 'குழப்படி செய்யேன் இனி மேல்' என்று பல நூறு தரம் எழுதி, அதன் பிறகு நன்றாகக் கற்று 'நாலே (4 A)' எடுத்ததையும் சொன்னார். இதையெல்லாம் சொல்லி விட்டு, முத்தாய்ப்பாய், 'என்னுடைய வாழ்க்கையிலே இனிப்பான காலமென்று ஒன்று இருந்ததென்றால், அது இந்தப் பள்ளியிலே கற்றுவந்த அந்தக் காலம் தான். அதுபோலச் சந்தோஷமாய் எப்போதும் நானிருந்ததில்லை" என்று சொல்லி, ஒரு பெரு மூச்சுவிட்டு, 'ஆதலினால், இந்தப் பள்ளி விழாவுக்கு நீரழைக்க வந்ததிலே மிக்க மகிழ்ச்சி!" என முடித்தார்.
'கேள்விகள் இருந்தால் கேளுங்கள் ஐயாவை' என்று அதிபர் ஊக்கப் படுத்தியதும், ஒரு மாணவன் - பேராசிரியர் ஆகும் பெருங்கனவு வைத்திருந்தவன், எழுந்து கேட்டான்.
'ஐயா, நீங்களோ தற்போது தேசம் எங்கும் புகழ் பரப்பும் பேராசான். மெத்தப் படித்தவர்கள். மிகவும் உழைப்பீர்கள். மாணவரும் பிறரும் மதிக்கின்றார் மிகவும். இப்போது நீங்கள் இருப்பதை விடவும், இவை எதுவும் இல்லாத காலமொன்றில், கஷ்டத்தில், இந்தக் காட்டுக் கிராமத்தில் கூரை ஒழுகும் இந்தக் குட்டிப் பாடசாலையில் படித்த போதுதான் சந்தோசம் அதிகமென்று சொல்லுகிறீர்கள். விந்தை இதுவன்றோ? விளக்க முடியுமா?"
பேராசிரியர் சிரித்தார். பிறகு சொன்னார்.
"கேள்விகள் இரண்டு நான் கேட்கிறேன் உன்னை. ஒன்று, நீ நேற்றிரவு என்ன கனவு கண்டாய்? இரண்டு, நீ எப்படிப்பட்ட படுக்கையில் தூங்கி எழுந்தாய்?"
சிறுவன் திகைத்தான். சற்றே சிவந்தான்.
"ஐயா, வந்து..... அப்பனும் அம்மையும் கூலித் தொழில் செய்யும் அடிமட்டக் குடும்பம் எங்களது. ஓலைப் பாயில் படுத்தேன். ஒன்றுமில்லைத் தலைக்கு வைப்பதற்கு. கண்ட கனவோ களிப்புத் தருவது. நான் 'பெரியாளாய்' வளர்ந்து, உங்களைப் போல் பேராசிரியராகி, சிவப்புக் காரிலே சென்று இறங்கிப் பாரியதோர் மண்டபத்தில் மைக்கைப் பிடித்துப் படிப்பிக்க, மண்டபம் நிறைந்த மாணவர் கூட்டம் வாய் பிளந்து கேட்பதாய்க் கனாக் கண்டேன் ஐயா!"
சிரித்து விட்டார்கள், அந்தச் சிறிய பள்ளி மாணவர்கள்.
பேராசிரியர் சொன்னார். "நன்று தம்பி, நானோ, நல்லதொரு கட்டிலிலே, மெத்தை விரித்துத், தலைக்குத் தலையணைகள் போட்டுப் படுத்தேன். போட்டு வைத்தேன் 'ஏ - சீ' யும். கண்ட கனவென்ன தெரியுமா? எனக்குக் கை கால் வழங்காக் கடும் வருத்தம் வந்து விட, நாலு பேர் தூக்கி 'நவலோகா' மருந்தகத்தில் கொண்டு போய்ப் போடக் கனாக் கண்டேன் தம்பீ, நான்!"
"அச்சச்சோ" என்றார்கள் அவையோர்.
"இன்றுன்னைப் போலத் தான் நானிருந்தேன் அன்றைக்கு. ஆதலினால் இன்றை விடச் சந்தோஷமாயிருந்தேன். ஏனென்று புரிகிறதா இப்போது?"
பேராசிரியர் கேட்டார்.
பேந்த விழித்தான் பெடியன்.