மூங்கில் இலைக் காடுகளே …– கவிஞர் காவிரிமைந்தன்.

.

அடர்ந்து வளர்ந்த மூங்கில்காடுகளில் காற்று மழை புயல்களினிடையே சிக்கிடும்போது ஒரு சில துளைகள் உண்டாகும்! அதில் உண்டான துளைகளின் வழியே காற்று நுழைந்த போது புல்லாங்குழல் நாதம் கண்டறியப்பட்டது, அதுவே பூபாளம் எனப்பட்டது.
காலைக் கதிரவன் கடலில் குளித்தெழுந்து வருகின்ற அழகும், அதிகாலை இளங்குயில் பாடி நமை அழைக்கும் இனிமையும் நம் இதயத்திற்கு இதமானவை. எனவேதான் திரைப்படப்பாடல்களில் பெரும்பாலும் தொடக்கம் புல்லாங்குழல் இசையிருக்கும்.
மிகக்குறைந்த செலவில் திரைப்படம் எடுப்பதையும், அதில் அன்றாட வாழ்க்கையில் சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்வதையும் தனது கொள்கைகளாய் கொண்டிருந்த விசு அவர்கள் இயக்கிய “பெண்மணி அவள் கண்மணி” திரைப்படத்தில் தேனிலவு செல்லும் தம்பதிகள் பாடும் பாடலாய் இந்தப் பாடல்!

Moongil Ilai Kaadugale video screen shot3“இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழலோ” என்கிற கவிதை வரியை நினைவூட்டும் பல்லவி. இயற்கையின் அழகு எத்தனை எத்தனை!! விரிந்துகிடக்கும் வானம் முதல், பரவி எழுந்துநிற்கும் மலைகள் என அதன் கூறுகள் ஒவ்வொன்றும் தன்னெழில் தந்து இந்த உலகத்திற்கு அழகூட்டுகின்றன!
எஸ்.பி.பாலசுப்பிரமணிம் குரலில் இழைந்தோடும் இனிய கானம், சங்கர் கணேஷ் இசையில் பொங்கிப் பெருகி வருகிறது பெண்மணி அவள் கண்மணிக்காக! மூங்கில் இலைக் காடுகளே முத்துமழை மேகங்களே எழுதியிருப்பவர் கவிஞர் வாலி.
மூங்கில் இலை காடுகளே 
முத்து மழை மேகங்களே 
பூங்குருவி கூட்டங்களே வாருங்கள் 
வானகத்தில் சொர்க்கமில்லை 
வையகத்தில் உள்ளதென்று 
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள் (மூங்கிலிலை)
மாம்பூக்களே மைனாக்களே 
சந்தோஷ வேளைதான் சங்கீதம் பாடுங்கள் 
நாணல்களே நாரைகளே 
கல்யாணப் பெண் இவள் நல் வாழ்த்துப்பாடுங்கள் 
கால காலமாய் தப்பாத தாளமாய் 
காதல் வண்ணமே மங்காத வேளையாய் 
பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழணும் (மூங்கிலிலை)
கார்காலமே நீர்த் தூவுமே 
செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே 
ஆண் பாதியும் பெண் பாதியும் 
ஒன்றாகும் வேளையில் சம்சார காணமே 
ஓடம் போலவே உள்ளங்கள் ஆடவே 
ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே 
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும் (மூங்கிலிலை)
மூங்கில் இலை காடுகளே 
முத்து மழை மேகங்களே 
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்


பாடும் நிலா பாலசுப்ரமணியன் அவர்கள் பாடும் பாடலாக மேற்கண்ட வரிகளில் ஒருமுறையும் …
வாணி ஜெயராம் அவர்கள் குரலில் கீழ்க்கண்ட வரிகளில் மற்றொரு முறையும் இடம்பெறும் பாடல்.
மூங்கில் இலை காடுகளே 
முத்து மழை மேகங்களே 
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள் 
மாலையிட்ட மங்கையர்க்கு 
தற்கொலை தான் சொர்க்கம் என்றால் 
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள் (மூங்கிலிலை)
மாம்பூக்களே மைனாக்களே 
கல்யாணப்பாவை என் கண்ணீரை பாருங்கள் 
நாணல்களே நாரைகளே 
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள் 
பேரம் பேசவே கல்யாண சந்தையோ 
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ 
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம் (மூங்கிலிலை)
பூச்சூடவும் பாய் போடவும் 
கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை 
பொன்னோடுதான் பெண் தேடுவாள் 
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை 
கேள்வி என்பதே இல்லாத தேசமா? 
யாரும் உண்மையை சொல்லாத தோசமா 
பெண் இங்கு தாரமா? வந்தாலே பாரமா? (மூங்கிலிலை)

Nantri http://www.vallamai.com/