இலங்கைச் செய்திகள்


சிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்

யாழ் - கொழும்பு சொகுசு பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம்

பருத்தித்துறை - திருகோணமலைக்கு புதிய பஸ் சேவைகள்

உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

உறவினர்களால்   இராணுவத்தினரிடம் நேரடியாக  கையளிக்கப்பட்டவர்களுக்கு    என்ன நடந்தது? : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி

அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன  காலமானார்

நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது 

யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானம்




சிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்



18/01/2016 கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 16ஆம் திகதி காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் இவ்விபத்து 15ஆம் திகதி   இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
பட்டல்கலை தோட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கென சென்ற 8 வயது சிறுவனும் அவரின் சகோதரனும் பட்டல்கலை பகுதியின் பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வந்த முச்சக்கரவண்டி வீதியில் சென்ற இவர்களின் மீது மோதி முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சகோதரர்கள் அயலவர்களினால் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் இவர்களின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டதனால் கண்டி வைத்தியசாலைக்கு உடனடி மாற்றம் செய்யப்பட்டனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். எனினும் அவருடைய சகோதரர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
எனவே குறித்த சிறுவனை வைத்தியசலைக்கு கொண்டு சென்றபோது வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டி சாரதி ஆகியோர் அசமந்த போக்கில் இருந்தமையே சிறுவன் உயிர்ழந்தமைக்கு காரணம் என கோறி போடைஸ் தோட்டமக்கள் இன்று பிற்பகல் ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் பட்ல்கல சந்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இது போன்ற அசமந்த போக்கில் கடமையில் ஈடுபடும் வைத்தியர்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகளுக்கு சுகாதார அமைச்சி தகுந்த நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்
இதேவேளை சிறுவனின் சடலம் ஆர்பாட்டத்தில் பேரணியாக கொண்டுவரபட்டு ஹட்டன் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பில் அடக்கம் செய்யபட்டமை குறிப்பிடதக்கது   நன்றி வீரகேசரி

யாழ் - கொழும்பு சொகுசு பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம்


18/01/2016 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் நேற்று இரவு 11 மணியளவில் ஈரப்பெரியகுளம் கல்குண்டான் மடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இந்த விபத்தில் மருதங்கடவலையை சேர்ந்த எம்.நஸீர் (38) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 
அத்துடன் மூவர் படுகாயமடைந்ததுடன் 5 பேர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.    நன்றி வீரகேசரி

பருத்தித்துறை - திருகோணமலைக்கு புதிய பஸ் சேவைகள்



18/01/2016 இரு புதிய பஸ் சேவைகளை பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்து. இதனைவிட இனிமேல் காலை 7.45 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் இப்புதிய சேவைகள் இடம்பெறவுள்ளன.
திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கி தினமும் காலை 8 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படும் என இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!



18/01/2016 மாலபே தனியார்  மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஒன்றிணைந்த இலங்கையின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், பல்கலைக்கழக வைத்தியப்பீட மாணவர்கள்; வைத்தியர்கள்,தாதிகள் மற்றும் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பெற்றோரும் கலந்துக்கொண்டனர். 
அவிசாவலை, கடுவெல ஆகிய வைத்தியசாலைகளில் மாலபே மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு மேலதிகமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையிலும் பயிற்சிகளை வழங்க அரசு இன்றைய தினம்  உயர்நீதிமன்றிடம் அனுமதி பெறுவது தொடர்பிலான விசாரனையின் போதே மேற்படி  இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு உயர்நீதிமன்றம்    முன்பாக  முன்னெடுக்கப்பட்டது. 


நன்றி வீரகேசரி

உறவினர்களால்   இராணுவத்தினரிடம் நேரடியாக  கையளிக்கப்பட்டவர்களுக்கு    என்ன நடந்தது? : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி

19/01/2016 இறுதி யுத்தத்தின்போது வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவுகளால் பலர் நேரடியாக கையளிக்கப்பட்டனர். அதற்கான சாட்சியங்களும், ஆதாரங்களும் தற்போதும் உள்ளன. அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. 

உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லாதவர்கள் தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் உடன் பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் அக்கட்சி  வலியுறுத்தியுள்ளது. 
அதேநேரம் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருக்கின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றமையும் வெளிப்படையாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நேரடிச் சாட்சியங்கள் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.   அவ்வாறான நிலையில் பிரதமரின் கருத்து அதிர்ச்சியளிப்பதாகவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  குறிப்பிட்டுள்ளது.  
யாழில் நடைபெற்ற  தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை கவலையுடன் தெரிவித்திருந்தார். அதாவது, காணாமல்போனவர்களில் எமது பட்டியலில் காணப்படாதுள்ள  பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவர்களுக்கு என்ன நடத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில் இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு  கூறினார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்ட காலம் முதல் வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவ்வாறிருக்கையில் இறுதி யுத்தத்தின் போது 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள்;, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என ஒருதொகுதியினர் காணமல்போயுள்ளனர்.  மறுபக்கத்தில் இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் பொதுமக்கள் பிரவேசித்தபோது முட்கம்பி வேலிகளுக்குள் நீண்டவரிசையில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.  
ஒரு மணிநேரம் கூட புலிகளின் அமைப்பில் இருந்தால் எம்மிடம் சரணடையுங்கள். உங்களை விசாரணையின் பின்னர்  மூன்று மாதங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றோமென இராணுவத்தினர் பகிரங்கமாக அறிவித்தனர். 
இதனையடுத்து அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் சரணடைந்தனர். அதுமட்டுமன்றி உறவுகளால் நேரடியாகவே இராணுவத்தினரிடம் பலர் கையளிக்கப்பட்டனர். இதனை விட இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை விசாரணை செய்யவேண்டுமெனக் கூறியும் அழைத்துச் சென்றிருந்தனர். ஓமந்தை காவல் நிலையத்தில் வைத்து இளைஞர்கள் வகைப்படுத்தப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வுனியாவில் அமைக்கப்பட்டிந்த தற்காலிக முகாம்களில் இருதவர்களில் பலரும் விசாரணையின் பேரால்   பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.  அதற்கான ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ளன.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பது இன்றுவரையில் தெரியாதுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டவர்களாக இருந்தாலும் போரியல் சட்டங்களுக்கு அமைவாக  சரணடைந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர்  குற்றவாளிகளாக காணப்படுவார்களாயின் உள்நாட்டு அல்லது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான செயற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் விடுதலைப்புலி உறுப்பினர்களாக இருந்தாலும் கூட சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்படுவதென்பது போரியல் தர்மத்தை மீறும் செயற்பாடாகும். 
இதேவேளை  கடந்த காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களை சமாளித்துக்கொள்வதற்காக கடந்த ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிடத்தில் இதுவரையில் 23ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5ஆயிரம் முறைப்பாடுகள் இராணுவத்தினரது குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றபோதும் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
அவ்வாறு முறைப்பாடு செய்தவர்கள்  சாட்சியமளிக்கையில் தமது உறவுகளை யாரிடம் ஒப்படைத்தோம், எவ்வாறான நிலைமையில் காணமல்போனார்கள், தமது உறவுகள் காணமல்போனமை தொடர்பான சம்பவத்துடன் யார் யார் தொடர்புபட்டுள்ளனர் போன்ற தகவல்களை தெளிவாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவ்வாறான எந்த நபர்கள் மீதும் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. 
நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்படுகின்றன என்பது எமது கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனால் முதற்தடவையாக பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்டது. அது தொடர்பிலான விசாரணைகளை  மேற்கொள்வதாயின் மற்றும் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் அவற்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.  குழுவினர் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருந்மையை உறுதிப்படுத்தியிருந்தனர். அதேபோன்று இரகசிய முகாம்களிலிருந்து வெளியேறிவந்தவர்கள்  சிலரும் காணப்படுகின்றனர். எனினும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவர்கள் இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு அச்சமடைந்துள்ளனர். அதேநேரம் இரகசிய முகாம்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை செய்யவேண்டிய அரசாங்கம் அது தொடர்பிலான எவ்வித விசாரணைகளையும்  முன்னெடுக்கவில்லை.
மேலும் வெள்ளைவான் சம்பவங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கத்துடன் இணைந்து அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மற்றும் அத்தகைய சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களின் விபரங்களையும் பொதுமக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் பல சான்றுகள் அவர்களிடத்தில் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கின்ற நிலையிலேயே ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நல்லாட்சியை நிலைநாட்டுவதை இலக்காக கொண்டிருக்கும் புதிய அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென அறிவித்திருக்கின்றது. 
இந்த அறிப்பானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. விசேடமாக தமது உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்துமளவிற்கு உறவினர்களிடம் ஆதரங்களும், சாட்சியங்களும் காணப்படும் நிலையில் அவர்கள் உயிருடன் இல்லையென கூறுவது எந்தவகையில் நியாயமாகும்.? அவ்வாறு அவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது, அதற்கு யார் காரணம் என்பதை அறிவிக்க வேண்டும். உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும். சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும். அதனைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே உயிருடன் இல்லையென அறிவிப்பதானது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முழுமையாக பாதிப்பதுடன் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே வலுப்படுத்துவதாக அமையும். ஆகவே இவ்விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடனான பகிரங்க விசாரணை அவசியம். 
அதேநேரம் தற்போது காணமல்போனோரில் பெருமளவானோர் உயிருடனில்லையென்ற அறிவிப்பின் பிரகாரம் ஒரு தொகையினர் உயிருடன் இருக்கின்றனரா என்ற கேள்வியொன்று காணப்படுகின்றது. ஆகவே உயிருடன் இருப்பவர்கள் யார் அவர்கள் எங்குள்ளனர். உயிரழந்தவர்கள் யார் போன்ற விபரங்களை உடனடியாக பகிரங்கப்படுத்தபடவேண்டும் என்றார்.    நன்றி வீரகேசரி

அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன  காலமானார்


19/01/2016 காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன  தனது 69 ஆவது வயதில் காலமானார். 
இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது


21/01/2016 அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த  ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
நேற்று  மாலை குறித்த ஊடகவியலாளர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரை கைதுச் செய்ததாகவும்  குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை தொfடர்பிலேயே அவரைக் கைதுச் செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும்  அறிய முடிவதாவது,
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹிக்கடுவை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் புண்ணிய மூர்த்தி சசிகரன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந் நிலையிலேயே அவர் நேற்று முன் தினம்  இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன் போது விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாஅரிகள் புண்ணியமூர்த்தி சசிகரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நன்றி வீரகேசரி

யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானம்


21/01/2016 வடக்கில் யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.  வடக்கு அரசியல் வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழல் புதிய அரசியலமைப்புக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது  சுகாதார அமைச்சரும்இ அமைச்சரவை இணைப் போச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார். 
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அண்மையில் பிரதமர் ரணில்விக்கிரசிங்க யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் உரையாற்றும்போதுஇ யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார். எனவே வடக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசின் முடிவென்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். 
அமைச்சர் இங்கு மேலும் பதிலளிக்கையில்இ 
யுத்த காலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக  அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன்போது வடக்கில் யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் நீண்டகாலமாக தமது உறவுகள் காணாமல் போனதால் அவர்களது குடும்பங்களை சார்ந்தோர் பல்வேறு விடயங்களில் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். 
எனவே  அவ்வாறான சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில்  காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் தற்போது வடமாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் முக்கியஸ்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை அரசின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதுவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி