திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
ஆற்றல்மிக்கவர்களை   இனம்கண்டால்  ஆளுமைகள் உருவாகுவார்கள்
ஒப்புநோக்காளர்  பிரதம   ஆசிரியராக  வளர்ந்த கதை  


    
                                             பொதுவாழ்விலும்  ஊடகத்துறையிலும்  இதழியலிலும்     ஆளுமைகளாக  மாறிய  சிலர்,  மற்றவர்கள்  வியக்கும் வண்ணம் உச்சங்களைத் தொட்டதற்கு   கடின  உழைப்புதான்   மூலதனம்
எனது   பார்வையில்  அடிக்கடி நினைத்துப்பார்க்கும்  தமிழக ஆளுமைகள்  மூவர்  எனக்கு  ஆதர்சமாக  விளங்கினார்கள்.   அவர்கள் மயிலாப்பூர்  பொன்னுச்சாமி  சிவஞானம்  என்ற   சிலம்புச்செல்வர் .பொ.சி.  (1906-1995)    மற்றவர்   கோவிந்தன்   என்ற   விந்தன் (1916-1975)   மூன்றாமவர்  முருகேசன்  என்ற  இயற்பெயர்கொண்ட ஜெயகாந்தன்  என்ற   ஜே.கே. (1934-2015)
இவர்கள்  மூவருடையதும்   பள்ளிப்படிப்பு  ஐந்தாம்  தரத்திற்கு அப்பால்   நகரவில்லை.  ஆனால்,  அவர்கள்  மக்களைத்தான்  படித்தார்கள்.  ஏழ்மையினால்  தனது  கல்வியை  3   ஆம்  தரத்துடன் நிறுத்திக்கொண்டு,   எத்தனையோ   அன்றாடத்தொழில்கள்  செய்து  ஒரு   அச்சகத்தில்  அச்சுக்கோப்பாளராகியவர்  .பொ.சி.   பின்னாளில் தமிழரசுக்கழகத்தையும்   உருவாக்கியவர்.   மெட்ராஸை சென்னையாக்கப் போராடியவர்.    செங்கோல்,  தமிழ்முரசு  முதலான இதழ்களின்   ஆசிரியராகவும்  இருந்ததுடன்,    சிலப்பதிகாரம்  உட்பட பாரதியார்,    வீரபாண்டிய  கட்டபொம்மன்,   கப்பலோட்டிய  தமிழன், முதலானோரையும்  ஆய்வுசெய்து  பல  நூல்கள்  எழுதியவர்.



விந்தனும்   படிக்கவசதியற்று,   அன்றாடத் தொழில்கள்  செய்து தமிழரசு,   ஆனந்தவிகடன்  முதலான   இதழ்களில் அச்சுக்கோப்பாளராகி  பின்னர்,  கல்கியிலும் அந்தத் தொழிலைத் தொடர்ந்து - கல்கியால்  இலக்கிய  உலகிற்கு  அறிமுகமானவர். தமிழ்த்திரையுலகில்  இரண்டு  வல்லரசுகள்  என  அறியப்பட்ட  மக்கள்   திலகமும்  நடிகர்  திலகமும்  இணைந்து  நடித்த  ஒரே  ஒரு படமான   கூண்டுக்கிளி,   கல்கியின்  பார்த்திபன்  கனவு,   மற்றும்  சில படங்களுக்கும்   வசனம்  எழுதியவர்  விந்தன்.   இவரும்  மனிதன் என்ற   இலக்கிய  இதழை   நடத்தியவர்.
ஜெயகாந்தன்,    ஐந்தாம்வகுப்புடன்  கடலூரைவிட்டு  ஓடிவந்து கஷ்டப்பட்டு,    பின்னாளில்  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சியின்  தமிழ் மாநிலக்காரியாலயத்தில்   ஜனசக்தி  அச்சகத்தில்   வேலை  செய்தும் வீதியோரங்களில்  நின்று  அந்த  இதழை  கூவிக்கூவி  விற்றும்  அங்கு ஒப்புநோக்காளராக   மாறினார்.   பின்னாளில்  தமிழ்ப்புத்தகாலயத்தில் ஒப்புநோக்காளராகி  சரஸ்வதி,   தாமரை,   சாந்தி  முதலான சிற்றிதழ்களில்  எழுதத்தொடங்கி,  ஆனந்தவிகடனில் முத்திரைக்கதைகள்   படைத்து   நட்சத்திர  அந்தஸ்து  பெற்றவர். இவரும்  தனியாக  ஞானரதம்  என்ற    இதழையும் நடத்திவிட்டு,    நியூ  செஞ்சுரி  புக்  ஹவுஸின்  கல்பனா   மாதம்  ஒரு நாவல்   இதழ்  ஆசிரியராகவும்  ஜெயபேரிகை,   நவசக்தி  முதலான  நாளிதழ்களின்  ஆசிரியராகவும்  மாறியவர்.


இவர்களின்   வரிசையில்  எனது  நீண்டகால  இனிய  நண்பர்  வீரகத்தி  தனபாலசிங்கம்    எனது   மனதில்   நிலைத்திருக்கிறார்.
யார்   இந்த  தனபாலசிங்கம்....?
அதிர்ந்து  பேசாமல்   தலைகுனிந்தவாறு,   எப்பொழுதும்  அமைதியாக அமர்ந்து  தனக்குத்தரப்படும்  வெள்ளீய  எழுத்து  அச்சுக்கள்  பதிந்த செய்திக் காகிதங்களையும்   வடிவமைக்கப்பட்ட  பக்கங்களையும் ஒப்புநோக்கிக்கொண்டு,   ஒரு  Proof  reader   ஆக  தமது  தொழில் வாழ்க்கையை   கொழும்பில்  தொடங்கியவர்தான்.   பின்னாளில் தினக்குரல்  நாளிதழின்  பிரதம  ஆசிரியராகவும்  உயர்ந்து  தற்பொழுது   வீரகேசரி  குழுமத்தின்  சமகாலம்  என்ற  அரசியல் விமர்சன  வெளியீட்டுக்கு  பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருப்பவர்.
முன்னொரு   காலத்தில்  பீக்கிங்  வானொலியின்  தமிழ்ப்பிரிவில் பணியாற்றிய  வி. சின்னத்தம்பி   என்ற   பாரதி  நேசன்  என்னும் புனைபெயரில்   பத்திகள்  எழுதியவரின்  சகோதரியின்  மகன். தனபாலசிங்கத்தின்   தந்தையார்  வீரகத்தி   தபால் கந்தோர் ஊழியராகப்  பணியாற்றியவர்.

வடமராட்சியில்  கரவெட்டியில்  சாதாரண  குடும்பத்தில்  பிறந்த தனபாலசிங்கம்,  பருத்தித்துரை  ஹர்ட்லிக் கல்லூரியில்  படித்து உயர்தரவகுப்புடன்   முற்றுப்புள்ளிவைத்துவிட்டு,   அன்று  அங்கு தீவிரமாக   இயங்கிக்கொண்டிருந்த  தோழர்  சண்முகதாசனின் தலைமையிலிருந்த   இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியின்  பிரசுரங்கள் விநியோகித்தல் , சுவரொட்டிகள்  ஒட்டுதல்,   கூட்டங்களுக்கு  கதிரை சுமத்தல்,   ஊர்வலங்களில்  கொடிகளையும்  பாதாகைகளையும் உயர்த்திப்பிடித்துச்செல்லல்,   முதலான  கட்சிப்பணிகளைச் செய்யும் சாதாரண  தொண்டனாகியிருந்தவர்ஆலயப்பிரவேசப்போராட்டங்களில்   மூத்தவர்கள்  ஈடுபட்டபொழுது, அதனையும்   அருகிருந்து  வேடிக்கை  பார்த்த  சிறுவன்.



தரப்படுத்தல்  இவரையும்  பாதித்தது.  ஆனால்,  அதற்காக கவலைப்படாமல்  கட்சித் தொண்டுகளில்  ஈடுபட்டு இடதுசாரித்தோழர்களின்   குறிப்பாக  சண்முகதாசனின்  நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்    தனபாலசிங்கம்.
ஆனால்,  பெற்றவர்களுக்கு  தமது  மகனின்  எதிர்காலம்   குறித்து கவலை வருவது  இயல்புதானே.   ஊரில்  இருந்தால்  தொடர்ந்தும் செஞ்சட்டைக்காரர்களுடன்தான்   அலைந்துகொண்டிருப்பார்  என்ற பெற்றவர்களின்    நியாயமான  கவலையினால்  ஒருநாள்  கொழும்புக்கு   ரயிலேற்றப்பட்டவர்.


ஜெயகாந்தன்  ரயிலுக்கு  டிக்கட்டும்  எடுக்காமல்  விழுப்புரம்  வந்தார். இந்த   தனபாலசிங்கத்தை  பெற்றவர்கள்  அந்த  நிலைக்குத்தள்ளாமல், பணமும்  கொடுத்து  ரயில்  டிக்கட்டும்  வாங்கிக்கொடுத்து கொழும்புக்கு  அனுப்பினார்கள்.   சிங்களம்  பேசத்தெரியாமல்  கொழும்பு   நகரை   திருதிருவென  பார்த்துக்கொண்டு  கோட்டை  ரயில் நிலையத்தில்   இறங்கியவருக்கு  அடைக்கலம்  தந்தவர்  மற்றும்  ஒரு   மாமனார்  கந்தசாமி.   இவர்  வீரகேசரியில்  விளம்பரப்பிரவில் பொறுப்பான   பதவி  வகித்தவர்.   அன்று  ஜெயகாந்தனுக்கு விழுப்புரத்தில்  ஒரு  மாமனார்  அடைக்கலம்  கொடுத்ததுபோன்று கொழும்பில்   ஒரு  மாமனார்  இந்த  தனபாலசிங்கத்தை  தனது கொட்டாஞ்சேனை  இல்லத்துக்கு  அழைத்துவந்தார்.
தனபாலசிங்கத்தின்  கொழும்பு  வருகையுடன்  அவரின்  வாழ்க்கையும் திசைமாறியது.   அவர்  அவ்வாறு  வந்த  1977  ஆம்  ஆண்டு  முதல் இந்தப்பத்தி   எழுதும்  வரையில்  மாத்திரம்  அல்ல,  என்றென்றும் எனது   இனிய  நண்பராகவே   இருப்பவர்  தனபாலசிங்கம்.   அதற்குக்   காவியநயம்  இருக்கிறது.   தமிழ்  சினிமாப்பாஷையில் சொன்னால்    " என்  நண்பேண்டா..."   அதனால்  நான்  தினமும் நினைக்கும்   பலரில்  ஒருவராக  திகழ்பவர்.

சுமார்  11  ஆண்டுகளின்   பின்னர்  1997  இல்  நான்   இலங்கை சென்றிருந்தபொழுது  இவர்  என்னை  தமது  வீட்டுக்கு  அழைத்து விருந்து  தந்தார்.
அப்பொழுது   அவருடைய  மனைவி,   என்னிடம், "  இவரையும் அழைத்துக்கொண்டு  அவுஸ்திரேலியா  செல்லுங்கள்."   என்றார். நாம்   படும்  சிரமம்  இவருக்கு  வேண்டாம்.  இவருக்கு  இங்குதான் சிறந்த  எதிர்காலம்  இருக்கிறது  எனச்சொல்லி வழக்கமாகச்சொல்லும்  East or west home is the best  என்று அழுத்தமாகச் சொன்னேன்.
எமக்கிடையேயான  ஆரோக்கியமான  நட்புறவை  நன்கு தெரிந்து வைத்திருந்தமையால்தான்   கடந்த  2008  ஆம்  ஆண்டு   பெப்ரவரி மல்லிகை   இதழில்  தனபாலசிங்கத்தின்    படத்தை   அட்டையில் பதிவுசெய்த   ஆசிரியர்  மல்லிகை  ஜீவா   கொழும்பிலிருந்து தொடர்புகொண்டு   "  பூபதி  நீர்தான்  அந்த  இதழில்   தனம்  பற்றி எழுதித்தரவேண்டும் "  எனக்கேட்டுக்கொண்டார்.


ஒவ்வொருவர்  வாழ்வும்  திசை திரும்புவதற்கும் --- திசைமாறிச் செல்வதற்கும்   யாராவது  காரணமாக  இருந்திருப்பார்கள்.   பல புகழ்பெற்ற   மனிதர்களின்  வாழ்க்கையை   கருத்தூண்றிப் பார்த்தால் அதன்  தாற்பரியம்  புரியும்.   வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்தவர்களும்   உயரத்திற்கு  எழுந்திருப்பதற்கு  பலர் ஏதோ ஒரு  வழியில்  காரணகர்த்தாக்கள்தான்.   தனபாலசிங்கத்தின் கதையில்   அவர்கள்   யார்   என்பது  தெரியவரும்.
1977 ஆம் ஆண்டு  முற்பகுதி.   வீரகேசரியில்  ஒப்புநோக்காளர்  தேவை என்ற   விளம்பரத்தைப் பார்த்துவிட்டு,  அதற்கு  விண்ணப்பித்தேன். ஏற்கனவே  1972  முதல்  வீரகேசரியின்    நீர்கொழும்பு   பிரதேச நிருபராக   சில  வருடங்கள்  பணியாற்றியிருந்தாலும்  அதன் வருமானம்  போதியதாக  இல்லை.   செய்தி  எழுதி  அனுப்பினாலும் தொலைபேசியில்  சொன்னாலும்கூட  செய்தி  அச்சில்  வெளியானால்   மாத்திரமே  அடிமட்டை  ( Foot rule)  வைத்து அளந்து பார்த்துத்தான்  பணம்   தருவார்கள்.   ஒப்புநோக்காளர்  வேலைக்கு விண்ணப்பித்து  நேர்முகப் பரீட்சைக்கு  அழைப்பு  வந்தபொழுது மழைக்காலம்.

அன்றும்   மழை.  இன்றும்  பல வருடகாலமாக  அதே  கிராண்ட்பாஸ் வீதியில்   இருக்கும்  அலுவலகத்தில்  பரீட்சைக்குத்தயாராக அமர்ந்திருக்கின்றேன்.   என்னைப்போல்  மேலும்  பலரும்  தமது கைகளில்   சான்றிதழ்  கோவைகளை   சுமந்துகொண்டு காத்திருக்கின்றனர்.
அப்பொழுது   ஒரு  மெலிந்த  இளைஞர்  குடையுடன்  வந்து  அதனை மடித்து    எங்குவைப்பது  எனத்தெரியாமல்  தயங்கிக்கொண்டிருந்தார். அங்கிருந்த   அலுவலக  சிற்றூழியர்  வந்து  அதனை   வாங்கி   அந்த அறையின்   மூலையில்  வைத்துவிட்டு,  " செல்லும்போது  மறக்காமல்  எடுத்துச் செல்லுங்கள் " என்றார்.   அக்குடையுடன் வந்தவர்   அப்பொழுதும்  ஏதும்  பேசாமல்  தலையைத்தான் ஆட்டினார்.
ஆழ்ந்த   மௌனத்துடன்  தலைகுனிந்து  அவர்  அமர்ந்திருந்தார்.
உள்ளே  முகாமையாளரின்  அறையில்  முகாமையாளர்  எஸ். பாலச்சந்திரனும்  பிரதம  ஆசிரியர்  . சிவப்பிரகாசமும் நேர்காணலுக்கு   ஒவ்வொருவராக  அழைத்துப்பேசிவிட்டு எழுத்துப்பரீட்சையும்    நடத்தினார்கள்.    வீரகேசரியில்  அந்தப்பெரிய அறையில்   அனைவரும்  பரீட்சை  எழுதினோம்.

அங்கிருந்தவர்களின்   தோற்றங்களைப் பார்த்தபொழுது  எனக்கு  அந்த   ஒப்புநோக்காளர்  வேலை   கிடைக்கும்  என்பது நிச்சயமற்றிருந்தது.
         அதன்பின்னர்   1977  கலவர  வன்செயல்கள்  தலைதூக்கியதும் வீரகேசரியிலிருந்து   பதிலே  இல்லை.   சரிதான்  இங்கும்  எனக்கு     வேலை   இல்லைத்தான்     என்று  வேறு  வேலை   தேடுதல் படலத்திலிருந்தேன்.   சில  மாதங்கள்  கழித்து  வந்த  கடிதம் "  உடனே   வந்து   வேலையை  பொறுப்பெடுக்கவும் "   என்று  தகவல் சொன்னது.    இன்றும்  அக்கடிதம்  என்வசம்  பத்திரமாக  உள்ளது. சென்றேன்.   அன்றும்  மழைநாள்.   ஒப்புநோக்காளர்  பிரிவில் அதற்குப்பொறுப்பாக   இருந்தவர்  அன்பர்  என  எம்மால் அழைக்கப்பட்ட   பொன்னுத்துரை.   இவருடைய  மகள் உதயராணியைத்தான்   பின்னாளில்  மணந்துகொண்டார்  மற்றும்  ஒரு   பத்திரிகையாளரும்  தற்பொழுது  அரசியல்  விமர்சனப்பத்திகளை   எழுதி வருபவருமான  சட்டத்தரணி  . தம்பையா.

அன்பர்   பொன்னுத்துரை   அன்று  என்னிடம்,  மற்றும்  ஒருவர் தெரிவாகியிருக்கிறார்.   அவர்  யாழ்ப்பாணத்திலிருந்து  இன்னமும் வரவில்லை   என்றார்.   யார்  அவர்...?  என்று  காத்திருந்தேன்.
அன்று  நேர்முகப்பரீட்சைக்கு  வந்தபொழுது  தலைகவிழ்ந்து அமைதியாக  இருந்துவிட்டுப்போனாரே  அவரேதான். பணியைப்பொறுப்பேற்றபொழுதும்   அவர்   அதிகம்  பேசவில்லை. நான்தான்   என்னைப்  பெயர்சொல்லி  அறிமுகப்படுத்திக்கொண்டேன். இந்த  இளைஞன்  அநியாயத்துக்கு  இப்படி  அமைதியாக இருக்கிறானே   என்றும்  எனக்குள்  வியந்தேன்.
ஆனால் -  ஒரு  சிறிய  ஆழம்விதைக்குள்  அதனை   விருட்சமாக்கும் சக்தி   இருக்கிறது  என்பதை  அன்று  எனக்கு  அறிமுகமான  வீரகத்தி தனபாலசிங்கம்   காலம்  கடந்து  உணர்த்தினார்.

என்னிடம்   எப்பொழுதும்  இலக்கிய  இதழ்கள்,  நூல்கள்  இருக்கும் தினமும்  நீர்கொழும்பிலிருந்து  கொழும்புக்கு  பயணிப்பதால் வாசிப்பதற்கு   எடுத்துச் செல்வேன். அந்தப்பழக்கம்  இற்றைவரையில் தொடருகிறது.
அன்று  என்னிடம்  இருக்கும்  இதழ்கள்,  நூல்களை  மிகுந்த தயக்கத்துடன்   கேட்டு வாங்கிப்படிக்கும்  தனபாலசிங்கம்,  என்னுடன் நெருக்கமானார்.   மதிய -  இரவு  உணவுவேளைகளில்  ஆமர்வீதியில் அமைந்த   அம்பாள்  கபே,   வாணி விலாஸ்,   கெப்பிட்டல் தியேட்டருக்கு   அருகில்  இருந்த  ஒரு  தீவுப்பகுதி  அன்பர்  நடத்திய சாப்பாட்டுக்கடை   ஆகியனவற்றில்  நாம்  இருவரும்  அருகருகே அமர்ந்து  இலக்கியம்,   அரசியல்,  உள்நாட்டு  உலக விவகாரங்கள் அலசுவோம்.   அப்பொழுதுதான்  அவருக்கும்  வடபகுதி இடதுசாரிகளுக்கும்  இடையிலிருந்த   உறவு  புலப்பட்டது. அக்காலப்பகுதியில்  கொழும்பு  யூனியன்  பிளேஸிலிருந்த  மக்கள்  பிரசுராலயம் ,  பொரளை  கொட்டா   ரோட்டில்  இருந்த  கம்யூனிஸ்ட்  கட்சி  தலைமை  அலுவலகம்  என்பவற்றிலிருந்து  நான்  வாங்கிவரும்   சோவியத்   இலக்கிய  நூல்கள்,  மொழிபெயர்ப்புகளையும்  ஆர்வமுடன்  கேட்டுப்படிப்பார்.

கொழும்பிலும்   நீர்கொழும்பிலும்  நடக்கும்  இலக்கிய கூட்டங்களுக்கும்   என்னுடன்  வந்துவிடுவார்.   இவ்வாறு இணைபிரியாத    நண்பர்களாக    வளர்ந்தோம்.
தோழர்   சண்முகதாசன்  கொழும்பு   அரச   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது  அவரைப் பார்க்கச்செல்லும் வேளைகளில்  என்னையும்  உடன்  அழைத்துச்சென்று  அவருக்கு அறிமுகப்படுத்தினார்.   சண்  மலேவீதியில்  வைத்திருந்த தொழிற்சங்கத்திலும்    அவரை   சந்திப்போம்.

ஒவ்வொருவர்  வாழ்விலும்  யாராவது  ஒருவர்  திருப்பத்திற்கு காரணமாக   இருந்திருப்பார்கள்  என்று  முதலில்  சொன்னேன் அல்லவா.
1977   இல்  வீரகேசரியில்  எனக்கும்  தனபாலசிங்கத்திற்கும்  அந்த ஒப்புநோக்காளர்   பணியைத் தந்து,  தொழில்   வாழ்வில்  திசை திரும்புவதற்கு   பாலச்சந்திரனும்  சிவப்பிரகாசமும்  இருந்ததுபோன்று எம்மிருவரையும்   செய்தி    ஊடகவாழ்க்கைக்கு  திசை   திருப்பிய ஒருவரும்  இருக்கிறார்.
(அடுத்த வாரம்  தொடரும்)