மலரும் முகம் பார்க்கும் காலம் 23 - தொடர் கவிதை

.
மலரும் முகம் பார்க்கும் கவிதையின் இருபத்துமூன்றாவது (23) கவிதையை எழுதியவர் இலண்டனைச் சேர்ந்த படைப்பாளி திருமதி.நிவேதா உதயராயன் அவர்கள்.


கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகி
கனவுகள் கவிதையாகி ஒளிருமென
கண் வளரும் நேரமெல்லாம்
கற்பனையில் கண்டு நின்றோம்

கானல் நீரை கடல் நீராய் நம்பி
காததூரம் நாம் நடந்து வந்தும்
கண்ணில் படவவே இல்லை
காத்திருப்புக்களின் கொள்வனவு

கூடிக் கொண்டாடி மகிழ்ந்திருக்க
காலத்தின் கோல நிகழ்வுகளும்
கறைபிடித்து களையிழந்து போன
கட்டடத்தின் எச்சங்களும் மட்டுமாக
கனவுகள் கலைந்த தேசத்தின்
காற்றாகிப் போன எம் கற்பனைகளும்
கடற் கோளாகிக் கலைத்துப் போனது

கலைந்துபோய் கிடக்கிறோம் நாம்
கட்டிழந்து களையிழந்து காவலற்று
கண்மலரும் முகம் பார்கும் காலம்
கண்டிப்பாய் எம் முன்னே நீளும்
கவலைகள் காற்றாகிப் போகும்
காவிய நாயகர்கள் தேசம் மீண்டும்
கண்முன்னே துயர் துடைத்து மீளும்