விஜயா அக்கா கதைக்கிறன் என்ற குரல் இனிக் கேளாது - கானா பிரபா

.."அருண் விஜயராணி அக்காவுக்குக் கடுமையாம், எந்த நேரமும் அவர் நம்மை விட்டுப் பிரியலாமாம்"
செய்தியை நண்பர் எடுத்து வந்த போதே கடவுளே இதையும் அவ கடந்து வர வேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டேன். இன்று மாலை அவர் நம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு இந்த நிமிஷம் இதை எழுதிக் கொண்டிருக்கும் வரை இதையெல்லாம் மாயமோ என்ற நிலையில் இறுகிப் போயிருக்கிறேன். இதே நிலை தான் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்த போதும்.

இலக்கிய உலகில் பேரிழப்பு என்ற வார்த்தைகளில் சம்பிரதாயம் இல்லை. அவுஸ்திரேலிய மண்ணின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர் என்ற இலட்சணத்தை வெறுமனே இந்த ஒற்றை வார்த்தைகளால் கடக்க முடியாது.

மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்வில் ஓவியர் அமரர் திரு.செல்லத்துரை அவர்களது ஓவியக் கண்காட்சியும் இருந்தது. சிவயோக சுவாமிகளின் திருவுருவத்தை வரைந்த வகையில் அவரின் தனித்துவமான ஒரு ஈழத்து ஓவியர். அவரின் மகள் தான் எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
அதன் பின் "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படத்தினை சிலாகித்து நான் வானொலியில் பகிர்ந்த போது என்னைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பு, இந்தப் படம் Sense and Sensibility இன் தழுவல் என்ற செய்தியோடு இந்தப் படம் குறித்த மாறுபட்ட விமர்சனப் பார்வையை முன்வைத்தார் ஒரு பெண்மணி. வானொலியை இப்போது தான் கேட்க ஆரம்பித்திருக்கிறேன் என்ற செய்தியோடு வந்த அவர் வேறு யாருமல்ல அருண் விஜயராணியே தான். 
அதன் பின்னர் வானொலியில் நான் வழங்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கு அவரது விமர்சனமும், பாராட்டுதல்களும் வரத் தொடங்கின. தொலைபேசியில் வாரம் ஒருமுறை அவரின் அழைப்போ என் அழைப்போ இருக்கும். 
இலங்கை வானொலியின் தன் எழுத்துப் பிரதிகள் பலவற்றை வழங்கிச் சிறப்பித்தவர், அவுஸ்திரேலியாவின் விரல் விட்டு எண்ணத்தகு எழுத்தாளர்களில் ஒருவர். குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்ன என்பதை அதன் வரையறைகளோடு வாழ்விலும் எழுத்திலும் பதித்தவர். என்னுடைய வானொலிப்படைப்புகள் பலவற்றுக்குத் தன்னுடைய ஆக்கங்களை எழுதி அனுப்பி வைத்து உரமேற்றி வைத்த போது அந்த நிலை எனக்கு வானொலிப் படைப்புலகில் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக நினைத்துக் கொண்டேன்.

தமிழ் சினிமாப் பாடல்களை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நின்று கொண்டு பார்க்காமல் இன்றைய பாடல்கள் வரை துறை போகத் தெரிந்தவர். எழுத்தாளர் நிலையில் இருந்து ஜனரஞ்சக சினிமா உலகைப் பார்ப்பதெல்லாம் கெளரவக் குறைச்சலாக இருக்கும் எழுத்தாளர்களில் இவரின் இன்னொரு முகம் தனித்துவமாக அடையாளப்படுத்தியது. "தங்கமான எங்கள் ஊர்" என்ற ஈழத்து ஊர்கள் பற்றிய பகிர்வில் தன் பிறந்தகமான உரும்பராயைப் பற்றி எழுதி அனுப்பி வைத்தார். இன்னும் எத்தனையோ ஆக்கங்கள் தமிழ் இலக்கியங்களோடு தமிழ்த் திரையிசைப் பாடல்களை ஒப்புவமை செய்து பகிர்ப்பட்ட கட்டுரைகள் எல்லாம் அவர் கைப்பட எழுதி எனக்கு அனுப்பியவை இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஒருமுறை இதை நான் சொன்ன போது வியந்து போய் "அட இதையெல்லாம் எறிஞ்சிருப்பீங்கள் என்று நினைத்தேன் வீட்டில ஒரு பெரிய பரண் இருக்கும் போல" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நள தமயந்தி படத்தின் மூலக்கதை அவருடைய சிறுகதையில் இருந்து உரிமை பெறாமல் எடுத்தாளப்பட்டதைச் சிரிப்போடு கடந்து போனார். 

முனியப்பதாசன் கதைகள் தொடங்கி ஒரு குவியல் புத்தகங்களை அனுப்பிவிட்டுச் சொன்னார் "பிரபா இது உங்களிடம் இருக்க வேண்டியவை" என்று.

"அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை ஏன் சொல்லு ராசா" என்ற உன்னால் முடியும் தம்பி படப் பாடலை அடிக்கடி கேட்பார். அவருக்காக அல்ல இறந்து போன அவரின் அப்பாவுக்காக. அவ்வளவு நேசம் அவர் மேல். தந்தையாரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் உடைந்து அழுது விடுவார்.

தனது வானொலிப் படைப்புகள் ஒலி வடிவில் இறுவட்டாக வரவேண்டும் என்பது தான் இறுதி வரை அவரின் நிறைவேறாத ஆசை. 

நல்ல இலக்கியம், நல்ல சினிமா என்று எங்கள் வாராந்த சம்பாஷணைகள் இருந்து ஒரு நிலையில் எனக்கு உடன்பிறவாச் சகோதரி என்ற நிலைக்கு மாறினார். எனது திருமண அழைப்பிதழை முதன் முதலில் கொடுத்தது அவருக்குத் தான். இதை நான் சொன்னபோது அவர் அப்போது நெகிழ்ந்த கணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போது சொன்னேன் நான் 
"அருண் அண்ணா எவ்வளவு தூரம் உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உங்களோடு மனமொத்த கணவராக இருக்கிறாரோ அதே போன்ற ஆசீர்வாதம் தான் என் மண வாழ்க்கைக்கும் இருக்க வேண்டும் அக்கா"

திருமணத்தின் பின் முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து எங்களோடு வளர்க்க வேண்டும் என்று நான் சொன்ன போது அவர் சொன்னார். முதலில் உங்களுக்கு ஒரு குழந்தைச் செல்வம் கிடைக்கட்டும் பிரபா அதுக்குப் பிறகு இதை நீங்கள் செய்யுங்கள். 
எங்களுக்கு நீண்ட வருடங்களாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாத போது எனக்காகக் கந்த சஷ்டி விரதம் பிடித்தார். தன்னுடைய சிகிச்சைக்காக இந்தியா போன போது எனக்காக மாங்காடு அம்மனிடம் நேர்த்தி வைத்தார். 
இலக்கியா பிறந்த போது எங்கள் அளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்பார் விஜயராணி அக்கா என்பதை மறுமுனைத் தொலைபேசியில் அவரின் குரலில் தொனித்த நெகிழ்வில் உணர்ந்தேன்.
கடந்த எனது இந்தியப் பயணத்தில் அவர் மாங்காடு அம்மனிடம் எங்கள் குழந்தைப் பாக்கியத்துக்கான நேர்த்தி வைத்ததைச் செய்து முடித்ததையும் நிறைவோடு ஏற்றுக் கொண்டார்.

"ஏன் பிரபா எடுக்கேல்லை அக்காவோட கோவமோ?" என்று கேட்கும் அளவுக்கு அருண் விஜயராணி அக்காவின் உரிமையான நேசம் இருந்தது. 
என்னைக் கட்டுப்படுத்தி, நல்வழிப்படுத்தியவர்களில் அருண் விஜயராணி அக்காவின் பங்கு பெரும் பங்கு. 

எங்களுக்குப் பிடித்தமானவர்கள் ஏன் திடீரென்று செத்துப் போய் விடுகிறார்கள் என்ற கேள்வியை என் மனச்சாட்சி அழுது கொண்டே மீண்டும் கேட்கிறது. சொல்வதற்கு என்னிடம் பதில் இல்லை :-(