தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை - கார்த்தியாயினி

.
தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்
இரட்டைக்கலாநிதி பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்.

தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அவரது மறைவை ஒட்டி அவரது மாணவியாக எனது நினைவுகளை இங்கே பதிவு செய்கின்றேன்
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்;;;;;;;;;;.

இலக்கணம் இலக்கியம் மொழி பண்பாடு வரலாறு சமயம் தொல் எழுத்துக்கலை கல்வெட்டியல் என்று பல துறைகளில் வல்லுனராக தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அமெரிக்காவிற்  சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தனது இல்லத்துக்; குளியலறையில் விழுந்தமையினாற் தலையிலே அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1.11.15 அன்று காலமாகிவிட்டார். பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. ஆயினும் எந்தத் துறையிலாயினும் சிறந்த ஆளுமையுள்ளவர்களை இழக்க நேரிடும்போது அதுவும் அவர்கள் சிறந்த குருவாக தந்தையாக இருந்து எமக்கு நல்வழி காட்டியவர்களாயின் அந்த இழப்பு ஈடு  செய்ய முடியாததொன்றாகி விடுகின்றது. அந்த இழப்புத் தருகின்ற வலியும் மிக அதிகம். 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியர். ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் நியமனம் பெற்று வந்தபோது நானும் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்கும் மாணவியாகத் தெரிவு செய்யப்பட்டுத் தமிழ்த் துறையினுட் புகுந்தேன். 

மூன்று வருடங்கள் அவருடைய வழிகாட்டலிற் தமிழ் மொழியின் உன்னதத்தினையும் அம்மொழியின் பிரயோகத்தினையும் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடிந்தது என்னுடைய அதிஷ்டம் என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் விரிவுரையானாலும் ஆலோசனைகளானாலும் உரையாடல் ஆனாலும் உபயோகமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க மாட்டார். தமிழர் நாகரிகமும் பண்பாடும் சாசனமும் தமிழும் ஆகியவற்றை அவர் எமக்குக் கற்பித்தார். இக்காலத்திலேயே அவர் எழுதிய “தமிழ் இலக்கியத்திற் காலமும் கருத்தும்” “சாசனமும் தமிழும்” “தமிழ் வரலாற்று இலக்கணம்” ஆகியவற்றை எமது கற்கை நெறிக்காகப் படிக்கும் பேறும் கிட்டியது.   இறுதியாண்டில் என்னுடைய ஆய்விற்கு எடுத்துக்கொண்டது  இணுவையூர் சின்னத்தம்பிப்புலவரின் ஆக்கங்கள் அடங்கிய ஏடுகள். பேராசிரியர் அவர்களே என்னுடைய ஆய்வின் நெறியாளராக இருந்து ஏடுகளை எவ்வாறு வாசிப்பது என்பதில் இருந்து அதைச் சிறந்த ஆய்வாக எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரையான ஆலோசனைகளையும் தந்தவர். ஆய்வு முழமையடைந்து சமர்ப்பித்த பின் யுத்தகாலத்தின் நெருக்கடிகளுக்குள் எமது இருப்பிற்கும் உத்தரவாதம் அற்ற நிலையில் மின்சார வசதிகள் அற்ற யாழ்ப்பாணச் சூழலில் அந்த ஆய்வினை நூலாக வெளியிடுவதற்கு ஆலோசனைகளையும் தந்து என்னை உற்சாகப்படுத்தியவர். அந்த நூல் அவருடைய முன்னுரையுடனே 1988 ஆம் ஆண்டு கைலாசபதி கலையரங்கில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமன்றி எம் ஏ பட்ட ஆய்விற்குரிய தலைப்பினையும் அவரே எனக்குத் தெரிவு செய்து தந்து அந்த ஆய்விற்கும் நெறியாளராக இருந்து என்னை நெறிப்படுத்தியவர் பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள். 

பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் தந்தையின் பெயர் ஆழ்வாப்பிளளை. 21.11.1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி ஊரிற் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியைப் புலோலி தமிழ்ப்பாடசாலையிலும் பின் புலோலி ஆங்கிலப்பாடசாலையிலும் கற்று தனது உயர்கல்வியைக் ஹாட்லிக் கல்லூரியிற் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார் அங்கு பி.ஏ சிறப்புக் கலைப்பட்டதாரியாக முதல் வகுப்பிற் சித்திபெற்றார். இதற்காக இவர் ஆறுமுக நாவலர் பரிசினையும் இலங்கை அரசாங்கத்தின் பல்கலைக்கழகப் புலமைப்பரிசினையும் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்களின் நெறிப்படுத்தலிற் தமிழிற் கலாநிதிப்பட்டத்தை மிக இளம் வயதிலே முதன் முதலில் இலங்கையிற் பெற்றுக்கொண்டவர் இவரே என்று அவரது வரலாற்றுக்குறிப்பில் இருந்து அறிய முடிகின்றது. இதன்பின் இலண்டனில் உள்ள ஒக்ஸ்வேட் சர்வகலாசாலையில் தொமஸ் ப்ரோ என்பவரின் நெறிப்படுத்தலிற் கலாநிதிப்பட்டத்தைப் பெற்று இரண்டு கலாநிதிப்பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவரானார்.


பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பதவியேற்றுப் படிப்படியாக உயர்வு பெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகத் தமிழ்த்துறைத் தலைவராகக் கடமையாற்றிப் பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதன்பின் புலம்பெயர்ந்து சென்று சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார் அப் பல்கலைக்கழகம் இவரது அறிவினையும் பணியினையும் பாராட்டிச் சிறப்புக் கலாநிதிப் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்துள்ளது. இதன்பின் நோர்வேயிலும் பின் அமெரிக்காவிலுள்ள இரண்டு பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராக பேராசிரியராக கலாநிதிப்பட்ட நெறியாளராக கலாநிதிப்பட்ட மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் பல ஆய்வு நூல்களையும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 
இது தவிர “1973 – 1974 ஆம் ஆண்டுகளில் திருவனந்தபுரத்திலுள்ள திராவிட மொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்து உள்ளார். 1980 ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 1981 – 1982 ஆம் ஆண்டுகளில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிதி உதவியினைப் பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் சர்வகலாசாலையில் உலகப்புகழ் பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணி செய்த பெருமைக்கு உரியவர். இலங்கையிற் கிடைத்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்து அவற்றைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார். தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இவ் வெளியீடுகள் மிகவும் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. “கல்வெட்டடில் தமிழக் கிளை மொழியியல் ஆய்வு” என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவர் எழுதித் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டுள்ள நூல் மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு நூலாகக் கருதப்படுகின்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “கல்வெட்டுச் சான்றும் தமிழ் ஆய்வும்” என்ற இவருடைய ஆங்கில நூலும் குறிப்படத் தகுந்த மிகச் சிறந்த நூலாகும்”. என்று மேலும் பல தகவல்களை முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் “இலங்கைப் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை” என்ற தலைப்பில் எழுதிய தனது இணையத்தளக் கட்டுரை ஒன்றிற் குறிப்பிட்டுள்ளார். 
       
ஈழத்துத் தமிழறிஞர் ஒருவரை அவரது ஆழ்ந்த புலமையினை உயரிய பண்பை இலண்டன் சுவீடன் நோர்வே அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் இனங்கண்டு கொண்டது மட்டுமன்றி அவரது அறிவை சிந்தனையை அந்த நாட்டு இளம் தலைமுறையினருக்குப் பெற்றுக்கொடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுள்ளனர் எமது ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினருக்கு இத்தகைய ஒரு தமிழறிஞரின் வழிகாட்டலும் கற்பித்தலும் கிடைக்காமற் போனது பெரும் துரதிஷ்டமே.

எனது பல்கலைக்கழக வாழ்க்கையில் நான் கண்ட மிக நேர்மையான ஆழ்ந்த புலமையுள்ள மிகச்கிறந்த ஒரு பேராசிரியர் திரு ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்.  நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் தமிழ் துறையில் உதவி விரிவுரையாளராக எனது இருபத்தி மூன்றாவது வயதிற் கடமையேற்ற போது என்னைச் சக விரிவுரையாளரராக வரவேற்ற வரவேற்பின் உயரிய பண்பு கண்டு அவரது புலமை கண்டு நானும் அவரைப் போலச் சிறு வயதிலேயே நிறையச் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எனது துரதிஷ்டம் பல்கலைக்கழகச் சூழல் அதற்கு ஏற்றதாக எனக்கு அமையவில்லை. ஆயினும் இன்று பேராசிரியரின் இழப்பைக் கேள்வியுற்றுப் பழைய நினைவுகளில் மூழ்கிய போது ஒரு நல்ல குரு என்பவர் “அறியாமை இருளைப்போக்கி அறிவுக்கண்களைத் திறப்பவர்”. என்பது முற்றிலும் உண்மை என்பது நன்றாக உறைக்கின்றது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

No comments: