இலங்கைச் செய்திகள்


மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது      
எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?

 2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கி வைப்பு

திருமலையில் இரகசிய முகாம் : ஐ.நா.குழு

இலங்கை பெண்ணை கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு தீர்ப்பு

தாய்லாந்து துணை பிரதமர் - ஜனாதிபதி சந்திப்பு

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு

16/11/2015 மன்னார் மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்று  மதியம் வரை 610 குடும்பங்களைச் சேர்ந்த 2247 பேர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதுடன் 95 வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மன்னார் நகரில் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியதுடன் அரச அலுவலங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து அலுவலக உபகரணங்களை சேதமாக்கியுள்ளன.
மன்னார் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்தபோதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. 
இதன்படி இன்று மதியம்வரை கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 118 குடும்பங்களைச் சேர்ந்த 401 நபர்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்தள்ளனர். இதில் 52 குடும்பங்களைச் கார்ந்த 204 பேர் இடம்பெயர்ந்து மூன்று நலன்புரி நிலையங்களில்    தங்க வைக்கப்பட்டள்ளனர். 
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1824 பேர் இடம்பெயர்ந்து 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளாங்குளம் கோவில் தேவன்பிட்டி கோவில் பாலியாறு பொது மண்டபம் மூன்றாம்பிட்டி பொது மண்டபம் எழுத்தூர் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் செல்வநகர் சிறுவர் பாடசாலையிலும் பள்ளிமுனை பாடசாலை போன்ற நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
இதேவேளையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பெய்த மழையின்போது மன்னார் நகரில் பெரும் மழைநீர் நிரம்பி அதிகமான வீடுகளுக்கு உட்புகுந்தது மட்டுமல்ல அரச திணைக்கள மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் வட மாகாண போக்குவரத்து மீன்பிடி கிராமிய அமைச்சரின் மன்னார் கிளை அலுவலகத்துக்குள்ளும் உட்புகுந்த வெள்ள நீர் அங்கு இருந்த அலுவலகங்களுக்குள்ளும் நீர் நிரம்பி தரையில் பதிவான இடங்களிலிருந்த கணனனி உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
ஞாயிறுவிடுமுறை தினமாக இருந்தபடியால் பொருட்களை பாதுகாக்க முடியவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் பகுதிகளிலுள்ள பெரும்பாலன முக்கிய வீதிகள் உள் வீதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதால் போக்குவரத்துக்களும் பாதிப்பு அடையும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாலியாறு நீர் தொடர்ந்து வீதியை மேவி ஓடுவதால் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் போக்குவரத்து தொடர்ந்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது17/11/2015 மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை 8.30 மணியளவில் தமது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிரீநேசன், மற்றும் சீ.யோகேஸ்பரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதமிருந்த தமிழர் அரசியல் கைதிகள் 10 பேருக்கு இள நீர் வழங்கி முடித்து உண்ணாவிரதத்தினை முடித்து வைத்தனர்.

இதன் போது நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நடத்தப்பட்ட அரசாங்க உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான பிணை மற்றும் சில அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது போன்ற விடயங்களை இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து இவர்களின் உண்ணாரதம் முடிவுக்கு வந்தது. கடந்த பத்து தினங்களாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் இருந்த நிலையில் ஒருவர் அன்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்

17/11/2015 வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு,


இனப்படுகொலையும் நாமும்
எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார். உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி தேரிதலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார். காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 
பல மக்கள் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை. எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வௌற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்படவேண்டியது. 

உண்மையும் நல்லிணக்கமும் 
மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது. எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது. உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி  உருவாகும்? உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது.
முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான்  நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்? எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி
அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார். இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன். சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும்இ ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1இ33இ000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன். ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம். எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு.
பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும்
அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை. நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்;களேஇ எனது கட்சி. அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும். நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது. 
அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை. எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச்; சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான். அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை. அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன். எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும். 
அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது? பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள்இ அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள்இ பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும்.

தேர்தல்கால அறிக்கைகள்
அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில்   நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது? 
அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ இரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம். அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.
வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம்
நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ இரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் - 'நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்' என்றார். பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன். கௌரவ இரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது 'இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்' என்பதே அது. அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம்.
நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன். அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ இரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன். ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ இரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார். நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை. 
கௌரவ இரணிலும் நம்மவர்களும்
அதன் பின் கௌரவ இரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார். அதையுந் தாண்டி 'விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்' என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோஇ கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை. பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து 'நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை. இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ இரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.' என்றேன். இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா? பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில்இ கௌரவ இரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையதுஇ உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான்
மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு 'இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்' என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாணசபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு
மேலும் வடமாகாணசபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன். அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள்இ வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து வடமாகாணசபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வௌர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாணசபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
அரசியல் தீர்வு பரம இரகசியம்
மேலும் வடமாகாணசபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
உள்ள10ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள10ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது. செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது. தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு? 
மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு? 
பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் 'நான் ஊமை' என்று கூறினேன்.

அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது. 
நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்?
பாராளுமன்றத் தேர்தலும் நாமும்
ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருந்திருந்தால்இ நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும். கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல.
ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது. மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் 'நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை' என்பது. இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்கஇ அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது. ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்
பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும். சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும். கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு. 
வடமாகாணசபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல. இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம்  தெரிவித்து வந்துள்ளேன். ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்துஇ எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன். 
ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது. எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன்.  என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?

18/11/2015 அமெ­ரிக்­காவின் 51ஆவது மாநி­ல­மான இலங்­கையை பார்­வை­யி­டு­வ­தற்கு ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­தரப் பிர­தி­நிதி சமந்தா பவர் வரு­கிறார்.

இவ­ரது வரு­கைக்கு எமது கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்றோம் என பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் எம்­.பி­.யு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார். இலங்­கையில் புலி ஆத­ர­வா­ளர்­களைச் சந்­திக்கும் சமந்தா பவர் ஏன் முஸ்லிம்,சிங்­களத் தலை­வர்­களை சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு மேற்­கொள்­ள­வில்­லை­யென்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
கொழும்பில் நேற்று செவ்வாய் கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே உதய கம்­மன்­பில எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
ஐ.நா.விற்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­தரப் பிர­தி­நி­தி­யான சமந்தா பவ­ருக்கு ஐ.நா.விலும் அமெ­ரிக்­கா­வி­லுமே கடை­மைகள் உள்­ளன. ஆனால் இதனைக் கைவிட்டு அவர் எதிர்­வரும் 23ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திக­தி­வரை இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.
இவ் விஜ­யத்தை அர­சாங்கம் இர­க­சி­ய­மாக வைத்­துள்­ளது. வெளியில் வெளி­யி­ட­வில்லை. இங்கு வரும் சமந்தா பவர் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன்இ வட மாகா­ண­சபை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ரையே சந்­திக்­கின்றார்.
இவர்கள் அனை­வரும் நாடு பிரி­வ­தற்கு ஆத­ர­வா­ன­வர்கள். சமந்­தாவும் விடு­தலை புலி ஆத­ர­வாளர். மனித உரி­மைகள் தொடர்­பாக கருத்­த­ரங்­கு­களை நடத்­து­பவர். இவ்­வா­றான ஒருவர் புலி­களின் அர­சியல் பிரி­வாக இயங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை மட்டும் சந்­திக்­கின்றார்.
வடக்­கி­லி­ருந்து 24 மணி நேரத்­திற்குள் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ரஸை சந்­திக்­க­வில்லை. அதே­போன்று பயங்­க­ர­வா­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிங்­க­ள­வர்கள் தொடர்பில் பேச சிங்­களத் தலை­வர்­களைச் சந்­திக்­க­வில்லை.
அத்­தோடு புலி­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்து பாதிக்­கப்­பட்ட தமிழ் தலை­வர்­க­ளையும் இவர் சந்­திக்­க­வில்லை. எனவே சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ர­ணைக்கு அழுத்தம் கொடுக்­கவே அவர் இங்கு வருகிறார்.
இலங்கை இன்று அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறியுள்ளது. அரசு நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்கியுள்ளது. எனவே தங்களது மாநிலத்தை பார்வையிடவே அவர் வருகிறார் என்றும் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி


2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கி வைப்பு

17/11/2015 வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை  இன்று வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
“ வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நல்லிணக்கத் திட்டம் ” என்ற தொனிப்பொருளில் இவ்வாறு 2000 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.
1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இதுவரையில் 40 000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்து. 
இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்னர் நடைபெற்ற இரு விழாக்களின் போது சுமார் 600 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி
திருமலையில் இரகசிய முகாம் : ஐ.நா.குழு

19/11/2015 திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக் குள் இர­க­சிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை நாங்கள் அவ­தா­னித்தோம். நாம் அவ­தானம் செலுத்­திய பகு­தியில் 12 அறை
கள், எந்­த­வி­த­மான ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வச­தி­க­ளு­மின்றி காணப்­பட்­டன. 2010 ஆம் ஆண்டு வரை இதில் ஆட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என நாம் சந்­தே­கிக்­கிறோம். இது தொடர்பில் புல­னாய் வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இந்த விசா­ர­ணை­களின் முடி­வுகள் தொடர்பில் நாம் அதிக கரி­சனை செலுத்­தி­யி­ருக்­கிறோம் என்று ஐக்­கிய நாடு­களின் காணாமல் போனோர் குறித்த செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.


2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்­பட்ட 11 பேர் திரு­கோ­ண­ம­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் இந்த இர­க­சிய முகா­முக்கு கொண்டு
செல்­லப்­பட்­டி­ருப்­பார்­களா என்­பது தொடர்­பிலும் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர் எனவும் காணாமல் போனோர் குறித்த ஐ.நா.வின் செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், சர்­வ­தேச மனித உரிமை தரங்­க­ளுக்கு உட்­பட்டு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எனவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கி­வி­டு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அந்­தக்­குழு வலி­யு­றுத்­தி­யது. அத்­துடன் காணாமல் போனோர் குறித்த உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு மூல­மான விசா­ர­ணைகள் சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் இடம் பெற­வேண்டும். எனவும் அவர்கள் கூறினர்.
இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் காணாமல் போனோர் தொடர்­பான செயற்­குழு பிர­தி­நி­தி­க­ளான . பேனார்ட் டுகைமி, டயி உம் பைக், ஏரியல் டுலுட்ஸ்கி ஆகியோர் நேற்று தமது விஜ­யத்தை முடித்துக் கொண்ட பின்னர் கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்­டனர்.
காணாமல் போனோர் குறித்த ஐக்­கி­ய­நா­டுகள் செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் தொடர்ந்து கருத்து வெளி­யி­டு­கையில்:-
சந்­திப்­புக்கள்
நாம் இலங்கை விஜ­யத்தின் போது அரச அதி­கா­ரிகள் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், மற்றும் காணாமல் போனோரின் உற­வி­னர்கள், பாதிக்­கப்­பட்டோர் என பல்­வேறு தரப்­பி­னரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, காலி, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார். மாத்­தளை, முல்­லைத்­தீவு, மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய பகு­தி­க­ளுக்கு நாங்கள் விஜயம் மேற்­கொண்டோம். அத்­துடன் ஜனா­தி­பதி , பிர­தமர், அமைச்­சர்கள், இரா­ணுவத் தள­பதி, பிரத நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர், தேசிய புல­னாய்வு சேவையின் பணிப்­பாளர், சி.ஐ.டி.என். உப பணிப்­பாளர், வடக்கு, கிழக்கு ஆளு­நர்கள், புனர்­வாழ்வு அமைப்பின் தலைவர், காணாமல் போனோர் குறித்த ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள், சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். எலும்பு கூடுகள் கண்­டெ­டுக்­கப்­பட்ட மாத்­தளை, மன்னார் பகு­தி­க­ளுக்கும் பூசா முகா­முக்கும், திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்கும், சி.ஐ.டி. மற்றும் டி.ஐ.டி. கட்­டி­டங்­க­ளுக்கும் விஜயம் செய்தோம்.

வாக்­கு­று­திகள் போதும்
செயற்­ப­டுத்­துங்கள்

விசே­ட­மாக எமது குழு­வா­னது காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. பல சந்­திப்­புக்­களை நடத்­தின. இலங்­கையின் புதிய அர­சாங்கம் பல வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருக்­கி­றது. அந்த வாக்­கு­று­திகள் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­படும் வகையில் செய­லு­ரு­வாக்கம் பெற­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் உரி­மையை புறம் தள்ளி நல்­லி­ணக்­கத்தை அடைய முடி­யாது. இலங்­கையில் பல­வந்­த­மான காணாமல் போன சம்­ப­வங்கள் பல திட்­ட­மிட்ட வகையில் இடம்­பெற்­றன. யுத்­தத்தின் போதும், யுத்­தத்தின் பின்­னரும் பல­வந்­த­மான ஆட்­க­டத்தல் இடம் பெற்­றன.
இரா­ணுவ பிர­சன்­னத்தை குறை­யுங்கள்
வடக்கு, கிழக்கில் அதிக பட்ச இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது சமூ­கங்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யின்­மையை பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ளது. எனவே வடக்கு, கிழக்கில் இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைப்­பதன் மூலம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்­பது மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகும். தற்­போது இந்த விட­யங்­களை ஆழ­மாக ஆராய்ந்து உண்­மையைக் கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு இலங்­கைக்கு வர­லாற்று ரீதி­யான சந்­தர்ப்பம் ஒன்று கிடைத்­தி­ருக்­கி­றது.

பாதிக்­கப்­பட்­டோரின்
ஆலோ­ச­னையை பெறுங்கள்

எனவே முன்­னெ­டுக்­கப்­படும் எந்­த­வொரு பொறி­மு­றையும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆலோ­ச­னை­யு­ட­னேயே மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். சிவில் சமூ­கத்­தினர் மற்றும் பாதிக்­கப்­பட்டோர் காணாமல் போனோரின் உற­வி­னர்கள், எந்­த­வி­த­மான அச்­சமும் , அச்­சு­றுத்­தலும் இன்றி தமது செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் இவ்­வா­றான தரப்­பினர் மீது சில அச்­சு­றுத்தும் செயற்­பா­டுகள், பாலியல் வன்­மு­றைகள், மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக எமது குழு­விற்கு தகவல் கிடைத்­தது. புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக எமது ஐ.நா. குழுவை சந்­தித்த பாதிக்­கப்­பட்ட சிலர் பாது­காப்பு தரப்­பி­னரால் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­கின்றோம். இவை ஜன­நா­யக சமூ­கத்தில் எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல. இவ்­வா­றான செயற்­பா­டு­களை உட­ன­டி­யாக நிறுத்­து­வ­தற்கும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் தண்­ட­னைக்­கு­றி­ய­தாக ஆக்­கப்­ப­டு­வ­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தாக வேண்டும்.
பாது­காப்பு வழங்­குங்கள்
எம்மை சந்­தித்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பாது­காப்பை வழங்­கு­மாறும், அவர்­களை எவ்­வி­த­மான பழி­வாங்­கல்­க­ளுக்கும் உட்­ப­டுத்த வேண்டாம் என அர­சாங்­கத்தை கோரு­கிறோம். உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டின் வெற்­றி­யா­னது பாதிக்­கப்­பட்டோர். மற்றும் அவர்­களின் உற­வி­னர்­களின் உணர்­வி­லேயே தங்­கி­யுள்­ளது என்­பதை அனை­வரும் புரிந்து கொள்­ள­வேண்டும்.

கடந்த சில வரு­டங்­க­ளாக 12 ஆயிரம் சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் அர­சாங்­கத்தை அறி­வு­றுத்­தி­யுள்ளோம். அவற்றில் 5750 சம்­ப­வங்கள் இன்னும் நிலு­வை­யி­லுள்­ளன. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த காலத்தில் திட்­ட­மி­டப்­பட்ட கடத்­தல்கள் இடம் பெற்­றுள்­ளன. குறிப்­பாக வெள்ளை வேன் கடத்­தல்கள், மற்றும் கப்­பத்­திற்­கான கடத்­தல்கள் என்­பன இடம் பெற்­றுள்­ளன. இலங்­கையில் எமக்குக் கிடைத்த தக­வல்­களின் படி உல­கத்­தி­லேயே இரண்­டா­வது அதி­கூ­டிய தரவை இங்கு பெற்­றி­ருக்­கின்றோம். அண்­மைக்­கா­ல­மாக இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்ட செயற்­பா­டு­களை வர­வேற்­கின்றோம். புலிகள் தரப்­பிலும் பல, கடத்­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
உண்­மையை கண்­ட­றியும் உரிமை உள்­ளது

கடத்­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உண்­மையைத் தெரி­வ­தற்­கான உரிமை உள்­ளது. எந்­த­வொரு செயற்­பாடும் அனைத்­து­வ­கை­யாலும் கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்டும். அங்கு அநீதி இடம் பெற முடி­யாது. காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களை சந்­தித்த போது நாம் பாரிய கவ­லைக்­கு­ரிய கதை­களை செவி­ம­டுத்தோம். ஆழ­மான மற்றும் வருந்­தத்­தக்க கதைகள் நம்மை வந்து சேர்ந்­தன. மிக அண்­மைக்­காலம் வரை இலங்­கையில் கடத்­தல்கள் இடம் பெற்­றுள்­ளன. எனவே இது போன்ற செயற்­பா­டுகள் மீண்டும் இடம் பெறாத வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுதல் மிகவும் அவ­சியம்.
விசா­ர­ணைகள் இல்லை
ஆயி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் சம்­பவம் தொடர்பில் இது­வரை விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை. சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டவும் இல்லை. எனவே தற்­போது அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் வாக்­கு­றுதி அளித்­துள்­ள­வாறு காணாமல் போனோர் சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

வாக்­கு­றுதி அளித்­தது போதும் தற்­போது செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். நம்­பிக்­கைக்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் உறு­தி­யான முடி­வு­களும் தேவைப்­ப­டு­கின்­றன. அதற்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு ஐ.நா. காணாமல் போனோர் செயற்­குழு தயா­ராக இருக்­கி­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அந்த சட்­ட­மா­னது பல­வந்­த­மாக காணாமல் போகும் செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கி­றது. எனவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு எமது குழு பரிந்­துரை செய்­கி­றது.
இர­க­சிய முகாம்
எமது குழு­வா­னது திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மிற்கு விஜயம் செய்­தது. அங்கு 12 அறை­களைக் கொண்ட ஒரு இர­க­சிய தடுப்பு முகாமை நாம் கண்டோம். 2010 ஆம் ஆண்­டு­வரை இதில் மக்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என நாம் சந்­தே­கிக்­கிறோம். இது தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இந்த விசா­ர­ணை­களின் முடி­வுகள் தொடர்பில் நாம் அதிக கரி­சனை செலுத்­தி­யி­ருக்­கிறோம் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்­தப்­பட்ட 11 பேர் திரு­கோ­ண­ம­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் இந்த இர­க­சிய முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருப்­பார்­களா என்­பது தொடர்­பிலும் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர்.

நீதிக்­காக நீண்­ட­காலம்
காணாமல் போனோரின் உற­வி­னர்கள் நீதிக்­காக நீண்­ட­காலம் காத்­தி­ருந்து விட்­டனர். எனவே அவர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்டும். எனவே காணாமல் போனோர் குறித்து அர­சாங்கம் உட­ன­டி­யாக கொள்கை ஒன்றை தயா­ரித்து மிகவும் சுயா­தீ­ன­மாக விசா­ர­ணை­களை புதிய நிறு­வ­ன­மொன்றின் ஊடாக முன்­னெ­டுக்­க­வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் ஒன்றை அமைக்­க­வுள்­ள­தாக எமக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதற்கு ஐ.சி.ஆர்.சி. உதவி வழங்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.
இந்த காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்தின் ஊடாக முறை­யான மற்றும் உண்­மையைக் கண்­ட­றியும் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பான உண்­மையைக் கண்­ட­றிய வேண்டும். விசா­ர­ணையின் முடிவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் தேவையா ன ஏற்­பா­டு­களை செய்து கொடுக்­க­வேண்டும்.

நம்­பிக்­கை­யின்­மையை போக்­குங்கள்
இந்த விசா­ரணை செய்யும் அமைப்­பா­னது தொழில்­நுட்ப ரீதி­யா­கவும், சுயா­தீ­ன­மா­கவும் பக்­கச்­சார்­பின்றி தொழிற்சார் ரீதியில் செயற்­ப­ட­வேண்டும். சிங்­கள, தமிழ், ஆங்­கி­ல­மென அனைத்து மொழி­க­ளிலும் செயற்­பா­டுகள் இடம் பெற­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் பாரிய நம்­பிக்­கை­யின்மை இருப்­பதை நாம் காண்­கின்றோம்.இவ்­வாறு நம்­பிக்­கை­யின்மை இருப்­பதால் பொறி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அது­மட்­டு­மன்றி உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அர­சாங்கம் அமைக்­க­வுள்­ள­தாக அறிந்தோம். இந்த ஆணைக்­கு­ழு­வா­னது உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டில் முக்­கிய வகி­பா­கத்தை வகிக்கும் என நம்­பு­கிறோம்.
இலங்­கையில் 91 ஆம் ஆண்­டி­லி­ருந்து 11 ஆணைக்­கு­ழுக்கள் விசா­ரணை நடத்­தி­யுள்­ளன. இவற்றில் அதி­க­மா­னவை சுயா­தீனத் தன்மை குறித்து விமர்­ச­னங்­களை கொண்­டி­ருந்­தன. சில ஆணைக்­கு­ழுக்கள் முன்­வைத்த பரிந்­து­ரைகள் கூட அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதை தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

பர­ண­ம­கம ஆணைக்­குழு
நாங்கள் பர­ண­கம ஆணைக்­கு­ழுவை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆணைக்­கு­ழுவின் சுயா­தீன தன்மை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது. இந்த ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் அர­சாங்­கத்தின் காணாமல் போனோர் குறித்து உரு­வாக்­க­வுள்ள அலு­வ­லகம் தொடர்பில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. அதனால் இந்த ஆணைக்­கு­ழுவின் அனைத்து கோப்­புக்­கை­ளயும் அர­சாங்­கத்­தினால் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்ள காணாமல் போனோர் குறித்து அலு­வ­ல­கத்­திற்கு சமர்ப்­பிக்­கு­மாறு நாங்கள் மிகவும் வலி­மை­யாக பரிந்­துரை செய்­கின்றோம்.

மாத்­தளை மன்னார் எழும்­புக்­கூ­டுங்கள்
எலும்­பு­கூ­டுகள் கண்­டெ­டுக்­கப்­பட்ட மன்னார், மற்றும் மாத்­தளைப் பகு­திக்கு நாம் விஜயம் செய்தோம். இந்த விட­யத்தில் தடை­ய­வியல் விசா­ர­ணை­களில் முன்­னேற்றம் தேவைப்­ப­டு­கின்­றது. குறித்த பகு­தி­களை உரிய முறையில் பாது­காக்­க­வேண்டும். இந்த விட­யத்தில் தொழில் சார் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இந்த விட­யத்தில் மேற்­கொள்­ளப்­படும் டி.என்.ஏ. பரி­சோ­தனை தொடர்பில் கரி­சனை கொள்­கிறோம். பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ளும் அமைப்­புக்கள் பாது­காப்பு தரப்­பினர் மற்றும் பொலி­ஸாரின் அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­ட­வேண்டும்.

விசா­ரணை பொறி­முறை
நம்­பிக்­கை­ய­ளிக்­க­வேண்டும்
இலங்­கையின் போர்க்­குற்ற விட­யத்தில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்டு கலப்பு நீதி­மன்­றதை அமைத்து விசா­ரணை நடத்­து­மாறு ஐ.நா. மனித உரிமை பேரவை பரிந்­துரை செய்­தி­ருந்­தது. இந்த நீதி விசா­ரணை தொடர்­பான எந்­த­வொரு தீர்­மா­ன­மாக இருந்­தாலும் அது அனைத்து இலங்கை மக்­க­ளுக்கும் நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தாக இருக்­க­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் அதில் நம்­பிக்கை கொள்­ள­வேண்டும். சர்­வ­தேச மனித உரிமை சட்டம், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் என்­பவை மதிக்­கப்­ப­ட­வேண்டும்.
எமது குழு­விற்கு சாட்­சி­ய­ம­ளித்த மக்கள் நீதி நிர்­வாகம் தொடர்பில் தமது நம்­பிக்­கை­யின்­மையை வெளி­யிட்­டனர். எனவே விசா­ர­ணைகள் நிபு­ணத்­துவ வழக்­க­றி­ஞர்­களால் தொழில்சார் ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

பாது­காப்பு தரப்­பி­னரின் தலை­யீடு வேண்டாம்
இந்த விசா­ரணை செயற்­பா­டு­களில் பாது­காப்பு தரப்­பி­னரின் தலை­யீடு இருக்­கக்­கூ­டாது. விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு பங்­க­ளிப்பு செய்யும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சி.ஐ.டி. மற்றும் பாது­காப்புத் தரப்­பி­னரால் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. காணா­மல்­போன சம்­ப­வங்­க­ளினால் அதி­க­மான பெண்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே அவர்கள் பல்­வேறு சிர­மங்­க­ளையும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கின்­றனர். மனை­விமார், தாய்மார், சகோ­த­ரிகள், மகள் மார் என பலர் கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். அவர்கள் தமது வேத­னை­க­ளையும், பொரு­ளா­தார கஷ்­டங்­க­ளையும் எம்­மிடம் தெரி­வித்­தனர். இலங்­கையின் நீதி முறைமை மற்றும் வழக்­காடும் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு நம்பிக்கைக்குரியதாக இருக்கவேண்டும்.

கேள்வி:- திருமலை இரகசிய முகாமில் சித்திரவதைகள் இடம் பெற்றுள்ளனவா?
பதில்:- அது பற்றி எம்மால் கூற முடியாது. இந்த இரகசிய முகாம் குறித்து சி. ஐ.டி. விசாரிக்கிறது. இரகசிய முகாமில் ஒரு அறையின் சுவரில் 2010 என எழுதப்பட்டிருந்தது. எனவே 2010 ஆம் ஆண்டுவரை இங்கு ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதியில் நிலக்கீழ் அறைகளும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நாம் 12 அறைகளை பார்த்தோம். அந்த அறைகள் ஒரு தடுப்பு முகாமுக்கு இருக்கக்கூடிய எவ்விதமான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- அண்மைக்காலத்தில் இந்த இரகசிய முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்படவில்லையா?
பதில்:- அவ்வாறு நாம் அவதானிக்கவில்லை. அண்மைக்காலத்தில் யாரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
கேள்வி:- எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என கருதுகிறீர்கள்?
பதில்:- அது எமக்குத் தெரியாது. ஆனால் 2008 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த கோணத்திலும் விசாரணை இடம் பெறுகின்றன.
கேள்வி: நீங்கள் யாருடைய அழைப்பில் இங்கே வந்தீர்கள்?
பதில்:- நாங்கள் அரசாங்கத்தின் அழைப்பில் வந்தோம். நாங்கள் விசாரணை நடத்த வரவில்லை. மாறாக மதிப்பிடவே வந்துள்ளோம். எனவே அரசியல் அறிக்கைகளை நாம் விடுக்கமாட்டோம். எனவே நாங்கள் மனித உரிமை பேரவையின் ஒரு அங்கமல்ல. மாறாக ஐ.நா. வின் சுயாதீனமான ஒரு அமைப்பு.   நன்றி வீரகேசரி

இலங்கை பெண்ணை கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு தீர்ப்பு

19/11/2015 கள்ளக் காதல் விவ­காரம் ஒன்றில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட இலங்கை பணிப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு கல்லால் அடித்து மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­மாறு சவூதி அரே­பிய நீதி­மன்றம் ஒன்று தீர்ப்­ப­ளித்­துள்­ள­தாக சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரக தக­வல்கள் தெரி­வி­க்கின்­றன.
கொழும்பு மரு­தானை பிர­தே­சத்தைச் சேர்ந்த திரு­ம­ண­மான பெண்­ணொ­ரு­வ­ருக்கே இவ்­வாறு மரண தண்டனை தீர்ப்பை சவூதி அரே­பிய நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவ­ருடன் பாலியல் ரீதி­யாக உறவு வைத்­தி­ருந்­த­தாக கூறப்­படும் விவா­க­மா­காத பிறி­தொரு இலங்கை இளை­ஞ­ருக்கு 100 கசை­ய­டிகள் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் சவூதி நீதி­மன்றில் இடம்­பெற்ற போது இந்த இலங்கை பெண் தான் குறித்த இளை­ஞ­ருடன் உறவு கொண்­ட­தாக ஒப்­புக்கொண்டுள்ளார்.
குறித்த ஒப்­புதல் வாக்குமூலத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.
எவ்­வா­றா­யினும் இந்த தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்ய அவ­காசம் உள்ள நிலையில், மேன்முறை­யீட்­டினைச் செய்து தேவை­யான சட்ட உத­வி­களை வழங்கி குறித்த பெண்­ணுக்கு விதிக்­கப்­பட்டதண்­ட­னையை குறைக்க அல்­லது ரத்துச் செய்ய சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரகம் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அதற்­கான ஆலோசனைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனை தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.    நன்றி வீரகேசரி
தாய்லாந்து துணை பிரதமர் - ஜனாதிபதி சந்திப்பு


19/11/2015 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து துணை பிரதமர் விஸானு க்ரேயா நகாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்துத்து கலந்துறையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 நன்றி வீரகேசரி
No comments: