கவி விதை - 4 அம்மன் சிலை -விழி மைந்தன் --

.


அவருக்கு இரண்டு பையன்கள்.

அம்மன் கோயில் வீதியில் இருந்தது அவர் வீடு.

அந்த ஊரிலே அம்மன் ஒரு வித்தியாசமான சிலையாய் வீற்றிருந்தாள். அமுதம் பொழியும் முகம். அரைவாசி மூடிய விழிகள். செவ்விதழிலே சின்னதோர் முறுவல். நான்கு கரங்களில் ஒன்றில் நாணேற்றிய  வில் தரித்திருந்தாள். இன்னொரு கையில் சில பாணங்கள். மூன்றாம் திருக்கரத்தில் ஒரு நெற்கதிர். நாலாம் கரத்தில் நவரத்ன கலசம். பூட்டிய வில்லில் குறிவைத்த பாணத்தை  வயற்காட்டை நோக்கிப் பிடித்திருந்தாள். வில் ஏந்தி நின்ற நிலையிலும் அவள் முகத்தில் வெகுளி இல்லை. தாய்மையே பொலிந்து தரிசனம் தந்தது.

ஊருக்குப் பெரிய மனிதரான அவர், ஒவ்வொரு நாளும் அவள் முன்றலில் வந்து பாதத்தில் தரித்த செருப்பைக் கழற்றிப் பணிந்தார். வாய்க்குள் முணுமுணுத்து, வரங்கள் பல கேட்டுத் துதித்தார்.

சமீப காலமாக, அவர் கேட்டு வந்த வரங்கள் அவரது வம்சம் விளங்க வைக்க வந்த வாரிசுகளைப் பற்றியதாய் இருந்தன. 

"அம்மா தாயே, என் பிள்ளைகள் உலகில் பெரிய மனிதர் ஆக வேண்டும். இரண்டு மகன்களும் எல்லாப் போட்டியிலும் முதல் பரிசு பெற வேண்டும். மூத்தவன் வைத்தியத் துறைக்கு முதல் தரத்தில் தெரிவாக வேண்டும். இரண்டாவது மகனை எந்திர விற்பன்னன் ஆக்கி விடு.  எங்களூர் வைத்திய சாலையின் முதல்வனாய் எந்தன் மகனை ஆக்கி விடு. இரண்டாவது மகன் எஞ்சினியர்  ஆனபின் இங்கிருந்து என்ன?  அமெரிக்காப்  பக்கம் அனுப்பி விடு. பக்கத்தூரில் எனது பழைய நண்பர் பரம சிவம் -  மெத்தப் பெரிய பணக்காரர் - அவர் மகள், எனக்கு மூத்த மருமகளாய் ஆகட்டும். இரண்டாவது மகனுக்கு எந்தன் வியாபாரம் தழைக்கும் படி,  'தொடர்புகள்' மிகவுடைய கம்பனி முதலாளி ஒருவன் மகளைத்  தொடுத்து விடு!  வம்சம் வளர்வதற்கு எந்தன் மூத்த மகன், மகன் ஒருவனைப் பெற்றுக்  கொடுக்கட்டும். எனக்குப் பிறகு அந்தப் பேரன் இந்த ஊர்த் தலைமை ஏற்கட்டும். இரண்டாவது மகன் என் ஆசைக்குப் பேர்த்திப் பெண்  ஒருத்தி பெற்றுப் போடட்டும். 'தாத்தா, தாத்தா' என்ற அவள் மழலையைக் கடைசி நேரம் கேட்டு என் ஆவி களிக்கட்டும். அம்மா தாயே, வரம் அருள்வாய். என்றும் உன் காலில்  இரந்தேன்!"

இப்படி இப்படி...

ஆண்டாண்டு காலமாய் இப்படியே அம்பாளை 'அரித்து' வந்தார்.

அம்பாளும் கொஞ்சம் அருள் செய்தாள்  தான்.  அவள் ' தேர்ந்து' கொடுத்த வரங்கள் ஒரு தினுசாய் இருந்தன.

பெரிய மனிதரின் மூத்தவன் ஜெயந்தன், தந்தை காட்டிய வழியில் தவறாமல் நடந்தான். பள்ளிக் கூடப் பருவத்தினிலே "கெட்டிக் காரன்" என்றும், "அமைதி, ஒழுக்கம் நிறைந்தோன்" என்றும் பெயர் எடுத்தான். முதல் தரத்தில் மருத்துவக் கல்லூரி சென்று, தகுந்த காலத்தில் படிப்பு முடித்தான். ஊரிற்கு வந்து வைத்திய சாலையில் தலைமை மருத்துவனாகத் தன்  பணி  தொடங்கினான். பெருமையுற்றார் பிதா.


பெரிய மனிதரின் சிறியவன் சயந்தனோ, அப்பருக்கு 'அலுப்புக்' கொடுத்தான். கல்வி என்பது கசந்த அவனுக்கு விளையாட்டுகளே விருப்பமாய் இருந்தன. திறமை இருந்த போதும் பாடங்களில் திணறினான். "ஒழுக்கம் விழுப்பம் தரும்" என்ற குறளை "ஒழுக்கம் விழுக்காடு தரும்" என்று ஒப்பித்ததோடு செய்கையிலும் போற்றினான். பல்கலைக் கழகம் எட்டிப் பாராததோடு வேலை வெட்டியுமின்றி வீதிகளில் திரிந்தான்.   கவிதை கதை என்று கிறுக்கினான். கவலைப் பட்டார் தந்தை.


ஜெயந்தன் தந்தை விருப்பப் படி பரமசிவம் மகளை மணந்தான். காலா காலத்தில் பேரப் பிள்ளை பெற்றுத் தகப்பன் மடியில் போட்டான். நிறைந்தார் தந்தை.

சயந்தனோ மனம் சலனமுற்றுத் திரிந்தான். காதல்கள் சில செய்து மனம் கசந்தான். அதன் பின்பு கலியாணமே வேண்டாமென்று மறுத்தான்.

திட்டினார் தந்தை.

செருப்பு மாட்டி நடந்தான் தனயன்.

'சின்மயா' மடத்தில் சென்று சேர்ந்தான்.

துறவறம் அவனைத் தூயவன் ஆக்கியது. அவன் முகத்தில் புதியதோர் அருள் ஒளி  விளங்கியது.  பள்ளிப் படிப்பில் மதி பற்றாதவன், வேதாந்த விசாரணையில் விற்பன்னன் ஆனான். கேட்டார்ப் பிணிக்கும் சொற்பொழிவுகள் பல புரிந்தான். ஊர்கள் எங்கும் உவந்தழைக்கலாயினர் அவனை. 

ஆதரவற்ற மழலைகள் வாழ்வுக்குத் தன் ஆயுளை அர்ப்பணித்தான். இல்லங்கள் பல கட்டி அனாதைச் சிறுவரை அரவணைத்தான். இல்லை என்று இரந்தோர்க்கு  இல்லை என்னாது உணவிட்டான். தரும வைத்திய சாலைகள் பல செய்து, நோயாளர் பிணி தீர்த்தான். நாடெங்கிலும் இருந்து மக்கள் நாடி வந்தனர் அவனை.

ஊர் அறிய வாழ்ந்தான் மூத்த மகன். உலகு அறிய வாழ்ந்தான் கடைசி மகன்.


"ஜெயந்தன் தந்தை" என்று அவன் தந்தையை  அழைத்தார்கள் அவ்வூரில். "சயந்தர் தந்தை" என்று தாள் பணிந்தார்கள் பிற எவ்வூரிலும்!


தந்தை குழம்பினார்.

தன்  காலம் நெருங்கி வந்த நேரம், ஒரு நாள் அம்பாள் அடி நாடி வந்தார். நெடிது தொழுதார். அம்பாள் வாசலில் வளர்ந்திருந்த ஆல  மர நிழலில் துண்டை விரித்துப் படுத்தார். தூங்கிப் போனார்!

அம்பாள் கனவில் வந்தாள்!

அமுதைப்  பொழியும் முகம். அரைவாசி மூடிய விழிகள். செவ்விதழிலே சின்னதோர் முறுவல். நாணேற்றிய வில்லில் அம்பு தொடுத்து வயற்காட்டை நோக்கிப் பிடித்திருந்தாள். 

"என்னப்பா யோசனை?" என்றாள்!

"அம்மையே! என் மூத்த மகன் நான் இட்ட கோட்டைத் தட்டாமல் நடந்தான். என் இரண்டாவது பிள்ளை பற்றி நான் எண்ணியது எதுவும் நிறைவேறவில்லை. அவனை இப்படியே விட்டு விடைபெற என் மனசு இசையவில்லையே!  எந்த விதத்தில் அவன் வளர்ப்பில் பிழை விட்டேன் நான்? என் இரத்தத்தில் பிறந்த பிள்ளை ஏன்  இப்படிப் போயிற்று?"

தேவி சிரித்தாள்.


"அப்பனே! உன் பிள்ளைகள் உன்னில் இருந்து வந்தவர்கள் அல்ல. உன் ஊடாக வந்தவர்கள்.

உன் பிரதி பிம்பங்கள் அல்ல அவர்கள். அகில உலகத்திற்கும் தாயான என்னுடைய ஆக்கத் திறனின் அடையாளங்கள்.

இரண்டு சிலைகளை ஒரே மாதிரிச் செதுக்குவதில் எனக்கென்ன இன்பம்? மாறி மாறிப் பின்னும் மாறி மாறிப் பின்னும் மாறி மாறிச் செல்லும் வழக்கம் உடையவள் நான்.

உன் பிள்ளைகளுக்கு இலக்குகள் கொடுக்க ஆசைப் படாதே! சக்தியைக் கொடுத்து அவர்களை விடுவிப்பதோடு சரியாகிறது உன் கடமை.

அம்பைச் செலுத்துபவன் நீ என்று எண்ணி அகங்கரிக்காதே!

பாணம்  ஒன்று பாயும் போது அதன் இலக்கு எதுவென்று வில்லுக்குத் தெரியாது. வில்லாளிக்கே புரியும் விபரம் அது.

நீ வெறும் வில். இலக்கைத் தெரிந்து எய்பவள் நான்."


தேவி மறைந்தாள்.


திடுக்கிட்டு எழுந்த பெரிய மனிதர், தேடி நடந்தார் தம் வீட்டை.

இதுவரை இல்லாத அமைதியும் சாந்தமும் தம் இதயத்தில் நிறைவதை உணர்ந்தார்.

குறிப்பு 
கலீல் கிப்ரான் கவிதை ஒன்றில் இருந்து வந்த கரு.


"ஆக்கந்தா னாவாள், அழிவு நிலையாவாள், போக்குவர வெய்தும் புதுமை யெலாந் தானாவாள், மாறிமாறிப்பின்னும் மாறிமாறிப்பின்னும் மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள், ஆதிபராசக்தி..." -மஹாகவி பாரதியார் 

No comments: