நனவிடைதோய்தல் - பேராசிரியர் சி. மௌனகுரு

.
" நாடகக்கலை  தெரிந்தோர்  தமிழ் மக்களிடம்  மேலும் மேலும்  தோன்றவேண்டும் "
இலங்கை தமிழ்  நாடகக் கலையுலகில் சகோதரத்துவத்தைப் பேணி  வளர்த்த  பெருந்தகை குழந்தை  சண்முகலிங்கம்

எனது  பெரும்  மரியாதைக்கும்  அன்புக்குமுரிய  குழந்தை சண்முகலிங்கம், தனது  85  ஆவது  அகவையில் கால் பதிக்கிறார்.
என்னைவிட 13 வயது  மூத்தவரான  குழந்தை சண்முகலிங்கம் அண்ணனில்லாத  குறையை   யாழ்ப்பாணத்தில்  எனக்குப்  போக்கியவர்.
நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பதினேழு வருடங்களையும்(1975-1992) அர்த்த பூர்வமாக்கியதில் மிக முக்கியமானவர்.
நாடக அரங்கக் கல்லூரியுடன் என்னை இணைத்துக் கொண்டதுடன் பலரை எனக்கு அறிமுகமும்  செய்துவைத்து  நான்  பல  நாடகங்கள் மேடையிடக்  காலாக   அமைந்தவர்.
அவரும்  நானும்  நெறியாளர்களாக  இணைந்து 1989 இல் மகாகவியின் புதியதொரு வீட்டினை  யாழ்ப்பாண  பல்கலைக்  கழக  கைலாசபதி அரங்கில்  மேடையேற்றினோம்.
அதில்   நடித்தவர்களுள்  சிலர்  இன்றைய  கலாநிதிகளான

ஜெயசங்கர்,  ஶ்ரீ கணேசன் .  சித்தார்த்தன், கனடாவில்  நடனப் பணிபுரியும் மாலினி   குளோபல்  தமிழ் நியூஸ்  ஆசிரியர்  குருபரன். மற்றும்  முரளி. செல்வகுமார்  எனச்  சிலர்  ஞாபகம்  வருகிறார்கள்.
இவர்கள்  இன்று  பொறுப்பான   பதவிகளில்    இருப்பதுடன்  சிறப்பான பணிகளும்   ஆற்றுகிறார்கள்.நானும்  சண்முகலிங்கமும்  அன்று  பல்கலைக்  கழகத்தில் விரிவுரையாளர்களாக  இருந்தோம்.  இரு  நெறியாளர்கள்  சேர்ந்து புரிந்துணர்வுடன்  ஒரு  நாடகத்தை  நெறியாள்கை   செய்யலாம் என்பதை,  அந் நாடகம்  நிரூபித்தது.   புரிந்துணர்வு  என்பதையும்  கூட்டு   முயற்சி  என்பதையும்   நடைமுறை  மூலம்   எடுத்துக்காட்டிய நாடகம்  அது.   சண்முகலிங்கத்தின்  மனைவியார்  எமக்கு அண்ணிபோன்றவர்.    அவரது  பிள்ளைகள்  எமது  பிள்ளைகள் போன்றவர்கள்.    அவரது  வீட்டு  முற்றத்தில்  தினமும்  எத்தனை   பேர்   கூடியிருப்போம்  என்பதை  எண்ணிப்பார்க்கிறேன்.
அரசையா,  சுந்தரலிங்கம்,  பிரான்ஸிஸ்  ஜெனம்,  சிதம்பரநாதன், சர்வேந்திரா,   தேவராஜா  எனப்  பலர்  ஞாபகம்  வருகிறர்கள். அபசுரம்,  சங்காரம் (1980)   சக்திபிறக்குது,  குருசேத்ர  உபதேசம்  போன்ற  எனது நாடகங்கள்   உற்பவித்த  முற்றம்  அது.  அதற்கொரு  வலிமையுண்டு. இரவு 10.00.  - 11.00  மணிவரை   உரையாடல்  தொடரும்.  அவரும் நானும்   சேர்ந்து  யாழ்ப்பாணத்தின்  பல பகுதிகளிலும்  ---செட்டிகுளத்திலும்   1980   களில்   நடத்திய  நாடகப்  பயிற்சிப் பட்டறைகள்   ஞாபகம்  வருகின்றன.   செட்டிகுளத்தில்  நடந்த  பயிற்சிப்  பட்டறையில்  வீரமணி  ஐயர்  தன்  சங்கீதத்  திறனுடன் கலந்து கொண்டார்.
சிதம்பரநாதன்   நாடக  உலகுள்  புக  ஆரம்பித்த  காலம்,  அவரும் ஆர்வத்தோடு   அதில்  கலந்து கொண்டார்.  1980  களில் யாழ். பல்கலைக்  கழக  நுண்கலைத்  துறை  யாழ். கச்சேரி கலாசாரப் பேரவையுடன்   இணைந்து  ஆறு  மாத  நாடகப் பயிற்சிப்பட்டறையொன்றை  யாழ்.  பல்கலைக் கழகத்தில் நடத்தியதுபேரசிரியர்  சிவத்தம்பி,  நுண்கலைத் துறைத்  தலைவராக இருந்தார். பொறுப்புகள்   என்னிடம்  ஒப்படைக்கப்பட்டன.  சண்முகலிங்கம் எனக்கு  மிக  உதவியாக  இருந்து   வழி  நடத்தினார்.  யாழ்ப்பாணக் கச்சேரியில்   நேர்முகப்பரீட்சை   நடைபெற்றது.


தெரிவுக்குழுவில்  நானும்  சண்முகலிங்கமும்  இருந்தோம்50 பேரைத்  தெரிவதுதான்  திட்டம்.  நேர்முகப்  பரீட்சைக்கு  150  பேருக்கு மேல்   வந்திருந்தனர்.  அனைவரும்  மிகுந்த  ஆர்வமுடன் காணப்பட்டனர்.   அவர்களது  நாடக  ஆர்வம்  கண்ட  சண்முகலிங்கம் 100  பேரை  எடுப்போம்  என  பேராசிரியர்  சிவத்தம்பியை  ஒத்துக் கொள்ள வைத்தார்.
நாடகம்  தெரிந்தோர்  தமிழ்  மக்கள்  மத்தியில்  உருவாக வேண்டும் என்பது  அவர்   அக்கறை.  சனி, ஞாயிறு  தோறும்   காலை  9.00  மணி தொடக்கம், மாலை  4.30  வரை  யாழ்.  பல்கலைக்  கழகத்தில்  நடை பெற்ற   அப்பயிற்சிபட்டறை  யாழ்ப்பாணத்தில்  அன்று  வாழ்ந்த நாடகக் காரர்களை  ஒன்றிணைத்தது.   அவர்கள்  நாடகங்கள்  பற்றி கோட்பாட்டு   ரீதியாகவும்  நடைமுறை   ரீதியாகவும்  அறியும் வாய்ப்பை  வழங்கியது.
அதில்  பேராசிரியர்களான  வித்தியானந்தன்,  சிவத்தம்பி முதலானோரும்  பரத நடன  விரிவுரையாளர்  சாந்தா பொன்னுதுரை, நடிகமணி  வைரமுத்து,  பூந்தான்  ஜோசெப்,  கலைப் பேரரசு .ரி.பொன்னுதுரை போன்றோரும்   வகுப்புகள்  நடத்தினர்.
சண்முகலிங்கத்தோடு  இணைந்து  பணிபுரிந்த  அற்புத  காலங்கள் அவை.  நாடக  அரங்கக்  கல்லூரியுடன்  இணைந்து  பணி  புரிந்தமை நல்லதொரு  அனுபவம்.
அவருடன்  இணைந்து  காவலூர் இராசதுரை எழுதி  தர்மசேன  பத்திராஜா இயக்கிய   பொன்மணி   திரைப்படத்தில்  நடித்தமை   இன்னொரு   அனுபவம்.    குண்டுகளின் வீச்சுகள்   மத்தியிலும், மரண பய பீதிகளின்  மத்தியிலும்  பல்வேறு  அமுக்கங்கள் மத்தியிலும் யுத்தச்  சூழலிலும்  தொடர்ச்சியாக  யாழ்ப்பாணத்தில் அவரோடிணைந்து  நாடகம்  செய்தமை  பிறிதொரு  அனுபவம். இவ்வனுபவங்களை   விரித்துரைக்கின்  அது  பெரு  நூலாகிவிடும்.
தனது  நிரந்தர  ஆசிரிய  வேலையை  இராஜினாமா  செய்து விட்டு யாழ்.  பல்கலைக்  கழகத்தில்  பேரா.சிவத்தம்பியின்  அழைப்பின் பேரில்  தற்காலிக  உதவி  விரிவுரையாளராக  கடமையாற்ற  அவர் முன் வந்தமை  நாடகத்தில்  அவர்  வைத்த  ஈடுபாட்டுக்கு ஓருதாரணம்அதனால்  அவர்  தனது  ஓய்வுகாலத்தில்  இழந்த பொருளாதார   நன்மைகள்  அதிகம்.
அவரை யாழ்.பல்கலைக் கழகம்  பிற்காலத்தில்  சரியானபடி பயன் படுத்திக் கொள்ளவில்லைஆனால்,  கிழக்குப் பல்கலைக் கழகம் அவருக்கு   கௌரவ  கலாநிதிப்பட்டம்  வழங்கித்  தன்னைக்  கௌரவப் படுத்திக் கொண்டது.
அவர்  அதனைப்  பெறத்  தயக்கம்  காட்டினார்.  கஸ்டப்படுத்தி  அவர் அதனை  ஏற்க  வைத்தேன். என்  அன்புக்குக்   கட்டுப்பட்டு  அதனை ஏற்றுக் கொண்டார்.  அன்புக்கு  அடிமையாகாதோர்  யாவர்...?
1976 இல் காலம் சென்ற  நாடக  விற்பன்னர்,  புகழ் பெற்ற  தம்ம ஜாகொட    யாழ்ப்பாணத்தில்  ஒரு  நாடகப்  பயிற்ச்சிப்  பட்டறை நடத்தினார்.   அதில்  கலந்து கொண்டு  பயிற்சி  பெற்றவர்கள்  பெயரை நான்   இங்கு  குறிப்பிட்டால்    ஆச்சரியமடைவீர்கள்.
குழந்தைசண் முகலிங்கம், நா.சுந்தரலிங்கம், .சிவானந்தன், சி.மௌனகுரு,   அரசையா, .ரி.பொன்னுத்துரை
அன்றைய  நாடக  ஜாம்பவான்கள்  எனக்  கருதப் பட்ட  அனைவரும்  தம்ம ஜாகொடவின்  கீழ்  மாணவர்களாக  மாறிப்  பயிற்சி  பெற்றார்கள்.  தலைமை  மாணாக்கராகச்  சண்முகலிங்கம்.  அவரே அனைவரிலும்  வயது  கூடியவர்  வாழ் நாளில் மறக்க  முடியாத பயிற்சி அது
திறமையான  எவரிடமும்  கற்கும்  இந்  நாடகக்காரர்களின் மனப்பாங்கை , நாடகத்  துறையில்  செயல்படும்  இன்றைய இளஞர்கள்   கற்றுக்கொள்ள வேண்டும்.  அண்மையில்  நான் யாழ்ப்பணத்திற்குக்  காண்டவ  தகனம்  கொண்டு சென்றபோது  தனது பழைய   நண்பர்களான  அரசையா,  கண்ணன்,  பேர்மினஸ் ஆகியோருடன்  கைலாசபதி கலை  அரங்க  வாசலில்  என்னையும்  என் குழுவினரையும்  வரவேற்கக்  காத்திருந்த  அந்த  பெரிய உள்ளத்தை   கண்டு  நான்  நெகிழ்ந்தேன் " சண் "  நான்  உங்களிடம் கற்றவை  அதிகம். பெற்றவையோ  மிக  அதிகம்.
" சண் "நீங்கள்  நீடூழி  வாழ்க
"தந்தது  உந்தன்னைக்  கொண்டது  என் தன்னை
சங்கரா  ஆர்கொலோ  சதுரர்...?
அந்தமொன்றில்லா  ஆனந்தம்  பெற்றேன்
யாது  நீ  பெற்றது  ஒன்று  என்பால்...?"
எந்தையே!!!  நீ  என் உடலிடம்  கொண்டாய்
யான்  இதற்கு  இலனோர்  கைம்மாறே "
 ----0---


No comments: