“புனித கயிலாச யாத்திரையும் எனது அனுபங்களும்” நூல் அறிமுக நிகழ்வு - V.M. தேவராஜன்



 “என் மனைவியுடன் நான் 2014 ஆகஸ்ற் மாதம் கைலாச யாத்திரை சென்று வந்தது தெரியும்தானே அந்த அனுபவங்களை நூல் வடிவில் வெளியிடவுள்ளேன்.  8.11.2015 அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து 6 மணிவரை பென்டில் ஹில் யாழ் பங்~ன் சென்ரறில் நடைபெறவுள்ளது  தவறாமல் வந்திடுங்கோ” என்று திரு பரமசாமி பஞ்சாட்சரம் எனக்கு அறிவித்தபோது இவருக்கேன் இந்த வேலை யார் போகப்போறாங்கள் என்று சலித்துக்கொண்டேன்.  ஆனால் அன்று அங்கு நான் சென்றபோது எனக்கு ஓர் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. மண்டபத்துள் 325க்கு மேல் இருக்கைகள் போட்டும் போதாமல் மண்டபத்திற்கு வெளியேயும் வீதி வரை கூட்டம் காத்திருந்தது. இது நான் எந்த புத்தக வெளியீட்டிலும் ஒஸ்ரேலியாவில் காணாத காட்சியாக இருந்தது.  எனக்குள் நினைத்தேன் “இது கைலாச யாத்திரை பற்றி அறியவேண்டுமென்ற பக்தி மேலீட்டால் வருகை தந்துள்ள கூட்டமா?” என்று.  இல்லை உண்மை அதுவல்ல. எம். ஜீ. ஆர். படத்துக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் போல் இது பஞ்சாட்சரம் அவர்களின் அன்பையும் பண்பையும் அறிந்தவர்கள் அவரின் அழைப்பை மறுக்க முடியாது வந்த கூட்டம் தான் அது என்று உறுதி செய்துகொண்டேன்.


சான்றோர்களும் ஆன்றோர்களும் மங்கல விளக்கேற்ற விழா செல்வி மகிசா பூபாலசிங்கம் அவர்களின் தேவார பாரயணம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. சிவஸ்ரீ நிர்மலேஸ்வரக் குருக்கள் தமது ஆசியுரையில் கயிலாயம் செல்லும் வாய்பு எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை திரு பஞ்சாட்சரம் அவர்களும் அவர் தம் பாரியார் கலைவாணி பஞ்சாட்சரம் அவர்களும் அவ்வகையில் பெறற்கரிய பேறு பெற்றவர்களாவர்கள் என்றும் கூறினார். பேராசிரியர் திருமதி ஞனா குலேந்திரன் அவர்கள் ஆன்மீகத் தலைப்புடனான அவ்விழாவிற்கு தலைமை தாங்க எல்லா வகையிலும் பொருத்தமானவரே என்பதற்கு அவர் உதிர்த்த ஒவ்வொரு அர்த்தபு~;டியான வார்த்தைகளும் சான்றாக அமைந்தது என்றால் மிகையாகாது.  பேராசிரியர் இராசையா இரவீந்திரராசா அவர்களும் பேராசிரியர் டாக்டர் நடனச்சந்திரன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.  தொடர்ந்து திருமதி கலையரசி சின்னையா அவர்கள் நூல் அறிமுக உரையில் நூலாசிரியரை தாம் கடந்த 50 வருடங்களாக அறிவேன் என்றும் அவர் தமது கணவருடன் சக பொறியியலாளராக இலங்கையிலும் கட்டார் நாட்டிலும் சேவை புரிந்தவர் என்றும் இந் நூலை அறிமுகம் செய்வதில் தாம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.  அடுத்து மதிப்பீட்டுரை வழங்கிய கார்த்திகா கணேசர் அவர்கள் கயிலாய யாத்திரை செல்லாதவர்களுக்கு நாமும் செல்லவேண்டுமென்ற ஊக்கத்தை கொடுப்பதாக இந்நூல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறப்புரை ஆற்றிய ஒஸரேலியாவின் கம்பவாரிதி திரு. திருநந்தகுமார் அவர்கள் கம்பராமாயணம் உட்பட பல இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி நூலுக்கும் நூலாசிரியருக்கும் பெருமை சேர்த்தார்.  அடுத்து சிறப்புரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நினைத்தோர்க்கெல்லாம் கிட்டாத அரிய கயிலாயம் செல்லும் வாய்ப்பைப் பெற்ற திருவாளர் பஞ்சாட்சரம் அவர்களை நாம் இனிமேல் “கயிலைமணி” என்னும் பட்டமும் சேர்த்து “கயிலைமணி பஞ்சாட்சரம்”; என அழைப்போம் என்றார். அவரை தொடர்ந்து தலைமை தாங்கிய முனைவர் ஞானா குலேந்திரன் அவர்களும் தொகுப்புரையில் “கயிலைமணி பஞ்சாட்சரம்”எனவே அவரை விழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதே கருத்தை சிவத்திரு சிவசண்முகக் குருக்கள் அவர்ளும் நூலில் பிரசுரமாகியுள்ள ஆசியுரையிலும் “திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டு வந்த அன்பர்களை நமது சைவ நல்லுலகம் “கயிலைமணி” என்ற பட்டத்துடன் அழைப்பது பெருமிதமான மரபு” என்று குறிப்பிட்டுள்ளார். 
தொடர்ந்து பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் கவி வரிகளில் நூலாசிரியரை பாராட்டி வாழ்த்தி சம்பிரதாயபூர்வமாக நூலை வெளியிட முதற்பிரதியை இருதய வைத்திய நிபுணர் வீ. மனமோஹன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 
நூலைப் பெற வருகை தந்த திரு அருச்சுணமணி அவர்கள் கைலாய யாத்திரை மேற்கொண்டோரை வணங்குதலினால் அவ் யாத்திரை மேற்கொண்ட பயனையே பெறலாம் என்று கூறி பஞ்சாட்சரம் தம்பதிகளின் தாள் பணிந்தார். அவரை தொடர்ந்து வந்த பலரும் அவரின் பாதம் தொட்டதை காணக்கூடியதாக இருந்தது. 
நூலாசிரியரின் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு கண்டது.  எத்தனையோ நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு சென்றுள்ளேன்.  ஆனால் இந் நிகழ்வு மனதில் நிலைத்துவிட்டது. 
வீட்டுக்கு வந்தவுடனேயே புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிவிட்டேன் அடுத்த நாள் கடைசி பக்கத்தையும் வாசித்து முடித்துவிட்டேன்.  இந் நூலை வாசித்தவுடன் எனக்கு எற்பட்ட உணர்வுகளையும் எண்ணங்களையும் நிரல் படுத்திப் பார்த்தேன். 
1) கைலாய யாத்திரைக்கு நானும் சென்று வந்தது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.
2) நான் ஏன் இந்த யாத்திரையை மேற்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.  
3) எப்படி இந்த யாத்திரைக்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும் என்று யாரையும் கேட்டு அறிய வேண்டிய தேவையில்லை.  இந் நூலிலேயே வேண்டிய விபரங்கள் உள்ளன. இப் புத்தகத்தை கையில் கொண்டு சென்றால் வேறு ஒரு வழிகாட்டி தேவையில்லை. பார்க்க வேண்டியவை, தரிசிக்க வேண்டியவை பற்றிய விபரங்கள் எல்லாமே இந் நூலில் அடங்கியுள்ளது.

இது  சைவ சமயத்தை  பின்பற்றும்  ஒவ்வொரு தமிழனின்  வீட்டிலும்  இருக்கவேண்டிய அற்புதமான நூல் என்று  சொன்னால்  மிகையாகாது.

V.M. தேவராஜன் 



No comments: