' நாழிகை ' மாலி மகாலிங்கசிவம் சந்திப்பு - முருகபூபதி

.
இங்கிலாந்து ' நாழிகை '  மாலி  மகாலிங்கசிவம் சந்திப்பு
தமிழ்  வாசகர்களை  கவரும்  அரசியல்  விமர்சனங்கள் காலத்தின்  தேவை.
                                      


அவர்  ஒரு  மின்னியல்  பொறியியலாளர்.  தனிமனித  சுதந்திரத்தின் அடிப்படையில்  தனது  மாணவப் பருவத்தில்  சாரணர்  இயக்கத்தில் இணைந்துகொள்ள   மறுத்தவர்.   அணுவாயுத விரிவாக்கத்திற்கு எதிராக   குரல் கொடுத்துவருபவர்.  பெரிய  பட்டப்படிப்புகள்  எதுவும் அவருக்கில்லை.   உயர்தர பரீட்சையில்  குறைந்த சித்திகளைப் பெற்றமைக்காக  ஆசிரியர்களினால்  ஏளனம்  செய்யப்பட்டு,  எதற்குமே   லாயக்கற்றவர்  என்று  தூற்றப்பட்டவர்.   தனது பிள்ளைகளை  தனியார்  கல்லூரிகளில்  சேர்க்கமாட்டேன்  என்று பிடிவாதமாக  இருந்தவர்.   அதனால்  மனைவியே  கோபித்துக்கொண்டு  பிரிந்து சென்றாள்.   ஆடம்பரமான  ஆடைகளை அணியவிரும்பாமல்  தொடர்ந்தும்  சாதாரண  சைக்கிளிலேயே அலைந்து   திரிபவர்.   சுருக்கமாகச்  சென்னால்  அவர்  எளிமையின் மறுவடிவம்.   ஆனால்,  அவர்  இன்று  உலகத்தை   தன்பக்கம் திரும்பவைத்திருக்கிறார்.   அவர்தான்  இங்கிலாந்தின் தொழிற்கட்சியின்   புதிய  தலைவர்  ஜெரமிகொபின் (Jeremy Corbin) .   சமீபத்தில்  பிரான்ஸில்  நடந்த  .எஸ்.   தீவிரவாதிகளின் தாக்குதலினால்  பலர்  கொல்லப்பட்டவேளையில் அந்தத்தீவிரவாதிகளை  சுட்டுக்கொல்லவேண்டாம்  என்றும் அறிவித்து   பரபரப்பை  ஏற்படுத்தியவர்.
கடந்த  சில  நாட்களுக்கு  முன்னர்  அவுஸ்திரேலியாவில்  என்னை எதிர்பாராதவிதமாக  சந்தித்த  இங்கிலாந்து  நாழிகை   இதழின் ஆசிரியர்  நண்பர்  மாலி  மகாலிங்கசிவம்  என்னிடம்  தந்த  நாழிகை இதழில்தான்   குறிப்பிட்ட  எளிமையே  வலிமையாக  வாழும் ஜெரமிகோபின்   என்ற  புதிய  கார்ல்மார்க்ஸ்  பற்றிய  கட்டுரையை படித்தேன்.
உள்ளார்ந்த  கலை,  இலக்கிய,  ஊடகவியலாளர்கள்  உலகின் எந்தத்திசைக்குச் சென்றாலும்  தமது  ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டுதான்   இருப்பார்கள்  என்பதற்கு  நண்பர் மாலி மகாலிங்கசிவம்   மற்றும்  ஒரு  உதாரணம்.
   இலங்கையில்  யாழ்ப்பாணத்தில்  1958  இல் முதலில் வார இதழாகத் தோன்றி,  பின்னர்  நாளேடாக தொடர்ந்து  வெளிவந்த  ஈழநாடு,  11-02-1984  ஆம்  திகதி  தனது  வெள்ளி விழா  மலரையும் வெளியிட்டது.   பலதடவை   வன்முறையாளர்களின்  தாக்குதலுக்கு பலியான   ஈழநாடு  கட்டிடம்  1987  இல்   இந்தியப்படையின் பிரவேசத்தில்   குண்டுத் தாக்குதலுக்கும்  இரையானது.   ஈழநாடு இதழை   வெளியிட்ட  முன்னாள்  கிழக்கிலங்கை  காகித  ஆலை கூட்டுத்தாபனத்தின்   தலைவர்  அமரர்  கே.ஸி. தங்கராசா அவர்களிடத்தில்    மதிப்பும்  அபிமானமும்  கொண்டிருந்தேன். அவருடைய  எளிமையும்  முன்னுதாரணமான  வலிமைதான்அவருடைய   கொழும்பு  இல்லத்தில்தான்  புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை  அவர்களை  1974   இல் சந்தித்து  மல்லிகையில் எழுதினேன்.
அந்த  இல்லம்தான்  யாழ். ஈழநாடு  இதழின்  கொழும்பு அலுவலகமாகவும்  இயங்கியது.

ஈழநாடு குறித்து  எனக்கிருக்கும்  மதிப்பு  உணர்வுபூர்வமானது.
அங்கு  பணியாற்றிய ' கோபு ' கோபாலரத்தினம்,  காசிலிங்கம்,  சசி பாரதி,  பாமா  ராஜகோபால்,  எஸ்.எஸ். குகநாதன்,  கந்தசாமி,  நிருபர் யோகநாதன்,  மகாதேவா   அனைவரும்  விதியின்  சோதனையால் எங்கெங்கோ  சென்றுவிட்டனர்.    அவர்களின்  வரிசையில்  மற்றும் ஒருவர்தான்   லண்டனில்  வதியும்  மாலி  மகாலிங்கசிவம். யோகநாதனும்  சசிபாரதியும்  மறைந்துவிட்டனர்.

இசைத்துறையில்   மாலி  மகாலிங்கசிவம்  அவர்களுக்கிருந்த அயற்சியற்ற    தொடர்ச்சியான  ஆர்வத்தை  மூலதனமாகக்கொண்டு அவர்   ஈழத்தின்  இசைக்கலைஞராகியிருக்கவேண்டியவர்.   ஆனால் அவரோ  ஊடகத்துறையினுள்  தீவிரமாக  ஈடுபட்டார்.
ஏற்கனவே  இப்பத்தியில்  குறிப்பிட்டிருப்பதுபோன்று  அவரிடமும் உள்ளார்ந்த   ஆற்றல்  நிரம்பியிருந்திருக்கிறது.  அதனால்தான் இங்கிலாந்திற்கு   புலம்பெயர்ந்தபின்னர்  கையைச்சுடும்  என்று தெரிந்துகொண்டே  நாழிகை   இதழை 1993 இல்  ஆரம்பித்திருக்கிறார்.
எனக்கும்  நாழிகையை  அவ்வப்பொழுது  தபாலிலும்  லண்டன் சென்று  வருபவர்களிடமும்  கொடுத்தனுப்பியிருக்கிறார்.  1980  இற்கு முன்னர்   அவரை  யாழ்ப்பாணத்தில்  சந்தித்தேன்.   அதற்குப்பிறகு  சுமார்  35  ஆண்டுகளின்  பின்னர்  கடந்த  சில நாட்களுக்கு முன்னர்தான்   அவுஸ்திரேலியாவில்  சந்திக்கும்  சந்தர்ப்பம் கிடைத்தது.
எதிர்பாராத  நிகழ்வுகளின்  சங்கமம்தானே  வாழ்க்கை.  ஒரு நாள் இரவு  " மாலிலண்டனிலிருந்து  தொடர்புகொண்டு  தானும் துணைவியாரும்  அவுஸ்திரேலியாவுக்கு  வரவிருப்பதாகச்சென்னார்.
அவர்   வருகைதரும்  காலத்தில்தான்  எமது  அவுஸ்திரேலியா   தமிழ் இலக்கிய    கலைச்சங்கத்தின்  15  ஆவது   தமிழ்  எழுத்தாளர் விழாவுக்கு   ஏற்பாடுகள்  செய்திருந்தோம்.


அவரது  வருகை  மிகுந்த  மகிழ்ச்சியைத்தந்தது.   இங்கு  மறைந்த மூத்த  படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை   மற்றும்  காவலூர் இராசதுரை  ஆகியோரின்  நினைவுப் பேருரையையும்  எமது விழாவில்   ஒழுங்கு செய்திருந்தோம்.

எஸ்.பொ.வின்  நினைவுரையை   நிகழ்த்துவதற்கு  இலக்கிய  நண்பர் நடேசன்   ஒப்புக்கொண்டார்.
காவலூரின்   நினைவுரையை  நிகழ்த்தவிருந்த  சிட்னியில்  தாயகம் வானொலி   ஊடகவியலாளர்,  நண்பர்  எழில்வேந்தன் தவிர்க்கமுடியாத  காரணங்களினால்  வரமுடியாதிருந்த  நிலையில் அந்தக்கடமையை  பொறுப்பேற்று  சிறப்பாகச் செய்தவர்  நண்பர் மாலி   மகாலிங்கசிவம்.
கொழும்பில்  இவர்  யாழ்ப்பாணம்  ஈழநாடுவின்  பாராளுமன்ற நிருபராகவும்   பணியாற்றியதனால்,  அன்று  எதிர்க்கட்சித்தலைவராக இருந்த  அமிர்தலிங்கத்தின்  நல்ல  நண்பராகியிருக்கிறார்.
அமிர்தலிங்கமும்  யோகேஸ்வரனும்  கொழும்பில்  1989  ஜூலை மாதம்  13  ஆம்   திகதி  சுட்டுக்கொல்லப்பட்டதையறிந்து லண்டனிலிருந்த  மாலி,  உனடியாக  அங்கு  வதியும்  அமிரின்  மகன் காண்டீபனிடம்   ஓடியிருக்கிறார்.


அச்சமயம்   காண்டீபனுக்கு  கொழும்பிலிருந்து  ஒரு  சிரேஷ்ட அமைச்சர்  " அந்த கொலையாளிகள்  எப்படி   கொழும்புக்கு    வந்தனர் எதில்   வந்தனர் "  என்ற  அதிர்ச்சிதரும்  தகவலையும் தெரிவித்துள்ளார்.
அமிர்தலிங்கம்  -  யோகேஸ்வரன்   முதலான  ஆளுமைகளை அரசியல்  அரங்கிலிருந்து  அகற்றவேண்டும்  என்று  கங்கணம் கட்டியிருந்தவர்களும்   காலப்போக்கில்,  அதேவழியில் அகற்றப்பட்டிருக்கின்றனர்   என்பதுதான்  காலத்தின்  பதிலாக அமைந்தது.

 கொழும்பில்  1970  களில் வெளியான Tribune    என்ற  ஆங்கில  இதழை ஆங்கிலம்   தெரிந்த  அரசியல்வாதிகளும்  அறிவுஜீவிகளும் விரும்பிப்படித்தனர்.   நேர்த்தியாக  அச்சிடப்பட்டிருக்கும்.   சீரியஸான விடயதானங்களை  கொண்டிருக்கும்.  ஆனால்,  அதுபோன்று  ஒரு தமிழ்  இதழ்  இலங்கையில்  அன்று  வெளியாகவில்லை.   சமகாலம் என்ற    இதழை  தற்பொழுது  வீரகேசரி  குழுமம்  அவ்வாறு வெளியிட்டுவருகிறது.   அதன்  ஆசிரியர்  நண்பர்  தனபாலசிங்கம்.
ஆனால்,  உலகப்பிரசித்திபெற்ற Time  இலங்கையின் Tribune  போன்று,  1993   இலேயே  தமிழில்  ஒரு  இதழை   புகலிடத்தில் வெளியிட  முன்வந்த  சாதனையாளர்  மாலிTime   இற்கு  நேரடி தமிழ்பெயர்ப்பு  நாழிகை.
இலங்கையின் Tribune  நின்றுவிட்டது  


இந்தியாவில்   குஷ்வந்த்சிங்  ஆசிரியராக  இருந்த Illustrated weekly   பல  இலட்சம்  பிரதிகள்  விற்பனையாகி  பின்னர்  நின்றுவிட்டது. India Today   தமிழ்ப்பதிப்பும்   நின்றுவிட்டது.
இன்றைய  கணினி யுகமும்  இணையத்தளங்களும்  அவற்றை முடக்கிவிட்டன.  அந்த  ஆபத்து  தமது  நாழிகை   இதழுக்கும் எதிர்காலத்தில்   நேர்ந்துவிடுமோ  என்ற  ஐயப்பாட்டில்  மாலியும் நாழிகையின்  இணையத்தளத்தை  தற்பொழுது  தொடக்கியிருக்கிறார்.

நாழிகையின்  உள்ளடக்கம்  சர்வதேச -  சமகால  அரசியல் விஞ்ஞானம் -  பொருளாதாரம் -  மனித உரிமை - விளையாட்டு - இலங்கை  - இந்திய  தமிழ்நாடு  அரசியல்  களம்.   இவற்றுடன் இசைக்கும்   நடனத்திற்கும்  பக்கங்கள்  ஒதுக்கியிருக்கிறார்.
ஆரம்பகால   நாழிகை  இதழ்களில்  இலங்கை -  தமிழக படைப்பாளிகளின்   தரமான  சிறுகதைகளுக்கும்  பக்கங்கள்  இருந்தன.
மாலிக்கு  கர்நாடக  இசையிலும்  திரை  இசையிலும்  ஆர்வமும் ஈடுபாடும்  இருப்பதனால்,  இசை  நடனக்கலைஞர்கள்  பற்றிய ஆக்கங்களுக்கும்  நாழிகையில்  களம்  தருகிறார்.
அமிர்தலிங்கம்  நினைவு  அறக்கட்டளையின்  சார்பில்  2002  இல் அமிர்தலிங்கம்ஒளியில்  எழுதுதல்  என்ற   அமிரின்  ஈழத்தமிழர் அரசியல்  போராட்ட  வரலாற்று  ஒளிப்படங்களின்  ஆவண  நூலை லண்டனில்  வதியும்  எழுத்தாளர்  மு. நித்தியானந்தனுடன்  இணைந்து   வெளியிட்டார்.   தமிழ்  சமூகத்தில்  அரசியல் ஆவணப்படத் தொகுப்புக்கு  இந்த  அரிய  நூல்  முன்மாதிரியானது. மாலி  அத்துடன்  நின்றுவிடாமல்,  அதே  ஆண்டில்  வரலாற்றில் மனிதன்  என்ற அமிரின்  பவளவிழா  மலரையும்  டொக்டர்  பாஞ். இராமலிங்கத்துடன்  இணைத்து  பதிப்பித்தார்.
மாலியை  எமது  எழுத்தாளர்  விழா  முடிந்த  பின்னர்  அவர் தங்கியிருந்த   அவுஸ்திரேலிய  இலக்கிய  நண்பர்  திரு. சிவசம்பு ஆசிரியரின்  இல்லத்தில்  சந்தித்து  நீண்ட நேரம்  உரையாடினேன். எதிர்காலத்திட்டங்கள்  பற்றி   கேட்டபொழுது,   அவரிடமிருந்த அமிர்தலிங்கம்   மீதான  அபிமானமும்  தேடலும்  புலப்பட்டது. அமிருடன்   இவருக்கு  சுமார்  15  வருடகாலம்  நெருக்கமான   நட்புறவு நீடித்திருக்கிறது.
ஒருசமயம்  மட்டக்களப்பு தொகுதியில்  (இரட்டை  அங்கத்தவர் தொகுதி)  இராஜதுரைக்கு  எதிராக  கவிஞர்  காசி  ஆனந்தனை  அமிர் நிறுத்தியபொழுது,  " அண்ணா   நீங்கள்  தவறு  செய்கிறீர்கள் "  என்று உரிமையுடன்   எடுத்துச்சொன்னவர்  மாலி.   அதனை  செய்தியாகவே யாழ்ப்பாணம்  ஈழநாடு  இதழில்  மாலி  எழுதியதும்  அமிர் கோபமடைந்திருக்கிறார்.
மாலி   என்ற  பத்திரிகையாளருக்கு  இருந்த  தீர்க்கதரிசனம்  தமிழர் தளபதியாக  விளங்கிய  அமிரிடம்  அப்பொழுது  இருக்கவில்லை. தான்   செய்த  மாபெரும்  தவறை  பின்னாளில்  அமிர் உணர்ந்திருக்கிறார்.
அன்று  இராசதுரைக்கு  எதிராக  காசி  ஆனந்தனை  நிறுத்திய அமிர்தலிங்கம்,  கொழும்பில்  சுட்டுக்கொல்லப்பட்டதன்  பின்னர் இதுநாள்வரையில்  அதற்கு  அனுதாபமே  தெரிவிக்காமல் சூழ்நிலையின்  கைதியாக  மௌனம்காத்து  வாழும் உணர்ச்சிக்கவிஞரின்   விசுவாசம்  பற்றி  இதற்குமேல்  எதுவும் சொல்லத் தேவையில்லை.
அமிர்  பற்றிய  விரிவான  நூலை   எழுதும்  எண்ணம்  மாலியிடம் இருக்கிறது.   அந்த  நூல்  வெளியாகவேண்டும்.   " சுயவிமர்சனம் செய்யாத  எந்தவொரு  மனிதனும்  சமூகமும்  உருப்படாது "  எனவே  தாமதமின்றி  அதனை  எழுதி  முடியுங்கள்  என்று  மாலியிடம் சொன்னேன்.
இசை -  நடனத்துறைகளிலும்  ஆர்வமுள்ள  மாலி  அவர்களுக்கு அதுபற்றியும்  ஒரு  நூலை  எழுதும்  எண்ணம்  இருக்கிறது.  ஏற்கனவே   இந்தத்துறைகளில்  பல  விமரசனங்களும்  இவர் எழுதியிருக்கிறார்.
மாலியின்  நாழிகை   இணைய  இதழை  www.nazhikai  இணைப்பில் பார்க்கமுடியும்.   நாழிகை  இதழ்களில்  வெளியாகும்  கட்டுரைகள் பரவலான   வாசிப்புக்குச் செல்லவேண்டும்  என்று  அவரிடம் கோரினேன்.
மாலி  தமது  சமீபத்திய  இந்தியப்பயணத்தில்  த இந்து ( இணைய இதழுக்கு)   வழங்கிய  நேர்காணலில்,  தமிழில்  அரசியல் விமர்சனக்கட்டுரைகள்   போதியளவு  வெளியாவதில்லை   என்று குறிப்பிட்டிருந்தார்.
சமகாலத்தில்   இலங்கை -  தமிழகம்  மற்றும்  புகலிடத்தில்  தமிழில் அரசியல்   விமர்சனக் கட்டுரைகளை  எழுதுபவர்களின்  ஒரு பட்டியலையே   அவரிடம்  சொன்னேன்.   ஆனால்,  சில  இதழ்களில் ஒரேசமயத்தில்  ஒரே  விடயம்  விமர்சிக்கப்படுவதனால்  அவற்றை வாசிக்கும்   வாசகர்களுக்கு  அயற்சி  ஏற்படுகிறது  என்றும்  அவரிடம் சொல்ல நேர்ந்தது.
நாழிகை  இதழில்  வெளியாகும்  அரசியல்  விமர்சனக் கட்டுரைகள் எளிமையாக  வாசகரை   ஈர்க்கும் வகையில்  எழுதப்படுகிறது. இறுதியாக   வெளியான  அக்டோபர்  இதழில்  சென்னையிலிருந்து அகராதி  என்பவர்    எழுதியிருந்த "  காசைத் திருப்பிக்கொடுக்கலாம் கைதட்டலை...? " என்ற  வினாவுடன்  சமகாலத்தில்  இந்தியாவில் பேசுபொருளாக  இருந்த  சாகித்திய  அக்கடமியின்  சர்ச்சை குறித்த கட்டுரை   சிரிப்புக்கும்  சிந்தனைக்கும்  விருந்து படைத்திருந்தது.
பொழுதுபோகாத ஒரு பத்திரிகையாளர் பரிசைத்திருப்பிக்கொடுக்க விரும்பாதவர்களிடம்  " திருப்பிக்கொடுப்பது சரியா...? "  என்று பேட்டி கண்டாராம்.
" எல்லாக்கட்சிகளிலும்  கோஷ்டிகள்  இருக்கும்.  ஆனால்,  எல்லா கோஷ்டிகளும்   குடும்பத்துக்குள்ளேயே   இருக்குமாறு பார்த்துக்கொண்டதுதான்   கருணாநிதியின்  சிறப்பு "  என்று   புதிய விடியலைநோக்கி   பட்டத்து  இளவரசர்  ( ஸ்டாலின்)  பற்றிய கட்டுரை   (எழுதியவர் ஆர். மணி)  என்பன  போன்ற  இதர கட்டுரைகளும்  விடயத்தை  சொல்லும்  முறைமையில்  வாசகரை கவர்ந்துவிடுகிறது.
நண்பர்  மாலி  மகாலிங்கசிவம்,  சமகால  அரசியல்  விமர்சனம் படிக்கவிரும்பும்  வாசகர்களின்  நாடித்துடிப்பறிந்து  நாழிகையில் கட்டுரைகளை    தேர்வுசெய்கிறார்.

அனுபவம்   மிக்க   தேர்ந்த  பத்திரிகையாளர்  இதனைத்தானே செய்வார்.    இனிய  நண்பர்  மாலி  மகாலிங்க சிவம்  அவர்களுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்.

No comments: