அவதானப் புலவர் அபூபக்கர் - பேராசிரியர் மு. அப்துல் சமது

.
தமிழ்த்துறை ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
                  உத்தமபாளையம் – 625533
  தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’
  “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்
   ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு
   ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ
   டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே”
  என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.
  ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான விசயங்களைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறும் விதத்தில் இக்கலை நிகழ்த்தப்படும். இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, அவையோடு உரையாடல், சுவைப் புலனறிவு, இலக்கிய இலக்கண விடை பகர்தல், கண்டப் பத்திரிக்கை, ஒலி வேறுபாடு உணர்தல், நெல்-கல்லெறிதலையும் மணியோசையையும் கணக்கிடுதல் என பல அம்சங்களில் ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
  இதில் எட்டுவிதமான அம்சங்களில் கவனகம் நிகழ்த்துவதை ‘அட்டாவதானம்’ என்றும், பத்து அம்சங்களில் நிகழ்த்துவதைத் ‘தசாவதானம்’ என்றும், பதினாறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சோடாவதானம்’ என்றும், நூறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சதாவதானம்’ என்றும் கூறுவர். இக்கலையில் ‘சதாவதானம்’ நிகழ்த்திய ஒரே புலவர் என்ற பெருமைக்குரியவர் கோட்டாறு செய்குத் தம்பிப் பாவலர் ஆவார். ஆனால் பாவலருக்கும் ஏனைய அவதானப் புலவர்களுக்கும் முன்னோடியாய் ‘அட்டாவதானம்’ நிகழ்த்தி இக்கலைக்கு உயிர் கொடுத்த பெருமை இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த ‘அட்டாவதானம்’ அபூபக்கர் நயினார் புலவரையே சாரும்.
  திரு.வி. கல்யாண சுந்தரனாரின் ஆசிரியரான இலங்கை மகாவித்துவான் கதிர்வேற்பிள்ளையால் அங்கீகரிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு இலங்கை வண்ணார் பண்ணை மண்டப மைதானத்தில் அபூபக்கர் நயினார் புலவர் தமது அட்டாவதானத்தை நிகத்தினார்.
  இறைநாமம் கூறி அவதானப் பீடத்தில் அமர்ந்தவர் கையில் லாடச் சங்கிலியை விரல்களுக்கிடையே சுழற்றியவராக, நாவில் ‘யாமுஹியத்தீன்’ என்ற நாமம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க கேள்விகளுக்குப் பதில் தந்தார். ‘அரைக்கிறக்கத்தில் முளைக்கிறது எது? என்று ஒரு கேள்வி எழ ‘பருத்திக் கொட்டை’ எனப் பதில் தந்தார். ‘சுட்டும் முளைக்கிற விதை எது? என்று ஒருவர் ‘பனைவிதை’ என்று பதில் தந்தார். இதற்கிடையில் தம் முதுகின் மீது எறியப்படும் நெல்மணிகளை எண்ணி நினைவிருத்திக் கொண்டார். இடையிடையே ஒலிக்கும் மணியோசையையும் எண்ணி நினைவிருத்திக் கொண்டார். இறுதியில் எறியப்பட்ட நெல்மணிகள் எத்தனை, ஒலித்த மணியோசை எத்தனை என்று சரியாகக் கூறினார்.
  அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் தனது பிறந்த நாள், ஆண்டு கூறி பிறந்த கிழமை கேட்க ‘ஞாயிற்றுக்கிழமை’ எனச் சரியாக கணித்துக் கூறினார். நிகழ்ச்சி நாளன்று காலையில் பல்வேறு இடங்களில் உள்ள எட்டு கிணறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை புலவருக்குச் சுவைக்க கொடுத்து, எந்த எந்த கிணற்றுத் தண்ணீர் எனக் கூறினார். மாலையில் நிகழ்ச்சி நடைபெற்ற போது, அவற்றுள் ஒரு கிணற்றுத் தண்ணீரைக் கொடுக்க, சுவைத்து விட்டு “இது சுன்னாகத்து சோமையா கேணித் தண்ணீர்” எனச் சரியாகக் கூறி கைதட்டல் பெற்றார்.
  ஒருவர் எழுந்து ‘இறைவனை ஏத்தியிரந்து’ என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பா பாடச் சொல்ல, உடனடியாக
  “ஆவெனும் ஈசன் அரவணையான் அக்காளை
  மாவேறச் செய்து வலம் வருங்கால் – நாவால்
  மறையவன் வாழ்த்தினான் வானவர்கள் சூழ
  இறைவனை ஏத்தி யிரந்து”
 (ஈசன் –சிவன், அரவணையான் – திருமால், மறையவன் – பிரம்மன்)
 என்ற வெண்பா பிறந்து விட்டது.
 திருக்குறள் ஒன்றினை இறுதி இரண்டடிகளாகக் கொண்டு, விதி-ஊழ் இரண்டினையும் இணைத்து வெண்பா பாடுக என ஒருவர் வேண்ட,
  “தலைவிதியை மாற்ற தலைவ ரெவரேனும்
  உலகிலில்லை என்ப துறுதி – தொலைவிலா
  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினும் தாமுந் துறும்”
  -என்று பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவையோரின் கைதட்டல்களுக்கு இடையே மகாவித்துவான் பொன்னம்பல பிள்ளை எழுந்து,
  “பக்க மறை தேர்ந்தோர் பலரிருக்க சீருறபு
  பக்கர்நை னாப்புலவன் பண்ணிய –மிக்க நல்
  அட்டாவ தானமெனும் அற்புதத்தைப் பார்க்கிலவன்
  இட்டம் பெறாதார் எவர்”
  -என்று புலவர் அபூபக்கர் மீது புகழ்ப்பா பாடி ஏத்தினார்.
  அவதானக் கலையாலும் புலமைத் திறத்தாலும் முகவை மாவட்டத்திற்குப் புகழ் சேர்த்த பனைக்குளம் அபூபக்கர் நயினார் புலவர் அவதானக் கலையில் எழுதிய அரிச்சுவடி தான் பின் வந்த பலருக்கு அவதானக் கலையில் சாதனை நிகழ்த்த பாலபாடமானது.

No comments: