பிணை (சிறுகதை) - கானா பிரபா

.

பூட் சிற்றியில் இருந்து வெளியே காலடி வைக்க
மத்தியானம் பன்னிரண்டே முக்கால் செய்தி பக்கத்து கூல்பாரின் றேடியோவில் இருந்து வரவும் கணக்காய் இருந்தது.

அம்மா வழி வழியச் சொல்லி அனுப்பினவ
 "உச்சி வெயில் தலேக்கை சுட்டால் பிறகு காயச்சல் கீச்சல் எண்டு அவதிப்படுவாய், உந்தச் சைக்கிளை விட்டுட்டு ஓட்டோவில போவன் தம்பி"

"சும்மா இரணை அம்மா நான் இன்னும் சின்னப்பிள்ளையே? அவுஸ்திரேலியா போய் இந்த வருசத்தோட இருவது வருசமெல்லோ"

வீம்பாகச் சொல்லி விட்டுச் சைக்கிளை வலித்து யாழ்ப்பாணம் ரவுணுக்குள் மிதக்கும் போது மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. வெள்ளன வந்தும் பிரயோசனமில்லை, கடைக்காறர் பத்து மணிக்கு மேல் தான் கடைக் கதவு திறந்து தண்ணி தெளிப்பினம்.

கொழும்பில் இருந்து மாத்திக் கொண்டு வந்த காசும் யாழ்ப்பாணம் வந்த இரண்டு கிழமைக்குள் முடியிற பதம், நாளைக்குத் திரும்பவும் கொழும்புக்குப் போகவேணும், அம்மாவின் கையுக்குள் கொஞ்சக் காசாவது வைக்க வேண்டும். கைச்செலவுக்கு உதவும் என்ற முடிவோடு தான் டொலரைத் திணித்துக் கொண்டு வந்தாச்சு. நியூ மார்க்கெற்றுக்குள் ஒரு நாணய மாற்று முகவர் நிலையம் இருக்காம் என்று அறிஞ்சு வச்சதும் நல்லதாப்போச்சு. காசு மாற்றி விட்டு கே.கே.எஸ் றோட்டில் இருக்கும் பூட் சிற்றிக்குக்குப் போய் பெரிய போத்தல் சோடா இரண்டும், நீட்டுச் சொக்கிளேற் பெட்டி ஒன்றும் வாங்கியாச்சு. அம்மாவுக்குக் கள்ளத்தீனி என்றால் வாய் கொள்ளாது, அப்பா வாங்கிக் கொடார். கொண்டு வந்த சொக்கிளேற்றை எல்லாம் கர்ண பரம்பரையாக வீட்டுக்கு வந்த சொந்தக்காரருக்குப் பிரிச்சுக் கொடுத்திட்டா. திரும்பும் போது வாசலில் நிப்பாட்டிருந்த சைக்கிளைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு ஒரு கும்பல் சைக்கிள் குவிஞ்சிருக்குது. அதையெல்லாம் மெல்ல விலத்தி, பக்குவமாக ஸ்ராண்டை எடுத்து விட்டு, சாமான்கள் நிரம்பிய பையைச் சைக்கிளின் முன் பாஸ்கெட்டில் வைத்து விட்டு சைக்கிளில் ஏற ஜீன்ஸ் காலை உச்சும் போது முதுகைச் சுறண்டியது ஒரு கை.

"தம்பி! புரிசன் படுக்கேலை கிடக்குது... வன்னியில இருந்து ....ஒப்பிறேசன்.." துண்டு துண்டாய் வார்த்தைகள், கூப்பிய கரங்களுக்குள் மடித்து வைக்கப்பட்ட கடிதத்தை நீட்டுகிறாள், யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி டொக்டர் யாரோ ஒருத்தர் அவளின் கணவனின் நோய் விளக்கத்தைப் பறை சாற்றும் கடிதம் கிறுக்கலாக. அவதியாக அதை வாங்குவதா, நிதானம் தப்பிய சைக்கிளைப் பிடிக்கவா என்று சதிராட்டம் போட, 

"அக்கா இஞ்சை வாற கஸ்ரமர்ஸ் ஐக் கரைச்சல் குடுக்க வேண்டாம் எண்டெல்லே அண்டைக்குச் சொன்னனான் பிறகும் கேட்காமல் வாறியள்" 
பூட் சிற்றியின் மறுபக்கமிருந்த கண்காணிப்பாளருக்க்குக் கண் குத்தி விட்டது. அந்தக் கடிதத்துண்டைப் படிக்க நேரமில்லை, ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் திணிச்ச மிச்சக் காசுக்குள் கை போய்த் தடவி ஒரு நோட்டை இழுத்தது. ஆபத்துக்கு ஆயிரம் ரூபா தான் பல்லிளித்தது. 
நீட்டும் போது தான் ஆளைக் கவனிக்கிறேன், உருகி வடிந்த மெழுகுதிரி மாதிரிக் கையிலும் கழுத்திலுமாக நீண்ட வடுக்களாக நெருப்புக் காயம் சுருட்டிப் போட்டிருக்கிறது. "கடைசிச் சண்டையில் எரிகுண்டுகளுக்குள் மாட்டுப்பட்டுத் தப்பிய சனத்தை மாட்டுக்கு வச்ச குறி போல பிடிக்கலாம்" என்று நண்பன் இந்திரகுமார் வேதனையோடு சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது.

கே.கே.எஸ் றோட்டால் கோண்டாவிலுக்கு வழி தேடிச் சைக்கிள் சக்கரங்கள் உருள, நெருப்பு வெய்யிலின் கணகணப்பைச் செருப்பின் றப்பர் இறகுகளும் உள்வாங்கிக் காலைச் சுட்டது.
இப்ப கண்ட பொம்பிளையைப் பார்க்கத்தான் சாந்தி அக்காவின் நினைப்பும் வந்திட்டுது, 
"அடச்சீ இவ்வளவு நாள் இங்க வந்து அவவைப் பற்றி அம்மாவிடம் விசாரியாமல் போனேனே" என்று என்னை நானே திட்டித் தீர்த்துக் கொண்டேன்.

சாந்தியக்கா குடும்பம் தொண்ணூறாம் ஆண்டு சண்டை தொடங்கின கையோடு மாவிட்டபுரத்திலிருந்து தெல்லுத் தெல்லாய் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடின சனங்களோடு சனங்களாக, உடுத்த உடுப்போடும் கையில் சூட்கேசுமாக எங்களூர் கோண்டாவிலுக்கு அடைக்கலமானது. மூன்று வருஷத்துக்கு முன் குடும்பத்தோடு வெளிநாட்டுக்குப் போன பக்கத்து வீட்டு ஓவசியர் மணியண்ணையின் பெஞ்சாதி வழி சொந்தக்காரர் அவர்கள். எங்களுக்கும் மன நிம்மதிக்காக புதுசா ஒரு குடும்பம் அங்க வந்திருக்கு என்று ஆறுதல்பட்டுக் கொண்டோம்.

சாந்தியக்காவின் அப்பா தம்பிராசா மாமா மாவிட்டபுரத்தில் கடை வைத்திருந்தவர். இனிப் புதுசாய் எது செய்யவும் கனக்கக் காசு வேணும் என்று றோட்டு ஓரமாய் உரப்பையில் ரென்ற் அடிச்சு சைக்கிள் திருத்தும் கடை ஆக்கிவிட்டார். சாந்தி அக்காவின் தம்பி குமார் இடம் பெயர்ந்த கையோட இயக்கத்துக்குப் போய் விட்டான். முதலில் அழுது, குழறி ஒவ்வொரு முகாமாகத் தேடியவர்கள், நாளடைவில் பயிற்சி எடுத்துக் கொண்டு குமார் வீட்டுக்கு துவக்கைக் காவியபடி சைக்கிளில் வரும் போது வரவேற்கும் அளவுக்கு நிதர்சனத்தை உணர்ந்து விட்டனர் சாந்தி அக்கா குடும்பம்.
சாந்தி அக்கா யூனிவேர்சிட்டியில் கலைத்துறை மாணவி. அந்த நேரம் அவவைப் பார்த்தால் "சின்னத்தம்பி பெரியதம்பி" பட நதியா போல இருப்பா. ஏழ்மையை மீறிய பணக்காரத்தனமான செந்தளிப்பான முகம். வந்த கொஞ்சக் காலத்திலேயே சாந்தி அக்கா குடும்பமும் எங்கட குடும்பமும் நல்ல ஒட்டு.  சாந்தி அக்காவின் அம்மா ராசாத்தி அன்ரியும் எங்கடை அம்மாவும் அபூர்வ சகோதரிகள் ஆகிவிட்டினம்.
"பெரியம்மா" "பெரியம்மா" என்று சாந்தி அக்கா அம்மாவைக் கூப்பிடும் போது மனுஷிக்குப் புளுகம் தாங்காது. எங்கட வீட்டு முற்றம் தான் அவர்களின் பேச்சு மேடையாக, கோயில் குளத்துக்குப் போறதெண்டாலும் ராசாத்தி அன்ரியுன் துணை அம்மாவுக்கு வேணும்.
தன் பக்கத்தில் அது நாள் வரை இருந்த தன் தம்பி குமாருக்கு ஒதுக்க வேண்டிய பாசத்தை எனக்கு இட ஒதுக்கீடு செய்துவிட்டார்.  தனக்குக் கிடைத்த  அரியதரத்தில் இருந்து கேக் வரை உதயன் பேப்பருக்குள் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் வைத்து அழுத்துவார். 

சண்டை பெருத்துக் கொண்டு வந்தது, பொருளாதாரத் தடை ஒரு பக்கம், மின்சாரம் இல்லாத வாழ்க்கை, எப்ப எங்கை மேலால வந்து குண்டு போடுவாங்கள் என்று தெரியாத சூழல். 
இனி இங்கை சரிப்படாது கொழும்பு போய் சீமா படிச்சு லண்டன் எக்சாம் எடுத்தால் பின்னடிக்கு நல்ல தொழில் துறையில் வேலை செய்யலாம். அப்பா வேறு, பெடியன் என்ன செய்கிறான் என்று உளவு பார்க்கிறார். 
ஆனால் எப்படிப் போவது? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அந்த நேரம் "வயதுக் கட்டுப்பாடு கொண்டோர்" என்ற பிரிவில் இருப்போர் யாழ்ப்பாணத்தை விட்டு அரக்கேலாது. ஏதாவது ஆபத்து அவசரத்துக்குக் கொழும்புப் பக்கம் போக வேண்டும் என்றால் சரீரப் பிணை வைக்க வேண்டும். அப்படி இன்னொருவரைப் பொறுப்பாக வைத்தால் அந்த ஆள் இவர் திரும்பி வரும் வரைக்கும் யாழ்ப்பாணத்தை விட்டு நகர முடியாது.

இருந்தாலும் ஒரு நப்பாசையில் நல்லூரில் இருக்கும் புலிகளின் பாஸ் வழங்கும் பணிமனைக்குப் போகிறேன் ஒரு நாள்.

"ஐசே உமக்கு வெக்கமா இல்லையே உம்மை மாதிரி வயசில ஒருத்தன் துவக்குத் தூக்கிக் கொண்டு நாட்டுக்காகப் போராடுறான், நீர் அண்ணா கூப்பிடுறார் ஆச்சி கூப்பிடுறா எண்டு வெளிநாட்டுக்கு ஓடுறீர்?" 
உள்ளுக்குள் என்னைப் போல் யாரோ ஒருவனுக்குப் பாஸ் அனுமதி வழங்கும் பொறுப்பாளரின் அர்ச்சனை அந்த அறையைத் தாண்டி வெளியே கேட்கிறது.
"அண்ணை இஞ்சை வாங்கோ" என்னைத்தான் ஓரமாக மேசை போட்டுக் காத்திருக்கும் இளைஞர் கூப்பிடுகிறார்.
"என்ன விசயம் சொல்லுங்கோ"
"பாஸ்ஸ்ஸ்"
"ஆருக்கு உங்களுக்கோ? நீங்கள் குடும்பஸ்தரோ?

குடும்பஸ்தர் என்றால் கல்யாணம் கட்டியவர், ஓரளவு சலுகை கிடைக்குமாம். ஆனால் எனக்கு வெட்கமாகப் போய் விட்டது இன்னும் மசுக்குட்டி மீசை கூடை வரவில்லையே

"இல்லை"
"போராளி குடும்பமோ?"
போராளி குடும்பம் என்றாலும் கவனிக்கப்படலாம் ஆனால் வீட்டுக்கு நான் தானே ஒருவன்.
"இல்லை, கொழும்பில எக்சாம் எடுக்கோணும்" இழுத்தேன்
"பொறுப்பாளர் வெளியில வாறதுக்குள்ளை கெதியாப் போங்கோ வீட்டை" 

"என்ன கோகுலன் போன விசயம் எப்பிடிப் போச்சு" குறோட்டன் பாத்தியை விரித்துக் கொண்டு சாந்தி அக்கா,  என் சைக்கிள் சத்தத்தைக் கேட்டுட்டா.
"கிடைக்காதக்கா" 
"ஓ" என்னை விட அவவுக்குத் தான் ஏமாற்றம் போல.

இரண்டு நாள் கழிந்திருக்கும். எங்கள் வீட்டு முற்றத்தில் சாந்தியக்கா, அவவின்ர அம்மா, எங்கட அம்மா அரட்டைக் கச்சேரி போட்டுக் கொண்டிருக்கும் போது தான் சாந்தி அக்கா அந்த விஷயத்தைக் கிளப்பினார், 
"பெரியம்மா எனக்கு ஒரு யோசினை, நான் சரீரப் பிணை குடுக்கிறன் கோகுலனைக் கொழும்புக்கு அனுப்புவம்"

"விசர்க்கதை கதைக்காதேங்கோ அக்கா, ரவுணிலை சீமாவுக்குக் கிளாஸ் தொடங்கப் போகினமாம், முதல்ல அங்கை சேருறன் கொழும்புக்கு இப்ப போறது சரிப்படாது" எடுத்த எடுப்பிலேயே பாய்ந்து தடுத்தேன் அவரின் யோசனையை.

"கோகுலா நீ சும்மா இரப்பு, எங்கட பெடியனைத் தான் துலைச்சிட்டம் நீயாவது எங்கையாவது நல்லா இருந்தா எங்களுக்குச் சந்தோசம் எல்லோ" சாந்தி அக்காவின் அம்மா 

"உங்கட மகளை வெளிநாட்டு மாப்பிளைக்குக் கட்டிக் குடுக்கிற ஆசை இல்லையோ அன்ரி" கேலியாகச் சிரித்தேன்.

"ஓம் அதுதான் இல்லாத குறை ஹிஹிஹி, நீர் சும்மா இரும் அதையெல்லாம் பெரியாக்கள் நாங்கள் பார்த்துக் கொள்ளுறம்" என்று வாயை அடைத்து விட்டார் சாந்தி அக்கா.

அம்மாவுக்கு உள்ளூரச் சந்தோஷம் தான் சாந்தி அக்காவைப் பெருமை கொள்ளாது பார்த்தார்.

அடுத்தடுத்த நாட்களிலேயே பாஸ் எடுக்கும் காரியங்கள் நடந்து, சாந்தி அக்காவின் சரீரப் பிணையால் ஓமந்தை தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காலடி வச்சாச்சு.
"எங்களையெல்லாம் மறந்து போறேல்லை பெரியவர்" என்று கடைசியாக என் கையைப் பிடித்துக் கொண்டு சிரிக்கும் போது டொப் என்று கண்ணீர் போட்டுடைத்துக் காட்டி விட்டது சாந்தி அக்காவின் ஊமைக் காயத்தை. 

கொழும்பில் மாமா வீட்டில் கொஞ்ச நாள், பின்னர் இடம் பார்த்துக் குடிபெயர்ந்து சீமா லண்டன் பரீட்சைக்குத் தனியார் கல்வி நிறுவனத்திலும் பதிவு செய்தாச்சு. வாரம் ஒரு காயிதம் எழுதி யாழ்ப்பாணம் போறவை யாரிடமாவது திணிப்பேன். சாந்தி அக்காக்கு நாலைஞ்சு பக்கம் நிறையும்.அவவும் யூனிவேர்சிற்றிப் புதினம் ஈறாக எழுதுவா, பக்கத்தில் இருக்கும் போது கூட எவ்வளவு நெருக்கம் இருந்திராது, எழுத்துத்தான்  மானசீகமாக இன்னும் அன்பை வெளிப்படுத்துதோ?
இதெல்லாம் கூடக் கொஞ்சக்காலம் தான் என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண முற்றுகையால் எல்லாப் பக்கங்களிலும் இருந்த சனம்
இடத்தில் இருந்து பெரு வெள்ளம் ஒரு ஓடைக்குள் கலக்குமாற் போல தென்மராட்சி நோக்கிய 
"உங்கட அப்பா, அம்மா மீசாலைப் பக்கம் இருக்கினமாம், உங்கட பக்கத்து வீடு சாந்தி குடும்பம் வன்னிக்குப் போட்டுதாம்" கொழும்பு லொட்ஜில் இருந்த கோண்டாவில் ஆள்.

"இனி நீ இஞ்சை இருக்கேலாது, கெதியா நாட்டை விட்டுப் போகோணும்" மாமா என் பதிலுக்குக் காத்திராது அவுஸ்திரேலியாவின் கல்வி நிறுவனம் ஒன்றின் முகவருக்குக் காசு கட்டி ஏற்பாடுகளைச் செய்து விட்டார். 
"இல்லை மாமா,  சாந்தி அக்காவை ஆள் பிணையில வச்சிட்டு வந்தனான்" குற்ற உணர்வோடு இழுத்தேன்.
"எடேய் விசரா பெடியளே இப்ப வன்னிக்குப் போட்டாங்கள் ஆள் பிணை அது இது எண்டுறாய்" மாமா தான் வென்றார்.
"அவுஸ்திரேலியா போன கையோட அங்கை ஆராவது நல்ல பெடியனை சாந்தி அக்காவுக்கு மாப்பிளை பாக்க வேணும், அவவைக் கெதியா எடுப்பிக்க வேணும் அப்ப தான் என்ர மனம் ஆறும்" மனசை ஆற்றுப்படுத்தினேன்.

சாந்தி அக்கா குடும்பம் போராளி குடும்பம், வன்னிக்குப் போய் காட்டுப் பக்கம் எங்கோ வீடெடுத்து இருந்து விஷப் பாம்புக் கடியால் சாந்தி அக்காவின் அம்மா இறந்தது வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்களின் புதினம் தெரிய வந்தது. அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது சாந்தி அக்காவை விசாரித்த சுருதி குறைந்து போய் விட்டது.
அவுஸ்திரேலியா வாழ்க்கையும் குடும்ப, குட்டி என்று வர எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டதோ. 

நினைவுச் சுழலில் கோண்டாவில் வந்ததே தெரியவில்லை, மேய்ச்சலுக்குப் போன மாடு தன் வழியைத் தானே பிடித்து வீடு வருமாற் போல என் சைக்கிளும் ஒழுங்கை தாண்டி வீட்டு முற்றத்தில். 

"அட ஆத்தே அவ்வளவு வெயிலும் உன்ர தலையில ஏறியிருக்குமே இப்ப"
ஆட்டுக்குப் போடக் குழை ஒடித்துக் கொண்டிருந்த அம்மா.

"அம்மா! சாந்தி அக்காக்களின்ர தொடர்பு இல்லையோ? நானும் கன காலமாக் கேட்காமல் இருந்திட்டன்"
"மெல்லமாப் பேசு, கொப்பா அந்தப் பேரைக் கேட்டால் சன்னதம் ஆடுவார்" அம்மா கிட்ட வந்து இரைந்து கொண்டே.

"என்னணை சொல்லுறியள் இப்ப அவை எங்க?"

"தம்பிராசா அண்ணை வருத்தம் வந்து கடைசி அடிபாட்டுக்கு முந்தியே செத்துப் போட்டார், குமார் கிளிநொச்சிச் சண்டையில செத்திட்டானாம்"

"அப்ப சாந்தி அக்கா?"

"அவள் சாந்தி, தாய் செத்த கையோட தேப்பனுக்கு உதவியா இருந்தவள் இயக்கப் பெடியனை விரும்பி கலியாணக் கட்டீட்டாள். ரெண்டாயிரத்து ஒன்பது சண்டையில ஆமிக்காறரிர்ர பிடிபட்ட ரெண்டு பேரையும் வேற வேற காம்பில வச்சிருந்தவங்களாம்"

"ஓ, பிறகு"

"பெடியனும், சாந்தியுமா ஒரு நாள் இங்கை வந்தவை. அவளைக் கண் கொண்டு பார்க்கேலாது பரதேசிக் கோலம், பெடியனுக்கு ஒரு பக்கத்துக் கால் சண்டையில போட்டுது, வன்னியில இருக்காமல் பழையபடி மணியண்ணை வீட்டிலை இருப்பம் எண்டு வந்தவையாம்"
அம்மா அதற்கு மேல் தொடர விரும்பாமல் முறிப்பது தெரிந்தது. 

"சரி சரி கை காலைக் கழுவி விட்டு வா மத்தியானச் சாப்பாட்டை என்ன பின்னேரமே சாப்பிடப் போறாய்"

"அம்மா! விசயத்தை நடுக்கொள்ள விடாமல் சொல்லணை" எனக்கு இப்பவே சைக்கிளைத் திருப்பிக் கொண்டு போய் சாந்தி அக்காவைப் பார்க்க வேணும் என்ற துடிப்பு.

"இயக்கத்தோட தொடுசல் வச்சிருந்தவை இனி எங்கட பக்கம் இருக்க வேண்டாம், ஆமிக்காறர் தேவை இல்லாமல் கண்ட கண்ட நேரம் வந்து விசாரிப்பினம், எங்களையும் சிக்கல்ல மாட்டாதேங்கோ எண்டு அயலட்டைச் சனமெல்லாம் சாந்தியைக் கும்பிடாத குறை, உன்ர கொப்பாவும் இதுக்கு உடந்தை" 
கள்ளத்தனமாக எங்கோ பார்த்துக் கொண்டு அம்மா.

எனக்கு விசர் விசராக வந்தது, நீயும் உதுக்குப் பாத்திரவாளி தானே என்று மனசு காத்திருந்து வன்மம் தீட்டியது.

"இப்ப அவை எங்கை சொல்லணை கெதியா"

"முல்லைத்தீவிலையோ எங்கையோ இருக்கிறதாக் கேள்வி ஆருக்குத் தெரியும் ஆர் போக்கறுந்து போனா எங்களுக்கென்ன? "

No comments: