தமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: மாலி நேர்காணல்

.

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் பிறந்தவர் மகாலிங்கசிவம் (65). சிறு வயதிலேயே இசையிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டு, அது குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர். இலங்கையின் முதல் பிராந்திய தினசரியான ‘ஈழநாடு’ வார இதழில் எழுதத் தொடங்கினார். ஈழத் தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கத்தின் புகைப்படங்களைக் கொண்டே, தமிழர் அரசியல் வரலாற்றுச் சுவடுகளை ‘அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல்’ என்ற நூலாக மு.நித்தியானந்தனோடு இணைந்து வெளியிட்டுள்ளார்.
தற்போது லண்டனில் வசித்துவரும் மாலி, ‘நாழிகை’ எனும் செய்தி மாத இதழை எவ்வித சமரசமுமின்றி 21 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சென்னை வந்திருந்த அவரோடு உரையாடியதிலிருந்து:
லண்டனிலிருந்து ‘நாழிகை’ போன்ற சஞ்சிகையைக் கொண்டுவரும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
இலங்கையிலிருந்து வந்த ‘Tribune’ ஆங்கிலப் பத்திரிகையைச் சிறு வயதில் விரும்பிப் படிப்பேன். நல்ல தரமான தாளில், அழகான அச்சில், காத்திரமான படைப்புகளோடு வரும் அந்த இதழைப் போல் தமிழிலும் ஒரு இதழைக் கொண்டுவர வேண்டுமென்பதே என் விருப்பம். லண்டனில் ‘தமிழன்’, ‘தமிழோசை’ ஆகிய வாரப் பத்திரிகைகளைச் சில காலம் கொண்டுவந்தேன். பிறகு, எனது கனவுப் பத்திரிகையான ‘நாழிகை’யைத் தொடங்கினேன். சர்வதேச அளவில் செய்திகள் தொடர்பில் லண்டனின் தனித்த கீர்த்தியும், தமிழர்களின் புலப்பெயர்வும் இதில் தூண்டுதலை அளித்தன.
லண்டனில் தமிழ் இலக்கியச் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

முன்னைவிடத் தற்சமயம் செயல்பாடுகள் குறைந்துள்ளன. கூட்டங்களுக்கும் குறைவானவர்களே வருகிறார்கள். ஆனாலும், தொடர்ந்து சில அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்துவருகின்றன. குறிப்பாக,வேலன் இலக்கிய வட்டம், திரிவேணி இலக்கியச் சங்கமம் போன்ற சில அமைப்புகள் இலக்கியப் பணியைத் தளராமல் தொடர்ந்து செய்துவருகின்றன. அவ்வப்போது சில நூல் வெளியீடுகள் இடம்பெறுகின்றன. ‘விம்பம்’ அமைப்பு குறுந்திரைப்பட விழாக்களை நடத்தி, பரிசுகள் வழங்கியும் ஊக்குவித்து வருகிறது.
லண்டனிலுள்ள தமிழர்கள் தமிழ்க் கலைகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார்களா?
புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் தமிழர்கள், தங்கள் குழந்தைகள் இசையோ நடனமோ கற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
தமிழகத்திலிருந்து வருகிற படைப்புகள் பற்றிக் கூறுங்கள்?
நல்ல படைப்புகள் பல வெளிவருகின்றன. அரசியல் கட்டுரைகள் மட்டும் ஏனோ தமிழில் செறிவாய் வருவதில்லை. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இன்றைய சமூக நோக்கு, கட்சிகளின் செயல்பாடு எனப் பகுத்தாய்ந்து எழுதப்படும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் ரொம்பவும் குறைவாகவே வருகின்றன. ‘நாழிகை’ இதழில் கவிதைகளுக்கு மாத்திரம் இடமில்லை. ‘நாழிகை’ இதழுக்கு தமிழகத்திலிருந்த படைப்புகளைத் தந்தவர்களில் ஆர்.நடராஜன், பகவான் சிங், மாலன், சம்பத்குமார், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், அண்ணா மலை, கார்ட்டூனிஸ்ட் அரஸ், புகைப்படக் கலைஞர் யோகா ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
உங்கள் புதிய நூல் முயற்சிகள் பற்றி…
நான் எழுதிய இசை, நடனம் குறித்த விமர்சனக் கட்டுரைகளை, கலைத் துறை சார்ந்த எனது அனுபவங்களைத் தொகுக்கும் பணியைச் செய்யுமாறு நண்பர்கள் தூண்டியுள்ளனர். இலங்கை பாராளுமன்றத்துக்கான ‘ஈழநாடு’ தினசரியின் நிருபராக இருந்தபோது எனக்கேற்பட்ட அனுபவங்களை எழுதும் எண்ணத்தில் இருக்கிறேன். மேலும், முக்கியமான ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழர்களின் தலைவர் அமிர்தலிங்கத்தோடு 15 ஆண்டுகள் பழகியவன் என்கிற வகையில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அவரது பணிகளை ஒரு பத்திகையாளனின் பார்வையிலிருந்து எழுத உள்ளேன்.

No comments: