கவிவிதை - 2 - இவளா, அவளா? - -- விழி மைந்தன்--

.
அவனோ அறிவும் ஆற்றலும் பொருந்திய ஆடவன்.
அவனி பயனுற அவதரித்தவன் என்றே சொல்லலாம்.
ஆழம் மிகவுடைய அண்ணல்.
அழகு மிகவுடைய நங்கை ஒருத்தியைச் சேர்ந்து,  அறிவாழமும் அருங்கவினும் பொருந்திய குழந்தைகள் பல தந்துஉலகுக்கு ஒளி  ஏற்ற உத்தேசித்தான்.
ஆன்றவிந்து அடங்கிய சான்றோரான மூத்தோர் சிலரும்அவனின் வயதொத்த நவ நாகரீக  இளைஞர் சிலரும் அவனுக்குத் திருமணம் பேசினர்.
அவ்வூரில் அவனுடன் இல்லறத்தில் இணையப்  பொருத்தமாயிருந்த அழகு மங்கையர் இருவர்.
ஒருத்திபழம் பெருமை மிகவுடைய குடும்பத்தினள். மன்னர் மகள். செந்நிறப் பட்டுடுத்தி, அணிகள் பல பூண்டு, வளைய வருபவள்.  காதில் குண்டலமும்,கைகளில் வளையல்களும்மார்பில் மணி மாலையும்இடுப்பில் மேகலையும்,கால்களில் கவிதை கொஞ்சும்  சிலம்பும் அணியாமல் வெளி வருவதில்லை. கவிஞர் கற்பனையென இனிப்பது அவள் இதழ். கவினும் அடர்த்தியும் மிகுந்தது அவள் தலைக் குழல். காவியங்களில் அடங்கிய கருத்துக்கள் எனத் திரண்டவை அவளது கொங்கைகள். அவள் நடை அழகைப் பார்த்துப் பெரு மூச்செறியும் வாலிபர் பலர்.  ஆடையும் அணிகளும் பொன்னும் பூக்களும் மையும் மஞ்சளும் சந்தனமும் ஜவ்வாதும் அணிந்து அழகிய தேரென அசைந்து வருபவள்.


"இலக்கியவதி" என்ற பெயர் கொண்ட இந்த இனியவளுக்கு அவனை மணம்  பேசினர்,  அவ்வூரின் மூத்தோர் சிலர். பிள்ளை பேரர்களுடன் பெருமையுற வாழ்ந்த முதியோர்இந்தப் பெண்ணின் குடும்பப் பெருமையை இவனிடம் கூறித் திரிந்தனர். "நல்ல இடமடா தம்பி" என்றனர். "அந்தப் பிள்ளை மாதிரி அழகான பெண் உண்டோபொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டது  போலல்லவோ?"என்றனர்.

இன்னொரு பெண்....

புதுப் பணக்காரர் மகள். புத்தம் புதிய பூங்கொத்து. ஆப்பிள் கன்னம். ஸ்ட்ரா பெர்ரி இதழ்கள். நறுக்கிய கூந்தல். நோக்கியா கண்களை நோக்க விடாது மறைக்கிற 'சன் கிளாஸ்'. மின்னல் கொடி போல இடை. வெட்டி வெட்டி நடக்கும் நடை.  புத்தம் புது மேல்நாட்டு மோஸ்தரில் உடை.

"அழகிய என் உடலை ஆடவர் பார்வையிலிருந்து மறைக்கும் அனாவசியம் தான் ஆடைகள்" என்று நினைப்பவள்.  எவ்வளவு ஆடை அணிகளைக் குறைக்கிறேனோ அவ்வளவு என் அழகு மிகைப் பட வெளிப் படும் என்பவள். "தங்கம்வெள்ளிவைரம்மணி... இதெல்லாம் சுத்த கர்நாடகம்" என்று சொல்பவள். சாக்லேட் பேச்சில் தமிழும் ஆங்கிலமும் கலந்து விளையாடும்.  பக்கத்து நாட்டுப் பாவையர் செய்வதைத் தானும் செய்து பார்க்க விரும்புபவள். தன அன்னை செய்த அலங்காரங்கள் எல்லாம் "பத்தாம் பசலித் தனம்" என்று ஒதுக்குபவள்.
"நவ கவி" என்ற தன் சொந்தப் பெயரையே "நவி" என்று நறுக்கிக் கொண்ட நங்கை.
இந்தப் புதுமைப் பூவைக்கு அவனை மணம் புரிவித்துப் பார்க்க ஆசைப் பட்டனர் அவன் வயதொத்த தோழர்கள்.
"அவள் தான் இந்தக் காலத்துக்குச் சரி" என்றனர். " அவளைச் செய்தால் நீ'பேமஸ்ஆ வந்திடுவாய்" என்று கூறினார். "பேசிப் பார்" என்று ஏவினர்.
வாழ்வின் வசந்த காலத்தில் இருந்த அவன்,  தன்  தோள்  சேர்ந்து தன்  மழலைகளைத் தரணிக்குத் தரப் பொருத்தமானவள் இலக்கியவதியாஅல்லது நவகவி என்ற "நவி" யா என்று முடிவெடுக்க முடியாமல் தவித்தான்.
இப்படி இருக்கும் நேரத்தில், 'சேர்கஸ்கம்பனி ஒன்று ஊருக்கு வந்தது.
கிணற்றில் சைக்கிள்  ஓட்டம்! கண் கட்டு வித்தைகள்!!  நெருப்பினூடு  பாயும் மிருகங்கள்!!! வேடிக்கை வினோதங்கள்!!!! ஊரே சேர்கஸ் நடக்கும் வெளியில் திரண்டது.
சேர்கஸ் பார்க்க அவளும் வருவாள்இவளும் வருவாள் என்று தெரிந்து அவனும் போனான். இவனுக்கு மணம்  செய்வித்துப பார்க்க ஆசைப் பட்ட முதியோர் பலரும்,  இளைஞர் பலரும் அவனைச் சுற்றி வியூகம் அமைத்துச் சென்றனர். இரண்டு பக்கம் இருந்தும் அவனுக்குப் பெரும் அழுத்தம்!! இன்று அவனோர் முடிவு எடுப்பான் என்று இரு தரப்பினரும் எதிர் பார்த்தனர்.
அவன் சென்றான். கண்டான்! சேர்கஸ் மறந்தான்!!
இலக்கியவதியோ எழில் குடமாகசகலாபரண பூஷிதையாககுனிந்த தலை நிமிராமல் அங்கோர் தூணைப் பிடித்துக் கொடியென  நின்றாள். அவன் பார்ப்பது அறிந்து பார்ப்பதைத்  தவிர்த்தாள்.
இன்னொரு பக்கம் இருந்து நவி என்ற நவக் கொடிஅவன் மேல் விழி அம்புகளை வீசி எறிந்தாள். அவன் நோக்கெதிர் நோக்கிப் புன்னகை புரிந்தாள் !
அவன் மனம் அங்கும் இங்கும் அலை பாயமுடிவெடுக்க முடியாமல் நின்றான்.
இப்படி இருக்கையில் எதிர் பாராமல் ஒன்று நடந்தது.

குழந்தை ஒன்று கரடியின் கூண்டில் கையைக் கொடுத்தது. கையைப் பிடித்த கரடி நகத்தால் 'சரக்கெனஇழுத்தது. சிவப்புக் குருதி பாயக்,  குழந்தை கதறி அழுதது. குழந்தையின் தாயோ குருதியைக் கண்டு மயங்கி விழுந்தாள் !
இந்தக் காட்சியைக்  கண்டனர்,  இளைஞன் விழைந்த இரண்டு பெண்களும்.
ஒருத்தியோஎனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்பது போலதன் அழகு கெடாமல் தனது இடத்தில் தரித்து நின்றாள்  -  இளைஞன் பார்வைக்குத் தவித்து நின்றாள்.
இன்னொரு பெண்ணோ எல்லாம் மறந்து பாய்ந்து சென்றாள்  -  குழந்தையை அள்ளி மடியில் போட்டாள். தன் உடை கிழித்துக் கட்டுப் போட்டாள் . குருதி நிறுத்திக் குழந்தையை அணைத்துத் தேறுதல் சொன்னாள். திருமணம் மறந்து சின்னக் குழந்தையின் தாயாய் ஆனாள்.
குருதியும் கண்ணீரும் நனைந்து தன அழகு குலைந்ததை அவள் உணர்ந்து,சிவந்த போது,  இளைஞன்  முடிவு செய்திருந்தான்.
"இவள் தான் வேண்டும் எனக்கு!" என்றான்.
"சமூகத்திற்கு ஒரு சங்கடம் வந்ததும் இவளே துடைத்தாள்  -  உண்மையான அழகை அதனால் இவளில்  கண்டேன்" என்றான்.
அங்கீகரித்தனர் அனைவரும். அந்தப் பெண்ணைச் சேர்ந்துகாலா காலத்தில் பிள்ளைகள் பலர் பெற்றுப் பெருமையுற வாழ்ந்தான்.
அது சரிஅவன் மனம் பொருந்தி மணம்  புரிந்தது இலக்கியவதியையாஇல்லை நவி என்ற நவகவியையா?
இந்தக் கேள்வி இப்போது ரொம்ப முக்கியம் தானா?

No comments: