.
புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்
ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் இந்தியப்பேச்சுவழக்குடன் வேறுபடும் தன்மைகள் பற்றி ஆய்வுசெய்துள்ளார்.
தமிழ்மொழி நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாறுபட்ட ஒலியில் பேசப்படுகிறது. உதாரணங்கள் ஏராளம். சமகால தமிழ்த்திரைப்படம் - தொலைக்காட்சி நாடகங்களில் வரும் தமிழ் வேறுபட்ட தளத்திலிருந்து ஒலிக்கிறது.
புகலிடத்தில் ஆங்கிலம் அல்லது அய்ரோப்பிய மொழிகளின் கலப்புடன் தமிழ் ஒலிக்கிறது.
இந்தப்பின்னணிகளுடன் எனது பூர்வீக ஊரில் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் கத்தோலிக்க மக்களின், குறிப்பாக அவர்கள் மத்தியில் செறிந்து வாழும் கடலை மாத்திரம் நம்பிவாழும் கடற்றொழிலாளர்களான மீனவ சமூகத்தினரின் பேச்சுவழக்கு பிற ஊர்களில் வாழ்பவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம்.
ஆனால், அங்கே நீண்ட நெடுங்காலம் வாழ்பவர்களுக்கு அம்மண்ணின் மொழி நல்ல பரிச்சயம்.
சின்னவயதிலிருந்தே அந்த சமூகத்துக்கு பிள்ளைகளுடன் விளையாடியதனாலும் சிறுவயதில் எனது பாட்டியுடன் அந்த கடற்கரையோரத்தில் ,
காலை வேளைகளில் கடலிலிருந்து வந்து குவியும் கடற்றொழிலாளர்களின் காலைப் பசிபோக்குவதற்கு வட்டிலில் தோசையும் சம்பலும் எடுத்துச்சென்று பத்திரிகை காகிதங்களில் சுற்றி விற்று வீட்டுக்கு வருவாய் தேடியதனாலும் அம்மக்களின் மொழி எனக்கு அத்துப்படியானது.
சுருப்பணத்தில, என்னத்தை செல்லிய சோமலமாதாவே, என்ர அம்மண்டோ, சிறுக்கன், சிறுக்கி, செவலயா, மசவாது நாயே, அம்மைக்கு...அக்கைக்கு .... ( அடுத்துச்சொல்ல முடியாது)
புறகால, பட்டிரிச்சி, லேசாயிரிச்சா, அம்மட்டுத்தானா, குடுக்கியது, இந்தச்சரயும், பேசியச்சில்ல, இவ்வாறு ஆயிரக்கணக்கான சொற்பிரயோகங்கள் அம்மண்ணின் மாந்தர்களிடம் வாழ்கின்றன.
அம்மக்கள் பற்றிய முதல் சிறுகதை எழுதியபொழுது, அதற்கு வரவேற்பு இருக்குமா...? வாசகரின் கவனத்தை பெறுமா...?
என்பது பற்றியெல்லாம் நான் ஆராயவே இல்லை. எனது முதல் சிறுகதையை செம்மைப்படுத்தி தந்தவர் தற்பொழுது ஜெர்மனியில் வதியும் எனது மாமா மகள் தேவா. அந்த முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் மல்லிகையில் வெளியானதும் பலருடைய கவனத்தையும் கவர்ந்து, மல்லிகை, பூரணி, தினகரன் முதலானவற்றில் விமர்சனக்குறிப்புகள் வந்ததும், ஈழத்து இலக்கிய உலகம் அம்மகளின் மொழியையும் ஏற்றுக்கொண்ட புளகாங்கிதம் எனக்குள்
தோன்றியது.
அதனைப்பார்த்த தேவாவும், தேவைகளின் நிமித்தம் என்ற சிறுகதையையும் (பூரணி) அவர்கள் நடக்கிறார்கள் என்ற சிறுகதையையும் ( புதுயுகம்) எழுதினார்.
சிலமாதங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வெளியான ஞானம் புகலிட இலக்கிய சிறப்பு மலரில் தேவாவின் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் நேரடியாக ஞானம் இதழுக்கு அதனை அனுப்பவில்லை. ஏற்கனவே வெளியான பனியும் பனையும் தொகுதியிலிருந்து Down Load செய்யப்பட்ட சில சிறுகதைகளிலிருந்து தேவாவின் அந்தச் சிறுகதையும் ஒன்று.
ஆனால், இந்ததத்தகவல்கூட ஜெர்மனியிலிருக்கும் அவருக்கு தெரியாது.
இவ்வாறு Down Load செய்யப்படும் படைப்புகள் அவற்றை எழுதியவர்களுக்கு தெரியாமலேயே மறுபதிப்புகள் காணும் கணினி யுகத்தில் நாம் வாழ்கின்றோம்.
இந்தப்பின்னணிகளுடன், நீர்கொழும்பு கடற்றொழிளார்கள் பேச்சுமொழி வழக்கு பற்றியும் தமது பல்கலைக்கழக ஆய்வேட்டிற்காக ஆராய்ந்த நண்பர் இலக்கிய விமர்சகர் திரு. வன்னியகுலம் பற்றியதே இந்தப்பதிவு.
இலங்கையில் வடமராட்சி ஏராளமான இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் அறிவுஜீவிகளையும் நமக்கு வழங்கிய பிரதேசம். அங்கு வாழ்ந்த கந்த முருகேசனார், கிருஷ்ணாழ்வார் காலத்திற்கு முன்பிருந்தே நீண்ட கலை, இலக்கிய பாரம்பரியம்
கொண்டிருப்பது.
இங்குதான் வியாபாரிமூலை என்னுமிடத்தில் மகாகவி பாரதியின் ஞானகுரு அருளம்பலம் சுவாமியாரின் கல்லறையும் இருக்கிறது.
உலத்தையே திரும்பிப்பார்க்கவைத்தவரும் தங்கள் வடமராட்சிதான் என்று பெருமைகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
வன்னியகுலம் வடமராட்சியில் வதிரி மெதடிஸ்த மிஷன் ஆரம்பப்பாடசலையில் முதலில் கற்று, நெல்லியடி மத்தியகல்லூரியில் தொடர்ந்து - பேராதனை பல்கலைக்கழகம் பிரவேசித்தார். உயர்வகுப்பிலிருந்தவேளையிலேயே இலக்கியப்பிரதிகளை எழுதியவர்.
பின்னர் இலங்கை இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். குமரன் இதழில் கோட்பாட்டு ரீதியான விவாதங்களிலும் ஈடுபட்டவர். பட்டதாரியானதன் பின்னர் அரச எழுதுவினைஞராக பணியாற்றி,. இலங்கையில் வட - கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தினையடுத்து அங்கு பல திணைக்களங்களினதும் செயலாளர்களின் உதவியாளராகவும் பணியாற்றியவர். இறுதியாக உலகவங்கியின் இலங்கைக்கான வீட்டுத்திட்டத்தில் திட்டமிடல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர், 1997 ஆம் ஆண்டு இலங்கை திரும்பியபொழுது சில இலக்கிய நிகழ்ச்சிகளில் எனது வருகை அறிந்த நண்பர் வன்னியகுலம், தொடர்புகொண்டு தான் தற்பொழுது, கொழும்பில் ரூபவாஹினி தொலைக்காட்சி
சேவையில் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளராக இருப்பதாகவும், ஒரு நேர்காணல் சந்திப்பு ஒழுங்குசெய்திருப்பதாகவும் அழைப்பு விடுத்தார்.
அதுவரையில் அவர் அங்கு பணியாற்றும் தகவல் எனக்குத் தெரியாது.
அவர் குறிப்பிட்ட நாளில் அங்கு சென்றிருந்தேன். நண்பர் திக்குவல்லைகமால் என்னுடன் நேர்காணல் நடத்துவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பண்டாரகமவில் இருந்து வருகைதந்தார். சுமார் அரைமணிநேரம் அந்த தொலைக்காட்சி நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அதுவே எனது வாழ்நாளில் பதிவான முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு கூடம்
சென்று வந்திருந்தாலும், ரூபவாஹினிக்குள் காலெடுத்து வைத்தது அன்றுதான். நிகழ்ச்சி பதிவின்பொழுது வன்னியகுலமும் அங்கு அமர்ந்திருந்தார்.
வெளியே வரும்பொழுது - அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். மல்லிகை ஜீவாவுக்கு நீர்கொழும்பில் சேவை நலன் பாராட்டுவிழா ஒழுங்கு செய்துள்ளேன்.
அதில் கொழும்பு பத்திரிகைகள்
மற்றும் இலங்கை வானொலி சார்பிலும் இலங்கை இலக்கிய அமைப்புகளின் சார்பிலும் பலர் வருகைதந்து உரையாற்றவிருக்கிறார்கள். மல்லிகைஜீவாவை நீண்ட காலம் அறிந்தவர் என்ற முறையில் நீங்களும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் சார்பில் வந்து உரையாற்றவேண்டும் எனச்சொன்னேன்.
அவர் சம்மதித்ததுடன் குறிப்பிட்ட நீர்கொழும்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கும் ஒழுங்கு செய்யமுடியும், அதற்காக நீங்கள் ஒரு கடிதத்தை அழைப்பாகத்தரவேண்டும் என்றார்.
உடனே எனது லெட்டர்ஹேட்டில் ஒரு அழைப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டுவந்தேன்.
மல்லிகைஜீவாவிழா நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்திலும் எனது அக்காவின் வீட்டிலும் பெரிய கொண்டாட்டமாகவே நடந்தது.
கொழும்பிலிருந்து
தினகரன் சார்பில் ஆசிரியர் ராஜ ஸ்ரீகாந்தன், தினக்குரல்
சார்பில் ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன்,
நவமணி சார்பில்
ஆசிரியர் சிவலிங்கம், வீரகேசரி சார்பில் சூரியகுமாரி, இலங்கை
வானொலி சார்பில் இளையதம்பி தயானந்தா, மலையக எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் தெளிவத்தைஜோசப், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் பிரேம்ஜி, இலக்கிய வட்டத்தின் சார்பில் மு. பஷீர்,
இவர்கள் தவிர வீ. தனபாலசிங்கம், மாணிக்கவாசகர், தங்கவடிவேல் மாஸ்டர், மேமன் கவி, வதிரி சி. ரவீந்திரன், துரை. விஸ்வநாதன், நிலாம், திக்குவல்லைகமால், நீர்கொழும்பூர் முத்துலிங்கம், தருமலிங்கம் முதலானோர் வருகைதந்தனர்.
இவர்களுடன் வன்னியகுலம் தமது ரூபவாஹினி பரிவாரங்களுடன் ஒரு வாகனத்தில் வந்து இணைந்துகொண்டார்.
" நாம் எல்லோரும் இப்படி சந்திப்பதற்கு நீ வரவேண்டியிருந்திருக்கிறது " என்று புளகாங்கிதமாகச்சொன்ன மல்லிகை ஜீவாவின் இதழில்தானே எனது முதல் இலக்கிய ஆக்கம் வெளியானது. அதனை நினைவுகூர்ந்தும், எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை ஜீவாவின் இலக்கியச்சேவை நலன் பாராட்டும் விழாவாக நடத்துவதற்கு தீர்மானித்துக்கொண்டு இலங்கை சென்றபொழுது,
எனது நீண்ட கால கலை, இலக்கிய , ஊடகத்துறை நண்பர்கள் அனைவரும் அன்று ஒன்று திரண்டு வந்ததை இப்பொழுது
நினைத்தாலும் இனிமையாகத்தான் இருக்கிறது.
அவர்களில் சிலர் இன்று இல்லை. மற்றும் சிலர் இலங்கையில் மேலும் சிலர் வெளிநாடுகளில். ஆனால், நெஞ்சில் இட்டகோலங்கள் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
மல்லிகையிலும் பூரணி, புதுயுகத்திலும் வெளியான எனது சிறுகதைகள் பற்றி ரத்னசபாபதி அய்யர், ஏ.ஜே.கனகரட்னா, அநு.வை. நாகராஜன், எம். சிறிபதி , கே. எஸ். சிவகுமாரன்
ஆகியோர் எழுதிய விமர்சனக்குறிப்புகளை ஏற்கனவே பார் த்திருந்தாலும்.
வன்னிய குலம் எழுதியிருந்த குறிப்புகளை 1986 ஆம் ஆண்டுக்குப்பின்னர்தான், அவருடைய ஈழத்துப்புனை
கதைகளிற் பேச்சுவழக்கு என்னும் நூலில் காணமுடிந்தது.
அவருடைய இந்த முதல் நூலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக
தமது எழுத்தையும் வாழ்வையும் ஆயுதமாக்கிய மூத்த படைப்பாளி கே. டானியல் அவர்களுக்கு காணிக்கையாக சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
டானியலும் வடமாகாண ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் பேச்சுவழக்கை இயல்பாக பதிவுசெய்தவர். வன்னியகுலம் தமது முதுகலைமாணி பட்டத்திற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்
சமர்ப்பித்த ஆய்வு ஏடுதான் இந்நூல்.
இந்நூலுக்கு அப்பொழுது யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன், " இலக்கியத்தை திறனாய்வுசெய்பவர்கள், அதற்கு அடிப்படையாக அமையும் மொழியினையும் விமர்சனம்
செய்வது பயனுள்ள நெறியாகும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியத்திற்கும் மொழிக்குமுள்ள தொடர்பு, பேச்சுமொழியின் முக்கியத்துவம், ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் அவை இந்தியப்பேச்சுவழக்குடன் வேறுபடும் தன்மைகள் பற்றியெல்லாம் வன்னியகுலம் ஆய்வுசெய்துள்ளார்.
இன்றும் தமிழ்நாட்டில் எமது ஈழத்து படைப்புகளில் இடம்பெறும் சொற்கள் புரியாத படைப்பாளிகளுக்காகவும் வாசகர்களுக்காகவும்
அடிக்குறிப்புகள் - பின் இணைப்புகள் நூல்களில் தரப்படுகின்றன.
ஸர்மிலா செய்யத்தின் உம்மத் நாவலில் அவர் தமிழகத்தினருக்காக பொருள்கூறும் பட்டியலே இணைத்துள்ளார். இன்றும் தமிழ்நாட்டில் படலை என்றால் என்னவென்று தெரியாத வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஈழத்து வாசகர்களுக்கு தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுத்தமிழும்,
கரிசல் இலக்கியத்தமிழும் தஞ்சை வட்டார வழக்கும், தலித் இலக்கியத்தில் வரும் பேச்சுமொழிப்பிரயோகங்களும் புரியும். புரியாதுவிட்டால் அதற்கான தேடலிலும்
ஈடுபடுவார்கள். ஆனால், அந்தத்தேடலை ஈழத்தவ
ர் தொடர்பில் அங்கு காணமுடியவில்லை என்ற வருத்தம் எமக்குண்டு.
இந்நிலையில் இன்றும் நாம் தாய்நாடு - சேய்நாடு என்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.
வன்னியகுலத்தின் இந்நூலுக்கு அறிமுகவுரை எழுதியிருக்கும் கலாநிதி பார்வதி கந்தசாமி, " எப்பிரதேசத்தை மனதில் வைத்து இலக்கியம்
எழுதப்படுகின்றதோ அப்பிரதேசத்தின் பேச்சுவழக்கு அவ்விலக்கிய
உரையாடலிலே பிரயோகிக்கப்படுதல் வேண்டும். இவற்றை படிப்பதன் மூலம் பிரதேச மொழிவழக்குகளை ஏனைய பிரதேச மக்களும் அறிந்துகொள்ளும் ஆற்றலையும் புரிந்துகொள்ளும் மனோபக்குவத்தையும் பெற்றுவிடுகின்றனர் " -என்று எழுதுகின்றார்.
தமது இலக்கியப்பிரவேசகாலகட்டத்தில் 1965 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகளையே எழுதிவந்தவர் வன்னியகுலம். அவருடைய சில சிறுகதைகள் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளன. ஆனால், அவர் அதிலிருந்து விலகிச்சென்ற காலம் அவருடைய பல்கலைக்கழக
பிரவேசத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.
தீவிர வாசகரான வன்னியகுலம், எதனையும் தர்க்க ரீதியாகவும் இயங்கியல் ரீதியாகவும் ஆராயும் மனப்பக்குவத்தை பல்கலைக்கழக கல்வி முறை அவருக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு பல்கலைக்கழகம் சென்ற பின்னர் புனைகதையிலிருந்து
திறனாய்வு - விமர்சனம் என்று வேறு தடங்களில் பயணித்தவர்கள்தான் கைலாசபதி, நுஃமான் , கே. எஸ். சிவகுமாரன் முதலானோர். அவர்களின் பாதையில் வந்த மற்றும் ஒருவர் வன்னியகுலம்.
ஆனால் , பல்கலைக்கழகம் சென்றபின்னரும் தமது புனைகதைத்துறைக்கு தேக்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள்: செங்கை ஆழியான், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், செ. கதிர்காமநாதன், அங்கையன் கைலாசநாதன்.
தமிழ்நாட்டில் சிறந்த சிறுகதைகளையும் ஒரு சில நாவல்களையும் எழுதிய தொ.மு.சி.ரகுநாதனும் பின்னாளில் மொழிபெயர்ப்பு - ஒப்பியல் ஆய்வு - விமர்சனம் என்று தட(ள)ம் மாறிச்சென்றார்.
வன்னியகுலத்தின் திறனாய்வு முறைமைகளை முதலில் இனம்கண்டுகொண்ட பேராசிரியர் அ. சண்முதாஸ் அவர்கள், 1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இலங்கை வானொலியில் நடத்திய கலைக்கோலம்
நிகழ்ச்சியில் களம் தந்திருக்கிறார். அக்காலப்பகுதியில் வெளியான சிறுகதை, நாவல், நூல்கள் பலவற்றை விமர்சனம் செய்துள்ள
வன்னியகுலத்திற்கு
அந்த ஆர்வத்தின் தூண்டுதலே ஈழத்து
புனைகதைகளிற்
பேச்சுவழக்கு என்ற ஆய்வில் ஈடுபடுத்தியிருக்கிறது.
அதற்காக அ. சண்முகதாஸ_க்கும்
இந்நூலை வெளியிட முன்வந்த யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தை சேர்ந்த மூத்த படைப்பாளி சொக்கன் அவர்களுக்கும் வன்னியகுலம் தமது நன்றியைத்
தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் நான்கு தலைமுறை படைப்பாளிகளின் சிறுகதைகள். நாவல்களையெல்லாம் படித்து ஆய்வுசெய்து இந்நூலை எழுதியிருக்கிறார். இலங்கையின் வடக்கு , கிழக்கு, தெற்கு மலையகப்பிரதேச படைப்பாளிகள் கையாண்ட பிரதேச பேச்சுமொழிவழக்குகள் குறித்தெல்லாம் நிறைய தகவல்களுடன் வெளியாகியிருக்கிறது.
இன்றைய தலைமுறையில் எவரும் இந்தத்துறையில் ஈடுபடவில்லை என்ற குறை தற்காலத்தில் தெரிகிறது. முதல்கட்ட நான்கு தலைமுறையினர் பற்றிய ஆய்வுகளும் பதிவுகளும் பெருகியிருக்கும் இன்றைய ஈழத்து இலக்கிய உலகம் , அவசர யுகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் , நூல் அறிமுகம் என்ற எல்லைக்குள் சுருங்கி திறனாய்வு தொடர்பான விரிந்த தளம் சமகாலத்தில் காணாமலேயே போய்விட்டது.
இதனால் 1990 இற்குப்பின்னர் இந்தத்துறை தேக்கம் கண்டுவிட்டது.
வன்னிகுலம் சுமார் 15 வருடங்களின் பின்னர் வெளியிட்ட மற்றும் ஒரு நூல் புனைகதை இலக்கிய விமர்சனம்.
இதில் 15 படைப்பாளிகளின் சிறுகதை, நாவல்கள் பற்றிய அவருடைய திறனாய்வுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை பத்திரிகைகள் இதழ்களிலும் வெளியான கட்டுரைகளும் இலங்கை வானொலிக்கெனவே எழுதப்பட்டவையும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூல் அவருடைய வாசிப்பு அனுபவத்தை சிறப்பாக பதிவுசெய்கிறது.
முன்னர் ஒரு காலத்தில் படித்திருக்கிறீர்களா...? என்ற தலைப்பில் மூத்த இலக்கிய விமர்சகர் க.நா.சு. எழுதியிருப்பதுபோன்று, பாரதி முதல் சுஜாதா வரையில் என்ற திறனாய்வுத்தொகுப்பில் பேராசிரியர் இரா. தண்டாயுதம் பதிவுசெய்திருப்பதுபோன்று வன்னியகுலமும் இந்நூலில் சிலரின் படைப்பாளுமையை வாசகர்களிடம் எடுத்துச்செல்கிறார்.
அதிலும் அவர் முதலிருவரிலிருந்து
வேறுபட்டுள்ளார். க.நா.சு.வும் தண்டாயுதமும் தமிழக படைப்பாளிகளைதான் அறிமுகப்படுத்தினர்.
ஆனால், வன்னியகுலம் -- புதுமைப்பித்தன் , கு.ப.ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, ஆர். சண்முகசுந்தரம், இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், வண்ணை சே. சிவராஜா, கோப்பாய் சிவம், த. கலாமணி, புலோலியூர் இரத்தினவேலோன், சந்திரா தனபாலசிங்கம், கே.டானியல், கசின் - க.சிவகுருநாதன், ப. ஆப்டீன், நெல்லை க. பேரன் முதலான தமிழக -
ஈழத்து படைப்பாளிகளையெல்லாம்
ஆய்வுசெய்து ஒரே நூலில் தொகுத்து ள்ளார். தலைமுறை இடைவெளிகளையும் காண்பிக்கின்றார்.
புலம்பெயர்ந்த எம்மவர்கள் மத்தியிலிருக்கும்
படைப்பாளிகளைப்பற்றிய கவனம் சமகாலத்தில் தமிழக தீராநதி, உயிர்மை, காலச்சுவடு, முதலானவற்றில் கூடுதலாகியிருக்கிறது. ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன்
முதலானோர் புகலிட படைப்புகளுக்கு முன்னுரையும் குறிப்புகளும் எழுதிய
காலத்தை அண்மையில் கடக்கின்றோம். இந்நிலையில் வெங்கட்சாமிநாதனை இழந்துவிட்டோம்.
ஈழத்து படைப்பாளிகளும், புகலிடம் வாழும்
ஈழத்து இலக்கியவாதிகளும் தமிழகத்தவரின் கவனத்தை
ஈர்ப்பதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது என்பதையும் வன்னியகுலத்தின் நூல்கள் சொல்லாமல் சொல்கின்றன.
2003 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் இலங்கை சென்றிருந்தபொழுது இவர் ரூபவாஹினியில் இல்லை. வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைந்திருந்தார். கொழும்பில் இவரையும் இவருடைய மனைவியின் தம்பி நண்பர் கலாமணியையும் சந்தித்தேன். வீரகேசரியில் முன்னர் பணியாற்றிவிட்டு 1985 இற்குப்பின்னர் தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கச்சென்ற மூத்த பத்திரிகையாளர் கார்மேகம் சென்னையில் தினமணியில் இணைந்திருந்து ஓய்வுபெற்று விட்டு
- வீரகேசரி நிருவாகத்தின் அழைப்பில் மீண்டும் இலங்கை திரும்பி வீரகேசரியில் ஆலோசகராக இணைந்திருந்தார். நண்பர் கே.எஸ். சிவகுமாரனும் அங்கு சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு விலகியிருந்தார். அங்கு ஆசிரிய பீடத்தில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
கார்மேகம் சற்று சோர்வுடன் எனக்கு கடிதமும் எழுதியிருந்தார். ஆரோக்கிய குறைபாடு மனிதர்களின் உடல்களுக்கு மட்டுமல்ல, அரச மற்றும் தொழில்துறை - இதழியலும் அவ்வப்பொழுது தவிர்க்கமுடியாத அடையாளம்தான்.
2003 இல் ஒரு முன்னிரவு வேளையில் வன்னியகுலத்தை சந்தித்தபொழுது அவர் " மீண்டும் வீரகேசரிக்கு வருகிறீர்களா...? வரவிரும்பினால், இப்பொழுதே உரியவர்களிடம் தொடர்புகொண்டு உரையாடுவேன் " என்று அழைப்புவிடுத்தார்.
" எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை " என்று மறுத்தேன். எனது பதில் அவருக்கு ஏமாற்றத்தை தந்ததை அவரின் முகத்தில் தோன்றிய சலனங்கள் இனம்காண்பித்தன.
2005 இல் இலங்கை சென்றபொழுது மறைந்த ராஜஸ்ரீகாந்தன் நினைவாக நான் எழுதியிருந்த நூலின் வெளியீட்டு அரங்கில் வன்னியகுலமும் உரையாற்றினார். இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் அவரை கொழும்பில்தான் சந்திப்பேன்.
அதன் பிறகு சில வருடங்கள் தொடர்பு இருக்கவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சிட்னியில் மறைந்த காவலூர் ராஜதுரை, எஸ்.பொன்னுத்துரை ஆகியோரின் நினைவுக்கூட்டத்தை
மெல்பனில் நடத்தியன்று எதிர்பாராதவிதமாக அந்த மண்டபத்தில் தோன்றிய வன்னியகுலம் எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ...? என்பார்களே
அப்படியிருந்தது அந்த எதிர்பாராத சந்திப்பு.
மெல்பனில் வதியும் தமது மகளின் குடும்பத்தினரை பார்க்கவந்திருந்தவேளையில் இலங்கைப்பத்திரிகைகளின் On Line செய்திகளில் குறிப்பிட்ட அந்த நினைவுக்கூட்டம் பற்றி அறிந்து இடத்தை தேடிக்கொண்டு வந்தார்.
மெல்பனில்
அதன்பின்னர் ஒழுங்கு செய்யப்பட்ட சில இலக்கிய கலந்துரையாடல்களிலும்
கலந்துகொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில்
நாம் நடத்திய சந்திப்பில், பாடசாலை கல்வி சார்ந்த தமிழ், இதழியல் தமிழ், படைப்பு மொழித்தமிழ் தொடர்பாக அவர் உரையாற்றினார்.
தற்பொழுது தமிழ் - சிங்கள மொழியில் இடம்பெறும் பலசொற்களின் ஒத்த ஒலியோசை - ஒரே அர்த்தங்கள் பற்றிய ஆய்வில் தாம் ஈடுபட்டுவருவதாகச் சொன்னர். எமது இலங்கை தமிழில் போர்த்துக்கீசர்கள் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் வழங்கிவிட்டுச்சென்றுள்ள இன்றும் வழக்கில் உள்ள பல சொற்கள் பற்றியும் அவர் என்னுடனான கலந்துரையாடல்களில்
பேசுவார்.
நண்பர் வன்னியகுலம் அவர்களும் எனது இலக்கியவாழ்வில் இணைந்துள்ள இனிய
நண்பர்களில் ஒருவர் எனக்கூறுவதில் எனக்குப்பெருமைதான்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment