கவிவிதை - 3 இக்கரையும் அக்கரையும் -விழி மைந்தன் --



ஒரு தெருவில் இரு வீடுகள்ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு நின்றன.
ஒன்று மாளிகைஇன்னொன்று குடிசை.
இரண்டு வீட்டுக் கார 'எஜமானர்'களும் நண்பர்கள் தான்.  அல்லதுஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்.
ஒரே வருடத்தில் பிறந்துஒரே தெருப் புழுதியில் உருண்டுஒரே கிராமப் பள்ளியில் படித்துஒரே கோபக்கார வாத்தியாரிடம் குட்டுகள் வாங்கிஒரே ஆற்றில் குளித்துஒரே கடலை ஆச்சியிடம் ஒரே ஒரு சுருள் கடலை வாங்கி அடித்துப் பிடித்து உண்டு வளர்ந்தவர்கள்.
ஒருவன் படித்தான் கொஞ்சம் நன்றாக;  பல்கலைக் கழகம் போய்  விட்டான். மற்றவனுக்குக் கடைசி நாள் பரீட்சை அன்று வயிற்றாலடி வந்த காரணத்தால் ஒரு சில புள்ளிகள் குறைவு.
பல்கலைக் கழகம் படிக்கப் போனவன் பணக்கார வீட்டு டாக்டர் பெண்ணைப்  'பிடித்துக்கொண்டான்.
வயிற்றாலடி வந்தவன் ஊரிலேயே  வறுமைப் பட்ட அத்தை பெண்ணை வரித்துக்  கொண்டான்.
பணக்காரர் மருமகன் மாமனார் யோசனைப் படி மென்பொருள் கம்பனி ஆரம்பித்தான். 'விஜிதா சிஸ்டம்ஸ் டிசைன்என்று தன்  மனையாட்டி பெயரை மங்கலமாய்  இட்டான்!
அத்தை பெண்ணை மணந்தவன் ஆறேழு வருடம் வேலை இன்றி அலைந்த பிறகு ரயில்வே  துறையில் காவலன் ஆனான்.
அவனைக்  கண்டால் புன்னகை செய்ய இவனுக்குத் தயக்கம்!  இவனைக் கண்டால் தலை அசைப்பதா என்று அவனுக்குக் குழப்பம்!
இரண்டு பேருக்கும் ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் குழந்தைகள் பிறந்தன.


குடிசையில் பிறந்த குழந்தை பசுப்பாலுக்கும்  பழங்கள் இறைச்சிக்கும் அல்லாடியது. அப்பன் புரண்ட அதே தெருப் புழுதியில் புரண்டு வளர்ந்தது. தெரு வேலியில்  நின்ற பூவரசின் இலையையும் தென்னை மரத்தின் குரும்பட்டி ஈர்க்கையும் குப்பையில் வளர்ந்த குண்டு மணி விதையையும் விளையாட்டுப் பொருள்கள் ஆக்கியது. மாரி  காலம் வந்த போது  தம்பலப் பூச்சி திரிவதையும் கார்த்திகைப் பூ மலர்வதையும் இரவு நேரத்தில் மின்மினிப் புழுக்கள் விளக்கொளி மினுக்குவதையும் பார்த்துக  கை கொட்டிச் சிரித்தது. அம்மாவின் தலைப் பின்னலைப் பிடித்திழுத்தும் அப்பாவின் கிழிந்த சாரத்தால் தலையை மூடியும் விளையாடி மகிழ்ந்தது.  தாய் நிலவைக் காட்டி ஊட்டிய பழைய சோறை உண்டு,  தன பாட்டன் முப்பாட்டன் சொன்ன கதைகளைத் தந்தை தனக்குச் சொல்லக் கேட்டுத் தூங்கிப் போனது.
மாளிகையில் பிறந்த மகவு புட்டிப் பாலோடு 'சீஸு'ம் பாதாம் பருப்பும் உண்டு வளர்ந்தது. சொக்கலேட்  வகைகள் அளவுக்கு மிகுதியாய் இருந்ததால் வெறுத்து ஒதுக்கக் கற்றுக் கொண்டது. சொகுசுக் காரில் 'சீட் பெல்ட்'  உடன் 'குழந்தை இருக்கையில்பயணம் செய்தது. பொம்மை வகைகளும் 'அனிமல்ஸ்வகைகளும் கார்களும் 'பிளேன்களும் இன்ன பிற வாகனங்களும்'வைன் கொடுத்து இயங்குபவையும் பாட்டரியில் வேலை செய்வனவும் ஆகக் குவிந்திருந்த விளையாட்டுப் பொருள்களோடு தனி அறையில் விளையாடியது.
காத்திருந்து காத்திருந்து பழகியதால்  'மம்மியின் கார்ச் சத்தத்தையும் 'டாடியின் கார்ச் சத்தைத்தையும் வேறு படுத்தி இனம் காணக் கற்றுக் கொண்டது. 'நைட் டியூடியில்மம்மி இருந்ததால் வேலைக் காரி ஊட்டிய உணவைச் சாப்பிட மாட்டேன் என்று அடம் செய்த பிறகு பஞ்சணை மெத்தையில் தூங்கிப் போனது. 'டாடி'யின் கார் சாவியை எடுத்து ஒழித்து வைத்ததால்'நோட்டி லிட்டில் ஏஞ்செல்என்று செல்லமாகக் கண்டிக்கப் பட்டது.
ஒரு நாள் காலை...
பணக்காரக் குழந்தையின் அப்பா அமெரிக்கா சென்று அப்போது  தான் திரும்பி இருந்தார். தன மகளுக்கு இரண்டடி உயர மின்னியக்க நாய்க்  குட்டிப் பொம்மையும் கொஞ்சம் பழைய நிஜக் கார் ஒன்றின் விலைக்கே வாங்கிய விளையாடுக் காரும் பளபளத்து ஜொலிக்கும்  பலவித உடைகளும் உணவாகத் தின்றாலும் ஒரு மாதம் நீடிக்கக் கூடிய அளவு சொக்கலேட் வகைகளும்  அள்ளிக் கொண்டு வந்திருந்தார். குளித்துக் காலை உணவு முடித்த பிறகு சொகுசுக் காரில் அலுவலகம் பறந்து விட்டார்.
எதிர்க் குடிசையில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்வேலை நிறுத்தத்தால் வீட்டில் நின்ற ரயில்வேக் காவலனும் அவன் அத்தை மகளும். காவலன் குழந்தை அவனது சிக்குப் பிடித்த தலை மயிரைப் பற்றி விளையாடிக் கொண்டிருந்தது. காவலன் மனைவி மனத்தில் பொறாமை கொழுந்து விட்டெரிந்தது.
குழந்தைக்குச் சோறைப் போட்டாள். தூங்கச் செய்வோம் என்று நினைத்து மடியில் போட்டுத்  தாலாட்டினாள். தாலாட்டிக் கொண்டே கணவனைப் பார்த்து நாவை அசைத்தாள்.
"பார்த்தீர்களாஉங்கள் பழைய நண்பர் வாழ்வைமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்! ஓடி ஓடி உழைக்கிறார்கள். இருக்கும் வேலைக்கும் போக முடியாமல் இருக்கிறீர்கள் வீட்டில். எல்லாம் எனது தலையின்  எழுத்து. "
கொட்டி முடித்து அவள் நிமிர்ந்த போது குழந்தை மடியில் தூங்கி இருந்தது.
குனிந்த தலையைக் குனிந்து கொண்டே பதிலேதுமின்றி இருந்தான் அவன்.
காவல்காரனைக் கைப்பிடித்தவள் எதிர் மாளிகையை ஏக்கத்தோடு பார்த்தாள்.
அதே நேரத்தில்அம்மாளிகைக் குழந்தையும் கூரைக் குடிசையைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தது.
இரண்டு வீடுகளிலும் நேரம்ஒரே மாதிரி ஓரிரு மணிகள் ஓடிய பிறகு.....

'விஜிதா சிஸ்டம்ஸ்வீட்டு வேலைக்காரப் பெண்தன் எஜமானருக்குத் தொலை பேசினாள்:
"குழந்தைவிலை உயர்ந்த பொம்மைகள் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது.  கிடைக்கும் வரையில் சாப்பிட மறுத்துப் பிடிவாதம் செய்கிறது!!"
அப்பாமகளிடம் அலைபேசினார்.
"டார்லிங்இங்கே டாடி பேசுகிறேன். உனக்கு எப்படிப் பட்ட பொம்மைகள் வேண்டும்உன்னிடம்  இல்லாத பொம்மைகளாசொல்லுஇதோ வாங்கச் செய்து  அனுப்பி வைக்கிறேன்!"
"எனக்கு அப்பாஅம்மா பொம்மைகள் வேண்டும்!" என்றது குழந்தை.
டாடிக்குப்  புரியவில்லை.
"அப்பாஅம்மா பொம்மையாஅது என்னஆண் பெண்  உருவத்தில் அமைந்த பொம்மைகளா?அப்படித் தான் உன்னிடம் நிறைய இருக்கே"
"இல்லைஅந்தப் பொம்மைகள் அசையாது.  எனக்கு அசையும் பொம்மைகள் வேண்டும்!"
"பாட்டரியில் ஓடுகிற பொம்மைகளா?"
"அப்பா பொம்மை - ஆறடி உயரம்இடையில் நீலம்-கறுப்புப் பெட்டி போட்ட சாரம்தோளில்  போட்ட துண்டுகரு கரு மீசை. அம்மா பொம்மை - ஐந்தடி உயரம்சிவப்புச் சேலைகுங்குமப் பொட்டு.  அப்பா பொம்மை என்னைத் தோளில்  தூக்கி வைத்துக் கொண்டு திரிய வேண்டும். எனக்குக் கதைகள் சொல்லித் தூங்க வைக்க வேண்டும்.  அம்மா பொம்மை எனக்கு நிலா காட்டிச் சோறூட்ட வேண்டும்.  என்னை மடியில் போட்டுத் தாலாட்ட வேண்டும். நான் தடக்கி  விழுந்தால்  அள்ளி அணைத்துத்  தேறுதல் சொல்ல வேண்டும். அப்படிப் பட்ட அம்மாஅப்பா பொம்மைகள் எனக்கு வேண்டும்."
டாடி குழம்பினார்.
"இவ்வளவு செய்யும் பொம்மைகளாஇப்படிப் பொம்மைகளை உன்னையொத்த குழந்தைகள் யாராவது வைத்திருந்து நீ பார்த்ததுண்டா?" டாடி கேட்டார்ஒருவேளை மெத்தப் பணக்கார நண்பர்கள் யாராவது  தமது குழந்தைகளுக்கு அமெரிக்காவில் இருந்து உயர் தொழில்நுட்ப ஊர்வன ஏதும் தருவித்துக் கொடுத்திருப்பார்களோ என்ற எண்ணத்தினால் வந்த தயக்கத்துடன். "செலவாகுமே கொஞ்சம் " என்று சிந்தித்தார். "பரவாயில்லைஎன்னிடம் பணந்தான் இருக்கிறதே" என்று பதிலும் சொல்லிக் கொண்டார் மனதில்.
"ஆம்! நான் கண்டிருக்கிறேன். எதிர் வீட்டில் இருக்கும் இனியாள் வைத்திருக்கிறாள்.  அதே மாதிரி அப்பாஅம்மா பொம்மைகள் வேண்டும் எனக்கு! உடனே வாங்கிக் கொடுங்கள் டாடி!" என்று குழந்தை அழுதது.
திகைத்துப் போன டாடிதொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விட்டார்.
குழந்தை வீட்டின் கீழ்த் தளத்திற்கு ஓடி வந்தது. மம்மி அல்லது டடியின் கார்  வருமென்று பூட்டிய 'கேட்இல் பூ விழிகளைப் பூட்டிக் காத்திருக்கலானது.
அதே நேரம்வீதியின்  நடுவில் நடந்து வந்த அழகான சின்னஞ்சிறு நாய்க்குட்டி ஒன்று இரண்டு வீட்டுக்கும் நடுவில் நின்றபடி யோசித்தது:

இக்கரைக்குப் போவோமாஅக்கரைக்குப் போவோமா?


*****************


============================================
M.Piraveenan B.Eng(Comp. Sys)Hons(Adelaide), Ph.D(Sydney)
Lecturer
Centre for Complex Systems Research &
Project Management Graduate Programme
Faculty of Engineering and IT
University of Sydney
Phone: (+612) 9351 2892
Fax: (+612) 9351 3343
Mobile:(+61)420 627 162

No comments: