அவுஸ்திரேலியாவில் வதியும் 95 வயது தமிழ்த்தாத்தா கலைவளன் சிசு.நாகேந்திரன் அவர்களைப் பார்க்கும்தோறும் எனக்கு உ.வே. சாமிநாத அய்யர் தாத்தாவும், வீரமாமுனிவர் என்ற பாதிரி தாத்தாவும் நினைவுக்கு வருகிறார்கள்.
சாமிநாத அய்யரும் வீரமாமுனிவரும் வாழ்ந்த காலத்தில் கம்பியூட்டர் இல்லை. அவர்களுக்குப்பின்னர் வந்த பேரர்கள் காலத்தில் அந்த வரப்பிரசாதம் கிட்டியிருக்கிறது.
பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி என்ற 577 பக்கங்கள் கொண்ட இந்த அரியநூலை தமது நீண்டநாள் தேடுதலிலும் கடும் உழைப்பிலும் வெளியிட்டுள்ள சிசு. நாகேந்திரன் தமது 95 வயதிற்குப்பின்னரும், இந்த அகராதியின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்பது அதிசயம்தான். ஆனால், அதுதான் உண்மை.
அவருக்கு ஒரு கண்பார்வை குறைந்துவிட்டது. செவிப்புலனும் குறைந்துவருகிறது. உடல் ஆரோக்கியம் குன்றியிருந்தாலும் அவருடைய ஆத்மபலம்தான் அவரை தொடர்ந்தும் தமிழ் சார்ந்து ஆய்வுடன் இயங்கச்செய்கிறது.
பலவழிகளில் சிசு. நாகேந்திரன் அய்யா, எமது சமூகத்துக்காகவே அர்ப்பணிப்புணர்வுடன் வாழ்கின்றவர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.
அவர் சில வருடங்களுக்கு முன்னர், தமது பேத்திக்கு அன்றைய யாழ்ப்பாணம் எப்படி இருந்தது...? என்பதை கதைகதையாக சொல்லிக்கொடுத்த ஒரு தாத்தா.
நாமெல்லோரும் எங்கள் தாத்தா, பாட்டிமாரிடம்தான் கதை கேட்டு வளர்ந்தோம். ஆனால், இன்று தாத்தா பாட்டிமாருக்கு தொலைக்காட்சி மெகா சீரியல் கதைகள்தான் தெரிகிறது. எமது குழந்தைகளும் Bed Time Story Books களையும் வீடியோ கேம்களையும் பார்க்கப்போய்விட்டார்கள்.
தனது பேத்திக்கு அவர் அன்று சொல்லித்தந்தவை பின்னர் அந்தக்கால யாழ்ப்பாணம் என்ற விரிந்த நூலாக எமது தமிழ் சமூகத்திற்கு கிடைத்தது.
அத்துடன் சிசு அய்யா நிற்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காகவும் அவர் உலகம் சுற்றி தேடுதலில் ஈடுபட்டு பிறந்த மண்ணும் புகலிடமும் நூலை எழுதித்தந்தார்.
நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பது எப்படி...? என்று பல தேகப்பயிற்சிகளுடன் ஒரு வீடியோ இருவட்டும் வெளியிட்டார்.
இவ்வளவும் தமது 80 - 95 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் செய்தவர். அத்துடன் நின்றாரா...? இல்லை, மீண்டும் எமக்காக அவர் உழைத்தார். அதன் பலனை இன்று நாம் அகராதி வடிவில் பார்க்கின்றோம்.
இவ்வாறு எழுத்துப்பணிகளின் ஊடாக மாத்திரம் அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. சில வெகுஜன அமைப்புகளுடனும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
மெல்பன் கே. சி. தமிழ் மன்றம் அவருடைய நீண்டகால உழைப்பில் வெளியான அகராதியை அரங்கேற்றி அவருக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. அதற்காக கே.சி. தமிழ் மன்றத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த அகராதி தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் பொருள் கூறுகிறது.
உங்கள் அனைவருக்கும் எங்கள் மகாகவி பாரதியார் தமது இறுதிக்காலத்தில் சென்னையில் திருவல்லிக்கேணியில் வசித்தார் என்பது நன்கு தெரிந்திருக்கும். அங்கு எழுந்திருக்கும் பார்த்தசாரதி கோயிலுக்கு அடிக்கடி அவர் செல்வார். வீட்டில் சமைக்க அரிசி இல்லை என்று அவர் மனைவி செல்லம்மா பக்கத்து வீட்டில் கடன்வாங்கிய அரிசியை காகத்துக்கும் குருவிக்கும் எறிந்து அவற்றின் பசி போக்கியதுடன், " காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று உல்லாசமாக பாடிய சித்தன் அல்லவா அவர். ஒரு நாள் பார்த்தசாரதி கோயில் யானைக்கு வாழைப்பழம் கொடுத்தார். அது என்ன செய்தது....? அவரை தூக்கி எறிந்து மிதிக்கப்பார்த்தது. அந்தத்தாக்கத்திலிருந்து மீளாமலேயே அவர் உயிர்துறந்தார்.
அந்த பார்த்தசாரதி கோயிலுக்கு நானும் போயிருக்கின்றேன். அங்கு நடந்த மற்றும் ஒரு - ஆனால், இது சுவாரஸ்யமான சம்பவம் சிசு.நகேந்திரனின் அகராதியைப்படித்தபொழுது நினைவுக்கு வருகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய குடும்பம் அங்கு தரிசனத்துக்கு சென்றது. அதில் பத்துப்பதினைந்து பேர் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் இருந்தார்கள்.
அதில் அத்தை உறவான ஒரு பெண் சற்று நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும் சோர்வாக இருப்பவர். நோஞ்சான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய குழந்தை வாட்டசாட்டமான அத்துடன், கொழு கொழு என்று கொழுத்த குழந்தை. தூக்கினால் சற்று பாரமான குழந்தை.
இருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கோயிலை சுற்றிவரபார்த்து தரிசிப்பது அந்தப் பெரியகுடும்பத்திற்கு சிரமமாக இருந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்ட அத்தை " தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு போய்வாருங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன் " என்றார். உடனே மற்றவர்களும் அதற்கு சம்மதித்து குழந்தையை ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திவிட்டு அத்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அத்தைக்கு உறக்கம் கண்களை சுழற்றியிருக்கிறது. அந்தக்கோயில் தூணில் சாய்ந்துவிட்டார். தரையில் குழந்தையும் ஆழ்ந்த உறக்கம்.
என்ன நடந்திருக்கும்...? அந்தக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் யாரோ ஏழைப்பெண் குழந்தையை தரையில் கிடத்திவிட்டு பிச்சைக்கு காத்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு தத்தம் கைகளில் இருந்த சில்லறைக்காசை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.
கோயிலை சுற்றிப்பார்க்கச்சென்ற உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நடந்திருப்பதை ஊகித்துக்கொண்டு தரையில் கிடந்த சில்லறைகளை எடுத்து கோயில் உண்டியலில் போட்டுவிட்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு, அந்த அத்தையையும் அழைத்துச்சென்றார்களாம்.
இன்றும் அந்தக்குழந்தை வாழ்கிறது பெரிய ஒரு மனிதராக ஆளுமையுள்ள செயற்பாட்டாளராக. அக்குழந்தையின் பெயர் இராமகிருஷ்ணன். இலக்கிய பதிப்புலகில் க்ரியா இராமகிருஷ்ணன் என்று நன்கு அறியப்பட்டவர். அவருடைய க்ரியா பதிப்பகம் வெளியிட்ட தற்கால தமிழ் அகராதி நூலை தொகுத்தவர்.
தனது குழந்தைப்பருவத்துக் கதையைத்தான் அவர் அந்த அகராதியின் முன்னுரையில் குறிப்பிட்டு பலருடைய ஆதரவுடன் ஒரு கோயிலுக்கு அன்று சிறு உதவி கிடைத்தது போன்று இந்த அகராதியை தயாரிக்க பலரும் உதவினார்கள் எனச்சொல்கிறார்.
1992 ஆம் ஆண்டிலிருந்து பல பதிப்புகளைக்கண்டுவிட்டது புகழ்பெற்ற க்ரியா தற்கால தமிழ் அகராதி.
முதல் பதிப்பாக வெளியாகியிருக்கும் சிசு நகேந்திரன் அய்யாவின் பழகும் தமிழ்ச்சொற்களின் மொழி மாற்று அகராதி அவருடைய கடுமையான உழைப்பினாலும் நீண்ட காலத் தேடுதலுடனும் பலருடைய ஆலோசனைகளுடனும் எமது கைகளுக்கு வந்துள்ளது.
ஆனால், இந்த முயற்சி சற்று வித்தியாசமானது
எமது மக்களின் பேச்சுவழக்கில் முன்னர் இடம்பெற்ற - தற்பொழுதும் இடம்பெற்றுவரும் தமிழ் சொற்களின் பொருளை ஆங்கிலத்தில் உணர்த்தும் நூலாக சிசு அய்யாவின் நூல் வெளிவந்துள்ளது.
இன்று எமது தமிழ் மக்கள் மத்தியில் பல தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இல்லாமல் போய்க்;கொண்டிருப்பதற்கு அவர்களின் அவசர வாழ்க்கை சூழ்நிலையும் ஒரு காரணம். புகலிடத்தில் அந்நிய மொழி, அந்நிய கலாசாரம் சார்ந்து வாழத்தலைப்படுவதனால் நாமே பல சொற்களை மறந்துவிடுகிறோம். பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை எமது தமிழுடன் கலந்து பேசுகின்றோம். அவ்வாறு பேசுவதும் எளிதாக இருக்கலாம்.
உங்களுக்குத்தெரியும் யாராவது அதிகம் பேசினால் அல்லது விதண்டா வாதம் செய்தால் அவரை அதிகப்பிரசங்கி என்போம். அவன் பெரிய அகராதி பிடிச்சவன் என்பார்கள். அதன் அர்த்தம் அவனுக்கு நாலும் தெரியும் என்பதுதான்.
அகராதியின் பணியே அதுதானே...!!!
ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும். அதேசமயம் ஒரு சொல்லின் அர்த்தம் பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுபடும். சிங்களம், மலையாளம் முதலான பல மொழிகளில் தமிழ் சொற்களை காண்பீர்கள். அத்துடன் இலங்கையில் போர்த்துக்கீஸர், ஒல்லாந்தரிடமிருந்து எமக்கு பல சொற்கள் வந்துள்ளன.
இக்காலத்தில் எமது தமிழ் மொழியில் பல பிறமொழிச்சொற்கள் வந்து அழையாத விருந்தாளியாக நுழைந்துகொண்டுள்ளன.
அதனால் அவற்றின் அர்த்தம் தெரியாமல் நாம் விழிக்கின்றோம். தற்காலத்தமிழ்த் திரைப்படங்களில் செந்தில், கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், சூரி, தம்பி ராமையா முதலான நடிகர்கள் கொண்டுவந்து சேர்த்துள்ள பல சொற்களுக்கு அர்த்தம் அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.
சாவுக்கிராக்கி, டுபாக்கூறு, கலாய்க்கிறான் இதுபோன்ற சொற்களுக்கு உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா....? ஜெயமோகனும் தமது நூல் ஒன்றில் இந்த டுபாக்கூறு என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.
முற்காலத்தில் அகராதி நிகண்டு என்ற இலக்கண நூல் வடிவில்தான் அமைந்திருந்ததாம். நிகண்டு செய்யுள் வடிவம் கொண்டிருந்தது. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு என்று சில நிகண்டுகள் இருந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பிற்காலத்தில் என்ன நடந்தது....?
ஐரோப்பிய பாதிரிமார் வந்தார்கள். அவர்கள் சிறந்த பணிகளை செய்தார்கள். தமிழை முறையாகக்கற்றார்கள். இவர்களில் வீரமாமுனிவர் முக்கியமானவர்.
இத்தாலியரான இவருடைய இயற்பெயர்: கொன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.
இவர்தான் முதல் முதலில் தமிழில் அகராதியை எழுதியவர். அதற்கு சதுர் அகராதி என்று பெயர்.
அகராதி என்றால் அகர வரிசைப்படியான வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லும் நூல் என்பது பொருள். ஆங்கிலத்தில் Dictionary of a Language.
ஒரு சொல்லுக்கு பொருள் தெரியவில்லை என்றால் அகராதியைத்தான் தேடுவோம்.
நாமெல்லாம் முன்னர் படித்த The Great Lifco Dictionary பல பதிப்புகளை இதுவரையில் கண்டுவிட்டது. காரணம் தேவைகள்தான். தேவை, பயன்பாடு இருக்கும்வரையில் அகராதியும் தேவை.
இந்தப்பின்னணிகளுடன் சிசுஅய்யா மொழிமாற்று அகராதி அதாவது Translation Dictionary தயாரித்துள்ளார்.
இன்று கணினி யுகத்தில் வாழ்கின்றோம். முன்னர் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் என்சைக்கிளோ பீடியா - பிரிட்டாணிக்கா எல்லாம் இருந்தன. நாம் பார்த்தோம். ஆனால், நமது குழந்தைகள் கூகுளில் உடனடியாகவே தேடிவிடுகிறார்கள். இது கால மாற்றம்.
ஆயினும் பல பெரியவர்கள் இன்றும் அகராதியில் தேடிப்பார்த்து அர்த்தம் புரிந்துகொள்கிறார்கள். இதுபற்றியும் சிசு அய்யா இந்த நூலில் தமது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் அகதிகள் வந்து குவிந்தபின்னர் மொழிபெயர்ப்பாளர்களுக்கு முக்கியத்துவம் பெருகியுள்ளது.
தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவிலும் நவுறு தீவிலும் பாப்புவா நியூகினியிலும் இருக்கிறார்கள். பல மொழிபெயர்ப்பாளர்கள் சென்று வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த அகராதி உதவலாம். அல்லது அவர்கள் இதில் திருத்தவேண்டிய - மாற்றவேண்டிய பொருள்பற்றிச் சொல்லலாம்.
அகரவரிசைப்படி இந்த அகராதியை சிசு. நாகேந்திரன் தொகுத்துள்ளார்.
" எப்படி அய்யா இந்தச்சாதனையை நிகழ்த்தினீர்கள்...?" என்று அவரிடம் கேட்பவர்களுக்கு அவரே தமது முன்னுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
" மேசையில், சட்டைப்பையில், படுக்கை தலையணைக்குப்பக்கத்தில் எப்பொழுதும் துண்டுக்காகிதமும் பேனாவுமிருக்கும். என்னேரமாயினும் மனதிலோ அல்லது ஏதாவது வாசிக்கும்பொழுதோ இதுவரை சேர்க்காத சொல் தட்டுப்பட்டால் அதை உடனே குறித்துக்கொள்வேன். பின்னர் கணினியில் அவை அச்சேறும். பின்னர் 2,3, நாட்களுக்கொருதரம் அந்தச்சொற்களுக்கு ஆங்கிலமாற்று எனது ஞாபகத்திலிருந்தோ, அகராதிகளைப்புரட்டியோ தேடிக்கண்டுபிடித்து கணினியில் சேர்த்துக்கொள்வேன். இப்படியே 3, 4 ஆண்டுகளாக ஒன்று இரண்டாகச்சேர்த்த சொற்கள்தான் இப்போது தொகுக்கப்பட்டு அச்சேறி அகராதியாக உருவெடுத்திருக்கின்றன."
நிகண்டுகளை எழுதிய முன்னோர்கள், தமிழ் ஏட்டுச்சுவடிகளை தேடி அலைந்த சாமிநாத அய்யர், முதல் தமிழ் அகராதி எழுதிய வீரமாமுனிவர் பிற்காலத்தில் க்ரியா தற்கால தமிழ் அகராதி தொகுத்த க்ரியா இராமகிருஷ்ணன் வரிசையில், சிசு.நகேந்திரன் அய்யா இன்றைய தலைமுறைக்கு ஒரு தமிழ்த்தாத்தா. வருங்காலத்தில் பேரர்களும் இந்த ஆய்வுப்பணியில் இறங்குவார்களா...?
letchumananm@gmail.com
No comments:
Post a Comment