.
இலங்கை அரசியல் கைதிகள் விவகாரம் அவுஸ்திரேலியா செனட் சபையிலும் ஒலித்தது. பாராளுமன்றம் சென்ற அரசியல்வாதிகளுக்கு சர்வதேச
அரசியல் பாடம் நடத்தவேண்டும்
தர்மிஷ்டர் ஜே.ஆர். 1977 இல் பதவிக்கு வந்தவுடன் முதலில் பிரதமரானார். அதன் பின்னர்தான் அவர் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக
பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக்கினார்.
ஆனால்,
எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லாத சூழ்நிலையில் ஜே.ஆர். 1977 பொதுத்தேர்தல்காலத்தில்
தாம் பதவிக்கு வந்தவுடன் சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் அனைவருக்கும் நிபந்தனையற்ற விடுதலை தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதி குறித்து அன்று ஸ்ரீமாவோ மற்றும் இடதுசாரித்தலைவர்கள் என்.எம்,கொல்வின்,
பீட்டர், விக்கிரமசிங்கா முதலானோர் கருத்து எதனையும் கூறவில்லை.
ஜே.ஆரின் வாக்குறுதிக்கு தேர்தல் மேடைகளில்
எதிர்வினையாற்றினால் சிறைகளில் இருந்த அரசியல்கைதிகளான மக்கள் விடுதலை முன்னணியிலிருந்த
தென்னிலங்கையைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் மற்றும் அப்பாவி இளைஞர்களின் பெற்றோர்களின் வாக்குகளை பெற்றுவிடமுடியாதுபோகும் என்ற தயக்கம் அவர்களிடமிருந்தது.
அதேவேளையில் அரசியல்கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்ற அறப்போராட்டம் நாடுதழுவிய ரீதியில் சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளினால் அக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீமாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அந்தத்தேர்தலில் படுதோல்வியடைந்தது. இடதுசாரிகளும் ஒரு ஆசனமும் இன்றி படுதோல்வியடைந்தனர். சந்தர்ப்பவசமாக அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார்.
இன்று சரித்திரம் திரும்பிவந்திருக்கிறது.
இன்று ஆட்சியில் பெரும்பாலான யூ.என்.பி. எம்.பி.க்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.க்களும் மனோ கணேசனின் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து அதற்கு நல்லாட்சி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
அன்று எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம்.
இன்று எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்.
அன்று சிங்கள அரசியல் கைதிகள். இன்று தமிழ் அரசியல் கைதிகள்.
முன்னர் தர்மிஷ்டரின் தார்மீக ஆட்சியில் சிங்கள அரசியல் கைதிகள் விடுதலையானதுபோன்று இன்றைய நல்லாட்சியிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாவார்கள் என்ற எதிர்பார்ப்பு சிவில் அமைப்புகளிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் இருந்தது.
முன்னர் 1975
- 1977 காலப்பகுதியில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற இயக்கத்தில் தன்னையும் முன்னிறுத்திக்கொண்டு மேடைகளில் முழங்கிய வாசுதேவ நாணயக்கார ஏறக்குறைய 40 ஆண்டுகளின் பின்னர் தற்பொழுது அரசியல்கைதிகள் இல்லை. போர்க்கைதிகள்தான் இருக்கிறார்கள் என்று நினைவுமறதியில் பேசுகின்றார்.
முன்னர் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தைச்சேர்ந்தவர்கள். ஆனால், தற்பொழுது சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் சிறுபான்மைத்தமிழ் இனத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்கள்.
இதுவிடயத்தில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலும் ஒத்த கருத்து இல்லை. இதர அரசியல் கட்சிகளிடத்திலும் ஒத்த கருத்துக்கள் இல்லை. ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தன.
இலங்கையில் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டுமாயின் இன, மத, தேசிய நிகழ்வுகளும் அவசியமாகியிருக்கிறது.
சுதந்திரதினம்,
வெசாக், பொசன், கிறிஸ்மஸ், ஈஸ்டர், தைப்பொங்கல், தீபாவளி, தமிழ் சிங்கள புத்தாண்டு, நோன்பு பெருநாள் உட்பட ஏதாவது ஒரு விசேட தினம் வந்தால்தான் கைதிகளுக்கு
விடுதலை கிடைக்கும்.
சிறையில் வாடுகின்றவர்களின் தண்டனைக்காலம், அவர்களின் நன்னடத்தை, குற்றச்செயலின் தன்மை முதலானவற்றினை கவனத்திலும்
கருத்திலும்கொண்டு சிறை நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முதலில் நீதி அமைச்சிற்கு வழங்கப்படும் பெயர்ப்பட்டியல் பிரகாரம் பலருக்கு விடுதலை கிடைக்கும்.
அதேவேளை ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கிலிருப்பவர்களின் தயவிலும் பலர் விடுதலையான கதைகளும் இருக்கின்றன.
கோணவிலசுனில் என்று ஒரு பிரபல கேடி ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில்
சிறையில் இருந்தான். அவன் ஐக்கியதேசியக்கட்சியின் தீவிர ஆதரவாளன். ஒரு பாரிய குற்றம் புரிந்து
சிறைவைக்கப்பட்டபொழுது அவன் சிறையிலிருந்துகொண்டே பிரதமர் பிரேமதாசவுக்கும் ஜனாதிபதி ஜே.ஆருக்கும் அழுத்தம்கொடுத்தான்.
பின்னர் வெகுவிரைவில் ஒரு சுதந்திரதின காலத்தில் அவன் விடுதலையடைந்தான்.
முன்பு ஒருதடவை சிறையில் வாடும் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான செய்திகளைச்சொல்லச்சென்ற முன்னாள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவும் சில தமிழ்க்கைதிகளினால்
தாக்கப்பட்ட செய்தி அறிவோம்.
டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ச்சியாக அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்றுதான் குரல் எழுப்பிவருகிறார்.
ஆனால், இம்முறை பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் அவர் நேரடியாக சிறைக்கைதிகளைப்பார்க்காமல் சிறை அதிகாரிகளின் அறைகளிலிருந்து சந்திக்க ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. சூடுகண்ட பூணை அடுப்படியை நாடாது.
அதுபோன்று மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனும் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்க்கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி அதனை நிறைவேற்ற முடியாமல், அதன்பின்னர் சிறைச்சாலைப்பக்கமே அவர் செல்லத்தயங்கிய செய்தியும் அறிவோம்.
தீபாவளிக்கும் விடுதலையின்றி கரிநாள் கொண்டாடிய
தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பார்ப்பதற்கு டக்களஸ் தேவானந்தா, சித்தார்த்தன்,
பிரபாகணேசன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி முதலான அரசியல்வாதிகள் சென்று ஆறுதல் கூறித்திரும்பியுள்ளனர்.
கடந்த மாதம் இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை கோரி சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்து, அதில் சிலரின் உடல் நிலை மோசமானதையடுத்து மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
அவர்களுக்கு ஆறுதல்கூறி விரைவில் விடுதலை பெற்றுத்தருவோம் என்றும் அவர்களிடம் வாக்குறுதி அளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பத்திரிகைகளில் அறிக்கைகளும் விடுத்திருந்தனர்.
கடந்த 7
ஆம் திகதி அரசியல் கைதிகளில் சிலர் தீபாவளியை முன்னிட்டு விடுதலையாவர்கள் என்றே அவர்களும் அவர்களின் உறவினர்களும் தமிழ் அரசியல் கட்சியினரும் சிவில் மற்றும் மனித உரிமை அமைப்பினரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், மீண்டும் தமிழ் அரசியல்வாதிகள் ஆறுதல்கூறும் படலம்தான் நடந்திருக்கிறது.
கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தில் இறங்குவதற்கு முன்னோடியாக அவர்களுக்கு நீதிமன்றில் பிணை அனுமதியும் கிடைக்கவில்லை.
இவ்வேளையில் சட்டம் ஒழுங்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பதவிக்கும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற உயர்மட்ட மந்திராலோசனைகளும்
தொடர்ந்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி அரசியல்கைதிகளின் விடுதலை நிகழ்வும் நடக்கவில்லை. அதுசம்பந்தமான சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரும் பதவி துறந்தார். நீதி அமைச்சரின் ஆசனமும் ஆட்டம்காண்கிறது.
சிறைச்சாலை அமைச்சர் தமது நுகேகொட வீட்டில். இந்தப்பின்னணியில் தீபஒளியேற்றுவோம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் தென்னிலங்கை மற்றும் மலையக தமிழ் அரசியல் தலைவர்களும் தங்கள் படங்களுடன் பத்திரிகைகளில் தீபாவளி வாழ்த்துச்செய்திகளை வெளியிட்டனர். வருடந்தோறும் இந்த வாழ்த்துச்
செய்திகளுக்கே பத்திரிகைகளில் பல பக்கங்கள் தேவைப்படும்.
தீபாவளியன்று அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படாதமையினால் கிளிநொச்சி, வவுனியா உட்பட சில தமிழ்ப்பிரதேசங்களில் துக்கம் அனுட்டிக்கப்பட்டு அடையாள உண்ணாவிரதமும் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உட்பட அனைத்து தமிழ்ப்பிரதேசங்களிலும் கடையடைப்பும் பூரண ஹர்த்தாலும் நடந்திருக்கிறது.
இந்நிலையில் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கும் தமிழ் அரசியல் தரப்புக்கு உடன்பாடில்லை. அரசியல்கைதிகளுக்கு
பொதுமன்னிப்பே தேவை என்ற அவர்களின் குரலையும் சட்டமா அதிபர் திணைக்களம் நசுக்கிவிட்டது.
அப்படியானால் அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது....?
ஓரளவு அதிகாரம் குறைக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதியிடமா அல்லது பிரதமரிடமா, அல்லது சிறைச்சாலை ஆணையாளரிடமா...? சிவில்
சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் சிறையில் வாடும் கைதிகளும் அவர்களின் உறவினர்களும் விழியுயர்த்தி பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தச்செய்திகளின்
பின்னணியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஞானம் பிறந்துள்ளது. சில கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி கிடைத்துள்ளமை சற்று ஆறுதல் தருகிறது.
ஆனால் --- இந்த ஆறுதல் நிரந்தரமானதா...?
குறிப்பிட்ட கைதிகளை நிபந்தனையற்றவிதத்தில் பொதுமன்னிப்பு வழங்கியே
விடுவிக்கவேண்டும் என்ற குரல்தான் பரவலாக ஒலித்தது. இதில் மூவின மக்களும் ஒன்றிணைந்திருந்தனர்.
ஆனால், விமல்வீரவன்ச முதலான சிங்கள தீவிர தேசியவாதம் பேசும்
அரசியல்வாதிகளும் சில இனவாதப்போக்குள்ள பௌத்த பிக்குகளும் அதனை எதிர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் புலிகள். அவர்களை எதிர்த்து போராடிய வீரர்கள் சிங்கள இராணுவத்தினர். சில இராணுவத்தினரும்
சிறையில் இருக்கின்றனர். அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். என்பதுதான் இந்த சிங்கள தீவிரவாதிகள் சொல்லும் காரணம்.
1971 இல் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்த மக்கள் விடுதலை முன்னணி தோன்றிய காலத்தில் இந்த விமல் வீரவன்ஸவுக்கு என்ன வயது என்பது தெரியவில்லை.
பின்னாளில் இவரும் அந்த இயக்கம் அரசியல்கட்சியானபொழுது இணைந்து தேர்தல் மூலம் பாராளுமன்றம் வந்து அமைச்சரானவர்தான்.
அதுபோன்று மற்றும் ஒரு மக்கள்விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத்
சந்திரிகாவின் அரசில் காலாசார அமைச்சராக பதவிவகித்தவர்தான்.
இன்று மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறது.
இன்றைய அதன் தலைவர் அநுரகுமார பாராளுமன்றத்தின் கொரடாவாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்காவில் ஒருகாலத்தில் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சிசெய்த நெல்சன் மண்டேலாவை
தென்னாபிரிக்க வெள்ளை அரசும் அதனை ஆதரித்த மேற்குலகமும் அவரை பயங்கரவாதி என்றே சித்திரித்தன.
அவர் விடுதலையாகிவந்து தென் ஆபிரிக்க தலைவராக உலகசமாதனத்திற்கு அடையாளமாக திகழவில்லையா....?
அதற்காக அவருக்கு நோபல் விருதும் வழங்கப்பட்டது.
கியூபாவின் பிடல் காஷ்ட்ரோ முன்னர் ஆயுதம் ஏந்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்டவர்தான்.
அவரையும் அமெரிக்க வல்லரசு முன்னர் பயங்கரவாதியாகத்தானே பார்த்தது.
இன்று சரித்திரம் திரும்பிவிட்டதே!!!!
அன்று பிடல் காஷட்ரோவுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடிய அவருடைய தம்பி ராவுல் காஷ்ட்ரோ இன்று அமெரிக்காவுடன்
நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துகிறாரே...?
இந்த வரலாறுகளை விமல்வீரவன்ஸவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்க்கும் சிங்கள பேரினவாதிகளும் தெரிந்துகொள்ளவேண்டும்.
அல்லது நல்லாட்சிக்கான புதிய அதிபர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதம் ஒருதடவை பிரத்தியேக உலகஅரசியல் வகுப்புகள் நடத்தவேண்டும்.
உலகில் எத்தனையோ தொழில்களுக்கு வகுப்புகள் பாடநெறிகள் பயிற்சிப்பட்டறைகள் இருக்கின்றன.
ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் ஊடகவியலாளர்கள், திரைப்பட ஒளிப்பதிவு, ஒலிப்பதிவாளர்களுக்கெல்லாம் அத்தகைய பயிற்சி நெறிகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய பயிற்சிகளில்தான் அவர்களின் துறைகள் மேம்படுகின்றன. அவர்களின் சிந்தனைகளில் தெளிவுபிறக்கின்றது.
ஆனால், இந்த அரசியல்வாதிகளுக்குத்தான் எந்த வகுப்பும் இல்லை. பாட நெறிகளும் இல்லை. ஆனால், அடுத்துவரும் தமது பரம்பரையை அரசியலில் ஈடுபடுத்தவும் சொத்துச்சேர்க்கவும் மாத்திரம் நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்கள். முடிந்தால் கட்சி தாவும் வகுப்புகளை நடத்தும் ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
பலருடைய தொடர்ச்சியான போராட்டங்களையும் அழுத்தங்களையும் அடுத்து சிலராவது பிணையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அதிலும் நிபந்தனை
.
இரண்டுவாரங்களுக்கு
ஒரு தடவை அவர்கள் வவுனியா அல்லது கொழும்பு பொலிஸ் நிலையங்களில் தோன்றி கையொப்பம் இடவேண்டும். இல்லையேல் மீண்டும் கைது படலம் தொடரும்.
இந்த நிபந்தனையானது ஒருவகையில் மனித உரிமை மீறல்தான். குறிப்பிட்ட கைதிகளை மனிதாபிமான ரீதியில் நடத்துவதற்கு அரசு முன்வரவேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் முக்கியம். வேலைவாய்ப்பு பிரதானம்.
வேலையின்றி வாழும் ஒருவர் கைதி என்ற அடையாளத்துடன் சமூகத்தில் நடமாடுவது வேதனையானது. முன்னர் முன்னாள் போராளிகள் என்று சொல்லியும் பெற்றவர்களை போரில் இழந்த குழந்தைகளை அனாதைகள் என்று சொல்லியும் இடம்பெயர்ந்தவர்களை அகதிகள் என்று சொல்லியும் அவர்களை எமது சமூகம் காயப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலை மாறவேண்டும்.
அவர்களும் எமது சமூகத்தில் ஒரு அங்கம்தான். அவர்களிலும் ஆற்றல்மிக்கவர்கள், ஆளுமையுள்ளவர்கள் இருப்பார்கள்.
அன்று ஆயுதம் ஏந்தியவர்கள் இன்று அரசியல் அரங்கில் அமைச்சர்களாகவில்லையா...?
செல்வாக்குப்பெறவில்லையா...? உலகத்தலைவர்களாகவில்லையா...? சிறையில் இருந்த பலர் உலகம் போற்றும் மகாத்மாக்களாகவில்லையா....? யோசிப்போம்.
இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தற்பொழுது அவுஸ்திரேலியா
செனட்சபையிலும் ஒலித்திருக்கிறது.
அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை. அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும். இதர அரசியல்கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும். எல்லாம் யார் கையில் இருக்கிறது...?
அரசியல்கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம்
யாரிடத்திலிருக்கிறது...?
---0---
No comments:
Post a Comment