"ஏழு கடல், ஏழு மலை!" (சிறுகதை) ஸிட்னி இரா. சத்யநாதன்."இன்றைக்கு யாரோடு தூங்கப் போறே?"


"அம்மாவோட"


"நேத்தும் அம்மாவோட தானே தூங்கினே?"


"இன்னைக்கும்"


"இல்லே, இன்னைக்கு என்னோட"


"அம்மாவோட வயித்தை டச் பண்ணிட்டு தூங்கணும்"


"நான் இன்னைக்கு கதை சொல்வேனே"


"ரியலி..?"


"நிஜம்"


"என்ன கதை?"


"என்ன கதை உனக்கு பிடிக்கும்?"


"ராஜா ராணி கதை.."


"சரி, ராஜா ராணி கதை"


"அம்மா...   தாத்தாவோட தூங்கப்போறேன்...."


".....என்னோட தூங்குறது சரி, பாதி ராத்திரியில அம்மாகிட்ட போறேன்னு அழக்கூடாது"


"நோ.. அழ மாட்டேன்...."


"அன்னைக்கும் அப்படித்தான் சொன்னே, பிறகு நடு சாமத்தில எழும்பி, சிணுங்கிக்கிட்டு, அம்மா ரூமுக்கு


போயிட்டியே?"


"நோ... தாத்தா.....அப்புடி செய்ய மாட்டேன்"


"சரி......டாய்லட்  போயிட்டு .....பிரஷ் பண்ணிட்டு ஓடி வா"


அக்‌ஷயா, ஓரளவு நன்றாகவே தமிழ் பேசுகிறாள். இந்த அக்டோபரில் அவளுக்கு ஐந்து வயது ஆகப்போகிறது. ப்ரி ஸ்கூல் செல்ல ஆரம்பித்த பிறகு, நிறைய ஆங்கிலச் சொற்களை இயல்பாகச் சேர்த்துக்கொள்கிறாள். அவள் வயது மற்றைய குழந்தைகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால், அவள் நன்றாகவே பேசுகிறாள். தாத்தாவோ, பாட்டியோ அல்லது இருவருமோ இருக்கும் வீடுகளில், குழந்தைகள் ஓரளவு தமிழ் பேசுகிறார்கள். ஐந்து வயதுக்குப்பின், பாடசாலை செல்லத்தொடங்கியதும் தமிழில் பேசுவது முழுமையாக க் குறைந்து, அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து 'ஜம்'மென்று அமர்ந்து கொள்கிறது. சில மாதங்களில், அவர்கள் பேசும் ஆங்கிலம், வீட்டில் மற்றவர்களுக்கு புரிவதில்லை. புரியாமல், திருப்பிக்கேட்டால் '...டோன்ட் வொரி.., என்று சொல்லிக்கொண்டே, போய்க்கொண்டே இருப்பார்கள்.


சரியோ தவறோ, ஆங்கிலத்தைச் சற்று உரத்து, முழுமையான வார்த்தைகளாகப் பேசி பழக்கப்பட்டவர்கள் நாங்கள். நமக்குத்தெரிந்த ஆங்கிலம் பல வேளைகளில் எடுபடாமலே போய்விடுகிறது. புலம்பெயர்ந்து வந்தவர்களைப் பார்த்தால், ஆஸ்திரேலியர்கள் இப்போது, சற்று நிதானமாகவே வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள். Country town என அழைக்கப்படும், வெகு தொலைவில் உள்ள சிறு நகரங்களில் வசிப்பவர்கள், புலம் பெயர்ந்து வந்தவர்களுடன் உரையாடச் சந்தர்ப்பமே ஏற்படாத காரணத்தால், நமது உச்சரிப்பைப் புரிந்துகொள்ள, பலவேளைகளில் தடுமாறுகிறார்கள்.


இந்த வருடம் குளிர் சற்று அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். 'மே'யிலேயே இரவு உஷ்ணநிலை சைபர் பாகைக்கு இறங்கிவிடுகிறது. நான் நேரத்தோடு 'இலெக்ரிக் ப்ளாங்கட்'டை 'ஆன்' செய்து வைத்திருந்ததால், போர்வைக்குள் நல்ல கதகதப்பாக இருந்தது. அக்‌ஷிக் குட்டி, போர்வைக்குள் புகுந்து, எனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.  'மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்; மக்களின், மக்கள் மெய்தீண்டல், உயிர்க்கின்பம்' அல்லவோ?


சற்று நேரம் மௌனமாக இருந்தவள்  மெதுவாக, "ஸ்டோரி......" என்றாள்.


அவளைச் சீண்டிப் பார்ப்பது எப்போதும் எனக்குப்பிடிக்கும்.


"நீ முதலில் ..."


" யுவர் டர்ன்...."


"யுவர் டர்ன்...."


பத்து முறை இருவரும் 'யுவர் டர்ன்' மாறி மாறிச் சொன்னபிறகு, நான் தான் கதை சொல்லுவது என்று முடிவானது.


"ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தாங்களாம்.."


"ம்......"


"அந்த ராஜாவுக்கும் ராணிக்கும் ஒரே ஒரு கவலை...வொர்ரி. அவங்களுக்கு ரொம்ப நாளா குழந்தையே இல்லையாம். அப்போ ஒரு முனிவர்....யு நோ...ஹோலிமேன்...ராஜாவப் பார்க்க வந்தாராம். "


"ம்...."


"அந்த முனிவர்கிட்ட... ராஜா தன்னோட கவலையைச் சொன்னாராம். அதுக்கு அந்த முனிவர், 'ராஜா...கவலையை விடுங்க.  ராணிக்கு இன்னும்  பத்து மாசத்தில, அழகான மகள்  பிறப்பா'ன்னு சொன்னாராம்."


"ம்...."


"ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம்..."


"ம்....."


"  ' ஒரு கெட்ட சேதியும்......பேட் நியுஸும் இருக்கு...உங்க மகளுக்கு பதினாறு வயசு பிறக்கும்போது -ஆன் ஹேர் சிக்ஸ்டீன்த் பேர்த்டே...ஒரு பாம்பு அவளக் கடிச்சி, அவ இறந்து போவாள்'ன்னு முனிவர் சொன்னாராம்."


"யூ மீன்..ஷீ வில் டை?"


"யஸ்.."


"புவர் திங்....."


"பதினாறு வயசில தன் மகள் இறந்து போவாளேன்னு, ராஜா கொஞ்ச நேரம் கவலைப்பட்டாலும், '...ஆப்டர் ஆல் ஒரு பாம்புதானே...அதைக் கொல்ல முடியாதா..'ன்னு அவருக்கு ஒரு துணிச்சல் வந்திருச்சாம்"


"ம்..."


"முனிவர் சொன்ன மாதிரியே, பத்து மாதம் கழிச்சு, ராணிக்கு ஒரு அழகான மகள் பிறந்தாளாம். ராஜாவும் ராணியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்களாம்."


"ம்... அவங்களுக்கு ஹேப்பி..?"


"யஸ். அந்த ராஜகுமாரி -பிரின்சஸ்- நல்ல அழகி மட்டும் இல்ல ; நல்லா படிச்சி, நல்ல அறிவு உள்ளவளாகவும் குணம் உள்ளவளாகவும் வளர்ந்து வந்தாளாம். ஷீ வோஸ் பியூட்டிபுல், இன்டலிஜன்ட் அன்ட் ஹேட் எ குட் ஹார்ட்."


"ம்.."


"அவளுக்கு பதினாறு வயது நெருங்க நெருங்க, ராஜாவுக்கும் ராணிக்கும் பயம் வந்துடுச்சு. 'இந்த நாட்டில உள்ள எல்லா பாம்பையும் கொல்லனும். பாம்புகளைக் கொன்னு எடுத்துட்டு வரவுங்களுக்கு, தகுந்த சன்மானம் - ரிவார்ட் - தருவோம்'ன்னு, ராஜா சொன்னாராம். சன்மானம் வாங்குறத்துக்காக, அந்த நாட்டு  மக்கள் எல்லாரும், ஆயிரக்கணக்கான பாம்புகளை கொன்னங்களாம்."


" நெறைய பாம்பு கில் பண்ணீட்டாங்க..?"


"ம்...பிறகு ராஜா என்ன செஞ்சாரு, மகளுக்கு ஒரு மாளிகை  -பெலஸ் - கட்டினாரு. அந்த மாளிகையைச் சுத்தி, காவல்  -கார்ட்ஸ். அதைச்சுத்தி வட்டமா ஒரு அகழி - கெனல் மாதிரி....அதில எப்பவும் கொதிக்கிற தண்ணீர்...பாய்லிங் வாட்டர். அதைச்சுத்திவர நெருப்பு. மாளிகை உள்ளே போகவும் வெளியே வரவும் மட்டும், ஒரு சின்ன பாலம் -பிரிட்ஜ். இவ்வளவையும் தாண்டி, பாம்பு மாளிகைக்குள்ளே போக முடியுமோ?  மகளைக் கொண்டு போய், அங்கே வைச்சிட்டார். அங்கே மகளுக்குத் தேவையான சகலத்தையும், சேர்வன்ட்களையும் வச்சிட்டார்"


"க்ளவர்.."


"பதினாறாவது பேர்த்டே முடிஞ்சுட்டா, அதுக்குப்பிறகு பயமில்லையே! ராஜா எவ்வளவு ஜாக்கிரதையா- கெயர்புல்லா- இருக்கணுமோ, அத்தனையையும் செஞ்சாரு."


"ம்..."


"பதினாறாவது பிறந்த நாளுக்கு இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தான் இருக்கு. ஜஸ்ட் டூ டேஸ்! அப்போ ராஜகுமாரி, மாளிகையில, பல்கனியில நின்னு பார்த்துக்கொண்டிருந்தா. தூரத்தில, அழகான பூந்தோட்டம் -கார்டன்- ஒன்னு தெரிஞ்சது. அங்கே, மஞ்சள் நிறத்தில், பெரிய பெரிய பூக்கள் பூத்திருந்தது. அந்த மஞ்சள் பூவைப் பறிச்சு, கிட்டத்தில வைச்சுப் பார்க்கணும்னு அவளுக்கு ஆசை வந்தது."


"ம்....."


"தன்னோட பணிப்பெண்ணை...மெய்ட்டை கூப்பிட்டு, 'என்னை அந்த கார்டனுக்கு கூட்டிட்டுப் போ; அந்த மஞ்சள் பூவை நான் பறிக்கணும்'ன்னு சொன்னா. அதுக்கு அந்தப் பணிப்பெண், 'ராஜகுமாரி, நீங்க இந்த மாளிகையை விட்டு, வெளியில போக  க்கூடாது. இது ராஜாவுடைய கட்டளை' ன்னா"


"வட் இஸ் கட்ளை?"


"ஆர்டர்; கிங்ஸ் ஆர்டர்...கட்டளை...!"


"ஓகே...ஓ...கே.."


"ராஜகுமாரிக்கு, எப்படியாவது அந்த பூவைப் பறிக்கணும் ன்னு ஆசை வந்திடுச்சு! வெளியில நின்ன காவல்காரனை கூப்பிட்டு, 'அந்த மஞ்சள் பூவைப் பறிச்சிட்டு வா' ன்னு சொன்னாள்."


"ம்..."


"ராஜகுமாரி சொன்னா 'மாட்டேன்' னு சொல்ல முடியுமோ? அவன் ஓடிப்போய், அந்த மஞ்சள் பூக்களை, ஒரு கூடை நிறைய பிடுங்கி, ராஜகுமாரிக்குக் கொண்டுவந்து கொடுத்தான். ராஜகுமாரிக்கு ரொம்ப சந்தோஷம். பூக்களை கை நிறைய எடுத்து, ஆசை தீர பார்த்தா. பிறகு, தன்னோட பணிப்பெண்ணைக் கூப்பிட்டு, 'இந்த கூடையை, என்னோட ரூமில வச்சிரு'ன்னு சொன்னா."


"ம்..."


"மீதிக்கதைய, நாளைக்கு சொல்லவா?"


"இல்லே...இல்லே..இன்னைக்கு..."


"சரி......சரி......பூக்கூடை இப்போ எங்கே இருக்கு..?"


"ராஜகுமாரி ரூம்ல..."


"மறு நாளும் வந்திருச்சு.."


"ம்..."


"பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கு. நாளைக்குக் காலையில ராஜகுமாரியுடைய பிறந்த நாள். ராஜகுமாரி இரவு சாப்பிட்டுட்டு போய், தன்னோட ரூமில படுத்திட்டா."


"ம்.."


குரலைத்தாழ்த்தி, வார்த்தைகளை அட்சரம், அட்சரமாகப் பிரித்து, காட்சியை விவரிக்கத்தொடங்கினேன்.


"ந..ள்ளி..ர..வு, பன்....னிரண்டு.....மணி -ட்வல்லோ க்ளாக், மிட்.....நைட்.  ராஜகுமாரி தூங்கிக்கிட்டு இருக்கா. பூக்....கூடை..மேஜை...மேல இருக்குது. அப்போ... பூக்கூடையில ஒரே... ஒரு... பூ மட்டும், கொஞ்சம்......
அசையுது - மூவ் பண்ணுது. அந்த பூவுக்குள்ள இருந்து....... என்னமோ ஒன்னு.....சம்திங்... வெளியில வருது."


"..ம்....ம்...."


"அ...அது......ஒரு.......பாம்பு......ஸ்நேக்.."


என் கழுத்தைச்சுற்றி இருந்த அவளது பிடி இன்னும் இறுக்கமானது.


"...ஸ்நேக்......பூவுக்குள்ள ஹைட் ...பண்ணி இருந்துச்சா....?"


"......ம்..."


"....சின்ன ஸ்நேக்கா...?"


"பூவுக்குள்ள இருந்து வெளியில வரப்போ சின்னதாத்தான் இருந்திச்சு....  ஆனா, வெளியில வந்ததும், ...பெரி....ய...  பாம்பா..மாறிடுச்சு."


"...காட்..."


"பாம்பு...மேஜையில..இருந்து...மெதுவா.....நாற்காலிக்குத்..தாவி....பிறகு...கீழ இறங்கி....தரையில ஊர்ந்து.....ராஜகுமாரி படுத்திருக்கும் கட்டில்.....பக்கமாப் போகுது......"


"....நோ......நோ....!"


"கட்டில் கால் வழியா....மெதுவா...கட்டிலுக்கு ....ஏறுது....  ராஜகுமாரி...கால் பக்கமாப் போகுது...."


"....ம்.........ம்"


"தலைய ....தூக்கி...சடாரென்னு...ராஜகுமாரி.....காலி...ல.....கொத்திடுச்சு..."


"கால்ல...பைட் பண்ணிடுச்சு...?"


"ம்.......பாம்பு..  கடிச்சதும்...ராஜகுமாரி...'ஐயோ..!'ன்னு....சத்தம் போட்டுக்கிட்டு, எழுந்தா......அந்த சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி...வந்தாங்க. பாம்பு சரசரன்னு.. இறங்கி..ஓடிப்போயிட்டுது."


"எங்கே போச்சு..?"
"மறைஞ்சு போச்சு...டிஸப்பியர்...ஆகிருச்சு.. '  ராஜகுமாரிய பாம்பு கடிச்சிடுச்சுடுச்சு'ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டுது. உடனே ராஜாவுக்கு சேதி அனுப்பினாங்க. ஆனா, ராஜா வரதுக்கு முன்னமே, வெஷம் ஏறி, ராஜகுமாரி செத்துப் போயிட்டாள்..."


".....ஓ......நோ...!"


"முனிவர் சொன்ன மாதிரியே...பதினாறாவது பிறந்த நாளில, ராஜகுமாரி இறந்து போயிட்டாள். ராஜாவுக்கும் ராணிக்கும், பெரிய கவலையாப் போச்சு. அப்போ.....திடீரென்னு, அந்த முனிவர் அங்கே வந்தார்...."


"..ஸேம்...முனிவர்..?"


"ம்....கவலையோட இருக்கிற ராஜாவையும் ராணியையும் பார்த்து, அந்த முனிவர் சொன்னார்,'ஏழு கடல், ஏழு மலை, தாண்டிப் போனால்..க்ராஸ்..ஸெவன் ஸீஸ் அன்ட் ஸெவன் மவுண்டன்ஸ்- ஏழாவது மலையில், ஒரு மூலிகை...ப்ளாண்ட்.. இருக்கிறது. அந்த மூலிகையைக் கொண்டு வந்து, சாறு எடுத்து..ஜூஸ்..எடுத்து..ராஜகுமாரி வாயில் ஊற்றினால், ராஜகுமாரி பிழைத்துக்கொள்வாள்'ன்னு அந்த முனிவர் சொன்னார்...."


"...ஸ்லீப்பிங் பியூட்டி ஸ்டோரில மாதிரி..ஸி வில் வேக் அப்..?"


"யஸ்...அப்போ ராஜா என்ன செய்தார்...? ராஜா, மக்களுக்கெல்லாம் அறிவிச்சார்..அனவுன்ஸ் பண்ணினார். 'யார் போய் இந்த மூலிகையை கொண்டுவராங்களோ..அவங்களுக்கு பெரிய சன்மானம் தருவேன்'னு அறிவிச்சார்....சன்மானம்..?"


"ரிவார்ட்.."


"குட்.. ' ..ராஜா சன்மானம் தருவார்'ன்னு ஆசைப்பட்டு, மூலிகையைக் கொண்டு வர பலர் போனாங்க. சிலர் முதலாவது கடலைத் தாண்டுற போதே, அங்கே இருந்த பெரிய சுறா..ஷார்க்..அவர்களை விழுங்கிடுச்சு. ஒரு சிலர் முதலாவது மலை வரை போனாங்க. அங்கே இருந்த பெரிய புலி அவங்களை கொன்னு சாப்பிட்டுடிச்சி. கொஞ்சம் பேர், இரண்டாவது கடல் வரை போனாங்க. அங்கே இருந்த ராட்சத கடல் பாம்பு அவங்களை விழுங்கிடுச்சு. ரெண்டொருத்தர், இரண்டாவது மலை வரை போனாங்க. அங்கே இருந்த ராடசதன்..மொன்ஸ்டர்...அவங்களை விழுங்கிட்டான்.."


"ஸோ..ப்ளாண்ட்..கொண்டுவர ஆருக்கும் முடியல..?


"ஆமா...ராஜாவுக்கு இப்போ என்ன செய்யறதுன்னு தெரியல்ல......அப்போ...ஒரு இளைஞன்...யங்மேன்..வந்தான். 'நான் அந்த மருந்தை கொண்டு வாறேன்'னு புறப்பட்டான்"


"அவனும் ...சத்துப் போகப் போறான்..."


"சத்துப் போக..இல்லேம்மா...செத்துப்போக... "


"செத்துப்போகப் போறான்!"


"அது தான் இல்லை....அவன்...முதலாவது கடலை, சுறாவைவிட வேகமா நீந்திக் கடந்தான். முதலாவது மலையில இருந்த புலியைத் தூக்கி கடலில வீசிட்டான்"


"ரெண்டாவது கடலில பாம்பு இருக்குமே?"


பெரிய பாம்பு, வளைஞ்சு, இவனை விழுங்க வர முன்னமே, வேகமா நீந்திக் கடலை க்ராஸ் பண்ணிட்டான். ரெண்டாவது மலையில இருந்த ராட்சதனை, கையிலிருந்த வாளால் வெட்டிக் கொன்னு போட்டுட்டான்"


"அடுத்த மலையில, என்ன இருந்திச்சு?"


"அடுத்த மலையில, பெரிய கழுகு ......ஈகிள்..ஒன்னு இருந்தது. அதோட சண்டை செஞ்சு, அந்த கழுகையும் கொன்னு போட்டுட்டான். அதே.. மாதிரி, மத்த கடல்களிலேயும் மலைகளிலேயும் இவனை கொல்லப் பார்த்திருந்த எல்லாத்தையும், கொன்னுட்டு, கடைசி மலை, ஏழாவது மலைக்குப் போய், அந்த மூலிகையைப் பறிச்சிட்டான்."


"...வெல் டன்! .......கரெக்டான ப்ளாண்டை.. பறிச்சானா...?"


"ஆப் ..கோர்ஸ்...! அங்கே அந்த ஒரே ஜாதி...மூலிகை மட்டுந்தான் நெறைய இருந்தது. அதைப் பறிச்சுட்டு, அப்படியே பறந்து, ராஜாவோட மாளிகைக்கு, வந்திட்டான்"


"சூப்பர் மேன்.."


"பிறகு என்ன நடந்திருக்கும்..?"


"மூ..லிக ஜூஸ் பண்ணி ராஜகுமாரிக்குக் குடுத்தாங்களா?


"ம்......ராஜா மூலிகையை வாங்கி, சாறு எடுத்து, ராஜகுமாரி வாயில ஊத்தினார்....ஊத்தின உடனே, ராஜகுமாரி, தூங்கி எழுந்த மாதிரி, கண் விழிச்சு, எழுந்தா."


"ஸ்லீப்பிங் பியூட்டி  மாதிரியே...."


"ராஜாவுக்கும் ராணிக்கும், பெரிய சந்தோஷம். மக்களுக்கும்...பீப்பில்ஸ் க்கும் ரொம்ப சந்தோஷம். மூலிகையைக் கொண்டு வந்த இளைஞனுக்கு,....யங் மேனுக்கு, பெரிய சன்மானம் கொடுக்கனும்னு ராஜா நினைச்சார் . "


"என்ன குடுத்தார்.....?"


" 'யாராலேயும் கொண்டு வர முடியாத மருந்தை நீ கொண்டுவந்து, ராஜகுமாரிய  காப்பாத்தியிருக்கிறே, ஆனபடியாலே, நீயே ராஜகுமாரிய கல்யாணம்.....மேரி...பண்ணிக்க'ன்னு, ராஜகுமாரிய, அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு....."

எனக்குத் தெரிந்து, மூன்று தலைமுறைக்கு மேல், அந்தந்த தலைமுறைக்கேற்ப, சிறு சிறு மாற்றங்களுடன், இந்தக் கதையை, எங்கள் குடும்பத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கதையின் முடிவில்,  யாருமே இதுவரை கேட்காத கேள்வியை, அக்‌ஷயா, கடைசியாக க்கேட்டாள்.

"ஹேங்....ஓன்...ஹேங்...ஒன்..  தாத்தா....அந்த யங்மேனை மேரி பண்ண, உனக்கு விருப்பமா' ன்னு, அந்த கிங்...,தன்னோட...மகளிட்ட கேட்டாரோ..?"

                                                        -----00000-----


R.Sathiyanathan
32 Hollis Avenue,
Denistone East  2112 NSW
Australia .


Phone: 61-02 98040342.  Mobile: 0468909757
e mail: nathanjothi@hotmail.com

No comments: