எங்கிருந்து எங்கே செல்கின்றோம்...? - முருகபூபதி

.
அவுஸ்திரேலியா - ஆஸ்திரேலியா - ஒஸ்ரேலியா - ஆசுத்திரேலியா -  இதில் எது சரி...?
பெற்றோர்களினதும்   பிள்ளைகளினதும்  போக்கு
எங்கிருந்து   எங்கே   செல்கின்றோம்...?
மெல்பன்   மொனாஷ்   பல்கலைக்கழகத்தில்    அவுஸ்திரேலியா தமிழ் கலாசாலை      நடத்திய  அயலகத்தமிழாசிரியர்  பட்டமளிப்பு  விழா
     
                               
சமூகப்பிரச்சினைகளின் ஊற்றுக்கண் குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வாக்கிலிருந்து எங்கள் தமிழும் தமிழர் வாழ்வும் பற்றி மாத்திரமல்ல ஏனைய மொழிகள் பேசும் இனத்தவர்களின் சமூகப்பிரச்சினைகளையும் பார்க்கலாம்.
நாம் இன்று இந்த ஒன்றுகூடலில் சந்திப்பதிலிருந்து எமக்குள்ள பதட்டம் எமது திருப்தி எமது முயற்சி ஆதியன புரிகிறது.
அமெரிக்கா ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை அமைக்க ஆறு கோடி  வெள்ளிகள் தேவையென்றும் இன்னும் இரண்டு வருடகாலத்தில் அங்கு தமிழ்த்துறை தொடங்கிவிடும் என்றும் ஒரு செய்தி  வெளியாகியிருக்கிறது.
இந்தச்செய்தியின் பின்னணியிலிருந்து இன்று நாம் அவுஸ்திரேலியா மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கூடியிருக்கின்றோம்.
இந்த பட்டமளிப்பு விழாவை ஒழுங்குசெய்த


வள்ளுவர் அறக்கட்டளை - அவுஸ்திரேலியத் தமிழ்க்கலாசாலை அன்பர்களுக்கும் குறிப்பாக அன்பர் திரு. நாகை சுகுமாரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் தமது பெயரில் ஒரு அறக்கட்டளை தோன்றும் என்று வள்ளுவருக்குத்தெரியுமா...?
சரி.... 20 ஆம் நூற்றாண்டு பாரதிக்குத்தெரியுமா தனது பெயரில் அதே நூற்றாண்டில் இந்தக்கண்டத்தில் ஒரு பாரதி பள்ளி தோன்றும் என்று.
அப்படித்தான் எமது எதிர்காலமும் அமையும். சந்தேகம் வேண்டாம்.
மனித வாழ்வில் பருவங்கள் அநேகம். குழந்தையின் மழலை மொழி> ஓரளவு பேசத்தொடங்கியதும் கேள்விகளுடன் உரையாடும் பருவம். ஆரம்பப்பாடசாலைப் பருவம்> இடை நிலை> உயர்தரம்> பல்கலைக்கழகம்> பின்னர் தொழில் திருமணம்> குடும்பம்> பெw;றோர். முதியோர்> அந்திமகாலம்.
ஒருகாலத்தில் குழந்தையாக இருந்து வளர்ந்த நாம் இன்று எமது அடுத்த சந்ததிக்குழந்தைகள் குறித்து பேசவருகின்றோம்.
இதே பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டில் நண்பர் மாவை நித்தியானந்தன் தமது மெல்பன் கலைவட்டத்தின் சார்பில் பெற்றோர் பிள்ளைகள் உறவு என்ற தலைப்பில் முழுநாள் கருத்தரங்கை ஏற்பாடுசெய்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பாரதி பள்ளி> பாப்பா பாரதி> சிறுவர் நாடகம்> சிறுவர் இலக்கியம் என்று ஒரு பெரிய நீட்சியை நாம் கண்டோம்.
22 ஆண்டுகளின் முன்னர் தொடங்கப்பட்ட அந்த இயக்கம்> பின்னாளில் அரசாங்கப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாகத்தோற்ற முடியும் என்ற விடையை எமக்குத்தந்துவிட்டது.
அதே போன்று இன்றைய ஒன்றுகூடல் சந்திப்பு நிகழ்ச்சியும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முயற்சிக்கு உறுதியான அத்திவாரம் அமைக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கின்றேன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை. அப்படி ஒரு நம்பிக்கையுடன்தானே பிரித்தானியாவிலிருந்து தலைமை மாலுமி குக் (Captain Cook)  ஒரு கடலோடியாக இந்த கடல் சூழ்ந்த கண்டத்துள் பிரவேசித்தார். சுமார் 228 ஆண்டுகளில் அந்தக்கடலோடிகளின் கனவு எவ்வளவுதூரம் நனவாகியிருக்கிறது என்பது எமக்குப்புரியும். ஆனால் இன்றைய அவுஸ்திரேலியா எப்படி இருக்கிறது என்பது அந்தக்கடலோடிகளுக்குத்தெரியாதிருப்பது போன்று> எமக்கும் எமது தாய்மொழி தமிழ் எதிர்காலத்தில் என்ன கோலம் கொள்ளும் என்பதும் தமிழர் என்னாவார்கள் என்பதும் தெரியாது.


ஆயினும் இன்னும் சில வருடங்களில் அழியும் மொழிகளில் தமிழும் ஒன்றென பாதகமான எண்ணங்களையே பலர் விதைக்கின்றார்கள். கல்லிலே பொழியப்பட்ட தமிழ்> பனை ஓலை ஏட்டிலே எழுத்தாணியால் வரையப்பட்ட தமிழ்> மரக்கட்டை எழுத்துக்களிலும் பின்னர் வெள்ளீய அச்சு எழுத்துக்களிலும் பதிவாகிய தமிழ் தொட்டெழுதும் பேனாவில் மலர்ந்த தமிழ் காலப்போக்கில் இந்த குமிழ்முனைப்பேனாவில் எழுதப்பட்டு இன்று கணினியில் தோன்றுகிறது. கல்லிலிருந்து கணினி வரைக்கும் வந்துவிட்ட தமிழ் வருங்காலத்தில் மற்றும் ஒரு நவீன ஊடகத்துள் பிரவேசித்துவிடும். ஆனால் அந்தத்தமிழை பார்க்க நாம் இருக்கமாட்டோம்.
மனித  வாழ்க்கை  திருப்தியிலும்  மனநிறைவிலும்  தங்கியிருக்கிறது.
குடும்ப  வாழ்க்கை,   கல்வி,  தொழில்  என்பனவும்  இவற்றில்தான் பெரிதும்  தங்கியிருக்கின்றன.   எம்மவரின்  புலப்பெயர்வு பொருளாதாரம் ,  பாதுகாப்பு  சார்ந்தது.   அதில்  தாய்மொழி புலம்பெயர்வாழ்வின்  தொடக்க  காலத்தில்  இரண்டாம் பட்சமாகியிருந்தது.
ஆனால்,  புலம்பெயர்ந்த  தமிழர்களின்  குழந்தைகள் ஆங்கிலப் பாடசாலைகளுக்கு  செல்லத் தொடங்கியதும்  தமிழ்மொழி அந்நியமாகியது.   அதனால் -  தமது  இன  அடையாளம்  அழிந்துவிடும்  ஆபத்து  தோன்றும்  என்பதனால்  தமது குழந்தைகளுக்கு   தமிழை  கற்பிக்கத்தொடங்கினர்.
எவ்வாறு...?
Amma (அம்மா) அம்மா என்றால் MummyAppa ( அப்பா) அப்பா  என்றால் Dada.  Poonai (பூனை)  என்றால்  Cat.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 1987 காலப்பகுதியில்   இங்கு இதுதான்  நிலைமை.  எனினும்  இன்றும்  அந்த  நிலைமை தொடருகிறது.
1991 இல்  நான்கு  வயதில்  வந்த  எனது  மகன்  தான்  சென்ற தமிழ்ப்பாடசாலையில்  எழுதி  சொல்லிக்கொடுத்த  இந்தப்பாடலை இவ்வாறுதான்    எழுத்துக்கூட்டி  வாசித்தான்.   அதற்கு  இதோ  ஆதாரம்.   அவன்  அந்த  வயதில்  பாடிய  பாடல்:    குரங்குக்குட்டி குரங்குக்குட்டி   கிட்ட  ஓடிவா... அதனை   இவ்வாறு  எழுதி  மனப்பாடம் செய்தான்.
Koorangu  Kutty.... Koorangu  Kutty.... Kitta... Odi... vaa.
இரவில்  உறங்கும் வேளையில்  நான்   அவனுக்குச்சொல்லித்தந்த பாட்டி  சொன்ன  கதைகளை  உள்வாங்கி,  தனது  பாடசாலையில் ஆங்கிலத்தில்   அதே   கதைகளை   எழுதி  அவற்றுக்கு  படங்களும் வரைந்தான்.    இன்று  28  வயதில்   சரளமாக  தமிழும்  ஆங்கிலமும் அவனால்  பேசமுடிகிறது.  ஆனால்,  ஆங்கிலத்தில்  மாத்திரமே  எழுத முடிகிறது.
வீட்டில்   பேச்சுமொழி   தமிழாக  இருந்தமைதான்  அதற்குக்காரணம்.
தமிழ்ப்படங்களைப்பார்த்து  எமக்கு  இன்றும்  புரிந்துகொள்ள  முடியாத  சில  தமிழ்  வார்த்தைகளை    அவ்வப்பொழுது  உதிர்ப்பான்.
உதாரணமாக:-  சாவுக்கிராக்கி,   காலாய்க்கிறான்,  டுபாக்கூறு,  
சாவுக்கிராக்கி, காலாய்க்கிறான்,   டுபாக்கூறு  என்பதன் அர்த்தம்   இன்னமும்  எனக்குத் தெரியாது.
சூழல்  ஒவ்வொருவர்  வாழ்வையும்  தீர்மானிக்கிறது.
புலப்பெயர்வில்   அவுஸ்திரேலியா,   கனடா,  அமெரிக்கா,  நியுசிலாந்து மற்றும்    அய்ரோப்பிய  நாடுகளுக்கு  சென்ற  எமது  தமிழர்களின் குழந்தைகள்   அந்தந்த  நாடுகளின்  மொழியை   பிரதான  பாட மொழியாக   கற்றனர்.   ஆங்கிலம்  பேசும்  நாடுகளில்  ஆங்கிலத்தையும்   அய்ரோப்பிய  நாடுகளில்  இத்தாலி,   டேனிஷ், டொச்,   பிரெஞ்,  நோர்வேஜியன்,  சுவிடிஷ்  மொழிகளையும்  அவர்களின்    குழந்தைகள்  கற்றனர்.   இவர்கள்  மத்தியில் உறவினர்கள்   இருந்து  என்றாவது  ஒருநாள்  தமது  தாயகம் செல்லும்பொழுது   பரஸ்பரம்  எந்தமொழியில்  பேசுவார்கள்...? என்பது   சவாலான  விடயமாகியது.
இந்த  உறவினர்களின்  குழந்தைகள்  அனைவரும்  ஒருநாள்  தமது பூர்வீக   இலங்கையில்  அல்லது  தமிழ்நாட்டில்  தமது  தாத்தா,  பாட்டி மற்றும்   உறவினர்களை  சந்திக்கும்பொழுது  என்ன மொழியில் பேசிக்கொள்வார்கள்....?
இலங்கை,  தமிழ்நாட்டில்  ஆங்கிலம்  பிரச்சினை   இல்லை.  ஆனால் அங்கு  அய்ரோப்பிய  மொழிகள்  தெரியாதவர்கள்  நிலை  என்ன...?
அதனால்தான்  தாய்மொழி   தமிழின்  அவசியம்  உணரப்படுகிறது.
ஆனால்,  இலங்கையிலிருக்கும்  தமிழ்மக்கள்  வெளிநாடுகளிலிருந்து வரும்   தமது   உறவினர்களின்  குழந்தைகளுக்கு  ஈடாக   சரளமாக ஆங்கிலத்தில்  உரையாடவேண்டும்  என்ற  ஆவலில்  தமது குழந்தைகளை   சர்வதேசப்பாடசாலைகளுக்கு  அனுப்பி    ஆங்கிலம் மூலம்   கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.   எப்படி  இருக்கிறது  இந்த முரண்  நகை....?
நாம்   எங்கிருந்து  எங்கே  செல்கின்றோம்....?
தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவச்செய்வோம் தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம் என்றெல்லாம் பாடிச்சென்ற மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி  மீரா அவர்களினால் அமெரிக்காவில்   வாழ்ந்துகொண்டு   தமிழில்  பேச  முடியவில்லை.
வாழ்க்கை  முழுவதும்  தமிழ்  ஆய்வு -  தமிழ்  என்று  வாழ்ந்த எங்கள்  நாட்டின்  பல  பேராசிரியர்களின்  பேரப்பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில்  வாழ  வேண்டிய  சூழ்நிலைகளினால்  தமிழில்  பேச முடியவில்லை.  எனக்கு தற்பொழுது  பேரக்குழந்தைகள் வந்துவிட்டனர். நிச்சயமாக ஒரு சவாலை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
எனது  தாய்மொழி  தமிழ்.  இன்றும்  தமிழில்  பேசி  தமிழில் எழுதிவருகின்றேன்.  இன்றும்  தமிழைக்கற்றுக்கொண்டிருக்கின்றேன். எங்கள்   தமிழில்  இலங்கைத்தமிழர்களின்  பேச்சுமொழிக்கும் இந்தியத்தமிழர்களின்  பேச்சு  மொழிக்கும்  வித்தியாசம்  இருக்கிறது.
அண்மையில்  மறைந்த  ஜெயகாந்தன்  பற்றிய  எனது  கட்டுரை தமிழ்நாடு  திண்ணை  இணையத்தில்  வெளியானபொழுது                    " எழுதியது முருகபூபதி - அவுஸ்திரேலியா"  என்று  பதிவுசெய்திருந்தேன்.
மறுநாள்  ஒரு  தமிழக  அன்பர் "  எங்கே  இருக்கிறது அவுஸ்திரேலியா..?"  என்று  கேள்வி  எழுப்பியிருந்தார்.
உடனே   அவுஸ்திரேலியாதான்  ஆஸ்திரேலியா.   ஆஸ்திரேலியாதான் யுரளவசயடயை.  என்றும்,  நாம்  தோடம்பழத்தை,  தோடம்பழம் என்றுதான்  அழைப்போம்,  தமிழகத்தவர்  அதனை  ஆரஞ்சுப்பழம் எனச்சொல்கிறார்கள்  என்று  விளக்கப்படுத்துவதற்கு  நேர்ந்தது.
இன்று  இங்கே  ஆஸ்திரேலியாவில்  தமிழ்க்கல்வியின்  எதிர்காலம் என்ற   தலைப்பில்  பட்டயமளிப்பு  விழா  என்று  அச்சிட்ட  மலரும் வெளியிட்டு,    இங்கு    காணப்படும்  பெனர்களிலும்   அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.    காலை   அமர்வில்  பேசிய  ஒருவரும் பட்டயமளிப்பு  விழா   என்றுதான்  அடிக்கடி  சொன்னார்.
இலங்கையர்   பட்டமளிப்பு  என்பார்கள்.   பட்டயம்  என்றால்  அது (Charted Accountant  )    பட்டயக்கணக்காளருக்கு    குறிப்பதற்கு   பாவிக்கப்படும்.
இன்று  வெளியிடப்பட்ட  மலரிலும்  ஒரு  அன்பர்,   தமது  கட்டுரைக்கு    ஆசுத்திரேலியா  என்றே   பதிவுசெய்துள்ளார்.
ஆனால்,    ஆங்கிலத்தில்  Australia   என்ற  சொல்லை கணினியில்  நீங்கள் வேறுவிதமாக  எழுத முடியாது.   உடனே   அதிலிருக்கும் எழுத்துப்பிழையை    கணினி   சிவப்பு  அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டிவிடும்.
எங்கள்  தமிழில்  இப்படி  பல்வேறு  பிரச்சினைகள்  நாட்டுக்கு  நாடு பிரதேசத்திற்கு    பிரதேசம்  மாறிக்கொண்டிருக்கிறது.   இந்நிலையில் நாம்  இலங்கை -  இந்தியக்குழந்தைகளுக்கு  தமிழைக்கற்பிக்க அயராது   முயற்சிக்கின்றோம்.
காலத்தின்    ஓட்டத்துடன்    வளைந்துகொடுக்காத  எதுவும் அழிந்துவிடும்  என்று  சமீபத்தில்  நாட்டியக்கலை   பற்றிய  ஒரு நூலில்     படித்தேன்.    காலம்  மாறிக்கொண்டிருக்கிறது.   எனது முதாதையர்கள்  ஒரு  காலத்தில்  மாட்டுவண்டியில்  சென்றதனால் நானும்  மாட்டுவண்டியில்தான்  செல்வேன்   என்று  அடம்பிடிக்க முடியாது.
நமது   தமிழ்  புகலிட  நாடுகளில்  வாழவேண்டும் - வளரவேண்டுமானால்    தொடர்பாடல்   மிகவும்  முக்கியம். தொடர்பாடல்  அற்ற  சமூகம்  பின்தங்கிவிடும்.   இன்று  கடினமாக தொடர்ச்சியாக  உழைத்து  பத்துப்பேருக்கு  தமிழ்  ஆசிரியர் பட்டமளிப்பு   விழாவை  நடத்துகிறீர்கள்.    இன்று   காலையில்  பட்டம் பெற்றதற்கான    சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்காகவும் எதிர்காலத்தில்  தமிழ்க்கல்வி   தொடர்பாகவும்  முழுநாள் கருத்தரங்கையும்    நடத்துகிறீர்கள்.   அவுஸ்திரேலியாவின்  இதர மாநிலங்களிலிருந்தெல்லாம்   தமிழ்  அறிஞர்களை   அழைத்து பேசவைக்கின்றீர்கள்.    உங்கள்  முயற்சி  பாராட்டுதலுக்குரியது.
ஆனால் - இன்று  இந்த  முக்கியமான  நிகழ்ச்சியில்  மெல்பனில்  தமிழ்    ஆசிரியர்களாக  பணியாற்றும்  எத்தனைபேர்  வருகைதந்து கலந்துகொண்டார்கள்...?    தொடர்பாடலில்  ஏதோ   தேக்கம் தெரிகிறது.  வருங்காலத்தில்  இதனை  தவிர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது இன்று  பட்டம்பெறும்  ஆசிரியர்களுக்கு  தார்மீகக்கடமை   இருக்கிறது.
இந்த பட்டமளிப்பு  அரங்கு  பரதநாட்டிய   அரங்கேற்றம்   போன்று    நடந்துவிடக்கூடாது.   பரதநாட்டிய    அரங்கேற்றம்  வெளிநாடுகளில் அடிக்கடி  நடக்கிறது.  ஆனால்,  பின்னர்  அந்த  அரங்கேற்றத்தின் பெரிய  பட  அல்பமும்  ஒளிப்பதிவுசெய்யப்பட்ட  அரங்கேற்ற குறுந்தகடும்தான்  எஞ்சியிருக்கும்.   ஆடியவர்  நடனத்திலிருந்து அந்நியப்பட்டுவிடுவார்.
அவ்வாறு  இந்த  பட்டமளிப்பு  விழாவுக்கு  நேர்ந்துவிடக்கூடாது. இன்று   இங்கே   பட்டம்  பெற்றவர்கள்  வெளிநாடுகளில்  தமிழ்,  தமிழ் இலக்கியம்,   தமிழ்க்கலைகள்  தொடர்பாக  ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.    மாணவர்களுக்கும்  படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள்    மற்றும்  புகலிட  நாட்டின்  தொன்மங்கள்  பற்றிய    ஆய்வுகளில்  ஈடுபடுபவர்களுக்கும்   மத்தியில் தொடர்பாளர்களாகவும்  இயங்குதல்வேண்டும்.   நீங்கள்  பெற்ற  அறிவு தேங்கிவிடக்கூடாது.    தொடர்பாடல்  நீடிக்கவேண்டும்.   வீடுகளில் குடும்பங்களில்    தொடர்பாடல்  தொடரவேண்டும்.
தமிழ் ஆசிரியர்கள், படைப்பாளிகள்,  பத்திரிகையாளர்கள், மாணவர்கள் சந்திப்புகள்   தொடரவேண்டும்.
(மெல்பன்   மொனாஷ்   பல்கலைக்கழகத்தில்    அவுஸ்திரேலியா தமிழ் கலாசாலை   நடத்திய  அயலகத்தமிழாசிரியர்  பட்டமளிப்பு விழாவினை   முன்னிட்டு  நடந்த  கருத்தரங்கில்  நிகழ்த்தப்பட்ட உரை)
---o----
letchumananm@gmail.com
No comments: