மனசாட்சியை உலுக்கும் துயரம்‏

.

துருக்கி கடற்கரையில் சிரியாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் அய்லானின் உயிரற்ற உடல் கரையொதுங்கிக் கிடந்த புகைப்படம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்தப் புகைப்படம் பரவி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்கிறது - இந்தப் பரந்த உலகத்தில் உயிர் பிழைத்து வாழ ஒரு பச்சிளம் குழந்தைக்கு இடம் இல்லையா? மனிதாபிமானம் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதா என்று.
 உள்நாட்டுப் போர் நடக்கும் சிரியாவில் இருந்து தப்பி, ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் அகதிகளின் நிலையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போன்று சொல்கிறது, சிறுவன் அய்லானின் உடலை அலைகள் தழுவிச் செல்லும் அந்தப் புகைப்படம்.
 சிரியாவைச் சேர்ந்த அப்துல்லா குர்தி, தன் மனைவி, மகன்கள் காலிப், அய்லான் ஆகியோருடன் துருக்கியில் இருந்து ஐரோப்பாவை நோக்கி மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகில் சென்றபோது, படகு கவிழ்ந்து அவரது குடும்பத்தில் அவரைத் தவிர மற்ற மூவரும் கடலில் மூழ்கி இறந்தனர்.
 இதில் கரையொதுங்கிய அய்லானின் உடல்தான் இப்போது மத்திய கிழக்கு நாடுகளின் அகதிகள் பிரச்னையின் தீவிரத்தை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.
 அப்துல்லா குர்தியின் உறவினர்கள் கனடாவில் இருந்தும், அவர்கள் அப்துல்லாவின் குடும்பத்துக்கு பொறுப்பேற்பதாகச் சொல்லியும், அவர்களது சட்டப்பூர்வ குடியேற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த கனடா, இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அப்துல்லாவின் விண்ணப்பம் சரியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்று காரணம் சொல்கிறது. 

 ஆனால், இது சிறுவன் அய்லானின் குடும்பத்தோடு முடிந்துபோகக் கூடிய விஷயமல்ல. மத்திய கிழக்கிலும், ஐரோப்பாவிலும் பூதாகரமாக உருவெடுத்துள்ள அகதிகள் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையே சிறுவன் அய்லானின் மரணம் உணர்த்துகிறது.
 சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளைத் தேடிச் செல்லும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் இதுவரை 2,500 பேர் மூழ்கி இறந்துள்ளனர். 
 குறிப்பாக, சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
 அதாவது, அந்த நாட்டில் ஆறில் ஒருவர் அகதிகளாக பிற நாடுகளைத் தேடிச் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் துருக்கியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். சுமார் 1.60 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, கிரீஸ், ஹங்கேரியில் இப்போதைக்கு அடைக்கலம் புகுந்துள்ளனர்.
 அவர்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் பகிர்ந்து கொள்வதுதான் முதல்கட்ட நடவடிக்கை என்றால், அடுத்தடுத்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஓர் உடன்பாடு காண வேண்டியது அடுத்தகட்ட நடவடிக்கை.
 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறி வரும் அகதிகள் விஷயத்தில் அத்தனை ஈடுபாடு காட்டாத பிரிட்டனும், சிறுவன் அய்லானின் மரணத்தைத் தொடர்ந்து சற்று இறங்கி வந்துள்ளது. 
 "அய்லானின் உயிரற்ற உடலைப் பார்த்துக் கொண்டே, நாம் வேறு வழியில் வெறுமனே சென்றுவிட முடியாது' என்ற கோஷத்துடன் பிரிட்டன் முழுவதும் எழுந்த அழுத்தம், பிரதமர் டேவிட் கேமரூனை ஒரு முடிவு எடுக்க வைத்துள்ளது.
 "சிரியாவின் எல்லையில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து நேரடியாக வரும் மக்களை பிரிட்டன் ஏற்றுக் கொள்ளும்; எத்தனை பேரை அனுமதிப்பது, எவ்வாறு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்' என அவர் தெரிவித்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றம்.
 இவற்றுக்கும் மேலாக, எகிப்தை சேர்ந்த கோடீஸ்வரர் நாகுய்ப் சாவிரிஸ் அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். 
 "கிரீúஸô, இத்தாலியோ ஒரு தீவை விலைக்குத் தந்தால் அதை வாங்கி, சிரியா உள்ளிட்ட போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகளை குடியமர்த்தி, அதை அகதிகள் நாடாக ஆக்கலாம்' என்ற யோசனையையும் அவர் தெரிவித்துள்ளார். இதுவும் சிறுவன் அய்லானின் மரண துயரம் ஏற்படுத்திய விளைவுதான்.
 அகதிகள் பிரச்னையில் ஐரோப்பிய நாடுகளைக் குற்றம்சாட்டியுள்ள துருக்கி அதிபர் எர்டோகன், "ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இதற்கு உதவ வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். அவருடன் பிரான்ஸ் அதிபர் ஹொலாந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
 "அகதிகள் பிரச்னையை ஒருசில ஐரோப்பிய நாடுகளால் மட்டும் தீர்த்துவிட முடியாது' என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் நீண்ட காலமாகவே கூறி வருகிறார். ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்துமே அகதிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம்.
 அதன்படி, இந்த அகதிகளை சில நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், ஓர் ஒதுக்கீடு முறையை ஏற்படுத்தி, அந்த நாடுகளை சம்மதிக்க வைப்பது குறித்த செயல் திட்டத்தை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்கர் தயாரித்து வருகிறார்.
 ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஆனால், பல்கேரியா, ருமேனியா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் திட்டத்தை ஏற்பது குறித்து யோசிக்கின்றன. 
 இந்தப் பிரச்னை தொடர்பான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டம் செப்டம்பர் 14-இல் நடைபெறவுள்ளது. அதில் ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டால்தான் அகதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் காண முடியும்.
nantri http://www.dinamani.com/

No comments: