பதேர் பாஞ்சாலி: சூறையை எதிர்த்து நிற்கும் சிறு குடில்‏

.
சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி வெளியாகி 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் முழுமையான திரைப்படம் குறித்த உரையாடலின் ஏதாவது ஓரிடத்தில் தன் முகம் காட்டித்தான் செல்கிறது அந்தப் படம். பொருளாதார ரீதியான பல சிரமங்களுக்குப் பின்னர் அரசின் நிதி உதவியில் வெளியானது அந்தப் படம் என்பது முரண்நகையே. வணிகப் படங்களின் வெற்றிக்குக் கைகொடுத்த வங்காளத்தின் பெருவாரியான ரசிகர்களால் அந்தப் படமும் ரசிக்கப்பட்டது என்பது இந்தியத் திரைப்பட ரசனையின் வளர்ச்சிதான். இந்தியத் திரைப்பட வரலாற்றின் செறிவான பாதையில் அப்படம் ஒரு கைகாட்டியாக இன்றளவும் நின்றுகொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டில் வெளியான ‘டைம்’ பத்திரிகையின் தலைசிறந்த 100 படங்கள் பட்டியலில் அது இடம்பெற்றிருந்தது. பதேர் பாஞ்சாலியின் பெருமை குறித்து இப்போதுகூட எழுதுகிறோம். ஆனால், படம் வெளியானபோது சென்னையின் திரையரங்கில் இரண்டு நாட்கள் மட்டுமே ஓடியது என்று அறியும்போது மனதில் கசப்பின் நெடி மண்டுகிறது.
காலத்தின் கதை


பதேர் பாஞ்சாலி ஒரு குடும்பப் படம். வளர்ப்புப் பிராணிகளும் பறவைகளும் மனிதர்களும் ஒருங்கே வாழும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளைச் சித்தரிப்பதன் வாயிலாகப் பல விஷயங்களைத் தழுவிச் செல்லும் படம். ஒரு குடும்பத்தின் வாழ்வினூடே ஒரு தேசத்தை, அதன் குடிமக்களை, இலக்கிய ரசனையை, வளமிழக்கும் கிராம வாழ்வை, நகரத்தில் குழும நேரிடும் சூழலை, ஏழ்மையை… மொத்தத்தில் அக்காலத்தின் சமூக வாழ்வை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது படம். நாடு விடுதலை பெற்று எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான அந்தப் படம், இந்தியப் படங்களில் இன்றுவரையிலும் அரிதாகவே சாத்தியப்பட்ட ஆழத்தைத் தன் இயல்பாகக் கொண்டிருந்தது. பழுதுபார்க்கப்பட வேண்டிய வீடு, இரவின் குளிரைப் போக்கப் போர்வைகூட இல்லாமல் அல்லாடும் பாட்டி,போதிய உணவில்லாத சூழலில் பால்யத்தைக் கழிக்கும் குழந்தைகள், முன்னோருடைய வீட்டைக் காலிசெய்ய இயலா மனம் கொண்ட குடும்பத் தலைவன், நல்ல வாழ்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பத் தலைவி போன்ற சித்தரிப்புகள் ஆழமான சமூகப் பார்வையின்பாற்பட்டவை. இத்தகைய சித்தரிப்பின் காரணமாகப் படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

தீவிர திரைப்படப் பார்வையாளர்கள் சிலர் சாருலதா திரைப்படம்தான் சத்யஜித் ராயின் உன்னதப் படைப்பு என்று கொண்டாடும்போதும், சத்யஜித் ராய் என்ற சொல்லைத் தொடர்ந்து தன்னிச்சையாக ஒலிக்கும் சொல் பதேர் பாஞ்சாலி என்பதற்குக் காரணம், அது அவரது முதல் படம் என்பது மட்டுமல்ல. ஒளிப் படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருந்த சுப்ரதா மித்ராவைத் தன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக்கியது, பிரபல இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கரை இந்தப் படத்துக்கு இசையமைக்கவைத்தது போன்ற பல புதிய முயற்சிகளை உள்ளடக்கிய படம் என்பதாலேயே.
இசையும் காட்சியும்
திரைப்படக் கலையின் அடர்த்தியை உள்வாங்கிய படமாக பதேர் பாஞ்சாலி திரையில் அழகியல் மிளிர நகர்கிறது. காட்சிகளின்போது பார்வையாளனுக்குள் சுரக்க வேண்டிய உணர்வைத் தூண்டும் விதமாகவே இசை ஒலிக்கிறது. அடர்ந்த இரவில் பாட்டி பாடும்போது அதில் ஒலிக்கும் துயரத்தைக் கண்டு தொலைவிலேயே நின்றுவிடுகிறது இசை. உற்சாகமான தருணங்களில்கூட இசை அதன் எல்லையைத் தாண்டுவதில்லை. வரம்புக்குள் வலிமையாக ஒலிப்பதாலேயே படத்தின் உயிரோட்டத்துக்கு உதவுவது மட்டுமே இசையின் பணியாக உள்ளது. நேரடியான காட்சிச் சித்தரிப்பின்போது சுற்றுப்புறத்தின் சம்பவங்களை பார்வையாளரிடம் கொண்டுவந்து சேர்க்கிறது இசை. வீட்டில் குழந்தைகள் அப்புவும் துர்காவும் ரயில் குறித்துப் பேசும்போது பின்னணியில் தொலைவில் ஒலிக்கிறது ரயில் செல்லும் ஓசை.
படத்தின் காட்சிகள் செறிவு மிக்கவை. திருவிழாவின்போது அரங்கேறும் நாடகத்தைக் காணும் அப்புவின் சிறிய கண்களில் தென்படும் தீவிரம், கலையின் தாக்கத்தை எளிதில் புலப்படுத்திவிடுகிறது. தனக்கு மீசை வைத்துக்கொண்டும், கிரீடம் சூட்டிக்கொண்டும் கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக்கொள்ளும் அப்புவின் மனநிலை கலை ரசனையால் தாக்கத்துக்கு உள்ளாகும் கலைஞனின் மனநிலை. இப்படி ஒவ்வொரு ஷாட்டிலும் வாழ்வின் ஏதாவது ஒரு கூறு பொதியப்பட்டுள்ளது. சிறுசிறு அசைவுகளில், பார்வைகளில், மனிதர்களின் பண்புநலன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ரயில், கடிதம் போன்றவை எல்லாம் கிராமத்தையும் வந்தடைகின்றன. ஆனால் அவற்றால் மனித வாழ்வு மேம்படுகிறதா என்ற ஆதாரக் கேள்வி படத்தில் தொக்கி நிற்கிறது. இதற்கு விடைகாண விழையும் பார்வையாளனைப் படம் வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. இதுவே பதேர் பாஞ்சாலியின் பிரதான அம்சம். அக்காலச் சமூகம் எப்படி இருந்தது என்பதை உணர்த்தும் ஆவணமாக ஒரு புனைவு மாறுகிறது என்பதே பெரும் புதுமை.
வனாந்திரத்தில் காற்றின் ஓசையைக் கிழித்துக்கொண்டு ரயில் செல்வதை துர்காவும் அப்புவும் பார்ப்பது, பாட்டியின் மரணம், கடும் மழையின் சீற்றம், அதனால் நோய்ப் படுக்கையில் துர்கா வீழ்ந்து கிடப்பது போன்ற காட்சிகளின் படமாக்கத்தில் தென்படும் துல்லியமும் நேர்த்தியும் அழகியலும் பதேர் பாஞ்சாலியை அற்புதமான படமாக்குகின்றன. மனிதர்களிடையேயான பிணைப்பின் நெகிழ்ச்சி, வெறுப்பின் வெம்மை, நிறைவேறா எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகளை நிதானமாகவும் வலுவாகவும் தெளிந்த நீரோடை போல் நகர்ந்து விளக்கிச் செல்கின்றன.
பாரம்பரியம் என்னும் பெயரில் பழமைவாதத்தைப் பற்றிக்கொண்டு எஞ்சியிருக்கும் வாழ்வை நசுக்க இயலாது என்பதைப் படம் சொல்கிறது. ஆனால் மரபின் வழியே வந்த உயர் பண்புகளைக் கைவிடவும் முடியாது என்பதையும் அது உணர்த்துகிறது. அதனால்தான் துர்கா திருடிய மாலையை இறுதியில் அப்பு குளத்தில் வீசுகிறான். பூர்வீக கிராமத்தில் வாழ வழியின்றி அந்தக் குடும்பம் நகரத்தை நோக்கி நகர்ந்த பின்னர், அந்த வீட்டில் நாகம் ஒன்று புகுந்துகொள்கிறது. இது ஒரு எச்சரிக்கையன்றி வேறென்ன? சொற்களால் விளக்க முடியாத உயிர்ச் சித்திரமான பதேர் பாஞ்சாலியைப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. அதனாலேயே அது உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகிறது.
- செல்லப்பா, தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
http://tamil.thehindu.com/

No comments: