ஆச்சியை நம்பினால் கை விடமாட்டா! யாழில் தள்ளாடும் வயதிலும் கச்சான் விற்கும் பாட்டியின் தன்னம்பிக்கை

.

“ஆச்சியை நம்பினால் அவா கைவிடமாட்டா” என்று அடிக்கடி கூறும் 74 வயதான மூதாட்டி கந்தசாமி நாகம்மா தொல்புரத்தைச் சேர்ந்தவர். இவர் நீண்ட காலமாகத் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் கச்சான் வியாபாரம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் தான் வேறு ஒரு ஆலயங்களுக்கும் கச்சான் வியாபாரம் செய்யச் செல்வதில்லை எனவும், தான் 33 வயது முதல் இந்த ஆலயத்தில் கச்சான் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மூதாட்டி தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற ஆலய மகோற்சவத்திற்குச் சென்றிருந்த போது மேற்படி மூதாட்டியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவருடன் கதைத்த போது அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களாவன,
எனக்கு ஆறு பிள்ளைகள். மூன்று ஆம்பிளப் பிள்ளையள், மூன்று பொம்பிளைப் பிள்ளையள். அவர்கள் அனைவரும் திருமணம் முடித்து விட்டார்கள்.


எனது கணவர் வருத்தம் வந்து இறந்து நீண்ட காலமாகி விட்டது.நான் கச்சான் வியாபாரம் செய்து கஷ்டப்பட்டு எனது ஆறு பிள்ளைகளையும் வளர்த்தனான். எனது பிள்ளைகளுக்கு நான் பாரமாகவிருக்க விரும்பவில்லை. அதனால் தான் நான் இந்த வயதிலும் கச்சான் வியாபாரம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடாத்துகிறேன். “ஆச்சியை நம்பினால் அவா கைவிடமாட்டா ” என்று கூறி நீண்ட பெருமூச்சு விட்டார்.
ஆலயத் திருவிழாக் காலத்தில் மாத்திரமன்றி ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் நான் கச்சான் வியாபாரம் செய்து வருகிறேன்.
kachan paaddi
செவ்வாய், ஆடிச் செவ்வாய், கெளரி விரதம், நவராத்திரி ஆகிய விசேட நாட்களில் கச்சான் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.
அத்துடன் தேர், தீர்த்தம் ஆகிய உற்சவ நாட்களில் ஒரு நாளைக்குத் தலா 25 ஆயிரம் ரூபா வரை வியாபாரம் இடம்பெறும். ஆனால் திருவிழாக் காலத்தில் வியாபாரம் செய்வதற்கு 12 ஆயிரம் ரூபாவை நான் ஆலயத்திற்குச் செலுத்துகிறேன் .
நான் எனது ஊரிலிருந்து ஆலயத்துக்கு வாகனத்தில் வாடகைக்கு அமர்த்தி கச்சான் வியாபாரம் செய்வதற்கான பொருட்களுடன் ஆலயத்துக்கு அடிக்கடி வந்து செல்வதற்கும் பணம் செலுத்த வேண்டியுள்ளது. கச்சான் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் அதற்கான முதலுக்காக அதிக பணம் செலவாகிறது எனவும் கூறினார்.
குறித்த மூதாட்டி ஆலயச் சுற்றாடலிலுள்ள கடை வியாபாரிகளுக்கும்,ஆலயத்துக்கு அடிக்கடி செல்லும் பலருக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் தன்னிடம் கச்சான் வாங்க வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று அன்புடன் கதைகள் கூறி வழியனுப்புகிறார். இதன் காரணமாக அவரிடம் கச்சான் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பலர்.
நான் என்னை ஒரு ஊடகவியலாளனாக அறிமுகப்படுத்திய போது அந்த மூதாட்டியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .நான் அவரிடம் தகவலைப் பெற்று முடித்த பின் அருகிலிருக்கும் கடைகாரர்களுடன் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட காட்சி என்னை நெகிழ வைத்தது.
அப்போது ‘தன்னை இந்தத் தம்பி போட்டோவும் எடுத்துக் கொண்டு போறான்’ என்று மூதாட்டி கூறிய போது அருகிலிருந்த கடைக்காரர் அப்படி என்றால் பகிடியாகத் தலைக்கு டை அடித்திருக்கலாமே…! எனக் கூறினார். அப்போது குறித்த மூதாட்டி சிரித்துக் கொண்டே ” இயற்கை அழகு தான் அழகு” எனக் கூறினார். ஓ…. அனுபவம் தான் பேசுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
சந்திப்பு மற்றும் படம்: செ ரவிசா

No comments: