கடந்த பாராளுமன்றத் தேர்தலும், இரட்டைக் குடியுரிமையும்

.
 -      சட்டத்தரணி (பாடும்மீன்) சு.ஸ்ரீகந்தராசா


தேர்தல் அமைதியாக நடந்து முடிவடைந்துவிட்டது. தெரிவுசெய்யப்பட்டவர்களில் சிலர் அமைச்சர்களாகிவிட்டார்கள். பலர் அமைச்சராகும் கனவுகள் தகர்ந்துவிட்ட நிலையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்போல இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அலுங்காமல் குலுங்காமல் தேசியப் பட்டியலின் மூலம் நுழைய ஆயத்தமானவர்களில், ஏமாற்றமடைந்தவர்களில் சிலர் ஏதாவது மாற்றம் வராதா என்று இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கட்சிகளின் தலைமைகளுக்கு எதிராக கருத்துப்போர் தொடுத்துக் களம் இறங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் அண்மையில் வந்துகொண்டிருக்கும் சில பத்திரிகைச் செய்திகளின்படி,  சிலருக்கு இடிபோல வந்து, நிம்மதியைக் டுக்கின்றதா
இரட்டைக் குடியுரிமை விடயம் என்று எண்ண வைக்கிறது. செய்திகளில் சிலரைச் சம்பந்தப்படுத்திக் கேள்விக்குறிகளோடு கூறப்படும் விடயங்களில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது ஒரு புறம் இருக்க, விடயப் பொருள் பற்றிய விளக்கத்தினை அறிந்துகொள்வதில் அக்கறை செலுத்துவது அனைவருக்கும் பயனுள்ளது. இதுதான் விடயப் பொருள். இரட்டைக் குடியுரிமை!

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரை அமுலில் இருக்கும் இலங்கை அரசியல் அமைப்பிற்கு இவ்வருட ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட
19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டது. சனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தலே 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும், மேலும் சில விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அரசியல் அமைப்பின் 91 ஆவது பிரிவுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும், சிறப்பாக இரட்டைக் குடியிரிமையுள்ளோர் பற்றிய விடயமும் ஒன்றாகும்.


இலங்கைப் பிரசை ஒருவர் வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறுகின்றபோது அவரது இலங்கைக் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகிவிடும் என்பது சட்டத்தின் ஏற்பாடாகும். ஆனால், அவ்வாறு வேறு நாடு ஒன்றில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டவர் இலங்கைக் குடியுரிமையினையும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடே இரட்டைக் குடியுரிமையினைப் பெறுவதாகும்.  

பிற நாடு ஒன்றின் குடியுரிமையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் ல்லது அவ்வாறொன்றினைப் பெறுவதற்கு முன்னராயின் அதற்கான வாய்ப்பு இருப்பதை நிரூபிப்பதன் மூலம் இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இரட்டைக் குடியுரிமையினை பெற்றுக்கொண்ட ஒருவர் இலங்கையைப் பொறுத்தவரை மற்றைய பிரசைகளைப்போல வழமையான இலங்கைப் பிரசையாகத்தான் சட்டத்தினால் கணிக்கப்படுகின்றார். இலங்கைப் பிரசை ஒருவருக்கு உள்ள எல்லாவிதமான உரிமைகளும் அவருக்கு உண்டு.. 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இதுதான் நிலைமையாக இருந்தது.

ஆனால், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அரசியல் அமைப்பின் 91 ஆவது உறுப்புரையில் சேர்க்கப்பட்ட ஒரு வரி இரட்டைக் குடியுரிமை உள்ளவரது உரிமை ஒன்றினைப் பறித்துவிட்டது. அரசியல் அமைப்பின் 91 ஆவது பிரிவு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமையீனங்களைக் குறிப்பிடுகின்றது. அதில். முதலாம் பந்தியில் 13 ஆவது விடயமாக  "வேறு ஏதேனும் நாட்டின் பிரசையாகவும் உள்ள இலங்கைப் பிரசை ஒருவர்" ( "a citizen of Sri Lanka who is also a citizen of any other  country;”) ன்கின்ற வரி 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைப் பிரசை ஒருவர் வேறு ஏதாவது நாட்டின் பிரசையாகவும் இருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவோ ல்லது பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்புக்களில் கலந்துகொள்ளவோ முடியாது. எனவே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்போர் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படத் தகுதியற்றவர்களாவர்.

இலங்கைப் பிரசை அல்லாதவர்கள் எவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட முடியாது என்று அவ்வாறு தெரிவுசெய்யப்படுவதற்கு ஒருவர் இலங்கப் பிரசையாக இருத்தல் வேண்டும் என்று அரசியலமைப்பின் 89 ஆவது உறுப்புரை கூறுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டமோ அத்தகைய ஒருவர் இலங்கை பிரசயாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றது.

சரி பாராளுமன்ற உறுப்பினராகத்தானே வரமுடியாது, மாகாணசபை உறுப்பினராக வரலாம்தானே என்று சிலர் நினைக்கலாம். மாகாணசபைகள் சட்டம் அதற்கும் ஓர் ஆப்பு வைத்திருக்கிறது. அதாவது, "அரசியல் அமைப்பின் 91(1) ஆவது உறுதியுரையின் கீழ்த் தகைமையற்றவர்கள் மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவோ அல்லது சபை அமர்வுகளில் உறுப்பினராக அமரவோ வாக்களிக்கவோ முடியாது" என்று 1987 ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டம் கூறுகின்றது. எனவே 19 ஆவது திருத்தத்தின் காரணமாக இரட்டைப் பிரசாவுரிமையுள்ளவர்கள் மாகாணசபைகளுக்கும் தெரிவுசெய்யப்பட முடியாதவர்களாகின்றார்கள்.

ட்டம் இப்படியிருக்கையில், நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இரட்டைக் குடியுரிமை உள்ள சிலரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது எவ்வாறு சாத்தியமாக முடியும் என்பதைச் சற்று கருத்தில் எடுத்துக் கொண்டால் வினோதமான விடயங்கள் பல நமக்குத் தோன்றுகின்றன. அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1)         19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்போது ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்த ஒருவர் இரட்டைப் குடியுரிமையினைக் கொண்டிருந்து, அவர், மற்றைய நாட்டின் குடியுரிமையினை இரத்துப் பண்ணுவதில் கவனம் செலுத்தாமலோ அல்லது இரத்துப்பண்ணுவதற்கு விண்ணப்பித்தும் தேர்தல் திகதிவரை சட்டரீதியான இரத்துப்பண்ணல் நடவடிக்கை பூர்த்தியடையாமலோ இருந்திருக்கலாம்.

2)         வெளிநாடொன்றின் குடியுரிமையுள்ள ஒருவர், அதன்காரணமாக இலங்கைக் குடியுரிமையை இழந்தவராக இருந்து, இப்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பத்தின் பேரிலான நடவடிக்கை இன்னமும் முடிவுறாதிருந்திருக்கலாம். அதாவது இரட்டைக் குடியுரிமை அவருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. ஏனென்றால், மகிந்த இராசபக்ச அவர்களின் ஆட்சிக்காலத்தில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரசா உரிமை வழங்கல், மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதியாக வந்ததற்குப் பின்னர், கடந்த மார்ச் மாதம் 28 அம் திகதிதான் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. சில மாதங்களிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், இரட்டைப் பிரசா உரிமையினைப் பெறுவதற்கு அவகாசம் இல்லாத நிலைமை பலருக்கு இருந்தது. அது வழங்கப்படாத நிலையில் அவர் தனது வெளிநாட்டுக் குடியுரிமையினை இரத்துப் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. இரத்துப் பண்ணும் விண்ணப்பத்தை அவர் செய்திருந்தாலும், அவர் இன்னமும் இலங்கைப் பிரசையாகவில்லை. அதனால் அவர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட முடியாது.

3)         ஏதோ ஒரு வழியாக மிக விரைவாக எவரேனும் ஒருவர் இரட்டைக்குடியுரிமையினப் பெற்றிருந்தால் அல்லது ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை உள்ளவராக இருந்தால் அவருக்குத் தனது வெளிநாட்டுக் குடியுரிமையினைச் சட்டரீதியாக இரத்துப்பண்ணுவதற்கான அவகாசம் இருந்திருக்கவில்லை. ஏனெனில்  19 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பாராளுமன்றக் கலைப்பிற்கும் இடைப்பட்ட காலம் சில மாதங்களே ஆகும்
மேற்கத்திய நாடுகளில், சாதாரணமாகக் குடியுரிமையினை இரத்துப் பண்ணுவதாயின் ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும். மற்றுமொரு
நாட்டில் குடியுரிமையினைப் பெற்றமையினை அல்லது பெறவிருப்பதை நிரூபித்தாலன்றி அத்தகைய நாடுகள் தங்கள் நாட்டில் ஒருவருக்குள்ள குடியுரிமையினை இரத்துப்பண்ணும் விண்னப்பத்தினை அங்கீகரிக்க மாட்டா.

4)         இப்பொழுது மாகாண சபை உறுப்பினர்களாக இருப்பவர்களில் எவராவது இரட்டைக் குடியுரிமையுள்ளவராக இருக்கலாம். ஏனெனில் கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது இரட்டைக் குடியுரிமையுள்ளோர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட முடியாது என்ற நிலை இருந்ததில்லை. அத்தகையவர்களும் புதிய சட்டத்திருத்தத்தின்படி தமது பதவிகளை இழக்கவேண்டிவரலாம்.

5)         19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் வேட்பாளர்களின் இரட்டைக் குடியுரிமைத் தகைமையீனத்தினை பரிசீலித்துப் பார்க்கும் ொறிமுறை இன்னமும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

6)         தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டமையை செல்லுபடியற்றதாக்கும்படி,
19 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் ாராவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலன்றி, அவ்வாறு சட்டமுரணாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் கண்டுகொள்ளப்பட மாட்டார்களோ என்ற சந்தேக நிலையும் உள்ளது. ஆனால் இது அரசியல் அமைப்புக்கு முரணான விடயம் என்பதால் இதில் அரசு நிச்சயம் கவனம் செலுத்தும், செலுத்தியே ஆகவேண்டும்.

எனவே, இலங்கையின் இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இரட்டைக் குடியுரிமை விடயம் பலரின் நித்திரையைக் கெடுக்கும் ஒன்றாக இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாதிக்கப்படுபவர்கள் அரசியல் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் பரிகாரம் தேடுவதில் வெற்றியடையலாம்.

பரிகாரம் என்னவென்றால், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமையை என்னும் தகைமையீனம் தொடர்பான வரியினை, புதிய அரசால் தேர்தல் முறை தொடர்பாக விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒரு சரத்தினைச் சேர்ப்பதன்மூலம், பின்னோக்கிச் செயற்படக்கூடிய வகையில்(Retrospective) நீக்கிவிட்டால் அது இந்த இக்கட்டுக்குள்ளானவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
எதுவும் நடக்கும் நமது  இலங்கைத்திருநாட்டில் அதுவும் நடக்கலாம். யாருக்குத் தெரியும்?

No comments: