கடந்த 37 வருடங்களாக லைபீரிய மக்களுக்கு மருத்துவர் கனகசபை அர்ப்பணிப்புடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆற்றிய சேவையினைக் கௌரவிக்கும் வகையில் இந்த அதியுயர் விருதை அந்நாட்டின் ஜனாதிபதி வழங்கினார்.
கடந்த 15 வருடங்களாக லைபீரியாவில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்திருந்ததுடன் அண்மைய நாட்களில் எபோலா தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. லைபீரியாவின் இடர்மிகுந்த இந்த நாட்களிலும் மருத்துவர் கனகசபை தனது பணியினை மேற்கொண்டார்.
கடந்த 40 வருடகால வரலாற்றில் ஆபிரிக்காவின் நட்சத்திரம் என்ற விருதினைப் பெற்ற இரண்டாவது வெளிநாட்டு மருத்துவர் இவரே. நாட்டின் 168ஆவது சுதந்திர தின நிகழ்வில் வைத்தே இந்த அதியுயர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. லைபீரியாவின் சுகாதார மற்றும் சமூகநல அமைச்சு முன்னெடுக்கும் வாய்ச்சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவராக தற்போது மருத்துவர் கனகசபை செயற்படுகிறார். லைபீரியாவின் பல்வேறு மருத்துவமனைகளிலும் பணியாற்றி கனகசபை லைபீரியாவின் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார்.
யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான கனகசபை லண்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் தேர்விலும் சித்திபெற்றிருக்கிறார். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் 1969ஆம் ஆண்டு தனது இளமானிப் பட்டத்தினைப் பெற்ற இவர் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையிலும் தெஹிவளை ஆதார வைத்தியசாலையிலும் (1971-73) பல்மருத்துவராகப் பணியாற்றினார்.
லைபீரிய மக்களுக்கும், ஆபிரிக்க மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் லைபீரியர்களையும் வெளிநாட்டவர்களையும் கௌரவிக்கும் வகையில் 1920ஆம் ஆண்டு தொடக்கம் ஆபிரிக்காவின் நட்சத்திரம் விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment