என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவிகள்

.
தமிழ்   மரபிலும்  தமிழ்  இசை  மரபிலும்  பறையின்  இடம்பேராசிரியர் சி. மௌனகுரு


பறை பற்றி  இப்போது பலர் பேசுகிறார்கள்
மட்டக்களப்பில் பெண்கள்  சேர்ந்து  செய்த  பறை முழக்கம்  ஒன்றையும்  நான் இணையத்  தளத்திலும்  பார்த்தேன்.  மிக்க  மகிழ்ச்சியாக  இருந்தது.
இப் பறை  வாத்தியத்தை  நாம்  கிழக்குப்  பல்கலைக்  கழகத்தில்  1996 இல் அறிமுகம் செய்தோம்.   இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.  அப்போது நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் தலைவராயிருந்தேன்.
கிழக்குப் பல்கலைக் கழகம் 1996 இலிருந்து வருடாவருடம் உலக நாடகதின விழாவை நடத்தி வந்தது. எமது உலக நாடக தின விழாவினை பறைமுழக்கத்தோடுதான் ஆரம்பித்தோம்.  அது முதல் படி
களுதாவளையிலிருந்து  பாரம்பரிய பறை மேளக் கலைஞரும் மூப்பனுமான பெரியவர் ஆனைக்குட்டி என்பவரது  தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது.  இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்.  இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதாவளையச் சேர்ந்தவரும்  இன்று    விரிவுரையாளராயிருப்பவருமான  அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்.
அவரோடு  சேர்ந்து  எனக்கு  மிகுந்த வலதுகரமாக  நின்றவர் பாலசுகுமார்.   உதவியாக  இருந்தவர்  ஜெயசங்கர் .  முதன் முதலில் பறை தூக்கி  அடித்த  பல்கலைக் கழக  விரிவுரையாளர்  பாலசுகுமாரே.




அதனால் அவர் பெருமை பெற்றார் .  மாணாக்கருக்கு ஒரு வழிகாட்டியுமானார்.   ஒவ்வொரு  ஆண்டும்  பறைமேளக் கூத்துடந்தான் வட்டக் களரியில்  நாடக விழா  ஆரம்பமாகும்.
பின்னால் இந்தப் பறையை பாரம்பரிய பறை மேளக் கலைஞர்களைக்  கொண்டு  மாணாக்கருக்குப் பழக்கினோம்.   ஆரம்பத்தில் பறை பழக மாணவர்கள்   தயக்கம்  காட்டிய  வேளைகளில்  நாங்கள்  அவர்களுக்கு தமிழ் மரபிலும்  தமிழ்  இசை  மரபிலும்  பறையின்  இடம் பற்றி வரலாற்று  விளக்கமளித்ததோடு,   பின் தங்கிய நிலையிலிருந்த பறைவாத்தியம்  இன்று   தமிழகத்தில் முன்வந்த  நிலையையும் அதற்கான  காரணங்களையும்  கூறி   ஒரு தத்துவார்த்த  பலம்  அளித்தோம்.
விரும்பிச்  சேர்ந்தோர்  பலர், விருப்பமின்றிச்  சேர்ந்தோர்  பலர்
அப்படிப் பயின்ற   அப்பறையை   பின்னர்  நாடக  விழாக்களில்  பயன் படுத்தினோம்.
நுண்கலைத்  துறை  வழங்கும்  அதி உயர்  விருதான  தலைக்கோல் விருதினை   பறை  மேளக்  கலைஞர்  பரசுரமனுக்கு  அளித்துக்  கவுரவம் செய்தோம்.
அவருக்குப் பொன்னாடை அணிந்து கவுரவித்தவர் அன்று பல்கலைக் கழக உபவேந்தராயிருந்த பேராசிரியர் மூக்கையா அவர்கள். நுண்கலைத் துறைத் தலைவர்  என்றவகையில் நான் தலைக்கோல் வழங்கினேன்.
பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும்  எழுந்து நின்று கரகோசம் செய்ய அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது பரசுராமன் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டு  நின்றார்.  அற்புதமான காட்சி அது.நாமும்  அதனால்  கவுரவம்  அடைந்தோம்.


அவரிடம் பறை மேளம் பழகிய எமது மாணவர்கள் சிலர்  இன்று இங்கு விரிவுரையாளர்களாக  இருக்கிறார்கள். (மோகனதாசன், சந்திர குமார்,)
பின்னாளில் நாம்  ஒரு  இன்னிய  அணியை   உருவாக்கினோம்.
மட்டக் களப்பின்  சகல  தோல்  இசைக்கருவிகளையும்  உள்ளடக்கிய அவ்  இன்னிய  அணியில் பறை பிரதனமான வாத்தியமாக அமைந்தது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த  இரண்டு  இஸ்லாமிய  மாணவர்கள் இங்கு
குறிப்பிடத்தக்கவர்கள்.  அழகாக தோல் வாத்தியங்கள் வாசிப்பார்கள்
பலத்த  எதிர்ப்புகள்  மத்தியில்  நாம்  இதனச்  சவாலாக  ஏற்றுச் செய்தோம்  என்பதனை   அங்கு  அப்போது  கல்வி  கற்றோரும்  பங்கு கொண்டோரும்  மாத்திரமே அறிவர்.
மிகுந்த  போராட்டத்தின்  பின்  அதனைக்  கிழக்குப்  பல்கலைக்  கழகப் பட்டமளிப்பு  விழாவுக்கான  முன்னணி வாத்தியமாக வரச் செய்தோம். இதற்கு  எமக்குப்  பலர்  உதவியாக  இருந்தனர், உற்சாகமூட்டினர்.


இப்போது  அங்குள்ள   பலருக்கு  இது  தெரிவதில்லை.
மாணவிகள்  பறை   வாசிக்க வரத்  தயங்கிய  வேளயில்  துணிந்து பறை தூக்க  முன் வந்தவர்கள்தான்  சுகன்யா  என்ற மாணவியும் உமா என்ற மாணவியும்.
அவர்களுடைய அந்தத் துணிவு  இன்றளவும்  என்  மனதில்
மலையாக  நிறைத்து  நிற்கிறது
முதல் படத்தில் பறை தூக்கிச் செல்பவள் சுகன்யா இடது புறத்தில் மத்தாளத்துடன் செல்பவர்தான் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய  மாணவர்  சுஹைப்.
இரண்டாவது  படத்தில் காணப்படுபவர்கள் சுகன்யாவும் உமாவும்.
மணவர்களே  நீங்கள்  என்  மனதில்  அழியாது  நிற்கிறீர்கள்.


----0---



No comments: