அவுஸ்திரேலியாவில் நடந்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 27 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்.

.


இலங்கையில்   நீடித்திருந்த  போரினால்  தமது  பெற்றோரை  அல்லது  குடும்பத்தின்  மூல  உழைப்பாளியை  இழந்திருந்த ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  உதவுவதற்காக 1988  ஆம்  ஆண்டு  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில் தொடங்கப்பட்ட  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  என்னும் தன்னார்வத்தொண்டு  நிறுவனத்தின்  27   ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்    அண்மையில்  மெல்பனில்  வேர்மன்  தெற்கு  சனசமூக  நிலைய  மண்டபத்தில்  நடந்தது.
நிதியத்தின்  நடப்பாண்டு  தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  தலைமை  தாங்கினார்.
ஆரம்பத்தில்  ஆறு மாணவர்களுக்கு  உதவிய  இந்த  அமைப்பு படிப்படியாக  எண்ணிக்கையை   அதிகரித்து  இதுவரையில்  சுமார் ஆயிரம்  மாணவர்களுக்கு    உதவி   வழங்கி,  அவர்கள்  தமது உயர்தரக் கல்வியை  பூர்த்திசெய்யும்  வரையில்  தொடர்ச்சியாக சேவையாற்றியது.
திரு. விமல் அரவிந்தன்  நிதியத்தின்  உறுப்பினர்களுக்கு  நன்றி தெரிவித்து    உரையாற்றுகையில்  மேலும்  பல  மாணவர்களுக்கு இதுவரையில்  உதவும்  அன்பர்கள்  இல்லாமலேயே   நிதியத்தின் கையிருப்பிலிருந்து   உதவி  வழங்கப்படுகிறது  என்பதையும் சுட்டிக்காட்டி,   மேலும்  உதவும்  அன்பர்களை   நிதியத்தில் இணைப்பதற்கு   நிதிய  உறுப்பினர்கள்  முன்வரவேண்டும்  என்றார்.

கடந்த   ஆண்டு  இறுதியில்  நிதியத்தினால்  பயடைந்த  பல மாணவர்கள்  பல்கலைக்கழக  கல்வியை   பூர்த்திசெய்துகொண்டு பட்டதாரிகளாகியிருப்பதையும்,    மேலும்  சில  மாணவர்கள்  இந்த ஆண்டு  தொடக்கத்தில்   பல்கலைக்கழகங்களுக்கு  பிரவேசித்திருக்கும்  தகவல்களையும்  குறிப்பிட்டார்.
இலங்கையில்  கிழக்கு  பல்கலைக்கழகத்தில்  பயின்றவாறு நிதியத்தின்  உதவியைப்பெற்று  பட்டதாரிகளான   மாணவர்கள் நிதியத்திற்கும்  உதவிய  அன்பர்களுக்கும்  நன்றி  தெரிவிக்கும் முகமாக   வழங்கியிருக்கும்  நினைவுப்பரிசும்  உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
வன்னியில்   நடந்த  இறுதிப்போரில்  தமது  தந்தையரை   இழந்த மேலும்  30  மாணவர்களுக்கு  நிதியம்  உதவி வழங்கத்தொடங்கியிருக்கும்  தகவலும்  தெரிவிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையை   நிதியத்தின்  துணை   நிதிச்செயலாளர்  திரு. லெ. முருகபூபதி  சமர்ப்பித்தார்.   நிதியறிக்கையை   நிதிச்செயலாளர்  திருமதி வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா  சமர்ப்பித்தார்.
ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  கலந்து  கொண்ட  அன்பர்கள்  சிலர் புதிதாக  இணைத்துக்கொள்ளப்பட்ட   மாணவர்களின் விண்ணப்பங்களை   ஏற்றுக்கொண்டு  உதவமுன்வந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
             மேலும் சில மாணவர்களுக்கு உதவுவதற்கு அன்பர்களின் ஆதரவை நிதியம் எதிர்ப்பார்க்கிறது. மேலதிக விபரங்களுக்கு தலைவர் திரு. விமல் அரவிந்தன்: 0414446796

மின்னஞ்சல்: kalvi.nithiyam@yahoo.com    -       www.csef.org

No comments: