கவிஞன் கவிதை: நிலம், போர், காதல்

.


இலங்கைத் தமிழ்க் கவிதைகள், இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுபட்டவை. புதுக்கவிதை பிறப்பதற்கு முன்பான இந்தியத் தமிழ்க் கவிதைகளுடன் இலங்கைத் தமிழ்க் கவிதைகளுக்கு உறவு உண்டு. அந்தக் காலகட்டத்திய மரபின் தாக்கத்தை இலங்கைத் தமிழ்க் கவிதைகளும் பிரதிபலித்தன. ஆனால் புதுக்கவிதை பிறந்ததற்குப் பிறகான இந்தியத் தமிழ்க் கவிதைகளின் நிலை வேறு. அவற்றில் மரபின் பாதிப்பு உள்ளடக்கம் ரீதியாகவும் மெல்லக் குறைந்து இன்று கிட்டத்தட்ட இல்லாமல் ஆகியிருக்கிறது. மாறாக இலங்கைத் தமிழ்க் கவிஞர்கள் மரபை உள்வாங்கி தங்கள் நிலப் பதிவுகளை இந்தப் புதிய வடிவத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களுள் ஒருவர்தான் கவிஞர் சேரன்.
மஹாகவி உருத்திரமூர்த்தி இலங்கைத் தமிழ்க் கவிதையின் முன்னோடிக் கவிஞர். ‘பாரதியின் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால் அதன் மறுகிளை மஹாகவி உருத்திரமூர்த்தி’ என்கிறார் இலங்கைக் கவிஞர் சண்முகம் சிவலிங்கம். சண்முகம் சிவலிங்கமும் எம்.ஏ.நுஃமானும் மஹாகவிக்கு அடுத்த தலைமுறைக் கவி ஆளுமைகள். இந்த மூவரும்தான் சேரனின் ஆதர்ச கவிகள். மஹாகவியின் கவிதைகள் மரபிலானவை. சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான் இருவரின் கவிதைகளையும் அதன் அடுத்தடுத்த நிலைகளாகக் கொண்டால் சேரன் கவிதைகளுக்கு இதில் மூன்றாம் நிலை. தரவரிசையல்ல இது; கவிதை அடைந்த வடிவ மாற்றம்.
இனப்பிரச்சினையும் கலவரங்களும்

சேரன் 1978-ல்தான் தீவிரமாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவரது கவிதைகள் 1983-ல் தொகுக்கப்பட்டு ‘வயல்’ காலாண்டிதழில் வெளிவந்தன. சேரன் தீவிரத்துடன் இயங்கிய இந்த 1978-1983 காலகட்டத்தில்தான் இலங்கையில் இனப் பிரச்சினை வன்முறையாக வெளிப்படத் தொடங்கியது. இனக் கலவரம் 1981-ல் நடந்தது; யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அவரது ‘இரண்டாவது சூரிய உதயம்’கவிதை யாழ்ப்பாண நூலக எரிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 1981-க்குப் பிறகு வன்முறைகள் தீவிரமடைந்தன. சேரன் கவிதைகளுக்கு இந்தச் சூழல் மையமாகியது.
உச்சரிக்க ஏதுவான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கவிதைகள் சேரனுடையவை. அதே காலகட்டத்தில் தமிழகக் கவிதைகளில் நடந்த தொழில்நுட்ப ரீதியிலான சோதனை முயற்சிகளுடன் சேரனின் கவிதைகளை ஒப்பிட முடியாது. கவிதைகளை, படைப்பு வீச்சுக்குள் மட்டும் கட்டிப்போட சேரன் நினைக்கவில்லை. ஓசைகளையும், உணர்ச்சிகளையும் ஓங்கி ஒலிக்கச்செய்ய விரும்பினார். அல்லது இந்தப் பண்பு சேரன் கவிதைகளுக்கு உண்டு. அதே சமயம் தமிழகத்தின் முற்போக்குக் கவிதைகளைப் போல சேரன் கவிதைகள் வெளிப்படையானவையும் அல்ல. கோஷங்களாகவோ கூப்பாடுகளாகவோ அல்லாமல் ஒடுக்கப்படுவதையும் உரிமையையும் ஒரு வலுவான மொழியில் சேரன் கவிதைகள் உரைக்கின்றன.
சேரன் கவிதைகளின் மொழிக்கு மரபின் தாக்கம் உண்டு. ‘குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும்’ என்ற புறநானூற்றுப் பாடலின் இதே ஓசை நயத்தைச் சேரனின் சில கவிதைகள் அப்படியே தாங்கி வருகின்றன. சில கவிதைகள், நாட்டார் பாடல்களின் ஒசை நயத்தைக் கொண்டுள்ளன. ஆனால் எல்லாக் கவிதைகளிலும் ஆங்கிலக் கவிதைகளின் இறுக்கத்தையும் மவுனத்தையும் சேரன் உட்கிரகித்துள்ளார். இந்தப் பண்புகள்தாம் முற்போக்குக் கவிதைகளிலிருந்து சேரனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
பறவைகள் மரங்கள் வயல்வெளிகள்
சேரன் கவிதைகள் வெளிப்படும் நிலம், இலங்கையின் வடகிழக்குப் பகுதி. அங்குள்ள பறவைகள், தென்னை மரங்கள், பனைகள், வயல் வெளிகள் எல்லாமும் சேரனின் கவிதைகளில் சித்திரங்களாக உயிர்பெறுகின்றன. ஓவியராகவும் இருக்கும் சேரனால் அவற்றைத் தன் கவிதைகளுக்குள் வரைந்து காட்டவும் முடிகிறது. தன் சொந்த நிலத்தின் மீதான சேரனின் பிடிப்பு, இனவாதப் பிரச்சினைக்குப் பிறகு மூர்க்கமடைகிறது.
“நூறுநூறாயிரம் தோள்களின் மீது/ ஏறி நின்று,/எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்./ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி/… அலைகளை மீறி…/எங்கும் ஒலிக்கிறது…/எனது நிலம்/எனது நிலம்” என உரத்துச் சொல்கிறார் சேரன்.
பின் அவரது நிலத்தின் காட்சிகள் மாறத் தொடங்குகின்றன. ‘அரசமரக் கிளைகளிலே குயில் கூவும்’ சப்தம் மட்டும் கேட்கும் அழகான வேளைகளின் மீது ஜீப் வண்டிகள் உறுமுகின்றன; சப்பாத்தொலிகள் தடதடக்கின்றன. மரங்களும் இலைகளும் நிறங்களை இழக்கின்றன. நிலத்திலும் காற்றிலும் அந்நியத்தன்மை கலக்கிறது. அந்த நகரத்து மக்கள் முகங்களை இழக்கின்றனர். சேரன் இந்த நிலக் காட்சிகள் வழியாகத் தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்படும் கலாச்சாரப் படுகொலைகளை மறைமுகமாகச் சித்தரிக்கிறார். பிற்காலக் கவிதைகளில் பனி பொழியும் கனடா நிலக் காட்சிகள் வருகின்றன.
சேரனின் புரட்சிக் குரல்
சேரன் கவிதைகளில் அறைகூவல் இருக்கிறது; புரட்சிக்கு அழைக்கும் குரல். ‘சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக’ என்கிறார். கணவனை இழந்த பெண்ணிடம், “ ‘அப்பா’ என அலறித் துடிக்கிற/ மழலைக்கு என்னதான் சொல்வாய்?/... கொடுமைகள் அழியப் போரிடச் சொல்” என்கிறார். ஆனால் இவை கவிதைக்காக உருவாக்கப்பட்ட வெற்றுச் சொற்கள் அல்ல; சடங்கான அழைப்பும் அல்ல. திட்டமிட்ட, குறிக்கோள் உள்ள பிரகடனம். ஏனெனில் இனப் பிரச்சினையை ஒற்றத்தன்மையில் பார்க்கவில்லை அவர். சிங்கள ராணுவ வீரனின் பக்கம் நின்றும் பார்க்கிறார். தன் மனைவிக்கு ஒரு சிங்கள ராணுவ வீரன் எழுதும் கடிதமாக விரியும், ‘ராணுவ முகாமிலிருந்து கடிதங்கள்’ என்னும் கவிதையில் இதை உணர முடிகிறது.
‘அன்பான நகர்ப்புறத்துக் கொரில்லாவே !/என் வந்தனங்கள் உனக்கு” எனத் தொடங்கும் கவிதையிலும் சிங்கள மக்கள் மீது போராளி இயக்கங்களால் நிகழ்த்தப்படும் வன்முறையைத் தவறெனச் சுட்டிக்காட்டுகிறார். அதுபோல போராளி இயக்கங்களின் ‘இரவல் புரட்சியை’ விமர்சிக்கவும் சேரன் தயங்கவில்லை.
பாடுபொருளான காமம்
சேரனின் பிற்காலக் கவிதைகளில் காமம் முக்கியமான பாடுபொருளாக வெளிப்படுகிறது. இது அவரது புலம்பெயர்வுக்குப் பிறகானதாக இருக்கலாம். காமம் என்றால் ஆழ்ந்து, ஊறித் திளைத்த காமம். அது வாதையுடன் வெளிப்படுகிறது. “குருதியும் தசையும் ஈரமும்/விலகிப் போன அந்தக் கணங்களில்/இருவருடைய எலும்புகளும் பெரும் விவாதத்தில் ஈடுபட்டு/நொருங்கின” என்கிறது ஒரு கவிதை. சில கவிதைகளில் காமம் ஓர் உன்னதத்தை அடைகிறது. “சுழலும் உலகம் தன் அச்சில் மாறிச்/சுழல்க சுழல்க/ஒளிரும் கண்ணும் உடலும் இன்னும்/மலர்க மலர்க” என்கிறது மற்றொரு கவிதை. திறக்கப்படாத மதகிலிருந்து வெள்ளம் பிரவாகம் எடுப்பதுபோல, சேரன் கவிதைகளிலிருந்து காமம் பாய்ந்து வருகிறது.
சேரன் தொடக்க காலக் கவிதைகள் 1972-ம் ஆண்டில் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது. கிட்டதட்ட நாற்பதாண்டு களை அவர் கவிதை உலகம் கடந்து வந்திருக்கிறது. இதற் கிடையில் அவரது கவிதையின் மையமான இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறி, விடுதலைப் போரும் தோல்வியில் முடிந்துவிட்டது. ‘எனது நிலம்’ எனும் சேரனின் உரத்த குரல் அவருடைய சமீபத்திய ‘காடாற்று’ தொகுப்பில் இல்லை. போரின் இரத்த சாட்சியாக இந்தத் தொகுப்பு விரிகிறது.
ஒட்டுமொத்தமாக சேரன் கவிதைகளை வாசிக்கும்போது அவற்றில் “எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும், தவிப்பையும், கொதிப்பையும், ஆற்றாமையையும், முடிவற்ற ஒரு பெருங்கனவையும்” உணர முடிகிறது. இது கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இலங்கை இன விடுதலைப் போராட்டத்திற்கும் பொருந்தக்கூடியது.
nantri http://tamil.thehindu.com/

No comments: