இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் திருகோணமலையில்..!

மண்டூர் கொலைச் சம்பவம்: மூவர் கைது

வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் விசாரணை
.
பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுகின்றது



ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் திருகோணமலையில்..!

24/06/2015 காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் திருகோணமலை  மாவட்டத்திற்கான விசாரணை அமர்வு எதிர்வரும் (27)சனிக்கிழமை  தொடக்கம் (30)செவ்வாய்க்கிழமை  வரை இடம்பெறவுள்ளது என்று ஆணைக்குழுவின் நிருவாக உத்தியோகத்தர் எச்.டபிள்யூ. குணதாஸ தெரிவித்தார்.







குறித்த தினங்களில் அந்த ஆணைக்குழு திருகோணமலை மாவட்டத்தில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சாட்சியங்களைப் பதிவு செய்ய உள்ளது.

சனிக்கிழமையும் மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
அந்த இரு தினங்களிலும் மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 326 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான சாட்சியமளிப்புத் திகதி குறித்த கடிதங்கள் ஆணைக்குழுவினால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி சனிக்கிழமையன்று 157 பேர் விசாரிக்கப்படவுள்ளனர்.
ஞாயிறன்று 169 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
29 ஆம் திகதி திங்களும் 30 ஆம் திகதி செவ்வாயன்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பற்றிய சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.
இதற்கென பதவிசிறிபுர, கோமரங்கடவெல, குச்சவெளி, கந்தளாய், மொறவௌ ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் 29 ஆம் திகதி திங்களன்று இடம்பெறும் சாட்சியமளிப்புக்காக 181 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விசாரணை இறுதித் தினமான செவ்வாயன்று இடம்பெறும் விசாரணையில் 170 பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும், இதுவரை தமது உறவுகள் காணாமல் போனது பற்றி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த அமர்வுடன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள காணாமல் போனோர் தொடர்பான சகல முறைப்பாடுகளையும் நிறைவு செய்வதற்கு தமது ஆணைக்குழு முயற்சிப்பதாக அவர்கூறினார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதின்படி இந்த அமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 677 பேர் விசாரிக்கப்படவுள்ளனர்.
சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் குறித்த தினங்களில் உரிய இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
வழமையான தமது விசாரணையில் நாளொன்றுக்கு 60 பேரின் விசாரணை மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் இம்முறை நாளொன்றுக்கு 120 பேர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு கூறுகின்றது.


அதற்கேற்றபடி ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ. திலகரத்ன ரத்னாயக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரெத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல்போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 


மண்டூர் கொலைச் சம்பவம்: மூவர் கைது



23/06/2015 மட்டக்களப்பு மண்டூரில் நாவிதன்வெளி சமூக  சேவை அதிகாரியான கே.மதிதயான் எனும் சிவில் அதிகாரியொருவர் கடந்த மாதம் 26 ஆம் திகதியன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் மூவர்  கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தலைமையக புலனாய்வுப் பொலிஸ் அதிகாரியின் வழி நடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பொலிஸாரும் இணைந்து மூன்று அணியாக புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக வெல்லாவெளி, திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த விடுதலைப் புலி இயக்க முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டு கொழும்பு புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.   நன்றி வீரகேசரி 

வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

23/06/2015 வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வட மாகாணசபை உறுப்பினர்கள் யாழ் சபா மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி


மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் விசாரணை

22/06/2015 முன்னாள் விளையாட்டுத்துறை  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர்  விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி






பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுகின்றது


26/06/2015 பாராளுமன்றம் இன்று நள்ளிரவு  கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.  இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வெளியாகும் எனவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. 
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு அடுத்த மாதம் ஜீலை 6 ஆம் திகதி முதல் 15 திகதி வரை ஏற்றுகொள்ளப்படும் எனவும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் செப்டம்டபர் முதலாம் திகதி கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி


No comments: