கன்பராவில் நடந்த கலை, இலக்கிய, கல்விச் செயற்பாட்டுக்கான ஒன்றுகூடல்

.  ரஸஞானி


" உலகின்  எப்பகுதிக்குச் சென்றாலும்   தமிழின் தொன்மையையும்   கலை,  இலக்கியத்தின் செழுமையையும்  போற்றிப் பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள்   முன்னணியில்   நிற்கின்றனர் "
                   கப்பலோட்டிய  தமிழனின்   பேரன்  புகழாரம்
கண்காட்சிகள்,  நூல்களின்  அறிமுகம்,  கூத்து  குறும்படக்காட்சி,   கலந்துரையாடல்  சங்கமித்த  விழா
 முள்ளிவாய்க்கால்  அநர்த்தத்தை   நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு   உதவும்   பணிகளை  மேலும்    விஸ்தரிக்க   இலங்கை   மாணவர்   கல்வி நிதியம்  நடவடிக்கை
                                                                                 


"  ஈழத்தமிழர்கள்   உலகின்  எந்தப்பகுதிக்குப் பிரவேசித்து  புகலிடம் பெற்றாலும்,   தமது  தாய்மொழியின்  தொன்மையையும்  தமிழ் கலை,   இலக்கியத்தின்  பராம்பரியத்தையும்  பேணிப்பாதுகாத்து வளர்ப்பதில்   முன்னணி   வகிப்பவர்கள்.   அதனால்தான் வெளிநாடுகளில்   தமிழ்  சார்ந்த -  தமிழ்  கலை,   இலக்கியம் தொடர்பான   சிந்தனைகள்  வெகுசிறப்பாக  முன்னெடுக்கப்படுகின்றன. அத்தகைய   ஒரு  நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதையிட்டு  மிகவும் பெருமைப்படுகின்றேன். "    என்று    கப்பலோட்டிய   தமிழன்  .. சிதம்பரப்பிள்ளையின்  பேரன் பேராசிரியர்   காளிராஜன் ,  அவுஸ்திரேலியா  கன்பரா  மாநிலத்தில் கடந்த  16   ஆம்   திகதி   சனிக்கிழமை   நடைபெற்ற  கலை,  இலக்கிய சந்திப்பு  நிகழ்வினை   மங்கள  விளக்கேற்றி  தொடக்கி வைத்து உரையாற்றுகையில்     தெரிவித்தார்.


கன்பரா   கலை,   இலக்கிய  ஆர்வலர்  திரு.  நித்தி  துரைராஜாவின் ஏற்பாட்டில்   கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள்  சங்கத்தின் மண்டபத்தில்    நடந்த  இந்நிகழ்வில்  நூல்கள்,   இதழ்களின் கண்காட்சியும்   தமிழ்  வளர்த்த  சான்றோர்கள்,   மறைந்த  தமிழ் அறிஞர்கள்,     இலக்கிய  படைப்பாளிகள்,  ஆய்வாளர்களின் ஒளிப்படக்காட்சி,    மற்றும்  நூல்களின்  அறிமுகம்,   பேராசிரியர் மௌனகுருவின்    இராவணேசன்  கூத்து  குறும்படக்காட்சி என்பனவற்றுடனும்    சிறப்பாக  நடைபெற்றது.
            திருமதி   கௌரி   தயாளகிருஷ்ணனின்   வரவேற்புரையுடன் ஆரம்பமான     இந்நிகழ்ச்சிக்கு  தலைமையேற்ற  எழுத்தாளர்  திரு. லெ. முருகபூபதி   உரையாற்றுகையில் -

மருத்துவம்,   கல்வி,   பொறியியல்,   பொருளாதாரம்,  உட்பட  பல தொழில்   துறைகளிலும்  மாநாடுகள்,   கருத்தரங்குகள்,  பயிலரங்குகள் நடைபெற்றுவருகின்றன.   அதனால்தான்    இந்தத்துறைகளில்  புதிய கண்டுபிடிப்புகளும்  மாற்றங்களும்  முன்னேற்றங்களும் தொடருகின்றன.    இந்தத்துறை சார்ந்தவர்களின்   பயன்பாட்டுக்கு குறித்த   நிகழ்வுகள்  இன்றியமையாது  இருப்பதுபோன்றே   கலை, இலக்கிய  வாதிகளுக்காக  நடத்தப்படும்  சந்திப்புகளும் கருத்தரங்குகளும்    மாநாடுகளும்  அமைகின்றன
 கலையும்,   இலக்கியமும்  அவற்றில்  ஈடுபடுபவர்களுக்கு தொழில்தான்.    அதனால்தான்  பாரதியும்  தமக்குத் தொழில்  கவிதை என்றார்.    கலை,  இலக்கிய  சந்திப்புகள்  இந்தத்துறையின்  வளர்ச்சிக்கு    முக்கியமாகத்திகழுகின்றன.   அதேவேளையில்  அதற்காக   பாடுபட்டு  உழைத்த  முன்னோர்களையும் நினைவுபடுத்திக்கொண்டு    பணிதொடருகின்றோம்.   அந்தப்பணிகளை அடுத்த  தலைமுறையிடமும்  முன்னெடுத்தல்  வேண்டும்." -  என்று குறிப்பிட்டார்.

கன்பராவில்   வதியும்  கவிஞி  திருமதி  ஆழியாள்  மதுபஷினி, 'புலம்பெயர்  கவிதைகள் '  என்னும்  தலைப்பில் உரைநிகழ்த்துகையில்,   முன்னோர்களிலிருந்து  தற்காலத்தில் புலம்பெயர்ந்து   எழுதுபவர்கள்  வரையில்  வேறு  வேறு  திணைகளின்   ஊடாக  மக்களின்  வாழ்வியல்  மாற்றங்களை -புலப்பெயர்வுகளை    பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள்  என்பதற்கு ஆதாரமான   தகவல்களை   விளக்கினார்.



சிட்னியில்   வதியும்  எழுத்தாளர்  திருமதி  தேவகி  கருணாகரனின் அன்பின்   ஆழம் சிறுதைத்தொகுதியை   மூத்த  தமிழ்  அறிஞர் அமரர்   சிவகருணாலயப் பாண்டியனாரின்  மகன்   சட்டத்தரணி திருவருள்   வள்ளல்   அறிமுகப்படுத்தி    மதிப்பீட்டுரையை சமர்ப்பித்தார்.
கலைஇலக்கிய  ஆர்வலர்  திரு. சிவசபேசன்,   விலங்கு  மருத்துவர் நடேசனின்  புதிய  சிறுகதைத்தொகுதி  மலேசியன்  ஏர் லைன்  370 நூலைப்பற்றிய   தமது  வாசிப்பு  அனுபவத்தை     வித்தியாசமான முறையில்  (Power Point Description )     பகிர்ந்துகொண்டார்.

முருகபூபதியின்  சொல்ல  மறந்த  கதைகள்  நூலை   திருமதி கௌரி தயாளகிருஷ்ணனும்,    நடேசனின்  அசோகனின்  வைத்தியசாலை நாவலை   திரு. லெ. முருகபூபதியும்  அறிமுகப்படுத்தி  உரையாற்றினர்.
நூல்களின்   சிறப்புப்  பிரதிகளை   திரு. பேரின்பராஜா,   மருத்துவ கலாநிதிகள்  கார்த்திக்,   சிவகுமாரன்,   பல்  மருத்துவர்  திருமதி அபிராமி   யோகநாதன்  ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.

மருத்துவக்கலாநிதி   கார்த்திக்  கருத்துரை   வழங்கினார்.   திருமதி தேவகி   கருணாகரன்  ஏற்புரை   நிகழ்த்தினார்.

பேராசிரியர்  மௌனகுரு  நடித்த  இராவணேசன்  கூத்தின் குறும்படக்காட்சியும்  காண்பிக்கப்பட்டது.

 மௌனகுரு  தமது  இளமைப்பராயம்  தொட்டு  இன்று   70  வயது கடந்த   நிலையிலும்  கூத்துக்கலையுடன்  ஒன்றித்து வாழ்ந்து வருவதாக  விதந்துரைத்து,   இராவணேசன்  கூத்து  பற்றிய அறிமுகவுரையை  நாடகக்கலைஞர்  திரு. யோகானந்தம் நிகழ்த்தினார்.
பேராசிரியர்  மௌனகுரு  அவர்கள்  அனுப்பியிருந்த  செய்தியும் வாசிக்கப்பட்டது.

அவர்  அச்செய்தியில்  குறிப்பிட்டிருந்ததாவது:
" கன்பராவில்   இராவணேசனைத்  திரையிட  தாங்கள்  எடுக்கும்  முயற்சிக்கு  என்  நன்றியினை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்இராவணேசனுக்கென   நான்கு  DVD   பிரதிகள்  உள்ளன.
1.   2005  தயாரிப்பு  பிரதி
2.   2010   தயாரிப்பு  பிரதி
3.   2011   தயாரிப்பு  பிரதி
4.   2014   தயாரிப்பு  பிரதி

ஒன்று   போல்   ஒன்றில்லை.    நடிகர்களும்  மாறியுள்ளார்கள். நாடகத்தின்    கருப் பொருளிலும்  சிற்சில  மாற்றங்கள்.
2011  இல்  எனது  70   அண்மிய  வயதில்  நான்  இராவணனுக்காக ஏறத்தாள  50  வருடங்களின்  பின்  மேடையேறினேன்.
அது  ஒரு  தனிக் கதை.

1964   இல்   பேராசிரியர்  வித்தியானந்தன்  இதனைத் தயாரித்தார்அதில்    இராவணனாக  நடிக்கும்  சந்தர்ப்பம்  எனக்கு  வாய்த்தது.
2005  இல்  (40  வருடங்களின்  பின் ) இதனைத்தயாரித்த  போது    நான் இடையில்  பெற்ற  நாடக  அறிவையும்  அனுபவங்களையும்  வைத்து இதனை   முற்றிலும்  புதிதாகத்   தயாரித்தேன்.
இதில்   கருவும்  புதிது. உருவும்  புதிது. ஆற்றுகை   முறையும்  புதிது.
எனினும்  இதற்கு  மூல   வித்திட்ட  என்  குருநாதர்  பேராசிரியர் வித்தியானந்தனின்  பாத   கமலங்களுக்கு  இது  சமர்ப்பணம்
இதனை  முதன்  முதலில் DVD யில்  (2005)  உருவாக்கி   அதற்கு ஆங்கில, சிங்கள  உப  தலைப்பிட்டு  உள்ளூரிலும் - தான்  சென்ற வெளி நாடுகளிலும்    இதனை   அறிமுகம்  செய்தவர்  நண்பர்  தர்மஶ்ரீ பண்டாரநாயகா   என்பதனை   இங்கு  பதிவு  செய்ய  விரும்புகிறேன்.
2010  இல்  கணிசமான  நிதி  உதவி  புரிந்து  இதனைச்   சிறப்பாக உருவாக்க  உதவியவர்  காலம்  சென்ற  நீலன்  திருச்செல்வத்தின்   மனைவியான  சித்தி  அவர்கள்
மேடையிலும்,  மேடைக்குப்  பின்னாலும்  இதில்  35  பேரின்  பங்கு கொள்ளல்  உண்டு

 2010  இல்  உருவாக்கம்  பெற்ற DVD  யின்  திரையிடல்  சிங்கப்பூர் தேசிய  பல்கலைக்  கழகத்திலும், சிங்கப்பூர்  இந்தியன்  கழகத்திலும் அமெரிக்காவில்   ஜோன்  ஹொப்கின்ஸ்  பல்கலைக்கழகத்திலும் நடை பெற்றனஅதில்  பங்குகொண்டு  இக்கூத்து  பற்றி  விளக்கும் வாய்ப்பும்    எனக்குக் கிடைத்தது.   அவை   நல்ல  அனுபவங்கள்
இப்போது   அவுஸ் திரேலியாவில்  நீங்கள்  திரையிடுகறீர்கள். இதனைப்    பார்வையிட  வந்திருப்போர்க்கு  என்  அன்பையும் நன்றியையும்    தெரிவித்துக்கொள்கிறேன்


நான்  நடித்த  இராவணேசனுடன்  2010   லயனல் வென்ற்ரில் மேடையிட்ட    இராவணேசனில்  இறுதிக்  காட்சிகளை   (முக்கியமாக இராம   -  இராவண  யுத்தம்   (அதில்தான்   தட்டிகள்  சாகசம் புரிகின்றன.
ஒரு  முழு  யுத்தக்  காட்சியை   அங்கு  காண்பீர்கள்.
இதில்   நான்   அல்ல   முக்கியம்.   இராவணேசனே   முக்கியம்.
அடுத்த  மாதம்   ஆம்    திகதியுடன்  எனக்கு  72  வயது பூர்த்தியாகிறது.    செய்வதற்கு  அதிகமுண்டுவாழ்நாள்தான்  போதாது.   இயற்கையின்  விதிக்குக்  கட்டுப் பட்டவர்கள்தானே    நாம் எல்லோரும்."
---------

இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின்  ஒன்று  கூடல்
கலை,   இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து,   அவுஸ்திரேலியாவில் கடந்த  26  வருடங்களுக்கும்   மேலாக  இயங்கிவரும்  இலங்கை மாணவர்    கல்வி  நிதியத்தின்  துணைத் தலைவர்  பல்  மருத்துவர் ரவீந்திர  ராஜாவின்  ஏற்பாட்டில்  கல்வி  நிதியத்தின்  தகவல் அமர்வும்   முள்ளிவாய்க்கால்  இறுதி  யுத்தத்தில்  தந்தையரை  இழந்த மாணவர்களின்   கல்வி  மேம்பாட்டிற்கான  நிதிச்சேகரிப்பு,  ஒன்று கூடலும்   நடைபெற்றது.
இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின்  பணிகளை  விளக்கும் ஒளிப்படக்காட்சியும்   காண்பிக்கப்பட்டது.
போரில்   பாதிக்கப்பட்ட  மேலும்  பல  மாணவர்களுக்கு  உதவுவதற்கு பல   அன்பர்கள்  முன்வந்து,   குறித்த  மாணவர்களின்  பூரண விபரங்கள்   அடங்கிய  கோவைகளை  பெற்றுக்கொண்டனர்.
ஒரே   நாளில்  ஒரே   மண்டபத்தில்  அடுத்தடுத்து  இரண்டு அமர்வுகளில்  நடைபெற்ற,   கலை,   இலக்கிய,  கல்வி  சார்ந்த நிகழ்ச்சிகள்  தொடர்ச்சியாக  ஆண்டுதோறும்  கன்பராவில் நடைபெறல்   வேண்டும்  என்று  நிகழ்ச்சி  ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

----0----

No comments: