விழுதல் என்பது எழுகையே தொடர்ச்சி 47 - திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்

.
துன்பங்களை மீறி மனம் துள்ளிக் குதித்துக் கொள்ளும் போது சிறகடித்துப் பறப்பது போன்ற உணர்வு அளவுக்கு மீறிய சந்தோசங்கள் அழ வைத்து விடுமோ என உணர்வுகளை அடக்கிக் கொண்டான் சீலன்.சந்தித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களும் புலம் பெயர்ந்த நாட்டில் பட்ட அவலங்கள் அனைத்தையும்  உடைத்து போராடி வெற்றியோடு வாழ்க்கையை தொடர்ந்தவர்கள்
ஒரளவு சிறப்பாக வாழ்கிறார்களே என நினைத்து தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொண்டான். பல கஸ்ஷ்டங்களை சுமக்கும் சீலனுடைய வாழ்க்கை ஆமை போல் நகர்ந்தது. விடியல்கள் எப்போது என மனம் சலித்துக் கொள்ளும் வேளைகளில் எல்லாவற்றுக்கும்  எங்கள் பிரச்சனையும் இடப்பெயர்வுமே எனப்  பல  முறை எண்ணியுதுண்டு...... இப்பொழுதெல்லாம் அம்மாவின் தொலை பேசி அடிக்கடி வருவதால் ஏதோ ஒரு ஆனந்தம்.

இன்று சனிக்கிழமை விடுமுறை நாள்.


மனதிலுள்ள பல விடயங்களை மீட்டிப் பார்க்கும் நேரம் என நினைத்துக்கொண்டு புரண்டு புரண்டு எழும்ப விருப்பின்றி படுக்கையிலே இருந்தான்.அழகான காலையும் இதமான மெல்லிய குளிரும்
பறவைகளின் ஒலியும் உற்சாகத்தை கொடுத்து சோம்பலை விரட்டிக் கொண்டிருந்தது. அந்த நொடிப் பொழுதில் தொலை பேசி அழைப்பு?!.

ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனது மன வானில்!! பத்மகலாவாக இருக்குமோ என்பது தான் உள்மனதின் எண்ணம்...ஆனாலும் ???, அம்மாவின் குரல் மறு முனையில்!!முதற் கட்டமாக நலம் விசாரிப்பதோடு தொடங்கி பின்னர் ஊர்ப் புதினங்கள். சீலனுக்கு இவற்றை எல்லாம் கேட்கும் போது ஊரிலே நிற்பதுபோன்ற பிரமை ஏற்பட்டது. 

அந்த இடங்களும் காட்சிகளும் அவற்றோடு சம்மந்தப் படுத்தப் பட்ட உறவுகளும் கண்முன்னே காட்சிப் படுத்தின...'தம்பி சீலன் உன்னோடை ஒரு விசயம் பேச வேணும் என இழுத்தாள்''எதுவாக இருந்தாலும் சொல்லுங்கோ அம்மா ' என பதற்றப் பட்டான் சீலன்.

சீலன் வீட்டுக் குலதெய்வமான பக்கத்து அம்மன் கோயிலில் வருடாவருடம் திருவிழா கோலாகலமாகத் தான் நடை பெறுவதுண்டு .இப்போதெல்லாம் மிக குறைவு சனங்களின் இடப்பெயர்வு பொருளாதாரப் பிரச்சனை என வாழ்க்கையோடு தொடர்பு பட்ட விழாக்களும் சந்தேசஷங்களும் குறைந்து போய் விட்டதென்றே கூறலாம்!

அம்மா கூறப் போகின்ற விடயம் திருவிழாவோடு மட்டுமல்ல சீலனோடும் சம்பந்தப்பட்டது.
சீலனின் ஒன்று விட்ட மாமனார் (பொன்னம்பலத்தார்)கொழும்பிலே வசிப்பவர். வருடா வருடம் நடைபெறும் திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்துவிடுவார்கள்..
இம்முறையும் வருகின்றார் பெரிய ஒரு விசயத்தையும் சுமந்து கொண்டு,சீலனுடன் பேசுவதற்காக. அரை மணி நேரத்துக்கு மேல் தாயார் தொலைபேசியில் உரையாடினார் எல்லாமே பொன்னம்பல மாமாவின் மகள் பற்றியே!.

சாம்பவி அம்மனுடைய பெயர், பெண் தெய்வத்தின் பெயர் அழகான பெயர். ஒரு வங்கியிலே கணக்காளர் பதவி. சாதுவானவள் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவள.; அத்தோடு நல்ல சீதனம் வீடு வளவு நகைகள் என்று சொத்துக்களோடு வரும் சீதேவி, நல்ல வடிவும் கூட. எல்லா வழியிலும் சீலனுக்கு பொருத்தமானவளே என பெரிய மனக் கோட்டையை கட்டிக்கொண்டிருந்தாள் சீலனின் தாயார். 

இந்த விசயம் பற்றி பேசவே இந்த திருவிழாவிற்கு வருகின்றார். திருமண புராணம் வாசிக்கப்பட்டது போல் உணர்ந்தான் சீலன்.

'அம்மா இப்ப எதற்கு கலியாணம் கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கோ ' என அதட்டலோடு முடித்தான் .என்னைக்  கேளாமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது எனவும் எச்சரித்தான்.
ஒருமுறை உள் மூச்சை இழுத்து மனக் குழப்பங்களையும் சேர்த்து வெளிவிட்டான். என்னுடைய படிப்பு கனவுகள் குடும்பச்சுமை எல்லாவற்றையும் நினைக்கையிலே இந்த கலியாணம் இப்ப தேவையில்லை என தோன்றுகின்றது. அம்மாவின் சுகத்தைக்கூட கேட்க மறந்து விட்டேன். பிரச்சனை பூதாகரமாகும் போது இயல்புகள் தொலைந்து விடும் என நினைத்து வருந்திக்கொண்டு, அம்மாவை திட்டிவிட்டேனோ 'ச்சே“ என தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான்.

நான் பேசினாலும் அம்மா ஒரு போதும் என்னை வெறுப்பதில்லை தம்பி தம்பி என என்னைச் சுற்றியே நினைவுகள். வேறு எந்த உலகத்தையும் புரியாத என் தாய். தன் குழந்தைகளே உலகம் என வாழ்ந்தவள் என தாய் மீதான பாசம் பொங்கி வழிந்தது.

கண்முன்னே பத்மகலா நினைவுகளோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு சோகம் நெஞ்சைப் பற்றிப் பிடித்து எரிவது போல் உணர்ந்தான்

படிக்கும் காலங்களில் பக்கத்துணையாக இருந்த நல்ல நட்பாய் இருந்த பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்த பத்மகலா ஒரு நாள் குத்திக்கிழித்த வார்த்தை அம்புகள் மாறி மாறி விம்பங்களாக தோன்றின. 

இதயம் துன்பத்தால் அமுக்கப்படும் போது உள்மூச்சை இழுத்து மனதை ஆறுதல் படுத்துவது வழக்கமாகவே கொண்டான் சீலன்.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது வார்த்தைகளும் தாறு மாறாய் வருவது இயல்பு தான். பத்மகலாவும் எப்படியான துன்பத்தை அனுபவித்தாளோ  இதை சீலன் புரியாதவன் அல்ல. இருந்தாலும் இது காதல் மனசு சம்மந்தப்பட்ட விடயம் இருவரைப்பற்றிய எதிர்காலத்தை இந்தப் பேச்சு எவ்வளவு பாதிக்கும் என ஏன் கலாவுக்கு புரிதல் இல்லாமல் போனது?, என மனவருத்தத்தோடு கோப்ப் பட்டான.;இருந்தும் அடி மனதில் இருக்கும். இதைத் தான் காதல் என சொல்வார்களோ?.
கண்ணீர் முட்டி காத்திருந்தது. இதயத்து வலிகளை சுமந்து கொண்டு மனம் முயன்று முயன்ற அடக்க முற்பட்டது.இதைப்பற்றி எதையும் சிந்திக்க விருப்பின்றி தேனீர் போட தயாராகினான். 

கதையில் கூட கற்பனை செய்து கொள்ள முடியாத அத்தனை விசித்திரமான சம்பவங்களும் எனக்கு நேர்ந்துள்ளதே, இப்படியெல்லாம் நடந்திருக்கும் என கனவிலும் நினைத்ததில்லையே!. என் கதையை எழுதிவிடலாம் போல தோன்றுகிறது என நினைத்தான். கிட்டத்தட்ட தட்ட ஏழு எட்டு வருடங்களுக்கு முன் பாடசாலைகளுக்கு இடையிலான சிறுகதைப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடம் கிடைத்து. அது ஒரு உண்மைச்சம்பவம் தான்.

சீலனின் தனிமையில் அவனோடும் பத்மகலாவோடும் தொடர்புடைய பல பழைய நினைவுகள் வந்து போயின.

No comments: