.
ஊடகத்துறையில் ஆற்றலுடனும் அயராத உழைப்புடனும்
இயங்கிய
ஆளுமை வீ.ஏ.திருஞானசுந்தரம்
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்
முன்னாள் தமிழ்ச்சேவை
பணிப்பாளரின் பன்முக ஆற்றல் முன்மாதிரியானது.
அவரது பெயரை மூன்றாகப்பிரித்து, (திரு - ஞானம் - சுந்தரம்) ஒரு சொல்லை எடுத்துக்கொண்டும் விளிக்கலாம்.
எவராலும் விரும்பப்படுபவர் என்பதற்குப்பொருள்
‘திரு’. அறிவிலும் சிந்தனையிலும் தெளிவுபெற்றவர்கள்
‘ஞானம்’ உடையவர்கள். 'சுந்தரம்' என்றால் அழகு என்றும் பொருள்.
திருஞானசுந்தரம் அவர்களின் பெயர்ப்பொருத்தம் குறித்து இதற்குமேலும் விளக்கவேண்டிய அவசியம் இருக்காது.
இலக்கிய ஊடகத்துறைக்குள் நான் பிரவேசித்த
காலப்பகுதியில் எனக்கு அறிமுகமானவர்தான் திருஞானசுந்தரம். சுமார் நான்கு தசாப்தகாலமாக சுமுகமான நட்புறவுடன் நாம் பழகிவருகின்றமைக்கு இயல்புகளும் காரணமாகிவிடும்;.
எனது ஊடகவாழ்வுக்கு, வீரகேசரி புகுந்தவீடாக அமைந்தது போன்று, திருஞானசுந்தரம் அவர்களது தொழில் ரீதியான
தொடக்ககால வாழ்வும் வீரகேசரியில்தான். அங்கு துணை ஆசிரியராக ஊடகத்துறையின் நுட்பங்களை
பயின்று பெற்ற அனுபவங்கள் பின்னாட்களில் அவரைத்தேடி
வந்த பதவிகளின் நெளிவு- சுழிவுகளை சமாளிக்கவும் உதவியிருக்கலாம்.
சவால்கள், போராட்டங்கள்,
சமரசங்கள், ஏமாற்றங்கள்,
தோல்விகள் நிரம்பிய
பதவிகளில் கூர்மையான கத்தியின் மீது நடக்கும்
சாகசம் தெரிந்தவராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
இதழியல், வானொலி, தொலைக்காட்சி முதலான
ஊடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி நன்கு
தெரிந்தவர்களினால்தான் பதிவு
செய்யமுடியும். அதனை எனது மற்றுமொரு இனிய நண்பர் திரு.
கே.எஸ்.சிவகுமாரன், 2008 மே மாத மல்லிகை
இதழில் அழகாக பதிவுசெய்திருக்கிறார். எனக்கு திருஞானசுந்தரம் அவர்களை முதலில் அறிமுகப்படுத்தியவரும். சிவகுமாரன்தான்.
வானொலி கலையகத்திற்குள் பிரவேசிப்பதற்கு நான் மிகவும்
விரும்பியிருந்த காலப்பகுதியில்,
எதிர்பாராதவிதமாக திருஞானசுந்தரம் அவர்களிடமிருந்து
தொலைபேசி அழைப்பு வந்தது. அச்சமயம் நான் வீரகேசரியில்
ஒப்புநோக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
“ கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வாரும்” என்றார். நான் திகைத்துப்போனேன்.
“ என்னால் முடியும் என்று நம்புகிறீர்களா?
” – என்றேன்.
“ முடியும் என்பதனால்தான் அழைக்கின்றேன். வாரும்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் உமக்கு நிகழ்ச்சிபற்றி விளக்குவார்.”
“ என்னை நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏதும் காரணம் இருக்கிறதா....?”
“ வீரகேசரி வாரவெளியீட்டில் நீங்கள் எழுதும் இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்களை வாராந்தம் படிக்கின்றேன். அத்துடன் நண்பர் கே.எஸ். சிவகுமாரனும் உங்களைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
இவையும் காரணங்கள்”
திருஞானசுந்தரம் அவர்களின் வேண்டுகோளை
நிறைவேற்றிய அந்தக்காலப்பகுதியும்
மனதிற்கு நிறைவானது.
கார்மேகம், ராஜஸ்ரீகாந்தன்,
தனபாலசிங்கம், அன்னலட்சுமி இராஜதுரை,
பிரணதார்த்தி ஹரன் உட்பட
பலரை
கலையகத்திற்கு அழைத்துச்சென்று கலைக்கோலம்
நிகழ்ச்சிகளில் பங்குபற்றச் செய்திருக்கின்றேன்.
இவர்களில் கார்மேகம் தமிழ்நாட்டிலும் ராஜஸ்ரீகாந்தன் இலங்கையிலும் மறைந்துவிட்டார்கள்.
தனபாலசிங்கம் தற்பொழுது தினக்குரல் பிரதம ஆசிரியர்.
பிரணதார்த்தி ஹரன் தினக்குரல் செய்தி ஆசிரியர். திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
கலைக்கேசரி ஆசிரியர்.
இச்சந்தர்ப்பத்தில் சுவாரஸ்யமான ஒரு தகவலை
இங்கு பதிவுசெய்வது பொருத்தமானது.
சிகிச்சைக்காக
தமிழ்நாடு சென்ற நண்பர்
டானியல் தஞ்சாவூரில் காலமாகிவிட்டார். அவரது பூதவுடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக கலைக்கோலத்தில் ஒரு உரையை
நிகழ்த்துவதற்கு நண்பர் தனபாலசிங்கத்தை வானொலி கலையகத்துக்கு அழைத்துச்சென்றேன்.
குறிப்பிட்ட உரையின் பிரதி பார்வைக்காக
ஏற்கனவே
பணிப்பாளர் திருஞானசுந்தரம் அவர்களது மேசைக்குப் போய்விட்டது. டானியல் ஒரு இடதுசாரி.
அவரது சமூகம் சார்ந்த சிந்தனைகள் விவாதிக்கப்படுபவை. அதனால்
ஒலிபரப்பின்போது எந்தவகையான எதிர்வினைகளும் விக்கினங்களும் வந்துவிடக்கூடாது என்பதில் பணிப்பாளர் அக்கறையாக இருக்கிறார் என்று கருதினேன்.
அவரது அங்கீகாரத்துடன்
ஒலிப்பதிவு கூடத்தில் அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி தயாரிப்பாளர் அருந்ததி ஸ்ரீரங்கநாதனும் உடனிருந்தார்.
டானியல் பற்றிய உரை ஒலிப்பதிவாகும்
தருணத்தில் திடீரென்று ஒரு உத்தரவு பணிப்பாளரிடமிருந்து வந்தது.
இதுதான் அந்த உத்தரவு.
“குறிப்பிட்ட உரையில் சாதி என்ற
சொல்லை
நீக்கவும்”
டானியலைப்பற்றிப்
பேசும்போது சாதி என்ற சொல்
வராமல் தவிர்ப்பது எப்படி...?
குடை என்ற தலைப்பில்
பேசவேண்டும். ஆனால், மழை, வெய்யில் என்ற சொற்கள் இடம்பெறமுடியாது என்று பாடசாலை
மாணவர்களுக்கு விநோதமான போட்டி
நடத்தினால் எப்படி இருக்கும்...? அப்படி இருந்தது பணிப்பாளரின் உத்தரவு.
அச்சமயம் மின்னலென யோசனை
உதித்தது. சாதி என்று வரும்
வரிகளில் சாதியை நீக்கிவிட்டு, அடிநிலைமக்கள் என்று திருத்தினோம். அதன்பிறகு ஒலிப்பதிவு நடந்தது.
வானொலி ஊடகத்துறையின் நெளிவு, சுழிவுகளை திருஞானசுந்தரம் அவர்களிடம் மேலும் கற்றுக்கொண்டிருக்கலாம்.
அதற்கான சந்தர்ப்பம் எனது புலப்பெயர்வினால்
சித்திக்கவில்லை என்பது வருத்தம்தான்.
வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக
ஒரு காலத்தில் பணியாற்றியவர் - தொடர்ச்சியாக
ஊடகத்துறை சார்ந்த பணிகளிலேலேயே ஈடுபட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பாளராகவும் நிருவாக மற்றும் பிரசார அதிகாரியாகவும்
காப்புறுதிக்கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பு
கூட்டுத்தாபனத்தில் பிரதி
நிருவாகப்பணிப்பாளர் நாயகம் உட்பட பல்வேறு
உயர் பதவிகளிலும் பணியாற்றியிருக்கும் திரு அவர்கள், ஐ.ரி.என். லக்ஹண்டவில் பிரதிபொது முகாமையாளராகவும் பணியாற்றியவர்.
அத்துடன், ஓய்வு பெற்ற பின்னரும் சில ஊடகத்துறை நிறுவனங்களில்
முக்கிய பதவிகளிலும் சேவையாற்றியவர்.
திருஞானசுந்தரம் அவர்களுக்கு 1980 முதல் 2012 வரையில் பல்வேறு ஊடகத்துறை அமைப்புகளிலிருந்து விருதுகளும் பட்டங்களும் கிடைத்துள்ளன. எனினும் அந்தப்பட்டங்களை தமது பெயருக்குப்பின்னால் பதிவுசெய்து தமது இருப்பை
வெளிப்படுத்திக்கொள்ளாத தன்னடக்கம் இவரது இயல்புகளுக்கு
சான்று.
சிவாலயம், மனோலயம், முதலான நூல்களையும்
எழுதியிருக்கும் இவர் , கரவையூற்று, கரவை விக்னேஸ்வரா வழிவந்த ஒரு தமிழ்
அறுவடை ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியருமாவார். இதில் ஒரு
தமிழ் அறுவடை என்ற நூல்
மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி குறித்த கட்டுரைகளைக்கொண்டிருக்கிறது.
இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக
மதிப்பீடு செய்யமுடியும். வாசகர்களுக்கு பயனுள்ள நூல்கள் அவை.
திருஞானசுந்தரம் அவர்களைப்பற்றி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின்
முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி ஞானம்
இரத்தினம், எழுதியிருக்கும் ஆங்கிலக்கட்டுரையில்,
ஊடகத்துறையில் தனக்கு
வழங்கப்படும் எந்தவொரு பொறுப்பிலும் அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் உழைக்கும் செயல்திறன் மிக்கவர் என்று விதந்து
குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்புத்துறையிலும் விற்பன்னராக விளங்கியவர் என்று தொழில் நிதிமன்ற நீதிபதி திரு. வி. விமலராஜாவும் - திருஞானசுந்தரம் அவர்களை
பாராட்டி எழுதியிருக்கிறார்.
தொழில் ரீதியாக
ஓய்வு பெற்ற பின்பும் ஓயாமல் இயங்குமிவரைத்தேடி பல பதவிகள்
வருவதற்குக் காரணம் - அவரது இயங்கும்
இயல்புதான்.
ஒருவர் எந்தத்துறையிலும்
எத்தகைய ஆற்றல் மிக்கவராக
இருந்தாலும் இயங்க மறுத்தால், அல்லது இயங்காதிருந்தால் பிரகாசிக்கவே முடியாது.
உடனிருப்பவர்களுக்குத்தான் பிரச்சினைவரும், என்பதை யதார்த்தபூர்வமாக புரிந்துகொண்டு உழைப்பவர் திருஞானசுந்தரம்.
திருஞானசுந்தரம் அமைதியானவர், நிதானமானவர், இயங்கிக்கொண்டே இருப்பவர். அவரது இயங்குதளம்தான்
அவரது இருப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ஆற்றல் மிக்க இவரால் அரசியல்
தலைவர்களது உரைகளையும் சிறப்பாக பதிவுசெய்ய முடிகிறது.
மேலை நாடுகளில்
அரசியல் தலைவர்களுக்கென்று Speech
Writer கள் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் பிரமாண்டமான கட்டிடங்களுக்கு அடியில் மறைந்திருக்கும் அத்திவாரத்துக்கு நிகரானவர்கள். ஆனால், வெளியே தெரியமாட்டார்கள்.
திருஞானசுந்தரம் அவர்களும் அப்படித்தான்.
ஊடகம் உட்பட பொதுவாழ்வில்
ஈடுபடுபவர்கள் குறித்து பொதுவான விமர்சனம் ஒன்று நீடிக்கிறது. அதாவது, அவர்களுக்கு தமது குடும்பம் குறித்து அக்கறை இருக்காது, குடும்ப உறுப்பினர்கள் மீது பாசம்
இருக்காது. எப்போதும் தொழிலும் பொது வாழ்வும்தான் அவர்களது சிந்தனையில் ஊடுறுவியிருக்கும்.... என்றெல்லாம் கலந்தரையாடல்களின்
பொழுது பலர் உரையாடுவதுண்டு.
இந்த உரையாடல்களை பொய்யாக்கியவராகவும் திருஞானசுந்தரம் அவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள். உதாரணம்:- அவர் தொகுத்துள்ள
இரண்டு அரிய நூல்கள்.
சிவலயம் (2004),
மனோலயம் (2007) முதலவது நூல் மற்றுமொரு பிரபல வானொலி
ஊடகவியலாளரான இவரது தமையனார் அமரர் வீ.ஏ.
சிவஞானம் பற்றியது. இரண்டாவது இவரது அருமைத்தம்பி
பிரபல ஓவியர், கார்டூன் சித்திரக்கலைஞர் மனோரஞ்சிதன் பற்றியது.
குடும்பவாழ்வில் சகோதர பாசத்தில் நேர்த்தியுடன் வாழ்பவர்களால்தான் பொது வாழ்வில் தொழில்துறையில் சிறந்த நிருவாகிகளாகவும் இயங்கமுடியும்
என்பதை பலருடனும் பழகியிருக்கும் அனுபவத்தில் என்னால் கூறமுடிகிறது. திருஞானசுந்தரம் அவர்கள் சிறந்த நிருவாகியாக
திகழ்ந்தமைக்கு அவரது குடும்பப்பின்னணியும்,
குடும்பத்தின் மீது அவருக்கிருந்த பற்றுறுதியும் அடிப்படையாக இருந்திருக்கலாம்.
குறிப்பிட்ட இரண்டு நூல்களும் தொகுக்கப்பட்டுள்ள முறைமையிலிருந்து, திருஞானசுந்தரம் அவர்கள் எவ்வாறு தனது குடும்ப உறுப்பினர்களை
நேசித்திருக்கிறார் என்பதை அறிகின்றோம்.
அத்துடன்,
தன்னுடன் பணியாற்றிய சக வானொலி
ஊடகக்கலைஞர்கள் பற்றிய தகவல்களை
இந்நூல்களில் பதிவுசெய்திருக்கும் பண்பிலிருந்து
ஒரேசமயத்தில் தனது குடும்ப
உறுப்பினர்களையும் தொழிலகத்தின் சகோதர, சகோதரிகளையும் நேசிக்கும் உன்னத மனிதராக காட்சி அளிக்கின்றார் என்பது தெரிகிறது. அபூர்வமான இந்த குண இயல்பு பலனை மட்டுமல்ல,
பலத்தையும் அவருக்குத்தரும்.
இலங்கையில் தமிழ் வானொலி
ஊடகம் தொடர்பாக தகவல் அறிந்து எழுத முனையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்நூல்கள் தரவுகளையும், தகவல்களையும் தரும்.
ஏதும் அமைப்புகள் ‘அனுபவப்பகிர்வு’ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு
ஏற்பாடு செய்தால் “திருஞானசுந்தரம் அவர்களையும்
அழைத்து, அவரது அனுபவங்களையும்
கேட்டு கலந்துரையாடுங்கள் ”
என்று ஆலோசனை கூறவிரும்புகின்றேன்.
நாம் கடந்த 2011 ஜனவரி மாதம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் செவ்விதாக்கம் ( Editing
) அரங்கும் இடம்பெற்றது.
இந்த அரங்கில் திருஞானசுந்தரம் அவர்களது கட்டுரையும் இடம் பெறவேண்டும். தாமதமின்றி அவருடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் டொக்டர் ஞானசேகரன் அவர்களிடம் தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தேன். நாம் எதிர்பார்த்தவாறு தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை திருஞானசுந்தரம் நிறைவேற்றினார்.
மாநாடு முடிந்த பின்னர் தனது பங்களிப்பை வெறும் உரையோடு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாமல்,
கணிசமான நிதிப்பங்களிப்பை தாமாகவே முன்வந்து வழங்கினார்.
இது எமக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஏற்கனவே சில மாநாடுகளில்
பங்குபற்றியிருந்த அவரது அனுபவம்தான்,
தாமாகவே உதவ முன்வந்த அவரது தாராள
மனப்பான்மையையும் தயாள சிந்தனையையும்
வெளிப்படுத்தியிருக்கிறது. திருஞானசுந்தரம் அவர்கள், அவரது பெயருக்குப் பொருத்தமானவர்தான் என்பதை இதனைப்படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.
( நன்றி: தினக்குரல் ஞாயிறு இதழ்)
letchumananm@gmail.com
No comments:
Post a Comment