தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை இறுதிப் பகுதி -----


        --பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி      




சென்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 .30 மணிக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர்மண்டபத்தில்அவை நிறைந்த தமிழ் அன்பர்களுடன் கோலாகலமாகவும் வெற்றிவிழாவாகவும்  நடைபெற்றது.

 உத்தமனார் உறைவதற்கே உள்ளமென்ற கமலம் உகந்ததென்று பாடி நற்றமிழர் போற்றிவந்த நாடகமும் இசையும் நலியாது காத்திட யாழ்நூல் தந்தவர் மீன்பாடும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தர்   அவர்கள். அமிழ்தமாம் இளமை குன்றா அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய பணியியற்றி அணிகள் பூட்டித் தமிழ் மணக்க உலகரங்;கிற் பெருமை சேர்த்துத் தமிழ்ப் பணி செய்தவர் தமிழ் நாடு தந்த “தமிழ்த் தென்றல்” திரு விகல்யாணசுந்தரனார்..அவர்கள்.

இவர்களுக்கு எடுத்த மாபெரும் விழாவிலே அடுத்து பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் அவர்களின் கவிதை இடம்பெற்றது.


கைமலிந்த கலையேடும் யாழும் கொண்ட 
    கலைமகளின் கடாட்சம்பெற்(று) உயர்ந்த செம்மல்
மெய்யுருகச் செந்தமிழிற் கவிப டைத்தார்
     வித்தகனார் யாத்திட்ட செய்யுள் யாவும்
தெய்வமணம் கமழுமையா! செந்தண் மைவிஞ்சத்
     திருப்பொலியும் அந்தணனாய்  ஈழ நாட்டிலே
செய்ததிருப் பணிகளெலாஞ் செப்பவென் நேரம்
     சிறிதும்பற் றாதேயவர் திருத்தாள் போற்றி!


ஓப்பரிய ஆய்வாளன்  உணர்ந்தெமக்கு அன்றொருநாள் 
   ‘உத்தமனார் உறையுமிடம் உள்ளத்துக் கமல’மெனச் 
செப்பிநின்றார் சித்தமுமோர் சிவமென்று போற்றிடுவார்
   சீர்த்திமிகு இசைக்கலையும் செம்மைமிகு நாடகமும்  
எப்பொழுதும் இளமையொடு எழிலோடு மிளிர்ந்திடவே
   இறவாத  நூலெனவே ஈய்ந்திட்டார் யாழ்நூலை 
தப்பாது விழாவெடுத்துத் தரணிக்குச் சாற்றிடவே
   தகைமைமிகு உலகசைவப் பேரவையும் முனைந்ததுவே!


     அமிழ்தமெனத் தாய்மொழியிற் புலமை பெற்று
        அருங்கலைகள் பலகற்று  ஐயந் தெளிந்து
    தமிழ்கமழும் நறுஞ்சொல்லாம் மலர்கள் தேர்ந்து
        தமதுமொழிக் கன்னிக்கு ஆரமாய்ச் சூட்டி 
    புகழ்கமழும் மட்டுநகர் போற்றி வாழ்த்தப்
        புனிதமிகு யாழ்நூலைப் புவிக்க ளித்துத்
    திகழ்ந்திட்ட பெருந்துறவி விபுலா னந்தன்
        செயற்கரிய திறம்போற்றி நினைவு கூர்வாம்!.


மருளகற்ற வழிசமைத்த நாவலன் வழியில்
 மாண்புடனே பணிபுரிந்து இறையை உள்ளத்(து)
அருள்விரிக்கும் கமலத்தால் அர்ச்சித் தானை
   ஆகமசித் தாந்தமெலாம் ஆய்ந்து ணர்ந்து
பொருள்விரிக்கப் பலநூல்கள் யாத்திட் டானை
   பொருவரிய தேனாடாம் மட்டு நகரின்
இருளகற்றும் இளம்பரிதி போன்று உதித்த 
    ஈழத்து அடிகளாரை நினைவு கூர்வாம்.  

வெள்ளைநிற மல்லிகையோ வேறு éவோ 
விரைவாக வாடிவிடும் விமலன் அந்தோ?
எள்ளளவும் வாடிடாது நின்றி லங்கும்
  இன்மனத்தோர் புடமிட்டு அன்பால் வளர்த்த 
கள்ளமில்லா வெண்மைமிகு உள்ளம் என்னும்
 கமலமன்றோ விரும்புமலர் என்று கூவிக்
கொள்ளைகொண்டு சைவர்மனம் குடிகொண் டானைக்
  கூப்பியிரு கைகொண்டு வணங்கு வோமே!





நேரத்தின் அருமை  கருதி விபுலானந்த அடிகளார்மேல் தான் இயற்றிய  கவிதைகளிற் சிலவற்றைப் படித்த கலாநிதி பாரதி அவர்களைத் தொடர்ந்து செல்வி குருகாந்தி தினகரன் அவர்கள் திறம்படச் சிற்றுரை ஆற்றினார்கள். இதனை  அடுத்து ஒரு சிறிய இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின் உலக சைவப் பேரவையின் செயலாளர் திரு நாராயணன் அவர்கள் விழாவின் வெற்றிகட்கு உறுதுணையாய் இருந்த அவைருக்கும் நன்றி உரை கூறினார்கள்.


அவையினரை மகிழ்விக்க மதுரமிகு தமிழ மொழியை மகிழ்ந்து கற்று மாநகராம் சிட்னியிலே வதிவோர் மெச்சும் யதுகிரி லோகதாசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி 30 நிமிடங்களுக்கு நடைபெற்றது. பல பாடல்களையும் பாடிய அவர் விழா அமைப்பாளர் கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் விழாவிற்கென இயற்றிய கவிதை ஒன்றிற்கும் தானே இசை அமைத்து அருமையாகப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தமை குறிப்பிடத்தக்கது.;. திருமுறையிலிருந்து இரு பாடல்களையும் பாட அவர் மறக்கவில்லை.  

நம்மிடையேயும் ஓர் தமிழ் விவேகானந்தர் இருக்கிறார்--
அவையோர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “திரு வி. க வைப்பற்றிய சொற்பொழிவை”த் திரு ஆறு திருமுருகன் அவர்கள்  ஆரம்பிக்கு முன்னர் அவரைப்பற்றி உலக சைவப் பேரவை அவுத்திரேலியாவின் தலைவர் திரு மா . அருச்சுனமணி அவர்கள் அறிமுகம் செய்தார்கள்.

உலக சைவப் பேரவை - அவுஸ்திரேலியா  தலைவர் திரு அருச்சுனமணி சிறப்புப் பேச்சாளர் “செஞ்சொற் செல்வர்” திரு ஆறுதிருமுருகன்  அவர்களை அறிமுகம் செய்கையில் ….  இராமகிருஷ்ண மிஷன்; போன்ற நிறுவனங்களைப் பார்க்கும்போது நாம் தமிழர்கள் - மூத்த குடி மூத்த மொழி - மூத்த இனம் என்று சொல்கிறோமே ஆனால் அவர்கள் போலச் செய்வதில்லை என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் ஆனால் நேற்று ஐயா அவர்கள் செய்துவரும் தொண்டுகளைப் பற்றி விவரித்துச் சொல்லப்பட்ட பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது நம்மிடையேயும் ஓர் தமிழ் விவேகானந்தர் இருக்கிறார் என்று! (பலத்த கைதட்டல்) எனக்குத் தெரியும். இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் மானிட நேயப் பணி சமூகப் பணி என்று எத்தனையோ செய்கிறீர்கள். ஆனால் அதை நாம் தமிழர் என்ற வகையிலோ சைவம்; என்ற வகையிலோ செய்யத் தவறிவிடுகிறோம். ஆதனால் நாம் செய்யும் பணிகளுக்கான பலன் எமது சமயத்திற்கோ தமிழருக்கோ கிடைப்பதில்லை. தமிழ்ச் சமூகத்திற்கோ கிடைப்பதில்லை. ஆனால் ஐயா அவர்கள் இந்தக் குறைபாட்டை நீக்கிச் சிறப்பாகப் பணி செய்து வருகிறார். ஆறுதிருமுருகன் ஐயா அவர்கள் தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாகஇருக்கிறார்” என விதந்துரைத்துää அம்மன் கோயில் தாபகர் திரு மகேந்திரன் அவர்களை மேடைக்கு வந்து ஐயா அவர்களைக் கௌரவிக்கும்படி அழைத்தார். திரு மகேந்திரன் மாலை அணிவித்தார்.   




  
இன்றைய பிரதம சிறப்புச் சொற்பொழிவாளர் திரு ஆறுதிருமுருகன் அவர்கள் 
“ எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளை மனத்திலே நினைத்துப் பிரார்த்தித்து .. இந்த இனிய விழாவிற்குத் தலைமை தாங்குகின்ற உலக சைவப் பேரவை அவுத்திரேலியா கிளையின் தலைவர் அவர்களே! எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கவிஞர் கலாநிதி பாரதி அவர்களே! துர்க்கை அம்பாள் ஆலயத்தின் தாபகர் மதிப்பிற்குரிய திரு மகேந்திரன் அவர்களே!என்னை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசய்து அழைத்து வந்த திரு ஈழலிங்கம் அவர்களே! சபையிலேஇருக்கின்ற பேராசிரியர் திருமதி ஞானா குநே;திரன் அம்மையார் அவர்களே! மிக அற்புதமாக இந்த மேடையிலே பாடி எங்கள் எல்லோரையும் மகிழ்வித்திருக்கின்ற அன்புச் சகோதரி அவர்களே! சான்றோர் பெரு மக்களே!உங்கள் எல்லோருக்கும் எனது பணிவான அன்பு வணக்கம்”என்று எல்லோரையும் வரவேற்ற பின்பு தனது உரையை ஆரம்பித்தார்-





 திரு ஆறுதிருமுருகன் அவர்கள் பேசுகையில் “நல்ல ஒரு இசை நிகழ்ச்சியை நீங்கள் இரசித்த பின்பு எல்லோரும் எழுந்து போய்விடுவீர்கள் - சான்றோரைப் பற்றி நான் சற்றுப் பேசிவிட்டு அமர்ந்துவிட வேண்டும்போல் நான் நினைத்தேன். ஆனால் சான்றோர் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாக நீங்கள் எல்லோரும் அப்படியே இருப்பதைக் கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஆரம்பித்த அவர்ää “திருவள்ளுவர் சான்றோர் என்ற சொல்லை அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். யாரோடு சேர்த்துப் பயன்படுத்தி இருக்கிறார் என்றால் 
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்”  
ஒரு தாய் தன்னுடைய பிள்ளையினுடைய ஆற்றலைக் கண்டு பெருமைப்படுவதை - சான்றோனாக அவையிலே இருக்கும் காட்சியைக் கண்டு ஒரு தாய் பெருமைப்படுகிறாள். பரிமேலழகர் அதறகு உரை எழுதினார். சான்றோர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று விரித்தார். சான்றோர் என்றால் சால்புடையவர். அறிவு – பக்குவம் - நிதானம்    என்று சான்றோருக்கு விளக்கம் சொல்லி விரித்துக் கொண்டார் டாக்டர் வரதராசன் அவர்கள் சான்றோருக்கு விளக்கம் சொன்னார்கள். சான்றோர் என்றால் அறிவு மட்டும் போதாது அவர் பிறர்க்குப் பயனுடையவராக வாழ்பவர்தான் சான்றோர்
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”             என்று      திருவள்ளுவர் இன்னொரு இடத்தில் சொல்லி இருக்கிறார்.ஒரு நல்ல காரியம் செய்தவர் - இந்த உலகத்திற்கு நன்மை செய்தவர்கள் என்றைக்கும் பாராட்டப்படுவார்கள் என்பதை – தேசம் தாண்டி கண்டம் தாண்டி இன்றைக்கு   திரு வி. க விற்கும் விபுலானந்த அடிகளுக்கும் நீங்கள் விழா எடுக்கிறீர்கள் என்றால் அவர்கள் சான்றோர்கள் தான். 
நயனுடன் நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு என்றார். யார் பண்புடையவர்களைப் பாராட்டுகிறார்களோ அவர்கள் பாய்க்கியசாலிகள் மட்டுமல்ல. அவர்களும் உயர்ந்த பண்புடையவர்கள் என்று இந்தச் சமூகம் போற்றும். எனவே இந்த விழாவை ஏற்பாடுசெய்த உங்கள் அத்தனைபேர்களின் திருவடிகளைப் போற்றுகிறேன். தமிழுக்கு இந்த உலகத்தில் தொண்டு செய்தவர்கள் இறப்பதில்லை என்று திருவள்ளுவர் சொன்னார். சுhதாரண மக்கள் இறந்துவிட்டால்  - முதலாவது நினைவாஞ்சலி பிறகு இரண்டாவது நினைவாஞ்சலி பிறகு மோட்ச அருச்சனை. பிறகு யாருமே ஒன்றும் செய்வதில்லை. ஆனால் திரு வி. க வுக்குப் பாரதி என்ன முறையிலே சொந்தம்? விபுலானந்த அடிகளார் உலக சைவப் பேரவைக்கு எந்த வகையில் சொந்தம்? இவர்கள் எல்லாம் எம் சொந்தம் என்று சொல்வதில் எமக்குப் பெரு மகிழ்ச்சி.. நாங்கள் திரு வி க வின் ஆட்கள் விபுலானந்தரின் ஆட்கள் பாரதியின் ஆட்கள்  இப்படிச் சொல்வதிலே எங்கள் தமிழ்ச் சந்ததிக்குப் பெருமை ஆந்தப் பெருமையை நீங்கள் பேணுவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவர்கள் இறக்கவில்லை. ஏன் இறக்கவில்லை? காலத்திற்கு ஒவ்வக் கூடிய கரியங்களைச் செய்தார்கள். எப்படி இறந்தவர்கள் என்று சொல்வது? அவர்கள் வாழ்கிறார்கள். சாகாப் பெருவாழ்வு பெற்ற சான்றோர் இவர்கள். இன்னும் வாழ்வார்கள்  இன்னும் எத்தனையோ சந்ததிகள் இவர்களைச் சொல்வதனால் வாழும்.  
இந்த உலகத்திலே;
“ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். என்றார்”. வள்ளுவர். 

உலகத்திற்குப் தொண்டு செய்பவர்கள் இறப்பதில்லை. இவர்கள் இறக்கவில்லை. ஏன் இறககவில்லை
திரு வி க வை நினைக்கிறீர்கள்   - விபுலானந்தரை நினைக்கிறீர்கள் சேக்கிழாரைப்; போற்றுகிறீர்ககள். ஆதலால் இவர்கள் இறக்கவில்லை.” என்றார். 
“இந்தப் பெரு விழாவிலே திரு வி கல்யாணசுந்தரனாரைப் வைப் பற்றிப் பேசும்படி கேட்டார்கள். திரு வி க என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். திரு என்றால் என்ன? என்று கேட்டால் அது அவரின் ஊரைக் குறித்தார். திருவாரூரிலே பிறந்தவர் திரு வி க. திரு என்ற சொல் அவரின் ஊரின் அடையாளம்.”இன்றைக்கும் தம் பெயரோடு ஊரையும் சேர்த்துப் பெயரிடுவார்கள். பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள் தங்களின் பேரையும் சேர்த்துச் சொல்வார்கள். திருவாரூpலே பிறந்த அந்தப் பாரம்பரியத்திற்காக திரு விருத்தாசல முதலியார் கல்யாணசுந்தரனார் என்பதைச் சுருக்கித் திரு வி க என்று வைத்தார்..என்றும் இந்தியாவிலே கலைஞர்கள் சூலமங்கலம் - சீர்காழி என்ற ஊரின் பேர்களையும் சேர்த்து வைப்பார்கள். கோவிந்தராஜன் என்று சொல்லாமலே நாங்கள் சீர்காழி என்று அவரை அழைக்கிறோம். ஏன் என்றால் தாம் பிறந்த மண்ணை மதிக்கின்ற ஒரு பண்பாடு தமிழனின் பண்பாடு. 
மிகச் சிறிய பருவத்திலே தன் தந்தையிடம் படித்தவர். படித்த இடத்தையே ஒரு பாடசாலையாக ஆக்கினவர். இது மிகப் பெரிய வரலாறு. சிறு வயதிலே தந்தையாரிடம் கற்றவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு.  யாழ்ப்பாணத்துத் தென்புலோலி சதாவதானி நா கதிரவேற் பிள்ளையிடம் படித்தவர். ஈழத் திருநாடு பெருமைப்படவேண்டும். எங்கள் நாட்டு அறிஞரிடம் படித்தவரே திரு வி க. சதாவதானி பெரும் நிபுணர். தமிழ் அகராதி எழுதுபவர்கள் - சென்னைப் பல்கலைக்கழகமாக இருக்கலாம் மதுரைப் பல்கலைக் கழகமாக இருக்கலாம் - அவர்கள் அகராதியின் முன் பக்கத்திலே ஒரு செய்தியை எழுதுகின்றார்கள். யாழ்ப்பாணத்து சதாவதானி நா. கதிரவேற்பிள்ளையினுடைய  மூல அகராதியைத் தழுவி இவ்வகராதி எழுதப்படுகிறது. பென்னம்பெரிய இந்திய மண்ணிலுள்ளோர் இன்றைக்கு நன்றியோடு இந்தக் கைங்கரியத்தைச் செய்கிறார்கள்.தமிழ் நாட்டிலே கலைக் களஞ்சியம் எழுதுபவர்கள் - உரைநடை இலக்கியங்கள் எழுதுபவர்கள் எவரும் ஈழத் திரு நட்டின் இருதயமாக இருக்கின்ற யாழ்ப்பாணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.  அந்த யாழ்ப்பாணம் தந்த பெரிய சொத்துக்களில் ஒன்று புலோலி சதாவதானி நா. கதிiவேற்பிள்ளை திரு வி க வுக்கு மிக அற்புதமாகக் கற்றுக் கொடுத்தார்.அவரிடம் படித்ததனாலேயே தனக்குத் தமிழின் மீது ஆவல் எற்பட்டது என்று அவர் மீது வாழ்த்துப் பாடியிருக்கிறார். யாழ்ப்பாணத்து ஞானி எனப் புகழ்ந்துரைத்துள்ளார்.அந்த ஞான ஆற்றல் உடைய நா கதிரவேற்பிள்ளை10 விடயங்களை ஒரே சமயத்தில் கிரகிக்கக் கூடிய – சிந்திக்கக்கூடிய ஆற்றல் பெற்ற பெரும் அறிஞர் என்பதற்காக இந்தியாவே பட்டம் கொடுத்தது” 
“பாம்பன் சுவாமிகளைத் தெரிந்திருப்பீர்கள். திரு வி.க சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடத சம்பாசனை பெற்றார். தத்துவங்களைக் கற்றார். சைவசித்தாந்தம் கற்க இன்னொரு பேரறிஞரிடம் சென்றார். இசுலாமியருடைய திருக்குறானைக் கற்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். எந்தக் கடவுளைப் பற்றியும் சொல்லியிருக்கிற வார்த்தைகளைப் படியுங்கள். திரு வி. க படித்தார். அதனால் அல்லாவைத் தெரியும் - புத்தரைப்பற்றித் தெரியும் - யேசுவைப் பற்றித் தெரியும் - சிவனைப்பற்றித் தெரியும் - திருமாலைப் பற்றித் தெரியும். ஏனென்றால் மகாபாரதம் படித்தார் - பகவத் கீதை படித்தார் - ஐயந்திரிபறக் கற்றதனால் தமிழ் ஆசிரியர் ஆனார். கிருத்தவக் கல்லூரியிலே தமிழ் ஆசிரியராக இருந்தார். ஆசிரியப் பணியிலே இருந்த வேளை இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. ஆரம்பத்திலே இந்திய விடுதலைப் போராட்டத்திலே பேசியவர்கள் எல்லோரும் அறிஞர்களாக இருந்தார்கள். ஆனால் ஆங்கிலத்திதே பேசினார்கள்.அதை மொழிபெயர்த்தவர்கள் பாமர மக்களுக்கு விளங்குவதற்காக அவற்றைப் பேச்சுத் தமிழிலே மொழிபெயர்த்துப் பேசினார்கள். யாழ்ப்பாணத்திலே படித்தவர் அல்லவா? யாழ்ப்பாணத் தமிழ்ப் பாரம்பரிய நடையைக் கற்றவர் அல்லவா வி.க. தேசிய விடுதலைப் போராட்டத்திலே ஏன் தமிழைப் பயன்படுத்தாமல் ஆங்கிலம் கற்றவர்களும் இந்தி மொழி கற்றவர்களும்தான் தேச விடுதலை பேச முடியுமா?  தமிழிலே பேசவேண்டும் என வி.க விரும்பினார்.
“தேசபக்தன் என்றெரு பத்திரிகையொடு இணைந்தார். அந்தப் பத்திரிiயிலே அருந்தமிழிலே மக்களை ஈர்க்கின்ற வாசகங்களை எழுதத் தொடங்கினார். . அந்தப் பத்திரிகையிலே வேற்று மொழிச் சொற்கள் கலக்கக் கூடாது என்று சபதமெடுத்தார். வி.க வினுடைய வார்த்தைப் பிரயோகம் மக்களை ஈர்க்கத் தொடங்கியது. அறிஞர் அண்ணா என்றால் என்னகலைஞர் என்றால் என்ன நாஞ்சில் மனோகரன் என்றால் என்ன? இன்றுவரை இருக்கின்ற அடுக்கு மொழிப் பேச்சாளர் என்றால் என்ன? எல்லாப் பேச்சாளர்களுக்கும் “தமிழ்த் தென்றல்” என்ற அந்தப் பேச்சாளர் வித்தானார். அவருடைய நடை பேச்சுலகம் ஆகியது.  அருந்தமிழ்ச் சொற்களால் தமிழை அலங்கரித்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளைப் பிரயோகித்தார். பாரத மாதாவே - இந்த மக்களைக் காக்கின்ற தாயே உன்மீது ஆணை - நாட்டின்மீது ஆணை என்று தொடங்கிப் பேச்சை ஆரம்பிப்பார் - நாட்டிலே ஒரு பக்தியை உண்டாக்குகிற மாற்று வழியைக் கண்டவர் வி.க. விடுதலைபற்றிப் பேசும்பொழுது துரோகிகள் மீது பொல்லாத வார்த்தைகளைப் பிரயோகித்துக்கொண்டு மற்றவர்கள் பேசும்பொழுது வி.க வோ நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையிற் பேசுவார் என்றும் இளம்வயதிலிருந்தே 1883ஆம் ஆண்டிலிருந்து தனித்துவமான சொல்நடையிலே மக்களுக்கு முன்னாலே போய் அருந்தமிழிலே பேசி எத்தனையோ இளைஞர்களைப் பாரத விடுதலையிலே பங்கெடுக்க்செய்தவர் ‘விக’”என்றும் கூறித் தொடர்ந்தார்.
ஒரு பத்திரிiயை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு திரு வி. க ஓர் முன்னுதாரணமாகத் திகழ்;தார் என்ற கருத்துப்பட பல செய்திகளைக் குறிய பேச்சாளர் திரு வி. க வை  “பத்திரிகையின் பிதா மகன்” என்ற கௌரவத்தைக் கொடுத்துவந்துள்ளார்கள் என்றும்  ஈழநாட்டின் பிரபல பத்திரிகை ஆசிரியர்களான ஈழநாடு ஆசிரியர் திரு ஹரன் அவர்கள் - வாசல் என்ற பத்திரிகை ஆசிரியர் வாசன் அவர்கள் போன்றோர் திரு வி.க வின் உன்னத வழியைப் பின்பற்றியே தமது பத்திரிகைகளை நடத்தி வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் எழுதிய “பத்திரிகை அனுபவம்”; என்னும் கட்டுரை இதற்குச் சான்று பகரும் என்றும் - அவலமான செய்தியைச் சொல்வதென்றாலும்’ கொலைச் செய்தியைச் சொல்வதென்றாலும் பக்குவமாகச் சொல்லவேண்டும் - படிப்பவர்களை வன்முறை செய்யத் தூண்டக்கூடியவாறு செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்று வி.க வின் திடமான கொள்ளைகள்பற்றியும் பல செய்திகளைச் சுவைபடச் சொன்னார். ‘பழுதிலா மக்கள் பழுதிட வைத்திடாதீர்’ என்று சொன்னார் வி.க.ஆவர். உதாரணத்திற்குச் சேக்கிழார் பெருமான் தனது புராணத்;திலே மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சகமாக உடைவளால் குத்திக் கொன்றான் என்று எழுதவிரும்பவில்லை. ஒரு புராணத்திலே எல்லோரும் அடியார்களைப்பற்றிப் படிக்கவேண்டிய புத்தகத்திலே கொன்றான் என்னும் சொல்லைப் பயன்படுத்த வில்லை. அவர் “மெய்ப் பொருளை வென்றான்” என்று மறைமுகமாகப் பக்குவமாக எழுதிய செய்திகளையும் அழகுறச் சொன்னார்.
மேலும் நவசக்தி என்ற சஞ்சிகையின் ஆசிரியராக வி.க அவர்கள் 20 ஆண்டுகள் இருந்த காலத்திலே அவர் எழுதியவற்றிலே ஏதாவது தமிழ்ப் பிழை ஏற்பட்டுவிட்டால் அதற்கு அடுத்த இதழிலே மன்னிப்புக் கேட்கும் பெருங்குணம் படைத்தமைபற்றி….  
ஊடகவியலாளர்கள் - பத்திரிகை ஆசிரியர்கள் - செய்தி ஆசிரியர்கள் கற்க வேண்டுமென்றால் திரு விகவின் வாழ்க்கைக் குறிப்பைக் கற்கவேண்டும் எனக்கூறிய பேச்சாளர் “திரு வி.க அவர்கள் தமிழ் நாட்டு அரசியலில் மிக முக்கியமானவர் என்றும் “தமிழக அரசியலிலே கடவுள் இல்லை என்ற கொள்கையைத் தமிழ் நாட்டிலே முன்வைத்தார்கள். கடவுள் இல்லை என்ற கொள்கையோடு நாட்டினது விடுதலையை எப்படித் தேடுவது? கடவுள் இல்லை என்று மேடைகளில் யார் பேசினாலும் நான் பேசமாட்டேன் “ என்ற ‘விக’வின்முழக்கம் பற்றி….. 
தமிழ் நாட்டிலே முதன்முதலாகத் தொழிலாளர்களுக்கு  - ஏழைத் தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் அமைத்த பெருமை  - ‘தொழிற்சங்கத்தின் தந்தை’ யானதுபற்றி…. 
பாலசுப்பிரமணிய சமாஜம் என்னும் ஒரு ஆத்மீக சங்கத்தை அமைத்தமை பற்றி….
முதன்முதலாகப் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களுக்கு என்று ஒரு சங்கத்தை அமைத்தமை பற்றி…
கைம்பெண்களுக்காக -- அவர்களின் விமோசனத்திற்காக கைம்பெண்கள் சங்கம் ஏற்படுத்தியது  - ‘விதவைக் கோலத்துடன் வெள்ளைப் புடைவை அணிந்து வீட்டுக்குள்ளே éட்டி வைக்கப்படும் கைம்பெண்களும் சுதந்திரமாக வாழவேண்டுமெனச் சங்கம் அமைத்து அவர்களை வாழவைத்தார் ‘உங்களுக்கும் மகிழ்ச்சி உண்டு. நீங்களும் வாழவேண்டும் நீங்களும்  ‘நவசக்தி’ பத்திரிரகைக்கு எழுதலாம் என்று பெண்; எழுத்தாளர்களை உருவாக்கிய செய்திகள்….
‘இன்பத்திற்காக மட்டும் இந்தப் கணிகைப்பெண்களைப் பயன்படுத்திவிட்டு அவர்களைத்  துன்பத்திலே விடலாமா?’ யாருமே சிந்திக்கமுடியாத இந்தச் சிந்தனையை ‘வி.க’ சிந்தித்துச் செயலாற்றி (கணிகைகள் தமிழ் நாட்டிலெ பல இடங்களிலும் இருந்தார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக). அவர்களுக்காகக் கணிகையர் கழகத்தை ஆரம்பித்தமை…‘இப்படிஎல்லாச் சங்கங்களையயும் ஆரம்பித்த ‘வி க’ இப்பொழுது கணிகையர் கழகம் ஆரம்பித்துவிட்டார்’ என்று பலர் நளினம் செய்ததையெல்லாம்   பொறுத்துக்கொண்டு தான் எடுத்த காரியங்களை நேர்த்தியாக முடித்தமை….. 
‘பிறவியே வேண்டாம் என்று துறவியாகிய மணிமேகலை’ பற்றிய குறிப்புகள்..….திருஞானசம்பந்தர் தேவாரத்திலே ‘பழுதிலாப் பெண்டிர் வாழும்….’என்பதன் விளக்கம்….
வி.க வின் ஆற்றலைக் கண்டு – சமுதாய சீர்திருத்த முறைகளைக் கண்ட
இளைய தலைமுறை விழித்தெழுந்தமை…. வி.க வைத் தமிழ்நாட்டிலே தமிழ் உலகம் எழுத்துலகம்   வரவேற்ற பாங்கு ---  
கல்கி என்ற  அடைமொழியை ஏன் கிருஸ்ணமூர்த்தி பாவித்தார் என்பதை மிக அழகாக விபரித்த  ‘செஞ்சொற் செல்வர்’ “ ‘க-கி’ என்று எழுதக் கிருஸ்ணமூர்த்தி விரும்பவில்லை. நடுவிலே ஒரு ‘ல்’லை இருவரையும் இணைக்கும் எழுத்தாகச் சேர்த்தார். இன்று கிருஸணமூர்த்தி என்றால் ஒருவருக்கும் தெரியாது. ஆனால் கல்கி என்றால் தெரியாதவர்களே இல்லை. ஒரு நல்ல இலக்கிய சாம்ராய்ஜம் -இனிய சொல் நடை -இனிய எழுத்து நடை - இனிய பத்திரிகைப் பண்பாடு எமது நாட்டிலும் பரவியதென்றால் அதன் பிதா மகற்குத்தான் நீங்கள் விழா எடுத்தீர்கள்” . (பலத்த கைதட்டல்)
‘சந்தேகம் கொண்ட கணவனை ‘வி.க’ திருத்திய கதை….
‘கல்கி’யைச் சிறகதை எழுதத் தூண்டியசெய்தி..
திரிபுரசுந்தரி  என்ற ஏழைப் பிராமணப் பெண் எப்படி மருத்துவப் படிப்பை மேற்கொள்ள என்ன செய்தாள்? மாபெரும்  எழுத்தாளர் “லÑ;மி” என்று எப்படி வந்தாள் என்ற பல செய்திக் குறிப்புகள்…..
இலண்டன் பீ . பீ சி ஒலிபரப்புத் தாபனம் யாழ் சிவபாதசுந்தரனாரை முதல் அறிவிப்பாளராகக் கொண்டிலங்கியமை – வேற்று மொழிக் கலப்பு இன்றி நல்ல தமிழில் இன்றுவரை எப்படி அறிவிப்புகளைச் செய்கிறது….
யாழ் - சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் காட்டிய தமிழ்ச் சண்டித்தனம்!...
1953 ஆம் ஆண்டில் மறைந்த ;திரு வி.க”;;;;…………
இப்படிப் திரு வி.கவொடு இணைந்த பல செய்திகளை மிகவும் சுவைபட நகைச்சுவை ததும்பச் சொல்லி அவையினரின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்டவர் திரு ஆறு திருமுருகன் அவர்கள். 
விபுலானந்த அடிகளாரைப் பற்றியும் சில வார்த்தைகள் பேச விழைந்த செஞ்சொற் செல்வர் 
அடிகளாரை எப்படி மட்டக்களப்பில் தினமும் மலர் அணிவித்து வணங்குகிறார்கள் …..
எப்படி விஞ்ஞானப் படிப்பை மேற்கொண்டார்?.........
சிவத்திரு யோகர் சுவாமிகள் அடிகளாருக்குச் சொன்ன அருள்வாககு!.....இராமநாதன் கல்லூரியில் சற்சங்கம்….
அதே போல ஒரு கல்லூரியை மட்டக்களப்பில் கட்டிய செய்தி…
அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் அன்னியரின் கொடியை ஏற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்த ஒரே இலங்கையர் --அடிகளாரின் இராமகிருஸ~;ண மி~னில் ஆற்றிய சேவை….சிவபிரான் பெயரால் சிவானந்த குரு குலம் - சிவானந்த வித்தியாலயம்  அமைத்த வரலாறு….
 அடிகளாருக்கு பேராசிரியர் சண்முகதாசனின் புகழாரம்…
இப்படிப் பலவிதமாக விபுலானந்த அடிகளாரைப் பற்றிப்பல சிறந்த செய்திகளைப் பேசிய ஆறு திருமுருகன் அவர்கள் நிறைவிலே 
“விபுலானந்தர் இறக்கவில்லை!  திரு.வி.க  இறக்கவில்லை!. நீங்கள் இந்தத் தமிழ்ப் பணியை – விழாச் செய்வதாலே உலகச் சைவப் பேரவையும் டாக்டர் பாரதி போன்றவர்களின் இந்தப் பணியும் இறக்க மாட்டாது!  இறக்கக் கூடாது.!!
என வாழ்த்தித் தனது நீண்ட அற்புதமான உரையை  நிறைவு செய்தார்.
திரு ஆறுதிருமுருகன் அவர்களின் முழு உரையின் ஒளிப்பதிவை இந்தத் ê ரிêப்பில் ல் கேட்டு மகிழலாம்

> Thiru Vi Ka (Speech at Sanroor Vizha Dhurai Amman Temple) (64 min)
>
https://www.youtube.com/watch?v=f0xPXnHaIZg

இதனைத் தொடர்ந்து கவிஞர் நந்திவர்மன் அவர்கள் திரு வி. க வைப்ப்பற்றித் தான் இயற்றிய சிறப்புக் கவிதையைப் படித்தார். இறுதிமட்டும் அவையோர் அமைதியாக இருந்து முழு நிகழ்ச்சியையும் செவிமடுத்தமை விழாவின் தனித்துவத்திற்கும் தரத்திற்கும் சான்று பகர்கிறது. 


நிகழ்ச்சியை மிகவும் அழகாகத்தொகுத்து வழங்கிய திருமதி சௌந்தரி சிவானந்தன் அவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. நிகழ்ச்சி இறதி மட்டும்  பொறுமையுடன் இலக்கய நிகழ்ச்சி ஒன்றில் இருந்தமை எல்லோரையும் கவர்ந்தது.



திரு வனதேவா அவர்கள் தேவாரம் – புராணம் இசைத்ததுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.  

No comments: