சங்க இலக்கியக் காட்சிகள் 50- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

கொல்லேறு தழுவலும் குரவைக் கூத்தும்

காடும் காடுசார்ந்த இடமுமான முல்லை நிலத்தில் ஓர் அழகிய கிராமம் அது. அங்கே மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழையில் நனைந்து பூமியெல்லாம் பச்சைப் பசேலெனத் தோன்றத் தொடங்கியது. மந்தை மேய்ப்போர் அவற்றை ஊருக்குள் ஓட்டிக்கொண்டு வந்து உரிய இடத்தில் விட்டுவிட்டுத் தங்கள் சேரிகளைச் சென்றடைந்தார்கள். சிலர் சூலாயுதத்தையும்ää சூட்டுக்கோலையும் கொண்டு சென்றார்கள். பாற்கலசங்கள் உறிகளிலே தொங்கிக் கொண்டிருந்தன. கொன்றை மரத்தில் செய்யப்பட்ட இனிய குழலினைச் சிலர் இசைத்து மகிழ்ந்தார்கள். ஆநிரையிலே வளம்மிக்க காளைகள் இல்லை. எல்லாமே பிற்பக்கம் கொழுத்து திமிலோடு காணப்பட்டன. முன்பு தம் கால்களால் நிலத்தைக் கிளறிப் புழுதியை எழுப்பிய அந்தக் காளைகள் இப்பொழுது ஈரமான நிலத்தைக் கிளறின. அவை ஒன்றுடனொன்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன. சண்டையிடும் காளைகள் போருக்குச் செல்லும் வீரர்களைப்போன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டன.காளைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுää கூர்மையான கொம்புகளால் குறிதவறாமல் ஒன்றையொன்று தாக்கியதால் அவற்றின் உடல்களிலிருந்து குருதி வெள்ளமாகப் பரவியது. அதனால் மாரிகாலத்தில் காலை நேரத்தில் திரண்டுநிற்கும் வெண்ணிற மேகத்தினுள்ளே எழுகின்ற சிவந்த சூரியனைப் போல அவை தோற்றமளித்தன.

இளைஞர்கள் காயப்பட்ட அந்தக் காளைகளைத் தனியாகப் பிரித்து அகற்றிää இடையிலே வேறு மாடுகளைக் களத்திலே புகுத்தினார்கள். அவர்களின் அந்தச் செயல் உலகைப் படைக்க நினைத்த இறைவன் அதற்காக விரிந்து கிடந்த கடலை ஒதுக்கியதைப் போலத் தோற்றமளித்தது.

காளைகளின் கொம்புகள் துளைத்த புண்களிலிரந்து வடிந்த குருதி கைகளில் பட்டதால் இளைஞர்களின் கைகள் வழுக்கின. அதனால் அவர்கள் மணலில் தம் கைகளைப் பிசைந்து பின்னர் கொஞ்சமும் தாமதிக்காமல் திமிறி எழுந்துää பரதவர்கள் சிறிய தோணிகளிலே ஏறுவதைப்போலக் காளைகளின் மேல் பாய்ந்து ஏறி அவற்றை அடக்கினார்கள்.
சில இளைஞர்களின் குடல்கள் காளைகளின் கொம்புகளினால் கிழிக்கப்பட்டு நிலத்திலே வீழ்ந்தன. அவற்றை கவ்விக்கொண்டு பருந்துகள் வானிலே பறந்துசென்றன. அப்போது பருந்துகளின் வாயிலிருந்து தவறிய குடல்கள் ஆலமரங்களின்மீதும் கடப்ப மரங்களின் மீதும் வீழ்ந்தன. அந்த மரங்களுக்குக் கிழே உறைகின்ற தெய்வங்களுக்குப் போடப்பட்டுப் பின்னர் கழற்றி வீசப்பட்ட மாலைகளைப்போல அந்தக் குடல்கள் மரக்கிளைகளிலே தொங்கிக்கொண்டிருந்தன.

இத்தனைக்கும் மத்தியிலே களத்திலே காளைகளைப் பரந்துபோகவிட்ட தமது அன்புக் காதலர்களோடு கைகோர்த்தக்கொண்டு பெண்கள் இன்பம்மேலிட அவர்களைத் தழுவியபடி குரவைக்கூத்தினை ஆடிப் பாடினார்கள்.

(எப்படித் தெரியுமா?)

தோழியே! நமது காதலரை அந்தக் கொலைசெய்யும் காளை தாக்கிக் குத்தி உண்டாக்கிய புண்களையெல்லாம் நம் முலையினால் தழுவி அந்த வெப்பத்தினால் ஒற்றி சுகமாக்குவோமடி.

தோழியே! நான் தயிர்கடையும்போது பலதடவைகள் என் தோளிலே தெறித்துச் சிந்திய தயிர்ப் புள்ளிகளின்மேல் கொடிய காளையைத் தழுவிக் காயப்பட்டவரின் உடலில் இருந்து வடிகின்ற குருதி கலந்துவிடுமாறு தழுவுவதால் கிடைப்பது என்தோள்களுக்கு அழகுமட்டுமா. அதற்கு மேலான இன்பமும் அல்லவா?

என் தோழியே! போர்க் காளையைத் தழுவி அடக்கப் பயப்படுதல்ää அழகிய பெண்களின் தோள்களைத் தழுவவிரும்புதல் ஆகிய இரண்டும் என்றுமே ஒன்றாகச் செல்வதில்லையடி.

தோழியே! நான் மோர் விற்கச் சென்று வருகின்றபோதுää “இவளின் கணவன் கொல்லேறு தழுவி வென்றவன்” என்று ஊரவர்கள் புகழ்ந்து சொல்லுகின்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே வருகின்ற இன்பத்தை எனது காதலன் எனக்குத் தருவானா?

அரிய தலையையுடைய காளையையும் நம் காதலரையும் பாராட்டிää வண்டினங்கள் ஒலிப்பதைப்போன்ற இசையிலே நாம் பாடுவோம். அத்துடன் “எதிர்த்தவரின் நாடு அழிய அவரை வென்று அவரிடமிருந்த திறைபெற்று வருவதுடன் எப்போதுமே மாற்றாரை நீ வெற்றி கொள்க” என்று நம் மன்னனையும் போற்றிப் பாடுவோம்.

இப்படியெல்லாம் சொல்லிப் பாடிக்கொண்டே இளம் பெண்கள் குரவைக்கூத்து என்று சொல்லப்பட்ட நடனத்தினை ஆடினார்கள்.

இத்தகைய அற்புதமான காட்சி முல்லை நிலத்திலே அடிக்கடி நடக்கும். இந்தக்காட்சியை அப்படியே ஓவியம்போல நம் உள்ளத்திலே தோன்ற வைக்கும் பாடல் பின்வருமாறு:

கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்
இமிழ்இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர்
வழூஉச்சொற் கோவலர் தத்தம் இனநிரை
பொழுதொடு தோன்றிய கார்நனை வியன் புலத்தார்

அவ்வழி
நீறு எடுப்பவை நலம் சாடுபவை
மாறேற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்த்
துளங்கு இமில் நல்லேற்று இனம்பல களம்புகும்
மள்ளர் வனப் பொத்தன

தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும்
வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின்
மெய்யார் குருதிய ஏறெல்லாம் பெய்காலைக்
கொண்டல் நிரை ஒத்தன.

அவ் வேற்றை.
பிரிவுகொண்டு இடைப்போக்கி இனத்தொடு புனத்து ஏற்றி
இருதிறனா நீக்கும் பொதுவர்
உருகெழு மாநிலம் இயற்றுவான்
விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தனர்

அவரைக் கழலஉழக்கி எதிர்சென்று சாடி
அழல்வாய் மருப்பினால் குத்தி உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்டதம் புண்வார் குருதியால் கைபிசைந்து மெய்திமிரித்
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்

அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு.
ஏறுதம் கோலம்செய் மருப்பினால் தோண்டிய வரிக்குடர்
ஞாலங்கொண்டு எழூஉம் பருந்தின் வாய்வழீஇ.
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலைபோல் தூங்கும் சினை.

ஆங்கு
தம்புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்புறு காதலர் கைபிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ.
முயங்கிப் பொதிவேம் முயங்கிப் பொதிவேம்
முலைவேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம்
கொலையேறு சாடிய புண்ணை எம் கேளே!

பல்லூழ் தயிர்கடையத் தாஅய புள்ளிமேல்
கொல்லேறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எமதோளிற்கு அணியோ? எம் கேளே!
ஆங்கு போரேற்று அருந்த அஞ்சலும் ஆய்ச்சியர்
காரிகைத் தோள் காமுறுதலும் இவ்விரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ? எங்கேளே!

கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளைமாறி யாம் வரும்
செல்வம் எம்கேள்வன் தருமோ? எங் கேளே!
ஆங்கு
அருந்தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச்
சுரும்பு இமிர் கானம்நாம் பாடினம் பரவுதும்
ஏற்றவர் புலம்கெடத் திறைகொண்டு
மாற்றாரைக் கடக்க எம் மறங்கெழு கோவே!


(கலித்தொகை முல்லைக்கலி பாடல் இல: 6 பாடியவர்: நல்லுருத்திரனார்)

No comments: