தமிழ் சினிமா


36 வயதினிலே




தமிழ் சினிமாவில் பெண்ணியம் பேசுகிற படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியிருக்க நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி.
அதேபோல் திருமணம் ஆகி நடிக்காமல் இருந்த ஜோதிகாவுக்கு தேர்ந்தெடுத்து எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த 36 வயதினிலே.
ஜோதிகா எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்க, மறுபடியும் நடிப்பாரா? என்று ரசிகர்களின் கேள்விக்கு விடையாக ரசிகர்களின் புல் மீல்ஸாக வெளிவந்துள்ளது இந்தப்படம்.


கதை
ஒரு பெண்ணின் குறைவான சுதந்திரம் என்பது அவள் திருமணம் ஆகும் வரை தான், அதிலும் குழந்தை என்று வந்து விட்டால் அவ்வளவு தான். வீட்டு வேலை, சீரியல், அழுகை என 4 சுவர்களில் அவர்களுடைய வாழ்க்கை அடைந்து விடும்.
அப்படி ஒரு பெண் தான் ஜோதிகா. ஆனால், விதிவிலக்காக அரசு வேலை பார்க்கிறார். அரசு வேலை என்றால் எந்த கணவர் தான் அனுப்பாமல் இருப்பார்கள்.
ஜோதிகா கல்லூரியில் தைரியமான பெண்ணாக இருந்து குடும்பம் என்று வந்தவுடன் அவர்களுக்காக வாழ ஆரம்பிக்கின்றார். கணவர்(ரகுமான்), குழந்தை என யாருமே ஜோதிகாவிற்கான மரியாதையை தர மறுக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஜோதிகாவின் மகள் தன் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வரும் இந்திய குடியரசுத்தலைவரிடம் ஒரு கேள்வி கேட்க, அந்த கேள்வியை அம்மா தான் கேட்க சொன்னார் என்று சொல்ல ஜோதிகாவை பார்க்க இந்திய குடியரசுத்தலைவர் விருப்பம் தெரிவிக்கின்றார்.
குடியரசுத்தலைவரை பார்க்க செல்லும் இடத்தில் ஜோதிகா உயர் ரத்த அழுத்தத்தால் மயக்க போட்டு விழ, ஊர் முழுவதும் கிண்டலுக்கு ஆளாகின்றார். இதனால் மீண்டும் கணவர், மகள் மட்டுமில்லாமல் ஜோதிகாவை பேஸ்புக் வரை கிண்டல் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
இதற்கிடையில் தன் கணவர் வேலை விஷயத்திற்காக அயர்லாந்து செல்ல, ஜோதிகாவை இங்கேயே விட்டு மகளை மட்டும் அழைத்து செல்கிறார்.
அப்போது தான் ‘உன்னால முடியும் பாஸ்கர், நம்மலால சாதிக்க முடியாதது ஏது இல்லை’ என்று பூஸ்ட் ஏற்றும் கதாபாத்திரத்தில் கல்லூரி தோழியான அபிராமி தோன்றி ஜோதிகாவிற்கு ஊக்கம் கொடுக்க, பேஸ்புக் கிண்டலுக்கு பதிலடி கொடுக்கின்றார்.
ஜோதிகா தன் வீட்டு மொட்டை மாடியிலேயே காய், கனிகளை உற்பத்தி செய்கிறார். ஒரு நாள் இதை தன் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பாட்டிக்கு கொடுக்க, அவர் தன் முதலாளியிடம் ஜோதிகாவை கொண்டு செல்கிறார்.
அவருக்கு இந்த சுத்தமான காய், கனிகள் பிடிக்க தன் மகள் திருமணத்திற்கு ஜோதிகா தான் சமையல் காய்களை தரவேண்டும் என்று கூறுகிறார். ஒரு மனதாக சம்மதித்து தன் வீட்டில் அருகில் இருக்கும் எல்லோர் உதவியையும் கேட்கிறார்.
அவர்களும் சம்மதிக்க, இந்நிலையில் ஜோதிகாவின் கணவர் அயர்லாந்து வரசொல்லி வற்புறுத்துகிறார். ஜோதிகா இதை எல்லாம் சமாளித்து சாதனை பெண்ணாக மாறினாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஜோதிகா இந்த படத்தை பார்த்த ஒவ்வொருவரும் இப்படி ஒரு நடிகையை இத்தனை நாட்கள் இழந்து விட்டோமே என்று தான் நினைப்பார்கள். தற்போது இருக்கும் நடிகைகள் கூட இப்படி நடிப்பார்களா என்றால் கேள்வி குறி தான்.
ஒரு வெகுளி அம்மாவாக, மனைவியாக, சமுதாயத்தில் மதிப்பு எதிர்ப்பார்க்கும் பெண்ணாக ஒவ்வொரு காட்சிகளிலும் சிக்ஸர் அடிக்கின்றார்.
அதிலும் குறிப்பாக தன்னை கிண்டல் செய்யும் பேஸ்புக் ஆசாமிகளுக்கு பதிலடி கொடுக்கும் இடத்தில் ஜோ மேடம் குயின் ஆப் எக்ஸ்பிரஷன் எப்போதும். படம் ஹீரோயின் சார்ந்தே இருப்பதால் ஹீரோ யார் என்று தேடினால் கண்டிப்பாக வசனகர்த்தா விஜி தான்.
’பெண்கள் நாமெல்லாம் 5 சந்தோஷங்களை பெற்று, 50 விதமான நம் விருப்பங்களை குடும்பத்திற்காக விட்டு கொடுக்கின்றோம்’, ’இதுநாள் வரை கணவர், குழந்தைகள் என அவர்களுக்காக வாழ்ந்து நம் வாழ்க்கையை தேடாமலே தொலைத்து விட்டோம்’, ‘ஆண்களின் கேள்விகளாக இருந்து விட்டோம்..நாம் விடைகளாக மாற வேண்டும்’ என இன்றைய பெண்களின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்துகிறார்.
சந்தோஷ் நாரயணன் இசையில் வாடி ராசாத்தி, சிறகுகள் இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றது. அதேபோல் பின்னணி இசையில் கதையோடு ரம்மியமாக பயணிக்க உதவுகிறது. ஆனால், தீவிர ஹான்ஸ் ஜிம்மர் ரசிகராக இருப்பார் போல, சார் அதை கொஞ்ச கவனிங்க..
க்ளாப்ஸ்
கண்டிப்பாக ஜோதிகா தான், சோலோ ஹீரோ+ஹீரோயினாக கலக்கியிருக்கிறார். படத்தின் வசனம், இசை, ஒளிப்பதிவு, என அனைத்தும் அசத்தல்.
மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆன்ட்ரியுஸ் தமிழிலும் இயக்கியிருப்பதால் மிக தெளிவாக அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பல்ப்ஸ்
படத்தில் கொஞ்சம் குறை இருந்தாலும், பெண்களை பற்றி இப்படி ஒரு படம் வருவது அரிதிலும் அரிது, அதற்காகவே No பல்ப்ஸ்
மொத்தத்தில் 36 வயதினருக்கு மட்டுமில்லை அனைத்து வயது பெண்களுக்கும் ஒரு எனர்ஜி டானிக் தான் இந்த 36 வயதினிலே...

Rating - 3.75/5


No comments: