சங்க இலக்கியக் காட்சிகள் 49- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காளையை முறியடித்தான், கன்னியைக் கரம்பிடித்தான்
முல்லை நிலத்தில் “ஏறுதழுவுதல்” என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி. மணப்பெண்ணின் வீட்டில் அதற்காகவே வளர்க்கப்பட்ட காளையை அடக்க முயல்வதே ஏறுதழுவுதல் ஆகும். காளையை அடக்கி வெற்றி பெறுபவனுக்கே அந்தப்பெண்ணை மணம் முடித்துக்கொடுப்பது பண்டைக்காலத்தில் வழக்கமாயிருந்தது.  “கொல்லேறு தழுவுதல்” என்று அதை ஒரு விழாவாகவே நடாத்தினார்கள்.



முல்லை நிலத்தில் அழகான ஓர் ஊர். அங்கே ஓரிடத்தில் கன்னிப் பெண்கள் கூடினார்கள். நறுமணம் வீசும் பிடவம், நிலத்திலே தவழுகின்ற கொடிமுல்லை, பலவண்ணங்கொண்ட தோன்றி, ஒளிருகின்ற கொன்றை முதலிய பல்வேறு மலர்களைக் கொய்து மாலைகட்டி மகிழ்வோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்காகவே இளைஞர் கூட்டம் ஒன்று அங்கே வளைய வளைய வந்துகொண்டிருந்தது. அவர்களில் தலைவனும் ஒருவன். விளையாடிக் கொண்டிருந்த அந்த இளம் பெண்களில் ஒருத்தியின் அழகு அவனை மிகவும் கவர்ந்து விட்டது. அவனது நளினம் அவனது இதயத்தைச் சுண்டி இழுத்தது. உடனே தன் தோழனிடம்ää “அடேய் நண்பா! அங்கே மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருக்கும் கன்னிப் பெண்களைப் பார்த்தாயா? அவர்களிலே அதோ அவர்களுக்கு மத்தியிலே ஒய்யாரமாக நின்றுகொண்டிருக்கிறாளே ஒருத்தி. அவள் தனது உடலுக்குள் எனது உயிரைப் புகுந்துகொள்ளச் செய்வதுபோல என் உள்ளத்தைக் கவர்கிறாள். அவளைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டான். அதற்கு தோழன், “ ஓ அவளா? மிகவும் மிகவும் கொடிய போர்க்காளையை அடக்கி வெற்றி கொள்பவர் அல்லாது வேறெவரும் அவளை மணம் முடிக்க முடியாது என்று ஏற்கனவே பறையறைந்து விட்டார்கள். அவள் அல்லவா இவள்?” என்று சொன்னான்.
உடனே தலைவன். “நான் அந்தக்காளையைத் தழுவி அடக்குவதற்கு முன்வந்திருக்கிறேன் என்று அவளின் பெற்றோரிடம் போய்ச் சொல்” என்று கூறினான். தலைவனின் தோழனும், உறவினர்களும் அவளின் பெற்றோரிடம் சென்று தலைவனின் விருப்பத்தைச் சொல்லி, “இப்பொதே நாங்கள் தயார், தாமதிக்க மாட்டோம்” என்று கூறினார்கள்.

அவளின் பெற்றோரும், சுற்றத்தினரும், ஒன்றுகூடிப் பேசினார்கள். ஏறுதழுவும் விழாவை நிச்சயித்தார்கள். பின்னர், தங்கள் பெண்ணுக்கு மணமகனைத் தெரிவு செய்வதற்கான ஏறுதழுவுதல் விழா நடைபெறும் என்று ஊரெங்கும் பறையறைவித்தார்கள்.

அந்த விழாவிலே, நோக்குமிடமெல்லாம் கண்கள் பூக்கும் அளவிற்கு பெண்கள் அமர்ந்திருக்கக்கூடியவாறு பரண்களை அமைத்தார்கள். பரண்கள் நிறைய அழகிய பெண்கள் அமர்ந்திருந்தார்கள். ஊரவர்கள் எல்லோரும் கூடியிருந்தார்கள்.

அழகில் சிறந்த இனத்தைச் சேர்ந்த காளைகள் அங்கே திமிறிக் கொண்டு நின்றன. அந்தக் காளைகளின் மேல் பாய்ந்தேறுவதற்காக ஆயர் குலத்து இளைஞர்கள் அவற்றின் எதிரே ஆரவாரத்துடன் வேகமாகச் சென்றார்கள். அவர்கள் தங்களை நோக்கி வருவதைக்கண்ட காளைகள் கோபத்துடன் சிலிர்த்தன. அவர்களை நோக்கிப் பாய்ந்தன. எங்கும் புழுதி கிளம்பியது. இளைஞர்கள் நெஞ்சை நிர்த்தி நின்றார்கள். காளைகள் தங்கள் கொம்புகளைத் தரையைத் தொடுவதுபோலத் தாழ்த்திப் போருக்குத் தயாராயின. அதனைக் கண்ட இளைஞர்கள் சிலர் கலங்கினார்கள். காளைகள் மீது பாய்ந்தவர்கள் பலர் காயப்பட்டார்கள், ஐயோ என்று கதறினார்கள். அப்போது தலைவன் நீலமணியைப்போன்ற நிறத்தைக்கொண்ட நீண்ட தோளையுடைய காளையின் மேல் பாய்ந்தான். அதன் கழுத்தை இறுகப் பற்றினான். அதுதான் அவனின் மனதைக் கொள்ளை கொண்ட கன்னியின் பெற்றோர் வளர்த்த காளை. அது சினத்துடன் பாய்ந்தோடியது. கழுத்தைப் பற்றிய கைகளை மேலும் இறுக்கி, காளைக்கு நோவெடுக்கும்படி அங்கும் இங்கும் இழுத்து நீண்ட நேரம் அதனை அலைக்கழித்தான். காளையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அது களைத்துவிட்டது. மிகவும் வருத்தமுற்று அடங்கியது.

அந்தக் காளை பட்ட வேதனையைக் கண்டவர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றார்கள். காளையின் சொந்தக்காரர்கள் அந்த இளைஞன் அதனை அடக்கிக் கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியடைவதை விடுத்து ஏனோ அவன்மேல் பகைமை பாராட்டினார்கள்.

“சரி, சரி இனித் தண்ணுமை வாத்தியம் ஒலிக்கட்டும்” என்று பெண்ணின் சுற்றத்தவர்கள் கூறினார்கள். காளையை அடக்கிய இளைஞனின்  கருமையான உடலினையும், திண்மையான தோள்களையும், அவனின் திறமையையும், காளையோடு பொருதிய தன்மையையும், அவனோடு சேரப்போகின்ற அழகிய பெண்ணின் மென்மையான தொள்களையும் பாராட்டி குரவைக் கூத்தாடி மகிழலாம் வாருங்கள் என்று உறவினர்கள் அழைத்தார்கள். எல்லோரும் எழந்து குரவைக்குத்தைக் காண்பதற்காகச் சென்றார்கள்.

(“இளைஞர்களே! இதற்கு முன்னரும் கொல்லேறுதழுவி எத்தனையோபேர் காளைகளின் கழுத்துக்களிலேயே தங்கித் துன்பப்பட்டமையைக் கண்டிருந்தும்கூட, இன்னமும் கொல்லேறு தழுவச்சொல்கின்றார்களே இந்த இடையர் குல மக்கள். இவர்கள் அறியாமை மிகுந்தவர்கள் தானே!” என்ற புலவரின் அறிவுரைக் கூற்றும் பாடலில் உள்ளமையைக் காணலாம்)


இந்தக் காட்சியை எழிலுறக்கூறுகின்ற பாடல் வரமாறு:

கண்ணகன் இருவிசும்பில் கதழ்பெயல் கலந்துஏற்ற
தண்நறும் பிடவமும், தவழ்கொடித் தளவமும்
வண்ணவண் தோன்றியும் வயங்கிணர்க் கொன்றையும்
அன்னவை பிறவும் பன்மலர் துதையத்
தழையும் கோதையும் இழையும் என்றிவை
தைஇனர் மகிழ்ந்த திளைஇ விளையாடும்
மடமொழி ஆயத்தவருள் இவள்யார் உடம்போடு
என்உயிர் புக்கவள், இன்று?
ஓ ஓ! இவள், பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர் என்று கருமமா
எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்
சொல்லுக! பாணியேம் என்றார், அறைக என்றார், பாரித்தார்
மாணிழை ஆறாகச் சாறு.
சாற்றுள் பெடையன்னார் கண்பூத்து, நோக்கு வாயெல்லாம்
மிடைபெறின் ஏராத் தகைத்து.
தகைவகை  மிசைமிசைப் பாயியர் ஆர்த்து, உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்.
கோலைமலி சிலைசெறி செயிர்அயா சினம்சிறந்து
உருத்து எழுந்து ஓடின்று மேல்
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்
அவருள். மலர்மலி புகல்எழ அலர்மலி மணிபுரை நிமிர்ந்தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன், தோன்றி
வருத்தினான் மன்ற, அவ் வேறு.
ஏறெவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறுநடை நல்லார் பகை?
மடவரே, நல்லாயர் மக்கள் நெருநை
அடலேற்று எருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும்
உடலேறு கோள்சாற்று வார்!
ஆங்கினித்,
தண்ணுமைப் பாணி தளராத எழூஉக
பண்ணமை இன்சீர்க் குரவையுள், தென்கண்ணித்
திண்தோள், திறல்ஒளி, மாயப்போர், மாமேனி
அந்துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென்தோள் பாராட்டிச். சிறுகுடி
மன்றம் பரந்தது உரை!

(கலித்தொகை, முல்லைக்கலி பாடல் இல: 2 பாடியவர்: நல்லுருத்திரனார்)

No comments: