அன்னையர் தினப் பரிசு , சிட்னியில் நடாத்தப்பட்ட Ping Sari நிகழ்வு

.
கடந்த 2.5.15 அன்று  மாலை 2.45 – 5.00 மணிவரை ஹொல்ரொயிட் நகரசபை மண்டபத்தில் தமிழ் தாய் மார்களுக்கான பிங் சாறி அன்னையர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப் பட்ட்து.



மூன்று அமைப்புகள் சேர்ந்து நடாத்திய இந் நிகழ்வில் பல எண்னிக்கையிலான அன்னைமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அன்னையரை வரவேற்றுப் பேசிய கொன்சிலா ஜெரோம் ( CMRC – SGP worker) மழையும் குளிரும் காற்றும் சூழ்ந்திருந்த இப்பொழுதில் வந்து கலந்து கொண்டோரை வெகுவாகப் பாராட்டி வரவேற்றார்.




அவர் தொடர்ந்து பேசுகையில் இங்கு பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் ஒரு பெரும் சவாலாக இருப்பது குறித்தும; அதனை எவ்வாறு வராமல் தடுக்கலாம் அல்லது ஆரம்ப காலத்திலேயே எவ்வாறு கண்டறிந்து அதற்கான சிகிச்சையைச் செய்து கொள்ளலாம் என்பது பற்றியும் எடுத்துரைத்து குறிப்பாகத் தமிழ் சமூகத்துப் பெண்கள் இது விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை என்பது குறித்தும் உரையாற்றியதோடு அது பற்றிய விழிப்புணர்வு நம் பெண்கள் மத்தியில் ஏற்படவேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினார்.
பல்லினப் பண்பாட்டு மக்களுடனான தொடர்பூடக சேவையில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் திருமதி. ஜெசூசா.ஹெலரட்ன ( Multi Cultural Health Communication) பல்லின பண்பாட்டு பின்னணியைக் கொண்டிருக்கிற மக்கள் பொதுப் பண்பாட்டோடு எவ்வாறு தம்மை இணைத்து ஒத்திசைவான வாழ்வியலை நோக்கி நகரலாம் என்பது பற்றித் தெரிவித்து பிலிப்பைன்ஸ் பண்பாட்டுப் பின்னணியைக் கொண்டிருக்கிற தான் ஓர் இலங்கையரைத் திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கும் தாயாய் இருப்பதன் ஊடாக பல்லினப் பண்பாட்டின் உதாரணமாக தான் இருப்பதை வெளிப்படுத்தி உரையாற்றினார்.



தொடர்ந்து பேசிய வைத்தியக் கலாநிதி திருமதி. சித்ரா.ஹரிநேசன் ( Australian Medical Aid Foundation) விரிவாக தமிழ் பண்பாட்டில் பெண்களும் அவர்களுடய உளவியல் பாங்கும் வாழ்க்கை இயல்புகளும் எவ்வாறு அவர்களைத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் பிந்தங்கியவர்களாக  வைத்திருக்கிறது என்பது பற்றித் தெரிவித்து அவற்றில் இருந்து அவர்கள் மாறவேண்டிய அவசியம் குறித்து உரையாடியதோடு விரிவாக மார்பகப் புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு வரும் ஏனைய புற்று நோய்கள் அவற்றில் இருந்து அவர்கள் தம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்பது பற்றி உரையாடி விழிப்புணர்வினை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி, பரிசோதனை முறைகள் சிகிச்சை வகைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்து, - தன் வைத்தியத்துறையில் ஆரம்பகாலத்தில் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்து இன்று சுகதேகியாக வாழும் பெண்மணி ஒருவரையும் தன் அனுபவத்தைக் கூறுமாறு அழைத்தார்.
அதன் பின்னர் வெஸ்மீற் வைத்தியசாலையில் மார்பகப் புற்றுநோய் பிரிவில் இருந்து வந்து கலந்து கொண்ட மார்கி (Westmead Brest cancer Institute) மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முறைகள் பற்றி உரையாடி அதில் பயம் கொள்ளவோ வெட்கம் கொள்ளவோ வேண்டிய தேவை இல்லை என்பது குறித்து உரையாற்றியதோடு வருமுன் காப்போம் என அறைகூவல் விடுத்து பெயர்களைப் பதிவு செய்ய தான் இங்கு தயாராக இருப்பதையும் தெரிவித்தார்.




ரோசா வண்ன சேலையில் வந்திருந்த அன்னையர் எல்லோருக்கும் குளிர்கால மாலையில் சுடச்சுட சுடு, குளிர் பான்ங்களும் வெதுவெதுப்பான சிற்றுண்டியும் பரிமாறப்பட்டதோடு அன்பாலயத்தினரின் பாடல் பரிசுகளோடு நன்றியுரை மற்றும்  பார்வையாளர் அபிப்பிராயங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களோடு மனநிறைவான உபயோகமான கொண்டாட்டமாக இந்த தமிழ் பெண்களுக்கான பிங் சாறி அன்னையர் தினக் கொண்டாட்டம் நிறைவுக்கு வந்த்து.




நம் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் பெண்களும் சரி அன்னையரும் சரி தம்மைதம் உடல் மன வளத்தைக்  கவனித்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை என்ற தொனி பொதுவாக நம் மத்தியில் இருந்து வருகிறது. ‘மாற்றங்களில் இருந்து ஒதுங்கி விடமுடியாது. அப்பாவிகளாக இனிமேலும் இருந்து விட முடியாது என்று ஓரு பார்வையாளர் பேசியதற்கிணங்க நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் ஒரு பரிசாக பெண்கள் எல்லோரும் ஏன் ஒரு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை ஒன்றைச் செய்து நம் ஆரோக்கியத்தை ஒரு முறை நிச்சயப் படுத்திக் கொள்ளக் கூடாது?





No comments: