அரிய மருத்துவக் குறிப்புகள் !

.


ஊளைச் சதையை குறைக்க :
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாகக் காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.
இதுதவிர, வாழைத்தண்டுச் சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.



குளிர்ந்த நீர் :

மண்பானை. இது, மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருடச் செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவை போட்டுவைக்க இது பயன்பட்டது. பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். நவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்ற பயன்களிள் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்! ஆகவே கோடைக்காலத்தில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்துப் பருகி வாருங்கள். உடலுக்குக் குளிர்ச்சி. உள்ளத்தில் மகிழ்ச்சி.

வாயுத் தொல்லையா?:

இஞ்சி எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சைச் சாற்றை நாள்தோறும் பருகி வந்தால் காலரா அண்டாது. சாப்பிடுமுன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும். மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

வயிற்றுவலியா?:

ஒரு தம்ளர் கொதிநீரில் 1 தேக்கரண்டி தேனைக் கலந்து குடித்தால் ¼ மணி நேரத்தில் வலி பறந்து விடும். காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

உடல் அசதியா?:

முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு இரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும். காலையில் இருமல் வந்தால் கடுகைப் பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 இதழிலிருந்து )

No comments: