பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் திருவடிக்கலப்பு நினைவு

.
சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய
சான்றோராகிய பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள்
அவர்களின் திருவடிக்கலப்பு நினைவு

சிவனடி மறவாத சிந்தையாளராக விளங்கி வந்தவரும்
சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அரும்பணிகள் ஆற்றி வந்தவருமான
சான்றோராகிய சிவத்தமிழ் வித்தகர்ää மூதறிஞர்ää தத்துவக்கலாநிதிää
பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் 99 ஆவது அகவை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ( வெள்ளி இரவு) 25-04-2015 சனிக்கிழமை அதிகாலை 3:00மணியளவில் சிவபதம் - திருவடிக்கலப்பு எய்தினார்.காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கி இறுதிவரை அதை நெறிப்படுத்த பெருமை குருக்களையே சாரும். காரைநகர் மணிவாசகர் சபையைத் தோற்றுவித்ததுடன் அது செவ்வனே நடைபெறக் குருக்கள் ஐயா பெரும் பணி இயற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் அறிஞராக – பதிப்பாசிரியராக – எழுத்தாளராக – ஆசிரியராகப் - மனித நேயம் மிக்கவராக - பலதரப்பட்ட சேவைகள் ஆற்றியவர். அன்னாரை வணக்கத்துடன் நினைவுகூருகிறேன்.


          ----------- பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி
                           உ
                         சிவமயம்
 அண்டமெலாம் அருள்விரிக்கும் அந்தி வண்ணன்
    அருட்சோதி தனிற்கலந்தார் தெய்வம் தானே!
       
     நிலைக்காத உடல்நீத்து ஆவி பிரியுமுன்
         நினைந்துருகி வழிபடுந்தன் கூத்த னாரின்
     கலைக்கோலக் குடமுழுக்குக் காட்சி காணக்
         காததூரம் பலசெல்ல விழைந்த குருக்களை
     அலைக்காது அன்றிரவு அதிசய மாயவர்
         அறையிருந்தே முழுநிகழ்வைப் பார்த்தின் புறவே
     தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்த தென்றால்
         சுந்தரேசப் பெருமானருள் சொல்லப் போமோ?.

                   உற்றநண்பன் இளமுருகன் உவந்தே யாத்த
         ஒப்பரிய சிதம்பரபு ராணத் திற்குக்
     கற்றறிந்த புலவோரும் நாணா நிற்கக்
         கலைமகளின் அருள்பெற்று உரைவி ரித்த
     பொற்புமிகு பரமேசுவரி அம்மை யாரின்
         புகலரிய நல்வாழ்க்கைச் சரிதம் எழுதி
          “அற்புதத்தல  புராணமதிற் சேர்க்கத் தாரீர்
         அவசரமிது” என்றெனக்குப் பணித்தவ ரெங்கே?;

      இறுதிநாள்களில் இப்படியோர் விருப்பந் தோன்ற
           எனக்குத்தொலை பேசியிலே அன்பாய்ப் பேசி
      மறதியென்ற பேச்சிற்கே இடந்தரா(து) என்தாய்
          மாணவியாய் இருந்திட்ட காலத் திலவர்
      திறமைகண்டு அவரின்ஆ சிரியர் எழுதிய
          சீர்பாடும் செய்தித்தாள் தேடி யெடுத்து
      இறப்பெய்த முன்னாள்வி யாழ னன்று
          எனக்கனுப்ப விழைந்தமனம் சென்ற தெங்கே?

      பேரிரைச்சற் சுழற்காற்றோ கந்தரோ டையிற்
          பெருவேக மாய்வீசப் பிள்ளைகள் பயந்து
            “ஐயையோ” இந்தச்சா மத்திலிப் படியா
          அஞ்சுகிறோம் “ஐயையோ”  எனக்குருக் களையா
            ‘பொய்யிற்கும் அப்படிச்சொல் லாதீர் நீவிர்;’
         புலனடக்கிச்  “சிவசிவ”வென் றோதச் சொல்லி
      மெய்யாக ஈரைந்து நிமிடத் திற்குள்
         வித்தகனார் பூத்தேரிச் சென்ற தெங்கே?


      அகவைதொண் ணூற்றொன்பதை அடைந்த போதும்
         ஐயாவின் சிந்தைமிகத் தெளிந்த நிலையில்
      பகலிரவாயச்; ‘சிவசிவ’வென் றோதி இறுதிப்
         பாலருந்தத் தரச்சொல்லிப் பருகும் போது
            ‘சுகமாகத் தான்யோகர் சுவாமி யோடு
          சோதிநிலை கண்டுற்றேன் அஞ்சற் க’வென்று
       தவமாகப் பெற்றிட்ட பிள்ளைக் காறுதல்
           தயவாகக் கூறியபின் சோதியிற் கலந்தார்.

      செந்தண்மை பூண்டொழுகி வாழ்ந்த செம்மல்
          திருப்பொலியும் வைத்தீஸ்வரக் குருக்க ளாரை
       பந்தமறுத்(து) ஆட்கொள்ள உகந்த வேளை
           பார்த்திருந்த அந்திவண்ணன் அருள்நோக் கதனால்
       அந்தகனை ஏவாது வாயு தேவன்
           அலங்காரத் தேரேற்றி அழைக்கப் பணிக்க
       விந்தையிது “சிவசிவ” வென் றோதிய வண்ணம்
           விருப்பொடுசிவன் விரைமலர்த்தாள் அடைந்தா ரன்றோ?

       கண்டவுடன் எழுந்திருகை கூப்பும் பண்பு
           காதலொடு இன்சொல்லே உகுக்கும் கேண்மை!
       கொண்டஞான முதிர்ச்சிதனைக் காட்டும் பார்வை!
           கோடிகொடுத் துங்காணா அன்பு மனம்!
       தொண்டராகிப் பலபணிகள் செய்யும் பெற்றி!
           தொண்நூற்று ஒன்பதிலும் தொடர்ந்த தம்மா!
     அண்டமெலாம் அருள்விரிக்கும் அந்தி வண்ணன்
        அருட்சோதி தனிற்கலந்தார் தெய்வம் தானே!
           சாந்தி- சாந்தி – சாந்தி
                   


No comments: