சிட்னியில் நடைபெற்ற சன்னத்தின் சுவடுகள் நூல் வெளியீடு!

.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாகாஸ் நிறுவனத்தின் பேராதரவில் தமிழ்லீடர் வெளியீட்டகத்தின் ச(ன்)னத்தின் சுவடுகள்  கவிதை நூல் மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை  உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில்  நடைபெற்ற  இந்நிகழ்வில் 200 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இளையசமூக செயற்பாட்டாளர்  கௌசிக்  மற்றும் ,காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர்.
மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு  மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக தாயக விடுதலைப் போரில் மரணித்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து நினைவுத்தீபம் ஏற்றப்பட்டுஅகவணக்கம் செலுத்தப்பட்டது.தமிழ்லீடர் வெளியீட்டகத்தின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்திய தர்மலிங்கம் யோகராசா அவர்கள் ஆயிரக்கணக்கான உறவுகளை இழந்து ஆறு ஆண்டுகளான நிலையில் அவர்களின் உணர்வுகளை தாங்கியவாறு வெளிவருகின்ற இப்படைப்புகள் கால முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தி யிருந்தார்.
தலைமை உரையாற்றிய சமூகசெயற்பாட்டாளர்  தனபாலசிங்கம் அவர்கள் மே மாதத்தில் வருகின்ற இப்படைப்புகள் நாளைய சமூகத்தின் செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக  இருக்கின்றன என்றும் இப்படைப்புகளில் வெளிவந்துள்ள ஒவ்வொரு கவி வரிகளுமே அக்கவிஞனின்  உணர்வுகளின்  ஊற்றாகவலி சுமந்தவனின் ஏக்கங்களாக வெளிவருகின்றன எனபதிவுசெய்தார்.
சமூகவிடுதலை நோக்கிய  இத்தகையபடைப்புகளின் அவசிய தேவைபற்றியும் அவற்றின் நோக்கம் வெற்றியடைய வேண்டும்  என்றும் கலாநிதி கௌரிபாலன் அவர்கள் மனநிறைவோடு தனது கருத்துக்களை  முன்வைத்தார்.

படைப்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றிய அகதிகள் செயற்பாட்டாளரும், மனிதவுரிமை செயற்பாட்டாளருமான, பாலா விக்கினேஷ்வரன்  அவர்கள்  சன்னத்தின்  சுவடுகள்  படைப்பாளன் நிஜத்தடன் நிலவனும்  நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு ஆக்கத்தை படைத்த  இளையவன்னியன்  எப்போதுமே சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள்  அவர்களின் இன்னொருபக்கத்தை  இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பதில்  பெருமையடைவதாகதெரிவித்தார்.
நூலுக்கான வெளியீட்டுரையை வழங்கிய இளைய எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான  கொற்றவன்  முள்ளிவாய்க்காலின் பேரழிவின் சாட்சியாக இப்படைப்புகள்  வரும். இத்தகைய சாட்சிகள் சிறிலங்கா இனவழிப்பு அரசை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லும் என்றும் வலிசுமந்த அந்த மண்ணில் தான் நேரடியாக கண்ட அவலங்களையும் தனக்கு ஏற்பட்ட சோகமான நிலையையும் பகிர்ந்து கொண்டார்.

நடக்க முடியாமல் காயங்களோடு பொன்னம்பலம்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகள் மீது பெப்ரவரி 2009 இல் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அனைவருமே நிலத்தில்  புதையுண்டு போன கொடுமையை  இத்தகைய மனிதாபிமானமற்ற போரை செய்தவர்கள் மீது எமது சாட்சியங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தனது கருத்தை பதிவுசெய்தார்.
விடுதலைப்புலிகளின் மருத்துவர்களே மக்களுக்கும் அறுவைச்சிகிச்சை உட்பட அவசிய மருத்துவ தேவைகளை கவனிக்க வேண்டியிருந்த நிலைபற்றியும் காயக்காரர்களை அகற்றுவதற்கு முன்னரே இன்னொரு பெரிய தொகை காயக்காரர்கள் அங்கு வந்துவிடுவார்கள் என்றும் தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சன்னத்தின் சுவடுகளுக்கான அறிமுகவுரையாற்றிய எழுத்தாளரும் தமிழோசை சஞ்சிகையின் ஆசிரியருமான மாத்தளை சோமு அவர்கள் தான் எத்தனையோ படைப்புகளை படைத்த போதும் எத்தனையோ படைப்புகளை வாசித்தபோதும்  சன்னத்தின் சுவடுகள் உணர்வுகளின் காவியமாக இருப்பதாக தனது கருத்தை பதிவுசெய்தார்.
இத்தகைய படைப்புகள்  மூலமே அந்த மண்ணில் நடைபெற்ற கொடுமைகள் வெளியுலகிற்கு கொண்டுவர முடியும் எனவும் தனது கருத்தை தெரிவித்தார்.

படைப்புக்கள் தொடர்பாக ஆங்கிலத்தில்  உரையாற்றிய செல்வி .ஜனனி ஜெகன்மோகன்  முள்ளிவாய்க்காலில் சத்தமில்லாமல் தமிழினம்  இனம் சாகடிக்கப்பட்டது , சாட்சியமற்ற போரின் சாட்சியமாக , சாகடிக்கப்பட்ட மக்களின் சாட்சியமாக  சன்னத்தின்  சுவடுகள்  இருக்கிறது. இக்கவிதைகள் யுத்தம் , இராணுவ கொடுமைகள் , இராணுவ ஆக்கிரமிப்பு , எழுச்சி , புரட்சி , இடப்பெயர்வு , போன்றவற்ரை அனுபவமாக சொல்லுகிறது.
உண்மையில்  முள்ளிவாய்க்காலில்  நின்ற  ஒருவரால்  எழுதப்படுவதால் உணர்வால்  இங்கிருந்து முள்ளிவாய்க்காலில்  நின்ற  எங்களின்  உறவுகள் அந்த  களத்தில்  எம்மினம்  எதிர்கொண்ட  அவலத்தை  இந்நூலை படிப்பதன் மூலம்  உணர்ந்து  கொள்ள  முடியும்.
நாங்களும் மனிதர்களே  கவிதை  இறுவட்டு  ஈழத்தமிழ் இனத்தின்  உலகை நோக்கிய வேண்டுதலாக , கடந்த  கால இன அழிப்பின்  ஆவணமாக அமைகிறது , இவ்வளவு  காலமும் நாங்கள்  அழிவை  பார்த்து கொண்டிருந்த  உலகத்தை பார்த்து  கேள்விகளை  தொடுக்கிறது ,

இன்றும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதை  அடக்கு  முறைக்குள்  உள்ளாக்கப்படுவதையும்  பதிவு செய்கிறது . அது ஒரு கவிஞரின் குரல் அல்ல ஒரு இனத்தின் குரல். என்று தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்
தொடர்ந்து சன்னத்தின்  சுவடுகள்  நூல் வெளியீடும் நாங்களும் மனிதர்களே இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டது. 35 இற்கும் மேற்பட்டோர் மேடைக்குவந்து சிறப்புபிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
நூலுக்கான ஆய்வுரையை வழங்கிய இளைய எழுத்தாளரும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டின் படைப்பாளியுமான  இளையவன்னியன் அவர்கள் கவிவரிகளுக்குள்ளே புதைந்திருக்கும்  உணர்வுகளின் கலவையையும்  ஒவ்வொரு கவிதைகளுமே தாயக மக்களின் எண்ணங்களின்  தெறிப்பாக  இப்படைப்பை படைத்த கவிஞனின் குமுறலாக உள்ளமையை சுட்டிக்காட்டினார்.
பொதுப்பரப்பில்  இத்தகையபடைப்புகளின் முக்கியத்துவத்தையும் அதனை நிஜத்தடன் நிலவன் முறையாக கொண்டு வந்தமையையும் அன்னையர் நாளான இன்று  இப்படைப்புகளை வெளியிடுவது பற்றியும் இப்படைப்பின் அட்டைப்படமும்  குழந்தையை பிரசவிக்க முயன்ற ஒருதாய் கொடுரமாக கொத்துக்குண்டால் கொல்லப்பட்டஒளிப்படத்தை தாங்கி வந்தமையையும் தொட்டுக்காட்டினார்.
ஆய்வு நிலையில் நோக்கும்போது ஒரு சில கவிதைகளை தவிர்த்தும் கவிநயத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் எனினும் சன்னத்தின் சுவடுகளாக சனத்தின் சுவடுகளாக இப்படைப்பு பதிக்கின்ற சுவடுகளின் கனமே அதிகம் இருக்கின்றது என்றும் தனது மதிப்பீட் டுரையில் பதிவுசெய்தார்.
தொடர்ந்து சன்னத்தின்  சுவடுகளுக்கான ஏற்புரையாற்றிய நூலாசிரியர் நிஜத்தடன் நிலவன் கவிதைகளுக்கான வரம்புக்குள் நிற்க முயன்றும் தான் பலசந்தர்ப்பங்களில் தோற்றுப்போனதாகவும்  தான் பார்த்தபழகிய உணர்ந்த தெரிந்த தன்னைப்பிழிந்த உணர்வுகளையே பதிவு செய்ததாகவும் புதிய படைப்புகளை கொண்டு வருவதற்கு உங்கள் ஆதரவு துணையிருக்கின்றது என்பதில் தான் நிறைவடைவதாகவும் தெரிவித்தார்.
குழந்தையை பிரசவிப்பது போன்று இப்படைப்பை வெளிக்கொண்டு  வருவதில் தனக்கிருந்த சுமையை பகிர்ந்து கொண்ட அவர் தனது குழந்தையின் ஒவ்வொரு கட்டத்தையையும்  மருத்துவர்களாக இருந்து பரிசோசித்து ஆலோசனை  கூறிய நல்லுள்ளங்களும்  தனது குழந்தையின் மீதிருந்த அக்கறையால் முழுமையாக தங்களது கருத்தை சொல்லியிருக்கமாட்டார்கள்  என்றும் தனது அவையடக்கத்தை பதிவுசெய்தார்.
கல்லறைக்கா சுடுகாட்டுக்கா என்ற தனது கவிவரிகள் பற்றியும் அதன் ஆழங்களையும் பதிவு செய்த அவர்  தலையறுந்தபனைமரத்தின் நிலையையும் தனது நிலையையும் ஒப்பீடுசெய்து கவிவடித்த முறையையையும்  நினைவு கூர்ந்தார்.
இறுதி நிகழ்வாக கனத்த தலைப்புகளுடன் கவியரங்கம் நடைபெற்றது சௌந்தரி கணேசன்  தலைமையில்  நடைபெற்ற கவியரங்கத்தில் முள்ளிவாய்க்காலில்  எமது மக்களின்  நிலை பதிவு செய்யப்பட்டது.
இளம் படைப்பாளர்  கௌசிக்  “பாழ்படுத்த வந்தோரும் வேல் எடுத்து நின்றோரும்” என்ற தலைப்பில் போராளிகளின் உணர்வுகளையும்,
 கவியரங்கம்
இளம் செயற்பாட்டாளர்  நிலா பிணம் “தின்னிதேசத்தில் பெண்கள்” என்ற  தலைப்பில் பெண்களின்  நிலையையும்,
 பிரபல படைப்பாளர்  ஈழன் இளங்கோ “துளிர்விடும் ரத்தங்கள்” என்ற தலைப்பில் இளைஞர்களின்  இறுகியநிலையையும் ,
இளஞ்சிட்டு சத்தியன் அவர்கள்  “கொத்தணிக்குண்டும் குழந்தைகளும்” என்ற தலைப்பில் குழந்தைகளின் அவலநிலையையும் சமூகசெயற் பாட்டாளர் சோனா பிறின்ஸ் அவர்கள் “முத்தாகி வித்தாகி விதையாகி” என்ற தலைப்பில் முதியோர்களின் கவலை நிலையையும் பகிர்வுசெய்தார்.
நிகழ்வின்  இறுதியில் தமிழ்லீடர்  வெளியீட்டகத்தின் சார்பில் மயூரன் உரையாற்றுகையில், பேர்த் கான்பரா அடேலயிட் மெல்பேர்ண்  ஆகிய இடங்களிலிருந்தும் வருகைதந்து பங்குபற்றிய இளையவன்னியன், காசன் ,தமிழ்மாறன், கொற்றவன்,ஆகியோருக்கு முறையே நன்றிகளை தெரிவித்துக்கொண்டு நிகழ்வை முழுமையாக ஒருங்கிணைத்த நிஜத்தடன் நிலவனுக்கும் பிரதானஅனுசரணை வழங்கிய வாகாஸ் எம்போறியம் யாழ் மண்டபம் சுஜன் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு நிகழ்வு நிறைவுக்குவந்தது.
அனைவருக்கும்  சுவையான சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டதோடு அனைவரும் படைப்பாளர்களுடன்  ஒளிப்படங்கள் எடுத்து படைப்பாளர்களை ஊக்குவித்தனர்  என்பதும்  குறிப்பிடத்த்க்கது.
nantri tamilleader 
நன்றி tamilleader

No comments: