விழுதல் என்பது எழுகையே" - பகுதி 39 மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

.
 பகுதி 39
தொடர்கிறது...

அம்மா, தங்கச்சி, பத்மகலா, சுவிசில் சந்தித்த தவத்தார், இராமலிங்கம், அவரின் மகள், ஆபிரிக்க இளைஞன், டேவிட் அங்கிள், பானு, தமிழகப் பேராசிரியை, யாழ்ப்பாண பேராசிரியர் என எல்லோருடைய நினைப்பும் அவனைச் சூழ்ந்து நின்றது.
எனது படிப்பு?. ஏக்கம் அவன் இதயத்தை ஓங்கி அறைந்தது.எங்கும் போகாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.
ஞாயிற்றுக்கிழமையும் இரவைச் சந்தித்து விடிந்தது. விடிந்ததும் மீண்டும் சீலன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு கடைக்குச் சென்றான்.வேலை செய்யத் தொடங்கினான்.
கடை முதலாளி, „வெளிநாட்டிலை போன் இல்லாமலே வாழ முடியாது இதிலை பத்து குரோன்கள் இருக்குது அவசரத் தேவைக்கு மட்டும் பாவியுங்கள்“ எனக் கூறியபடியே சீலனிடம் ஒரு கைப்பேசியையும் அதற்குரிய சிம் கார்டையும் கொடுத்தார். 
எதிலுமே பிடிப்பு இல்லாமலிருந்த சீலனுக்கு கடை முதலாளியின் உதவி பெரும் அறுதலாய் இருந்தது. குழம்பி இருந்த சீலனின் மனம் தெளிவடையத் தொடங்கியது.
இனி என்ன? என் வாழ்வில் வசந்தம் வருமா?. பலவாக அவன் மனம் எண்ணத் தொடங்கியது. குழம்பிய அவன் மனதில் வேலை கிடைத்தமையால் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது.
அம்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க வேண்டும் என்ற ஆவலுடன் தாயாரின் தொலைபேசி இலக்கத்தைத் தேடினான்,கிடைக்கவில்லை இலக்கம் தொலைந்துவிட்டது.


கவலையுடன் படுக்கையில் கண்களை மூடியபடி யோசித்தான். தாயாரின் தொலைபேசி இலக்கம் அவன் மூடிய கண்களின் படலத்தில் தெரிந்தது.
கடை முதலாளி தந்த கைத்தொலைபேசியை எடுத்து தாயாருக்கு போன் பண்ணினான். மணிச்சத்தம் போய்க் கொண்டிருந்தது யாருமே எடுக்கவில்லை. சில விநாடிகளின் தாமதம்கூட தாயாருடன் கதைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பை அவனுள் ஏற்படுத்தியது.
மீண்டும் இலக்கங்களை அழுத்தினான்.
“கலோ” மறுமுனையில் தாயாரின் குரல்.பாசத்துடன் தாலாட்டுப் பாடுவது போல் அவனுக்குக் கேட்டது. பல நாட்களின் பின் தாயாரின் குரலைக் கேட்டதால் சில விநாடிகள் எதுவுமே பேசாது உறைந்து நின்றான்.
“அம்மா நான் சீலன்தான் கதைக்கிறன்” மகனின் குரலைக் கேட்ட தாய்
“சீலன்” தாயின் குரல் கரகரத்து.
தாய் தன்னை பாசத்துடன் பார்ப்பது போல அவன் உணர்ந்தான். கண்கள் கசிந்தன.
“நீ எப்படி அப்பு இருக்கிறாய், எல்லாம் எங்கடை விதி, உன்னை அனுப்பிப் போட்டு நாங்கள் நிம்மதியில்லாமலிருக்கிறம்” என்று தாய் கவலைப்படத் தொடங்கினார்.
“அம்மா நீங்கள் கவலைப்படாதையுங்கோ நான் ஒரு குறையுமில்லாமல் இருக்கிறன், சந்தோசமாய் இருக்கிறன்” என சீலன் தாயாருக்கு பதில் அளிக்கிறான்.
தனக்கு இருக்கும் வேதனையைச் சொல்லித் தாயாரை நோகடிக்க சீலன் விரும்பவில்லை. 
“அம்மா எப்படியம்மா இருக்கிறியள், தங்கச்சி எப்படி இருக்கிறாள்” என சீலன் கேட்கிறான்.
“நாங்கள் நல்ல சுகமாய்  இருக்கிறம். எங்களுக்கென்ன நீ அங்கை என்ன பாடுபடுகிறாயோ என்ற யோசனைதான் எப்பொழுதும் எங்களுக்கு.  உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே, கனநாளாய் ரெலிபோன் நீ எடுக்கேலை பயந்திட்டம் , இப்ப நீ எங்க யாரோட இருக்கிறாய் “என தாய் வாஞ்சையுடன் கேட்கிறாள்;.
சுவிஸ்ஸிலிருந்து டென்மார்க்கிற்கு வந்த விபரத்தை கவலையுடன்  தட்டுத்தடுமாறிச் சொல்லிய  சீலன் இப்பொழுது ஒரு தமிழருடைய கடையிலை வேலை கிடைத்திருப்பதையும் கடைக்கு மேலேயே  கடை முதலாளி அறை தந்ததாகவும் சொல்லுகிறான்.
“எங்கை அப்பு சாப்பிடுகிறாய்” தாய் கேட்கிறாள்
“அம்மா நான் சமைத்துத்தான் சாப்பிடுகிறன் நீங்கள் ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ,எனக்கு ஒரு குறையுமில்லை, அம்மா எனக்கு வேலைக்கு நேரமாகுது பிறகு போன் பண்ணுறன்” என்று சொல்லிவிட்டு சீலன் கைத்தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்கிறான்.
தாயுடன் கதைத்ததால் சீலனின் மனதில் இருந்து பாரம் குறைந்தது போல் அவனுக்கிருந்தது.

கடையும் அறையுமாக இருந்த சீலனுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
சீலன் கடைகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக வெளியே சென்றான். கடைகளைச் சற்றிப் பார்த்துத் தனக்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கினான்.
கடைகளைச் சுற்றிப் பார்த்ததனால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. கோப்பிக்கடையொன்றுக்குளஇ சென்ற அவன் கோப்பியொன்றையும் கேக் துண்டொன்றையும் வாங்கி கண்ணாடி யன்னலோடு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து யன்னலுக்கூடாக போவோர் வருவோரைப் பார்த்தபடி கோப்பியைக் குடித்துக் கொண்டும் கேக்கை கரண்டியால் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டுமிருந்தான்.
தமிழர்கள் சிலர் வீதியால் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் சீலனை திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ சொல்ல அவர்களும் திரும்பிப் பார்த்தனர். அவர்களை நோக்கிச் சீலன் கையசைக்க அவர்களும் அசைத்துவிட்டுப் போய்க் போய்க் கொண்டிருந்தனர்.
தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமென்பார்களே அது போல் சக தமிழனுக்கும் தசை ஆடுமென்பது போல் கையசைத்துச் சென்றனர்.
நேரம் கிட்டதட்ட இரவு 7.30 மணி. வாங்கிய பொருட்களுடன் சீலன் கோப்பிக் கடையைவிட்டு வெளியே வந்து தனது அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். 
வீதியின் ஒரு திருப்பம் அதில் தெருவிளக்கின் வெளிச்சம் வீதியில் விழவில்லை. சீலனுக்கு எதிரே இருவர் வந்து கொண்டிருந்தனர்.
வந்த இருவரில் ஒருவன் சீலனைப் பிடித்துக் கொள்ள மற்றவன் சீலனின் சட்டப்பையிலிருந்த பணத்தையும் கையில் இருந்த பொருட்பகளையும் பறித்தெடுத்தனர். அவர்களை சிறிதளவுதான் சீலன் தடுத்தான்லு ஆனால் அவனின் சூழ்நிலை அதற்குமேல் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
கவலையுடன் அறைக்குத் திரும்பினான் சீலன். சோர்ந்து போய் பொத்தென்ற கட்டிலில் உட்கார்ந்தன். இரண்டு கைகளையும் கட்டிலில் ஊன்றியபடியே மேலே பார்த்துக் கொண்டிருந்தான். கண்களைத் துடைத்தது கை
சீலனின் வாழ்க்கை இருண்டது போலிருந்தது, கேள்விக்குறியாகியது. வாழ்க்கையில் சின்னச் சின்னத் தடங்கல்கூட சூழ்நிலை காரணமாக சூனியமாகத் தோன்றும். அந்த நிலைதான் இப்பொழுது சீலனுக்கும்.
தன்னிடம் இருந்து போனையுமமல்லவா பறித்துவிட்டார்கள். இருந்த கொஞ்சப் பணத்தையும் பறித்து விட்டார்களே. என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சாப்பிட மனமில்லாமல் உடை மாற்ற மனமில்லாமல் போட்ட உடுப்புடனேயே படுத்துவிட்டான்.

அடுத்த நாள் திங்கட்கிழமை.வழமை போல் வேலைக்கச் சென்றான். சீலனின் முகம் வழமை போல் இல்லை. சீலனைப் பார்த்த முதலாளி அதை உணர்ந்து கொண்டார்.சீலனை அருகில் அழைத்து “ என்ன உங்கள் முகம் வாடியிருக்குது என்ன நடந்தது” எனக் கேட்க “நீங்கள் எனக்குத் தந்த போனையும் அம்மாவுக்கு அனுப்பவென்று வைத்திருந்த காசையும் வழிப்பறியர்கள்  பறித்துவிட்டார்கள்” எனக் கவலையடன் சொன்னதைக் கேட்டதும் முதலாளிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.சீலனைச் சமாதானப்படுத்துவதற்காக” பரவாயில்லைச் சீலன் நடந்தது நடந்து போச்சுது இனி என்ன செய்வது கவலைப்படாமல் இருங்கள்” என அவனின் முதுகைத் தடவி சமாதானப்படுத்தினார்.
சீலனின் கைகள்  வேலைகளைச் செய்தாலும் மனம் பலவற்றையும் யோசிக்கத் தொடங்கியது.எனது அகதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்களா நிராகரிப்பார்களா, நிரந்தர வதிவிட விசா கிடைக்குமா இல்லையா, எனது பெயரும் மாரிமுத்துவாகிவிட்டது. பாஸ்போர்ட்டும் இல்லை,சீலன் என்பதற்க எந்தவொரு ஆதாரமும் இல்லை……….
எந்த ஒரு முடிவையும் காண இயலாதவாறு குழம்பிக் கொண்டிருந்தான் சீலன். 
புத்மகலாவைப் பற்றி நினைக்கத் தொடங்கினான்.இப்பொழுது  என்ன செய்து கொண்டிருப்பாள், கனடாவிலை இப்பொழுது என்ன நேரமாக இருக்கும் என சீலனின் அங்குமிங்குமாக அலைபாயத் தொடங்கியது.
எனது கையறு நிலையை முதலாளிக்குச் சொல்லிப் பார்ப்போம். அவர் ஏதாவது உதவி செய்வார் என்று சீலன் நினைத்தான்.
வேலையில் சிறு இடைவேளை கிடைத்தது.
“அண்ணை எனக்கு ஒரு உதவி செய்வீர்களா” எனது தயங்கித் தயங்கி கேட்க” தயங்காமல் கேளுங்கள் சீலன் நான் என்ன செய்ய வேண்டும் என கடை முதலாளி சீலனைக் கேட்டார்.
தான் வெளிநாட்டுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை தான் பட்ட கஸ்டங்களையும் தனது பெயர் மாற்றப்பட்டதையும் தான்தான் சீலன் என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லையென்று சொல்லிக் கவலப்பட்டவன் விசா எடுத்தால்தானே இங்கு இருக்க முடியும் எனச் சொல்லிக் கவலைப்பட்டான்.
“சீலன் கவலைப்படாதை நானும் உன்னைப் போல எத்தனையோ பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் தாங்கித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறன்,கஸ்டங்களை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்:டிருந்தால் வாழ முடியாது, எதற்கும் தீர்வு உண்டு,இது ஒரு பெரிய விசயமும் இல்லைஈவிசா எடுத்துத் தாறது எனது பொறுப்பு” என்று சொன்னு கடை முதலாளி” எனக்குச் சொன்ன மாதிரி வேறு எவருக்குமே சொல்லாதை கண்டபடி வெளியிலை திரியாதை காவல்துறை கண்ணிலை பட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும் கவனம்” என சீலனுக்கு புத்தமதிகள் சொன்னார் கடை முதலாளி.
“சரி அண்ணை நான் கவனமாக இருக்கிறன்” என்று சொன்ன சீலனிடம்,
“சீலன் முதலிலை நீ உன் வீட்டுக்கு ரெலிபோன் செய்து பிறப்புச் சான்றிதழையும் அடையாள அட்டையின் புகைப்படப் பிரதியையும் நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பச் சொல்லு” என்று சொல்லிய கடை முதலாளி ஒரு முகவரியை எழுதிக் கொடுத்து கடை ரெலிபோனிலேயே ரெலிபொன் செய்யச் சொல்ல சீலனும் உடனடியாகவே தாயாருக்கு ரெலிபோன் செய்கிறான்.
சில நாட்கள் சென்றன. வேலைக்குப் போன காலை நேரத்திலேயே”சீலன் ஒரு நல்ல செய்தி பிறப்புச் சான்றிதழும்,அடையாள அட்டை புகைப்படப் பிரதியும் நான் சொன்ன முகவரிக்கு வந்துவிட்டது “ என்று சொல்லியபடி ஒரு தபால் உறையக் கொடுக்கிறார்.
கடை முதலாளி செய்து கொண்டிருக்கும் உதவியை நினைத்து சீலன்” நன்றி அண்ணை” என நெகிழ்கிறான்.
“சீலன் இன்றைக்கு கடை பூட்டியதும் நானும் நீங்களும் ஒருவரைப் புhர்க்கப் போக வேணும், இரவுச் சாப்பாட்டை எங்கடை வீட்டிலை சாப்பிடலாம்” என்கிறார்.
கடையைப் பூட்டியதும் கடை முதலாளி சீலனை ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டு வாசலடிக்குப் போகும் போதே “ இந்த வீட்லிருப்பவரின் பெயர் வேல்முருகன், இவர்தான் உனது கேஸ்ஸை எழுதப் போகிறவர்” எனச் சொல்லியவாறு வீட்டு மணியை அழுத்துகிறார்.
கதவைத் திறந்த வேல்முருகன் இருவரையம் வரவேற்று உட்கார வைக்கிறார். கடை முதலாளி சீலனை வேல்முருகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

தொடரும்  பகுதி  40  தொடர்ச்சியை எழுதுபவர்: காசி.வி.நாகலிங்கம், ஜேர்மனி

No comments: