சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கு இலண்டனில் மாபெரும் விழா - யசோ

.
நவாலி ஊர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர்
  அவர்களுக்கு இலண்டனில் மாபெரும் விழா
ஆயிரமாயிரம் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி ஈழப் புலவர் பரம்பரையை இலங்கச் செய்த நவாலி ஊர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கு இலண்டனில் வேர் ஊன்றிப் பெரு விருட்சமாக வளர்ந்து தமிழ் வளர்க்கும் “இலக்கிய சங்கமம்” என்னும் அமைப்பு பெரு விழா ஒன்றினைச் சனிக்கிழமை 21 – 02 – 2015அன்று மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது. புலவரின் அரிய படைப்புகள் பற்றிப் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். புலவரின் மூத்த புதல்வன் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த மகன் பல் மருத்துவ கலாநிதி பாரதி அவர்களின் வாழ்த்துரையுடன் ஆரம்பமாகிய இந்தப் பெரு விழா முருகப் பெருமானின் திருவருளாலே சிறப்பாக நிறைவுற்றது.
விழாவிற்கு இலக்கிய சங்கமம் வெளியிட்ட அழைப்பிதழையும் மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்களின் வாழ்த்துரையையும் கீழே பார்க்கவும். நேரடியாகவும் வாழ்த்துரையைச் செவி மடுக்கலாம்


                                                             ---

“தங்கத்தாத்தா” நவாலி ஊர் சோமசுந்தரப்புலவர்; 
         நினைவுப் பெருவிழா நனிசிறக்க
                 வாழ்த்து  
              
         பல் மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி.

          கலைதந்த கலைமகளின் கருணை காட்டக்
                காலத்தால் அழியாநற் கவிதை வழங்கி
         மலைதந்த குன்றெல்லாம் நிலைகொள் தெய்வம்
               மால்மருகன் செவ்வேளை மகிழ்ந்து பாடி
         விலைதந்த தமிழர்க்குத் தமிழ்தந் தானை
               விருப்புடனே  நினைவுகூர இலக்கிய சங்கமம்
         தலைதந்து எடுக்கும்விழா தரணி போற்றிச்
               சரித்திரம் படைத்திடநான் வாழ்த்து கின்றேன்!

       கலம்உடைந்து நடுக்கடலிற்; கலங்கு வோர்போல்
             கன்னித்தமிழ் அணியிழந்து நலியும் வேளை
       புலம்பெயர்ந்தும் தமிழ்வளர்க்கும் அன்பர் வாழி!
            போற்றுகிறேன் இலண்டனிலே இலக்கிய சங்கமம்
       தலம்தோறும் பதியமர்ந்த பரம்பொருள் பாடித்
            தமிழாலே தமிழன்னைக்(கு) ஆரஞ் சூட்டிக்
      குலம்போற்ற வாழ்ந்துயர்ந்த சோமசுந் தரனெனும்
            கோமானுக்(கு) எடுக்கும்விழா நனிசிறந் துவாழி!.

       புலவர்களின்; பரம்பரையை   இலங்கச் செய்து
            புலமையினாற் புதுமைசெய்த புலவர் கோனை
       பலவாயிரம் செந்தமிழ்ப்பா பாடி னானை
           பலர்போற்றும் “தங்கத்தாத்தா” வெனும்பா வலனுக்(கு)
      இலக்கியசங் கமமின்று இலண்டன் நகரில்
          எடுத்திடுமிப் பெருவிழாவும் இனிதே நிறைவுற
     நிலவுலாவிய அந்திவண்ணன் செஞ்சர ணங்கள்
          நினைந்தேத்தி வழுத்துகிறேன்  தமிழே வாழி!.

No comments: