இலங்கைச் செய்திகள்


கனகசுந்தர சுவாமி காலமானார்

 ஜனாதிபதி- மோடி சந்திப்பு: இருதரப்பு நல்லுறவு குறித்து கலந்துரையாடல்
காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரம் : 500 பெண்கள் பங்கேற்பு
நல்லிணக்கம் என்பது உண்மைய வெளிகொண்டுவருவதாகும்: பிரிட்டன் கூறுகின்றது
வரவேற்கின்றது அமெரிக்கா..!

  'ப்ரொன்ட்லைன்' இல் பிரபாகரனின் செவ்வி மீள் பிரசூரம்: தடையை நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள்










கனகசுந்தர சுவாமி காலமானார்

17/02/2015 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி தனது 67 ஆவது வயதில் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
இவர் புற்று நோயினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.  நன்றி வீரகேசரி 





ஜனாதிபதி- மோடி சந்திப்பு: இருதரப்பு நல்லுறவு குறித்து கலந்துரையாடல்

16/02/2015 இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெற்றது.  
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு மகாத்மா காந்தி  நினைவிடத்தில் தனது மனைவி ஜெயந்தியுடன் ஜனாதிபதி மைத்திரிபால  அஞ்சலி செலுத்தினார். பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 பிரதமர் மோடியுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்தித்தார். இதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.  நன்றி வீரகேசரி 








காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரம் : 500 பெண்கள் பங்கேற்பு



16/02/2015 மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னால் 500க்கும் அதிகமான பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர்.
காணாமல் போனோர் இறுதியாக அணிந்திருந்த ஆடைகளும் உண்ணாவிதத்தின்போது காட்சிக்கு வைக்கப்பட்டடிருந்தன.   
நன்றி வீரகேசரி 











நல்லிணக்கம் என்பது உண்மைய வெளிகொண்டுவருவதாகும்: பிரிட்டன் கூறுகின்றது



18/02/2015 இலங்கை    யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களின் உண்மையை  வெளிக்கொண்டுவருவதே நல்லிணக்கத்துக்கான பிரதான விடயமாக அமையும்  என்று    பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின்  விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை  பிற்போட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பிரிட்டன்  வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வையர்   மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையை பிற்போட்டிருந்தாலும் அதனை  செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கான  அழுத்தத்தை  பிரிட்டன் பிரயோகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மற்றும்  இலங்கை குறித்த விசாரணையை முன்னெடுத்த  ஐ.நா. விசாரணைக் குழுவினர் ஆகியோர்  செய்த பரிந்துரையின் பிரகாரம் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை   மனித உரிமை பேரவை பிற்போட்டுள்ளது. 
இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம்  என்ற நோக்கத்திற்காக தான் இந்த பரிந்துரையை செய்வதாகவும் ஒரு முறை மட்டுமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்  என்றும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  செய்ட் அல் {ஹனே் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 









வரவேற்கின்றது அமெரிக்கா..!




18/02/2015 சிவில் அணுத் திட்ட ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும்  இடையிலான இணக்கப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் பெசாகீ தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுச்சக்தி முகவர் நிறுவனத்தின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமையவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
இலங்கையில் சிவில் அணு சக்தி கட்டமைப்பு ஒன்றை உருவாக்க இந்தியா உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.     நன்றி வீரகேசரி 









  'ப்ரொன்ட்லைன்' இல் பிரபாகரனின் செவ்வி மீள் பிரசூரம்: தடையை நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள்


18/02/2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான கடந்த கால செவ்வியொன்றை மீள் பிரசூரம் செய்த இந்திய சஞ்சிகையான ப்ரொன்ட்லைனுக்கு இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சஞ்சிகையை விநியோகம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுங்கப்பிரிவினருக்கு  உத்தரவிட்டுள்ளார்.
இந்திய சஞ்சிகையான ப்ரொன்ட்லைன் சஞ்சிகையின் 30ஆம் இதழை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய இலங்கை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்திருந்தனர்.
1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நேர்காணல் இம்முறையும் சஞ்சிகையில் மீள்பிரசூரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நேர் காணல் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடுமென்ற அடிப்படையில் பிரசூரத்திற்கு தற்காலிக தடைட விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சஞ்சிகையினால் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது இதனை புழக்கத்தில் விடுமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
 ப்ரொன்ட்லைன் சஞ்சிகையானது இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான தி ஹிந்து ஊடகத்தின் ஓர் பிரசூரம் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








No comments: