சங்க இலக்கியக் காட்சிகள் 40- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்.  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்டின் வனப்பால் காதலியின் நினைப்பு!

நாடாளும் மன்னன் ஒருவன் வேற்று நாடொன்றுடன் போர்தொடுத்துப் படை நடத்திச் சென்றபோது அவனது படையிலே ஒரு வீரனாகச் சென்றிருந்த தலைவன்ää போர் முடிந்து,  போர் தொடர்பான ஏனைய தனது கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றிய பின்னர் தன் ஊருக்குத் திரும்புகின்றான். அங்கே இவ்வளவு காலமும் பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு அவனது வரவுக்காகக் காத்திருந்த தன் காதலியோடு கூடிக் குலாவுகின்றான். அவளைப் பிரிந்திருந்த காலப்பகுதியில் தான் தங்கியிருந்த பாசறையை அண்டிய பகுதியிலே, தான் கண்ட காட்சிகளையும், இவ்வளவு விரைவாகத் தான் அவளை நாடி வருவதற்குக் காரணமாகத் தன்னைத் தூண்டிவிட்ட நிகழ்சிகளையும் அவளிடம் விபரிக்கிறான்.
 “மழைக்காலம் வந்ததால் நான் தங்கியிருந்த இடத்திலே வாழ்ந்த மயில்கள் ஆடின. அவை உன்னைப் போலவே எனக்குத் தோன்றின. உனது அழகிய நல்ல நெற்றியைப் போலவே மணம் தருகின்ற முல்லை மலர்கள் அங்கே பூத்துக்கிடந்தன. உன்னைப் போலவே அங்கே நின்ற மான்களும் மருட்சியான பார்வையை வீசின. அழகிய நல்ல இளம் பெண்ணே! உன் நினைவாலே வாடி நலிந்து கொண்டிருந்த நான் இவற்றையெல்லாம் காண நேர்ந்ததும்ää அந்த மழைக்காலத்தைக் கொண்டுவந்த மேகத்திலும் பார்க்க விரைவாக உன்னைத் தேடி ஓடிவந்தேன்.” என்கிறான்.
பாடல்:
நின்னே போலும் மஞ்ஞை யால, நின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னேபோல மாமருண்டு நோக்க
நின்னெ உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை! காரினும் விரைந்தே.

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:492. பாடியவர்: பேயனார்)

மேலும் சொல்கிறான். “காட்டிலே பூத்துக் கிடந்த புது மலர்களிலே மொய்த்த வண்டுகள் தேனுண்டு களித்துப் பாடித் திரிந்தன. குளிர்ச்சி தந்த மகிழ்ச்சியினால் தேரைகள் தெவிட்டத் தொடங்கிவிட்டன. மழைபெய்து குளிர்ந்த மண்ணின் மணம் காடெங்கும் கமழ்ந்தது. முல்லை மலர்கள் மலர்ந்துää அன்றைய பொழுதை இன்பமாக்கின. இவற்றையெல்லாம் கண்ணுற்ற நானும் காலம் தாழ்த்தாது குறித்த தினத்திற்கு முன்பாகவே உன்னிடம் ஓடி வந்துவிட்டேன்.”
பாடல்:
வண்டுதா தூதத், தேரை தெவிட்டத்
தண்கமழ் புரவின் முல்லை மலர
இன்புறுத் தன்று பொழுதே
நின்குறி வாய்த்தனம் தீர்கினிப் படரே.

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:494. பாடியவர்: பேயனார்)

போர்க்காலங்களில் மன்னர்களும். படையினரும் தங்கியிருக்கும் பாசறைகளைச் சுற்றியிருந்த இயற்கைக்காட்சிகளை அவனது விபரிப்பிலிருந்து நமது மனக்கண்கள் பதிவுசெய்கின்றன.
நீண்டநாட்கள் பிரிந்திருந்து இப்பொது சேர்ந்திருப்பதால் அவள் அவனை ஒரு கணமும் பிரியாது அவனுடனேயே எந்நேரமும் ஒட்டிää உரசியபடியே இருக்கிறாள். அவனது வார்த்தைகளெல்லாம் அவளுக்குக் கற்கண்டாக இனிக்கின்றன. அவனது பேச்சிலே அவள் மயங்கிக் கிடக்கிறாள்.
பிரிவுத்துயரால் அவள் வாடியபோது அவளுக்காக இரங்கி,ஆறுதல் வார்த்தைகள் கூறி அவளுக்குத் துணையாக இருந்த அவளின் தோழி இப்போது மகிழ்ச்சியடைகிறாள். நிம்மதியடைகின்றாள். தலைவியின் வீட்டுக்கு வந்து தலைவன் தலைவி இருவரதும் நிலைகண்டு மகிழ்ந்து, அவர்களைப் பார்த்துச் சொல்கிறாள். முதலில் தோழியைப்பார்த்து,
“நிமிர்ந்த கொம்புகளைக் கொண்ட யானைப்படையையுடைய மன்னன் தான் தொடுத்திருந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அதில் ஈடுபட்டி அனைவரையும் வீடுசெல்வதற்கு அனுமதித்தான். அதனால்  விரைந்து செல்லும் தேரினைச் செலத்திக்கொண்டு உனது தலைவன் உன்னிடம் வந்துவிட்டான். உனக்கு மகிழ்ச்சியுண்டாயிற்று. அதனால் உனது தோள்கள் பழைய  அழகினைப் பெற்றுவிட்டன. கழன்று கொண்டிருந்த வளையல்களும் கைகளிலே மாட்டிய இடங்களிலேயே இப்போது பொருந்தியிருக்கின்றன. உன் கண்களும் பசலை மறைந்து ஒளியும் அழகும் பெற்றவிட்டன.  இனி எங்களுக்கு உன்னைப் பற்றிக் கவலையேயில்லை” என்கிறாள்.
பின்னர் தலைவனைப்பார்த்துப் பின்வருமாறு சொல்கிறாள்: “போரை வென்றெடுப்பதற்காக அமைக்கப்பட்ட பாசறையிலே நீண்ட நாட்களாகத் தங்கியிருந்தவரே! புலியைப்போன்ற ஆற்றலுடையவரே! சென்ற பணியை முடித்துவிட்டு வெற்றியோடு நீ திரும்பி வந்ததினால், உன்னைப் பிரிந்திருந்தபோது பசலை நோயினால் கொன்றைப் பூவைப்போலத் தொற்றமளித்த இவளது மை பூசிய கண்கள் இப்போது குன்றுகளுக்கிடையே உள்ள நீண்ட நீர்ச்சுனையினுள்ளே இருக்கும் குவளை மலரைப்போலத் தம் பழைய அழகைப் பெற்றுவிட்டன. இனி இவளுக்குக் கவலையேயில்லை” என்று சொல்கிறாள்.
பாடல்கள்:
தோள்கவின் எய்தின, தொடிநிலை நின்றன
நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன
ஏந்துகொட்டியானை வேந்து தொழில் விட்டென
விரை செலல் நெடுந்தேர் கடைஇ
வரையக நாடன் வந்தமாறே.

கொன்றைப் பூவின் பசந்த உன்கண்
குன்றக நெடுஞ்சுனைக் குவளைபோலத்
தொல்கவின் பெற்றன இவட்கே – வெல்போர்
வியல் நெடும் பாசறை நீடிய
வயமான தோன்றல்,  நீவந்தமாறே.

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல்கள்: 498ää 500. பாடியவர்: பேயனார்)

No comments: