திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

தமிழ்   இலக்கியத்திறனாய்வில்  போற்றத்தக்க பணிகளைத்தொடரும்    கே. எஸ். சிவகுமாரன் இலக்கியப்பயணத்தில்    இணைந்துவரும்   அதிர்ந்து பேசத்தெரியாத    அமைதியான   ஆளுமை
  
                                                                              
மல்லிகை   இதழ்களை   வாசிக்கத்தொடங்கிய  1970  காலப்பகுதியில் அதில்   பதிவாகும்  குறிப்பிடத்தகுந்த  பத்தி  எழுத்துக்கள் என்னைக்கவர்ந்தன.   அவற்றை  தொடர்ந்து  எழுதிவரும்  கே.எஸ். சிவகுமாரனின்   உரைநடை  இலக்கிய  உலகின்  அரிச்சுவடியில் இருந்த   எனக்கு  அப்பொழுது  ஆதர்சமாகவே   விளங்கியது.
மல்லிகையில்   பேராசிரியர்கள்  கைலாசபதி,  சிவத்தம்பி,  சபா ஜெயராசா,   நுஃமான்  உட்பட  பலர்  எழுதிய  ஆக்கங்களில் இடம்பெற்ற   வார்த்தைப்பிரயோகங்கள்  முதலில்  என்னை ஆச்சரியத்திலும்   அச்சத்திலும்  ஆழ்த்தியவை.
"அது  அவர்களின்  தவறு  அல்ல.  எனது  தவறுதான் "  என்பதை   நண்பர்  பூரணி  மகாலிங்கம்தான்   சுட்டிக்காண்பித்து  தொடர்ந்து விமர்சனங்களையும்   படித்துவாருங்கள்  என்று  எனக்கு ஊக்கமளித்தார்.   " ஆனால் -  கே.எஸ். சிவகுமாரனின்  எழுத்துநடை என்போன்ற  ஆரம்பகட்ட  வாசகர்களுக்கு  உடனடியாகவே புரிந்துவிடுகிறதே "  என்றேன்.
அதற்கு   மகாலிங்கம், " சிவகுமாரன்  எழுதுவது  விமர்சனங்களாக இருந்தாலும்   அவை   அறிமுகப்பாங்கில்  அமைந்த   ஒருவகை   பத்தி எழுத்து  " - என்று  தரம்  பிரித்து  அடையாளம்   காண்பித்தார்.
யார்  இந்த  சிவகுமாரன்...? என்று  தேடிக்கொண்டிருந்தேன். அக்காலப்பகுதியில்  மல்லிகை   யாழ்ப்பாணத்திலிருந்து  வெளியானது.   வெள்ளவத்தையில்  காலி   வீதியில்  அமைந்திருந்த விஜயலக்ஷ்மி    புத்தகசாலைக்கு   அடிக்கடி  சென்று -  நாம் நீர்கொழும்பில்     நடத்திய    வளர்மதி  நூலகத்திற்கு  நூல்கள் -  இலக்கிய   சிற்றிதழ்கள்  வாங்குவேன்.
அங்குதான்   தமிகத்திலிருந்து  வரும்  தீபம்,  தாமரை   முதலான இதழ்கள்   கிடைத்தன.  அந்த  புத்தகசாலையின்  உரிமையாளர்தான் பிரபல   மூத்த  எழுத்தாளரும்  நாவலாசிரியருமான  செ.கணேசலிங்கன்   என்ற    தகவலும்  எனக்கு  காலப்போக்கில்தான் தெரியவந்தது.
அவரையும்   அங்கே  சந்திக்கும்  சந்தர்ப்பம்  கிட்டவில்லை. அந்தப்புத்தகசாலையில்   ஒரு  முஸ்லிம்  அன்பர்  பணியிலிருந்தார்.  ஒருநாள்   அங்கிருந்த  தாமரை ,  தீபம்  இதழ்களை    கையில் எடுத்துக்கொண்டு    பணத்தை   நீட்டும்பொழுது   அந்த  இதழ்களில் கே.எஸ்.சிவகுமாரன்   என்று  எழுதப்பட்டிருந்தது.
அந்த   விற்பனைப்பிரதிநிதி  அந்த  இதழ்களை   எனக்கு விலைக்குத்தருவதற்கு   மறுத்தார்.  " அந்த  இதழ்கள்  கே.எஸ். சிவகுமாரன்  என்பவருக்குரியவை.  அவருக்காக  அவை காத்திருக்கின்றன.   உங்களுக்கும்  குறிப்பிட்ட  இதழ்கள்  மாதாந்தம் தேவைப்படின்   முற்கூட்டியே   உங்கள்  பெயரை   பதிவுசெய்து வைத்துவிட்டுச்செல்லுங்கள் "  - என்றார்.
எனக்கு   அன்று  ஏமாற்றமாக  இருந்தாலும்,  காலப்போக்கில்  எனக்கும் அந்த   இதழ்கள்  கிடைப்பதற்கு  அந்த  முஸ்லிம்  அன்பர்  உதவினார்.   அத்துடன்  அவரும்  எனது  பிரியத்துக்குரிய  நண்பரானார்.   அவர்  இலங்கை   எழுத்தாளர்களின்  புதிய  நூல்களை விலைக்கு   வாங்கி  அமெரிக்க  தூதரக  தகவல்  பிரிவுக்கும் வழங்கிவந்தார்.
  அவரிடம்  " கே.எஸ். சிவகுமாரன்  அவர்களைப்பார்க்க விரும்புகின்றேன்.    எங்கே  பார்க்கலாம்...? " எனக்கேட்டேன்.
அவர்   வெள்ளவத்தையில்  மறு புறத்தில்  இருப்பதாகவும்  இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில்   பணியாற்றுவதாகவும்  சொன்னார். உடனே   " வானொலியில்  சில  சமயங்களில்  செய்தி  வாசிப்பாரே... அவரா  இந்த  சிவகுமாரன்...?"  என்று  கேட்டேன்.  "ஆமாம்  அவரேதான். " என்றார்.
எனக்கு   சிவகுமாரனை   நேரில்  பார்க்கவேண்டுமே  என்ற  ஆவல் முகத்தில்   துளிர்விட்டிருப்பதை   அவதானித்த  அந்த  அன்பர்  தந்த முகவரியைப்பார்த்தேன்.    இலக்கம்  21   முருகன்   பிளேஸ் வெள்ளவத்தை  என்று   இருந்தது.
வெள்ளவத்தையில்    முருகன்  பிளேஸ்  என்று  எமது  கடவுளின் பெயரில்  தெரு  ஒன்று  இருப்பதும்  எனக்கு  அன்றுதான்  தெரியும். எனது  வியப்பை   அந்த  அன்பரிடம்  தெரிவித்தேன்.  உடனே   அவர் சிரித்துக்கொண்டு - " ஆமாம்   உங்கள்    முருகக்கடவுளின்     மற்றுமொரு பெயரும்   சிவகுமாரன்தானே "   என்றார்.
அதில்   இருந்த  ஆழமான  உவமானம்  என்னை   ஈர்த்தது.
ஆனால்,  நான்  தேடிக்கொண்டிருந்த  கே.எஸ். சிவகுமாரனை பின்னாட்களில்   எதிர்பாரதவிதமாக  கொழும்பு  விவேகானந்தா வித்தியாலயத்தில்   1972   முற்பகுதியில்   நடந்த  பூரணி  முதல்  இதழ் வெளியீட்டு   நிகழ்வில்தான்  நேருக்கு  நேர்  சந்திக்க  முடிந்தது.
நான்  நீண்ட  நாட்கள்  தேடிக்கொண்டிருந்தவரை    நேரிலேயே சந்திக்கக்கிடைத்ததை   அன்று  பெரும்   பாக்கியமாக  கருதிய இளமைக்காலம்   அது.   1972  முதல்   2014  இறுதி   வரையில்   சுமார் 42 ஆண்டு  காலம்  சிவகுமாரனுக்கும்  எனக்குமிடையே  நீடிக்கும் சகோதர    வாஞ்சைக்குரிய    நட்புறவு  ஆரோக்கியமாகவே தொடருவதற்குரிய  ரிஷி  மூலம்  அவரிடம்தான்  ஒளிந்திருக்கிறது.
அதிர்ந்து   பேசத்தெரியாதவர்.  கோபத்தையும்  புன்சிரிப்பினால்  புறம் ஒதுக்கிவிட்டு   நேசிக்கும்  இயல்புகொண்டவர்.   தன்னைவிட  வயதில்   இளையவர்களையும்  அவர் "  சேர்..."  என்று   விளிப்பார். நான்   சந்தித்த  பல  மனிதர்களிடம்  இத்தகைய  மென்மையான பண்புகளை   பார்ப்பது  அரிதாகவே    எனக்குத்தென்பட்டிருக்கிறது.
அவரது  இயல்புகளுக்கு  ஏற்பவே   அவரது  எழுத்துக்களும் அமைந்திருக்கும்.    அவர்  1972    இல்   எனக்கு  முதலில்  அறிமுகமான காலத்திலிருந்து    இற்றை  வரையில்  அவருடான  நட்புறவு  பல எதிர்பாராத   திருப்பங்களுடன்  தொடர்வதையும் நினைத்துப்பார்க்கின்றேன்.
இதுவரையில்   தமிழில்  35  இற்கும்   மேற்பட்ட   நூல்களையும் ஆங்கிலத்தில்   இரண்டு  நூல்களையும்  வரவாக்கிவிட்டு, மற்றுமொரு   ஆங்கில  நூலை  அச்சிற்கு  வழங்கிவிட்டு  தொடர்ந்தும் அயராமல்    ஆங்கில,  தமிழ்  இதழ்களில்   எழுதிக்கொண்டிருக்கிறார்.  தங்கள்   நூல்களைப்பற்றி  ஆங்கில,  தமிழ்  ஊடகங்களில் சிற்றிதழ்களில்   கே.எஸ்.எஸ்.    எழுதமாட்டாரா...?    என்று காத்திருக்கும்    படைப்பிலக்கியவாதிகள்  பலரை   நான்   அறிவேன்.


சிவகுமாரன்    தன்னை   ஒரு  இலக்கியவிமர்சகன்  என்று என்றைக்குமே     சொல்லிக்கொள்ள  விரும்பாதவர்.  இன்றும்  தான் ஒரு  திறனாய்வாளன்தான்  என்று  அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர்,    சிறுகதை  எழுத்தாளருமாவார்.  அத்துடன்  ஆங்கிலத்திலும் தமிழிலும்   கவிதைகளும்  எழுதியிருக்கிறார்.  ஆயினும் -  ஒரு விமர்சகராக,   திறனாய்வாளராக,  பத்தி  எழுத்தாளராக,   தேர்ந்த திரைப்பட   ரசிகராக,   மொழிபெயர்ப்பாளராகத்தான்   வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார்.
பத்தி   எழுத்துக்கள்  என்ற   வார்த்தையை   தமிழுக்கு அறிமுகப்படுத்திய   முன்னோடியும்  இவர்தான்.    ஆங்கில ஊடகத்துறையில்   Colum mist  என்பது   பேசு  பொருள்.   ஆங்கில ஆசிரியராகவும்   மொழிபெயர்ப்பாளராகவும்  தமிழில்  இலக்கிய  பத்தி எழுத்தாளராகவும்   வானொலியில்  செய்தி  ஆசிரியராகவும்  செய்தி வாசிப்பவராகவும்    பன்முகத்துடன்  தனது  ஆற்றலை   வெளிப்படுத்தும்  சிவகுமாரன்  - தமிழ்  வாசகர்களுக்கு தமது பட்டறிவினால்   அறிமுகப்படுத்திய   சொற்பதம்  பத்தி  எழுத்து. 
இருமை,   சிவகுமாரன்  கதைகள்   ஆகிய    இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்  இதுவரையில்  வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான  இவரது  கதைகள்  உளவியல்  சார்ந்திருக்கும். பேராதனைப்பல்கலைக்கழக   ஆங்கிலப்பட்டதாரி.  தமது  வாழ்நாளில் பெரும்பகுதியை    இலக்கியத்திற்கும்  வானொலி   ஊடகம்  மற்றும் இதழியலுக்கும்,   மொழிபெயர்ப்பிற்கும்  கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர்.   எங்கும்  எதிலும்  தன்முனைப்புக்கொள்ளாத அளவுக்கு   அதிகமான  தன்னடக்க  இயல்பு கொண்டவர்.  நான்  அறிந்த   மட்டில்    இவரது  நூல்கள்  சில  பின்வருமாறு:
Aspects of Culture in Sri LankaTamil Writing in Sri Lanka
அசையும் படிமங்கள்அண்மைக்கால   ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் -    பத்தி  எழுத்துக்களும்   பல்   திரட்டுக்களும்   இந்திய - இலங்கை   இலக்கியம்  ஒரு  கண்ணோட்டம் -   இருமை - ஈழத்து   எழுத்தாளர்கள்  ஒரு  விரிவான  பார்வைஈழத்து  தமிழ்   நாவல்களிற்  சில  திறனாய்வுக் குறிப்புகள் - பத்தி எழுத்துக்களும்  பல்  திரட்டுகளும்   
ஈழத்துச்   சிறுகதைகளும்  ஆசிரியர்களும் - ஒரு  பன்முகப் பார்வை    (1962-1979)
           ஈழத்துச்   சிறுகதைகளும்  ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை    (1980-1998)         ஈழத்துச்    சிறுகதைத்  தொகுப்புகள்:  திறனாய்வு - பத்தி   எழுத்துக்களும்  பல்   திரட்டுகளும் -  01 -    ஒரு திறனாய்வாளரின்    இலக்கியப் பார்வை...
            காலக் கண்ணாடியில்  ஒரு  கலை   இலக்கியப் பார்வை
            கே.எஸ்.சிவகுமாரன்   ஏடுகளில்  திறனாய்வு -மதிப்பீடுகள்   சில
            கைலாசபதியும்    நானும்   -   சினமா.... சினமா...  ஓர்  உலக   வலம் சிவகுமாரன்   கதைகள் - சொன்னாற்போல - 1    சொன்னாற்போல - 2
சொன்னாற்போல - 3  -  திறனாய்வு   என்றால்    என்ன...?
திறனாய்வுப்   பார்வைகள்  -  பத்தி  எழுத்துக்களும்  பல்  திரட்டுக்களும் - 02-           பண்டைய   கிரேக்க   முதன்மையாளர்கள் -           பிறமொழிச் சிறுகதைகள் -  சிலமரபு வழித்  திறனாய்வும்  ஈழத்துத் தமிழ் இலக்கியமும் -  பத்தி  எழுத்துக்களும்  பல்  திரட்டுக்களும் 03  - மூன்று நூற்றாண்டுகளின்  முன்னோடிச்    சிந்தனைகள் - பத்தி எழுத்துக்களும் பல்   திரட்டுக்களும் 04 -  கலை இலக்கியப் பார்வைகள்    (2014)
மட்டக்களப்பில்  1936  ஆம்   ஆண்டு  பிறந்த  சிவகுமாரன்  புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின்   மாணாக்கர்.  பாலுமகேந்திரா  இலங்கையில்    மட்டக்களப்பில்  வாழ்ந்த  காலத்தில்  சச்சிதானந்தன் என்பவருடன்  இணைந்து  தேனருவி  என்ற   கலை  இலக்கிய  இதழை  வெளியிட்டபொழுது  அதில்  பல  ஆக்கங்களை எழுதியிருக்கும்   சிவகுமாரனின்  ஒரு  நூலுக்கு  பாலுமகேந்திரா முன்னுரை    எழுதியுள்ளார்.
சிவகுமாரனின்   அசையும்  படிமங்கள்  என்ற   சினிமாத்துறை   நூலின் முகப்பில்   இந்த  பால்யகாலத்தோழர்கள்தான்  இணைந்து தோன்றுகின்றனர்.
விமர்சகர்கள்   எப்பொழுதும்   விமர்சனத்துக்கும்  கண்டனத்துக்கும் ஆளாகும்   இயல்பினர்  என்பதனாலோ   என்னவோ,  தம்மை   ஒரு திறனாய்வாளர்   என்றே   சொல்லிக்கொள்வதில்  அமைதிகாண்பவர். எவரையும்   தமது  எழுத்துக்களினால்  காயப்படுத்தத்தெரியாதவர்.
 ஒருவரது   குணம்  அவரது  இயல்புகளிலேயே   பெரிதும் தங்கியிருக்கிறது.    அமைதியான  சுபாவம்,   கலந்துரையாடல்களிலும் உரத்துப்பேச   விரும்பாத  இயல்பு  மற்றவர்களின்  கருத்துக்களை பொறுமையாக    செவிமடுக்கும்  குணம்  முதலானவையே    அவரது ஆத்மபலம்.    அதனால்தான்  இத்தனைவருட  காலம்  இவரால் இலக்கிய    உலகில்   தாக்குப்பிடிக்கமுடிகிறது  என்றும் கருதுகின்றேன்.


 இலங்கை  வானொலி,  The Island   -  வீரகேசரி,  முதலான ஊடகங்களிலும்   பொறுப்பான  பதவிகளில்  பணியாற்றியவர்.  இலங்கை   திரைப்படக்கூட்டுத்தாபனத்தின்  தணிக்கை    அதிகாரியாக முன்னர்    பணியாற்றிய  அனுபவம்  மிக்கவர்.
தரமான   பன்மொழிப்படங்களைப்பார்ப்பதற்காக  பல  சர்வதேச திரைப்பட   விழக்களிலும்  கலந்துகொள்ளும்  சிவகுமாரன், சென்னையில்  ஒவ்வொரு  வருடமும்   நடைபெறும் புத்தகச்சந்தைக்கு  செல்வதையும்  வழக்கமாகக்கொண்டிருப்பவர். தற்போதும்    Daily News,  Observer ,   Daily Mirror  ஊடகங்களிலும்  இவரது   பத்தி  எழுத்துக்களை     பார்க்கலாம்.   இலங்கை  வங்கி உட்பட  பல  வர்த்தக  ஸ்தாபனங்களிலும்  இவர் மொழிபெயர்ப்பாளராக  கடமையாற்றியிருக்கிறார்.
இலங்கை   வானொலியின்  தமிழ்வர்த்தகசேவையில்  பகுதிநேர அறிவிப்பாளராகவும்  ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும்   செய்திப்பிரிவில்  துணை   ஆசிரியராகவும் சேவையாற்றிய   கே.எஸ். சிவகுமாரன்,  இலங்கையில் அமெரிக்கத்தூதரக   தகவல்  பிரிவிலும்    சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.   நவமணி  இதழின்  ஸ்தாபக  ஆசிரியரும் இவரே.
கொழும்பில்   மூன்று  சர்வதேசப்பாடசாலைகளிலும்  அமெரிக்கா, மாலைதீவு,   ஓமான்  ஆகிய  நாடுகளிலுள்ள  பாடசாலைகளிலும் ஆங்கில   ஆசிரியராக  பணியாற்றிய  அனுபவம்  இவருக்குண்டு.
இவர்   இத்தனை   அனுபவங்களுக்குப்பின்னரும்,  தாம்  இன்னமும் இலக்கியத்தில்  கற்றுக்கொண்டிருக்கும்  மாணவன்தான்  என்று மிகுந்த   கூச்சத்துடன்  சொல்லிக்கொள்கிறார்.  இதுவும்  இவரது தன்னடக்கத்திற்கு  ஒரு   அடையாளம்.
2011   ஆம்  ஆண்டு  தொடக்கத்தில்  நாம்  கொழும்பில்  நடத்திய சர்வதேச   தமிழ்  எழுத்தாளர்  மாநாட்டில்  பேராசிரியர்  எம்.ஏ. நுஃமான்   தலைமையில்  நடத்திய  மொழிபெயர்ப்பு  அரங்கில்  நான் தொகுத்து   வெளியிட்ட Being  Alive  ( ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட  அவுஸ்திரேலிய  தமிழ்ப்படைப்பாளிகளின் சிறுகதைகள்)    நூலை    அறிமுகப்படுத்தி  உரையாற்றினார்.
 சிவகுமாரன்   2011  நடுப்பகுதியில்    மெல்பனுக்கு  வந்திருந்தார். அவருக்கு   எமது  சர்வதேச  தமிழ்  எழுத்தாளர்  ஒன்றியத்தின்  சார்பில்   தேநீர்  விருந்துபசாரம்  வழங்கியபொழுது  அவர் Being  Alive    நூலையும்  அறிமுகப்படுத்தி  உரையாற்றினார்.   இந்நிகழ்வு அவரைப்பொறுத்தவரையில்   எதிர்பாராததுதான். அவுஸ்திரேலியாவுக்கு   தமது  மகனைப்பார்க்க  வருமுன்னரே குறிப்பிட்ட    மொழிபெயர்ப்பு  நூல்   பற்றி  டெயிலி நியூஸ் பத்திரிகையில்  திறனாய்வும்   எழுதியிருந்தார்.
பின்னாளில்   குறிப்பிட்ட  திறனாய்வு  மெல்பனில்  வெளியாகும் கடப்பத்த   என்ற  ஆங்கில - சிங்கள   இருமொழி  மாத  இதழில் மறுபிரசுரமானது.
2011  ஆம்    ஆண்டு  பயணத்தில்   சிட்னியிலும்  மெல்பனிலும்  தமது கலை,  இலக்கிய,  வானொலி  ஊடகத்துறை   நண்பர்களை   நேரில் சென்று  பார்த்து   சுகநலன்  விசாரித்தார்.  இலங்கை   திரும்பியதும் தமது   அவுஸ்திரேலிய  பயண  அனுபவங்களை  ஆங்கிலத்தில்  தமது பத்தியில்   எழுதினார்.
 மற்றவர்களின்  படைப்புகளையும்  அவர்தம்  இலக்கியப்பணிகளையும்    தனிப்பட்ட  விருப்பு  வெறுப்புகளுக்கு அப்பால்   தமது  பத்திகளில்  அறிமுகப்படுத்தும்  சிவகுமாரன்,    தனக்கு  கிட்டும்  பெறுமதியான  நேரங்களில்  ஏதேனும்  ஒரு  நூலைப்படித்து   அது   இவரைக்கவர்ந்துவிட்டால்   தாமதமின்றி ஆங்கிலத்திலோ    தமிழிலோ   அதனை   அறிமுகப்படுத்தி  ஏதேனும் இதழில்   எழுதிவிடுவார்.  அத்துடன்  இலக்கிய  உலகின்  சமகால நிகழ்வுகளையும்   இரண்டு  மொழிகளிலும்  தமது  பத்திகளில் பதிவுசெய்துவிடுவார்.   
வாழும்காலத்திலேயே   பாராட்டி  கொண்டாடப்பட வேண்டியவர் கே.எஸ். சிவகுமாரன்.
இவருக்கு   பவளவிழா  வந்த  காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து    வெளியாகும்  ஜீவநதி  (ஆசிரியர்  கலா. பரணீதரன்)   சிறப்புமலரை    வெளியிட்டது.    கொழும்பிலிருந்து வெளியாகும்    ஞானம் ( ஆசிரியர் தி. ஞானசேகரன்)    அட்டைப்பட அதிதியாக    இவரை   பாராட்டி   கௌரவித்தது.
  சிவகுமாரனைப்போன்று   பலர்  எம்மத்தியில்  தோன்றவேண்டும். அல்லது   உருவாக்கப்படல் வேண்டும்.  இல்லையேல்  எதிர்காலத்தில் மிகப்பெரிய    வெற்றிடங்கள்  தோன்றலாம்.
 இலக்கியத்தில்   மொழிபெயர்ப்புத்துறை  குறித்து  தீவிர  கவனம் செலுத்தவேண்டிய   காலத்தில்  நாம்  வாழ்கின்றோம்.  கணினி  இன்று எமக்கு   வரப்பிரசாதமாகியிருக்கும்  சூழலில் -  சிவகுமாரன்  போன்ற இலக்கியப்பிரதி  மொழிபெயர்ப்பாளர்களுக்கு    எம்மவர்கள்  உரிய மரியாதை  வழங்கி  நன்கு  பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவரது  வாழ்நாள்  உழைப்புக்கு  மரியாதை   செலுத்துவதன்  மூலம்  மானுடத்தின்  மதிப்பீடுகளை   உயர்த்தமுடியும்.
தனிப்பட்ட   முறையில்  நான்  இவருக்கு  மிகவும் நன்றிக்கடமைப்பட்டவன்   என்பதற்காக பின்வரும்   தகவல்களையும் இங்கு    பதிவு செய்துவிடுகின்றேன்.
சிவகுமாரனை   சந்தித்த  காலப்பகுதியில்  அவர்  இலங்கை வானொலியில்   பணியாற்றுவது  அறிந்து  வானொலி   கலையகத்தில் ஏதாவது   ஒரு  நிகழ்ச்சியில்  பங்கேற்று  எனது  குரலை வானலைகளில்   பரவச்செய்ய  விரும்பினேன்.  எனது  அன்றைய ஆசையை   இன்று    நினைத்துப்பார்க்கும் பொழுது சிறுபிள்ளைத்தனமாக   இருக்கும்.
எனது    விருப்பத்தை  அவரிடம்  சொன்னதும்  எனது  முகவரியை பெற்றுச்சென்றார்.
சில  நாட்களில்  எனக்கு  அவர்  அனுப்பிய  அஞ்சலட்டையில்  ஒரு மாலை  நேரம்  இலங்கை   வானொலி  நிலையத்திற்கு  வருமாறும் அங்கே  வி.என். மதியழகன்   என்பவரைச்சந்தித்து    பேசினால்    அவர் உங்களுக்கு   ஒரு  சந்தர்ப்பம்  தருவார்  என்றும்  என்னைப்பற்றி அவரிடம்   சொல்லியிருப்பதாகவும்   எழுதியிருந்தார்.
அன்றையதினம்   கொழும்பு  செல்வதற்கும்  என்னிடம்  பணம் இருக்கவில்லை.   ஒரு  நண்பரிடம்  ஐந்து  ரூபா கடனாகப்பெற்றுக்கொண்டு   கொழும்பில்  சுதந்திரச்சதுக்கத்தில் அமைந்த   இலங்கை  வானொலி  ஒலிபரப்பு  நிலையத்தை தேடிக்கண்டுபிடித்துச்சென்றேன்.
அங்கு    நான்  சந்தித்த  வி.என். மதியழகன்  எனக்கு  தான்    நடத்திய சங்கநாதம்  இளைஞர்களுக்கான   நிகழ்ச்சியில்  உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம்   தந்தார்.  அன்று  முதல்  அவரும்  மற்றும்  சண்முகநாதன் வாசுதேவனும்    நண்பர்களானார்கள்.
பிறிதொரு   சந்தர்ப்பத்தில்  மற்றுமொரு  சங்கநாதம்  நிகழ்ச்சியில்  எமது   நீர்கொழும்பு  இலக்கிய  வட்டத்தின்  அங்கத்தவர்கள்  சிலரை அழைத்து   முழுநேர  நிகழ்ச்சியை   மதியழகன்  ஒலிபரப்பினார். அதில்தான்  எம்மிடம்  தமிழ்  கற்ற  வண. ரத்னவன்ஸ  தேரோ   என்ற தமிழ்  அபிமானியான   பௌத்த  பிக்கு  தமிழில்  சிறப்பாக உரையாற்றினார்.   இந்த  நிகழ்ச்சியில்  நான்  எழுதிய    நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன    என்ற  சிறுகதையை    (மல்லிகையில் வெளியானது)   வானொலி  நாடகமாக  தயாரித்து  ஒலிபரப்பினார்கள். அதற்காக   எனக்கு   20   ரூபா   சன்மானமும்   அன்று  கிடைத்தது.
அதுவே  எனது  எழுத்துக்கு  கிடைத்த  முதலாவது  சன்மானமாகும். பின்னாளில்   தமிழ்ச்சேவை   பணிப்பாளர்  திரு. வி.ஏ.திருஞானசந்தரம்   அவர்களையும்  சிவகுமாரன்  எனக்கு அறிமுகப்படுத்தி , வானொலியில்  கலைக்கோலம்  நிகழ்ச்சியை தொடர்ச்சியாக    சில  மாதங்கள்  நடத்துவதற்கும் வழிசமைத்துக்கொடுத்தார்.
இந்நிகழ்ச்சித்தயாரிப்பாளராக  திருமதி  அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் பணியாற்றினார்.   இலங்கை  வானொலியில்  சிவஞானம்,   ஹரி ஹர சர்மா,   கே.எஸ்.ராஜா,  காவலூர்  ராஜதுரை,  பி.எச். அப்துல்  ஹமீட், ராஜேஸ்வரி   சண்முகம்,  சரா  இம்மானுவேல்,  ஜோர்ஜ்  சந்திரசேகரன், சற்சொரூபவதி    நாதன்,    புஷ்பரத்தினம்,  சிவராஜா,  புவனலோஜினி, நடராஜ சிவம்,    ராஜகுரு  சேனாதிபதி  கனகரத்தினம்,   கே.எம். வாசகர் முதலானோரை   எனக்கு  அறிமுகப்படுத்தி  அவர்களுடனான நட்புறவுக்கும்   வழிகோலியவர்தான்   சிவகுமாரன்.
எனது  காலடி  இலங்கை  வானொலி  கலையகத்தினுள் பதிந்தமைக்கும்  எனது  குரல்  அன்றைய  காலப்பகுதியில்  வான் அலைகளில்   பரவியதற்கும்  எனது  நீண்ட  கால  இனிய  நண்பர் கே.எஸ்.சிவகுமாரன்தான்  காரணம்.
அவருடனான   நட்புறவு  சகோர  வாஞ்சைக்கு  ஒப்பானது  என்பது என்னளவில்  பெருமைக்குரிய  விடயம்தான்.
மீண்டும்  அவர்  மெல்பனுக்கு  இந்தவருடம்  (2014)  டிசம்பர்  மாதம் வருகை   தந்து  நாம்  ஒழுங்குசெய்த  சந்திப்புகளில் கலந்துகொண்டதும்    எதிர்பாராத    நிகழ்வுதான்.
சிவகுமாரன்  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சிக்கும்  ஊடகத்துறைக்கும் ஆற்றியுள்ள   பங்களிப்பு  முன்மாதிரியானது.   விதந்து போற்றுதலுக்குமுரியது.
1983   வன்செயலில்  அவரது  முருகன்  பிளேஸ்  வீடும்  தாக்கப்பட்டது.   அவர்  மயிரிழையில்    உயிர்தப்பினார்.  சில  நாட்களில்   தனது  சில  உடைமைகளை   எடுத்துவருவதற்கு  அவர் மீண்டும்   திரும்பியபொழுதும்  அந்த  வீட்டருகே   தீயசக்திகள்  அடுத்த    தாக்குதலுக்கு   தயாராகத்தான்   நின்றார்கள்.
" நான்  எனது  புத்தகங்களைத்தான்  எடுக்க  வந்தேன் " - என்று  இவர் சிங்களத்தில்   சொன்னபொழுது " அவைதான்  உமது  வீட்டில்  அதிகம்   இருந்தன "  என்று  அங்கு  நின்ற  ஒருவன் சொல்லியிருக்கிறான்.
அதனைக்கேட்டு  அவருக்கு  சிரிப்பு  வந்துள்ளது.  அந்த  இழப்பிலும் அவரது    முகத்தில்  தவழ்ந்த  புன்னகையினால்  வெட்கித்துப்போன அந்த   ரவுடிகள்  சமாவெண்ட  (மன்னித்துக்கொள்ளுங்கள்)  என்றார்களாம்.
   " இனி   எதுவும்   நடக்காது   வீட்டில்   வந்திருங்கள் " - என்றும் சொல்லியிருக்கிறான்    ஒரு   ரவுடி.
''இனி  என்னதான்  நடக்கவிருக்கிறது"  என்று   மனதிற்குள்  தமிழிலோ அல்லது   ஆங்கிலத்திலோ  சொல்லிக்கொண்டுதான்  இந்த  அறிவாளி   வீட்டினுள்    நுழைந்திருப்பார்.
அதன்   பிறகும்  நாட்டை  விட்டு  புலம்பெயராமல்  அதே வெள்ளவத்தை   முருகன்  பிளேஸ்   இல்லத்தில்  தொடர்ந்தும் வாழ்ந்தவாறே    இலக்கியப்பணியாற்றுகிறார்   78  வயது  நிரம்பிய எங்கள்    கே.எஸ். சிவகுமாரன்.    அவர்    பணிகள்   தொடர வாழ்த்துவோம்.
letchumananm@gmail.com
 ----0----No comments: