சந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்

.
சந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்
       தாபிக்கும் பெருநிகழ்வு சரித்திர மன்றோ?
         - பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி

 நினைவினிலே கற்பனையாய்  மகிழ்ந்த தமிழன்
                  நிறைவேறா ஆசைக்கோர்  வடிவ மைக்க
      நினைவினொடு போர்தொடுத்து ஈழம மைத்து
                நிறைவாக இருபத்தைந் தாண்டுகள் அந்தோ?
      நினைத்தெவரும்  சாதிக்க முடியா வண்ணம்
                 நிறைவாட்சி புரிந்திட்டார் தானைத் தலைவர்!
      நினைவினிலே நித்தம்வாழ் தியாகியர்க் கெனவே
     நிறுவிநின்றார் இன்னினைவாய் “நினைவுச் சின்னம்”!




       ஒருபாவம் இழைக்காஅப்பாவி மக்கள்
                  ஒருநொடியில் உயிரிழந்தார் தீயோர் கையால்
       தெருநாயைச் சுடுவதுபோல் இரக்க மின்றித்
                 தேடிநின்று தமிழர்களைக் கொன்று குவித்தார்
       கருத்தரித்த நாளன்றே இறப்பினைக் கடவுள்
                 கணக்கிட்டா புவிதன்னிற் பிறக்க வைத்தார்?
       பெருமனத்தொடு இறந்தோர்க்கு ஞாபகச் சின்னம்
                 பிரியமொடு நிறுவினரே போற்று வோமே!

       சிந்தனைசொல் செயல்களிலே வீரம் விஞ்சச்
                சிம்மலிட்டுப் பாய்ந்(து)எதிரி சிதறி ஒட
       விந்தைமிகப் போரிட்ட வீரப் புலிகள்
               வீணர்களின் ஈனச்செயல் விழைவால் அந்தோ?
       வெந்துசாம்பல் ஆகினரே தியாகச் சுடர்கள்!
               விட்டுசென்றார் அழிவில்லா விடுதலை வேட்கை!
       சந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்
                தாபித்த பெருநிகழ்வு சரித்திர மன்றோ?
 
   
       பாசமுள்ள உற்றாரொடு உறவினர் நண்பர்
                பருவந்தருங் கனவுகளைப் படிப்பை வாழ்வை
       நேசமுள்ள காதலியை நினைவில் நீங்கா
                நேர்ந்துபெற்ற மதலைகளை நிறைசெல் வத்தை
       ஆசைகளை அறவேமறந்(து) ஈழம் அமைக்க
                  ஆயுதத்தை அரவணைத்து அமர ரான
        மாசிலாத மாணிக்கத் தியாகி யர்க்கு
                  மரகதப்பொற் சின்னங்கள் மனதில் அமைப்பீர்;!.


      எழிலன்னைக்(கு) ஏற்றபொன்முடி கவித்து மகிழ
                இப்புவியில்; எம்மவர்க்கு நாடொன் றமைக்க
      அழிவில்லாத் தொன்மைமொழிச் சிறப்பைக் கூற
               அகிலத்தோர்  தமிழணங்கை வணங்கச் செய்ய
      வழியிதுதான் என்றுமனந் தெளிந்து போரில்
                வாகைசூடி அரசாண்டு வானடைந் தோர்க்குக்
      கழிவிரக்கத் தோடுபுலம் பெயர்ந்த நாமும்
                கட்டியதோர் சின்னத்திற்(கு) அஞ்சலி செய்வாம்!.


   “இராஜராயேஸ் வரசோழன்” வீரந் தன்னை
             இயம்புபழங் கதைமட்டும் நாங்கள் அறிவோம்
     பராக்கிரமச் செயல்பலதை நேராய் உலகம்
            பார்க்கவிருபத் தைந்தாண்டு;  வியக்க வைத்து
     தராதரத்தோ டரசாட்சி புரிந்த தலைவன்
            தமிழரவர் தீரமிகு வீரத்தைக் கண்முன்
    புராணமதாய்ப் பாடிவிட்டான் நினைவுச் சின்னம்


           பொருத்தமென நிறுவிடுவோர்; பொன்மனம் வாழ்க!

No comments: